articles

img

நிதிநிலை அறிக்கையும் வேலைவாய்ப்பும் - எஸ்.பாலா

நன்மையின் பொருட்டு 
எவ்வளவு தீமைகளைச் 
செய்ய விரும்புகிறீர்கள்? 
உங்களுக்கு விருப்பமான தீமைகள், 
வெறுப்பு செயல்கள் ஆகியவற்றின் 
பெயர்களை 
பின்வரும் காலியிடங்களில் நிரப்புங்கள்....

-வெண்டெல் பெர்ரி கவிதையின் வரிகள் இவை.

இந்த கவிதையின் முதல் வார்த்தையாக ‘‘கார்ப்பரேட்’’ என்பதை சேர்த்துக் கொண்டால் போதும்.  இதன் தீமையின் காலியிடங்களில் நிரப்ப வேண்டிய முதல் வார்த்தை 2023 பட்ஜெட் என்பதை தவிர வேறு இருக்காது. ஏனெனில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக வேலையின்மை மாறியிருக்கிறது. இப்பிரச்சனைக்கு எந்த தீர்வோ அல்லது அதற்கு முகம் கொடுக்கும் வகையில் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2014-ல் மோடி ஆட்சிக்கு வருவதற்காக, ஆண்டுக்கு  2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று படாடோபமாக அறிவித்தனர். இதுவரைக்கும் ஒன்பது பட்ஜெட்டுகள் சமர்ப்பிக்கப்பட்டும் கூட அதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. ஒன்றிய அரசில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை ஓராண்டில் நிரப்புவோம் என கடந்தாண்டு விளம்பரம் செய்தார்கள் ஆனால் இதுவரை 72 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே பூர்த்தி  செய்யப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு திட்ட பணியாளர்கள் குறித்து ஆஷா, உஷா உள்ளிட்ட பல தரப்பினரையும் புறக்கணித்துள்ளது.

கிராமப்புற வேலைவாய்ப்பு

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.73 ஆயிரம் கோடியிலிருந்து 60 ஆயிரம் கோடி ரூபாயாகவும் கடந்த ஆண்டு ஒதுக்கீட்டில் இருந்து 18 சதவீதம் குறைத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஒதுக்கீட்டை 2020-21ல் ரூ.25,000 கோடி அதாவது 25 சதத்தை குறைந்தது. வேலைவாய்ப்பு 100 நாட்கள் வேலை உத்திரவாத சட்டத்தின்படி மூன்று சதவீதமான பேருக்கு மட்டுமே முழுமையான வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன கடந்த மூன்று ஆண்டு காலமாக வேலை நாட்களின் எண்ணிக்கை 52, 48, 42 என இறங்கு முகமாக உள்ளது.

உண்மையில் இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு ஒரு ஆண்டிற்கான தேவை இரண்டு லட்சத்தி 72 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.  ஆனால் மோடி அரசு இந்த ஆண்டு ஒதுக்கியுள்ள தொகை அதில் இருபத்தி இரண்டு சதம் மட்டுமேயாகும். கிராமப்புற உழைப்பாளி மக்கள் மீதான கொடூரமான குறிவைத்து தாக்குதல் (சர்ஜில் ஸ்டிரைக்) ஆகும்.

பெண்களும் வேலைவாய்ப்பும்

சமீபத்தில் ஹிஜாப் அணிந்து இருந்த மாணவிகளை கல்வி நிலையத்திற்கு வெளியில் நிறுத்தியது. அத்தகைய மிகப்பெரிய அராஜகத்தை ஆர்எஸ்எஸ் சங்பரிவாரம் மேற்கொண்டது. உண்மையில் பெண்களுக்கு இன்றைய பிரச்சனை ஹிஜாப் அல்ல, ஜாப் தான். இப்படி தான் காலம் காலமாக மக்களுடைய அடிப்படை பிரச்சனைகள் இருந்து திசை திருப்புவதற்காக சாதி, மதம் சார்ந்த விஷயங்களை முன்வைக்கிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்குகிறது. இந்த வெறுப்பின் வெப்பத்தில் குளிர்காய்வது தான்  ஆர்எஸ்எஸ் உடைய மோசமான புத்தியாகும்.

பெண் தொழிலாளர் விகிதம்

சிட்டிசன் படத்தில் அத்தி பட்டி காணாமல் போனதை போல, நிதியமைச்சர் பேசாத ஒரு விஷயம் பெண்களின் வேலைவாய்ப்பாகும். இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு பெண் தொழி லாளர்கள் பங்கேற்பு வீதம் 32 சதவீதம் ஆக இருந்தது. கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்னர் 2019-ஆம் ஆண்டு இது 21 சதவீதமாக சரிந்தது. 2022-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இது 9.4 சதவீதமாக கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. தொடர்ந்து பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த விகிதம்  பிரிக்ஸ் நாடுகளை விடவும், அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கையை விட மிக குறைவாகும். இந்திய மக்கள் தொகையின் சராசரி வயது இருபத்தி ஒன்பது ஆகும். இதில் இளம் பெண்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் குறிப்பிடத்தக்க பிரிவினர் ஆவர். அவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக் கேற்ப உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்புச் சந்தையில் இணைவோர்

தற்சமயம் வேலையின்மை விகிதம் 7. 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா  மாறி உள்ளது. நகர்ப்புறங்களில் 8.55 சதவீதம், கிராமப்புறங்களில் 6.48 சதவீதம் வேலையின்மை உள்ளது. இதன்படி கணக்கிட்டாலே நான்கு கோடி  பேருக்கு மேலாக வேலையற்றவர்களாக உள்ளனர். இவர்களோடு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே 20 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் இணைந்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக வேலை யின்மை குறித்து முழுமையான புள்ளி விவரங்களை வெளியிடுவதற்கு கூட மோடி அரசிற்கு 56 இன்ச் மார்பு இருந்தும் தைரியம் மட்டும் இல்லை. கடந்த ஆண்டு 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர் களின் வேலையின்மை விகிதம் 48 சதவீதமாகவும் 2018 ஆம் ஆண்டு 21 சதவீதமாக இருந்த இந்த விகிதம் தற்போது இரட்டிப்பிற்கும் அதிகம் ஆகி உள்ளது. வேலைவாய்ப்பை தேடும் ஒவ்வொரு பிரிவினரும் கடும் சவால்களை சந்திக்கின்றனர்

ஒன்றிய அரசில் வேலைவாய்ப்பு

ஒன்றிய அரசியல் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. அதனை நிரந்தரமாக நிரப்புவதற்கு மோடி அரசாங்கம் தயார் இல்லை ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு பணி நியமனம் செய்யும் அக்னிபாதை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை கடந்தாண்டு 10 லட்சம் வேலை வாய்ப்புகளையும் நிரப்புவோம். என்று வாக்குறுதி அளித்தனர் பதினைந்தில் ஒரு பங்கு பேருக்கு மட்டுமே வேலை ஆணை என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு பணியாளர்கள் மொத்த உழைப்பாளர் விகிதத்தில் இரண்டு சதம் மட்டுமே ஆவார். இது அமெரிக்காவில் மொத்த உழைப்பாளி களில் 6.9 சதவீதம் அரசின் பணியாளர்களாக உள்ள னர். இதுவே சீனாவில் 4.6 சதவீதம் உள்ளது.

மாறிவரும் உழைப்பாளர் சந்தை

2000 ஆண்டில் இருந்த‌ வேலை வாய்ப்பு என்பது விவசாயம் உற்பத்தி மற்றும் சேவை துறையின் மூலமாக இரண்டாயிரத்தி கிடைத்து வருகிறது 2009 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பில் விவசாயத்துறை 52.5% உற்பத்தி துறை 21.1% சேவைத்துறை 26 புள்ளி 4 சதவீதமும் அளித்து வந்தது. தற்சமயம் இதில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பில் வேளாண்துறை 46 சதவீதமாக சுருங்கியுள்ளது. அது  மட்டுமல்ல, உற்பத்தி துறையிலும் 21 சதம் மட்டுமேயாகும். இதில் சேவை துறை 32 சதமாக வளர்ச்சியை கண்டுள்ள போதும் பாதுகாப்பற்ற வேலைவாய்ப்பாகவே உள்ளது. இதனை எல்லாம்  கணக்கில் எடுத்துக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது என்று சொல்ல முடியாது. உழைப்பாளர் சந்தையில் உழைப்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்தே வந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் தொழிலாளர் சந்தையில் தற்சமயம் 41 கோடி பேர் மட்டுமே உள்ளனர். கடந்த  காலத்தில் இருந்த எண்ணிக்கையில் பெரும் சரிவு  ஏற்பட்டுள்ளது. இதனை உயர்த்துவதற்கும் உரிய திட்டங்களோ முயற்சிகளோ பட்ஜெட்டில் தென்படவில்லை.

பளபளப்பு திட்டங்கள்

வேலைவாய்ப்புக்காக என தன்னுடைய பட்ஜெட் அறிக்கையில், பிஎம்கேவிஒய் 4.0 திட்டத்தின் கீழ் 30 திறன் வளர்ப்பு மையங்கள் இந்தியா முழுவதும்  அமைக்கப்படும். பாடத்திட்டத்தில் தொழிற்சாலை களுக்கு தேவையான திறன்களை வளர்ப்பதற்கான முறையில் பாடத்திட்டத்தில் இணைப்பது. இதற்கு நடத்தக்கூடிய ஆர்எஸ்எஸ் நடத்தக்கூடிய ஏகலைவா முன்மாதிரி இருப்பிட பள்ளிகளை சார்ந்த 740 பேரை உதவி பணியாளர்களாக நியமிப்பது. அரசின் மூலதனச் செலவினை அதிகரிப்பதன் மூல மாக வேலை வாய்ப்பு அதிகரிப்பது. 4 கோடியே 70 லட்சம் பேருக்கு திறன் வளர்ப்பை மேற்கொள்வது

உண்மையில் என்ன நிலை

நமது நாட்டில் 30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இருக்கக்கூடிய  முப்பது மையங்களில் திறன் வளர்ப்பு , எந்த அளவிற்கு பயன்படும்.பன்முகப்பட்ட இந்தியாவில் ஒரே விதமான திறன் வளர்ப்பு திட்டங்கள் எந்த அளவுக்கு நாட்டின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும். பாடத்திட்டத்தை உருவாக்குகின்ற பணியில் ஏகலைவா பள்ளியை இணைப்பது என்பது ஆர்எஸ்எஸ்-ஸின் திட்டங்களை திணிப்பது தவற  வேறில்லை. ரயில்வே உள்ளிட்டு மூலதன செலவாக 13 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க போவதாகவும், இதன்மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும்  பட்ஜெட்டும், கார்ப்பரேட்டுகளும் “வளர்ச்சிக்கான பட்ஜெட்” என்று குதூகலிக்கின்றனர். கடந்த பட்ஜெட்டில்  அறிவிக்கப்பட்ட மூலதனச் செலவிற்கும்  முதலீட்டிற்கும் இருபத்தி எட்டு ஆயிரம் கோடி ரூபாய் இடைவெளி உள்ளது.

தற்போது உள்ள நிலையில் ஆறு கோடி ரூபாய் முதலீடு செய்யும் போது ஒருவருக்கு வேலை வாய்ப்பு என்பது உருவாகும் என்று பொருளாதார வரையறை உள்ளது. அதனடிப்படையில் கணக்கீட்டு பார்த்தாலும் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு மட்டுமே உருவாகிடும் வாய்ப்பு உள்ளது. இந்த பட்ஜெட்டை “சுப காலத்திற்கான (அமிர்த காலுக்கான) ஒரு இணையான பாதையை அமைக்கிறது” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். ஆம் கார்ப்பரேட்களுக்கான சுப காலத்தை மேலும் சிறப்பான பாதையை அமைக்கிறது‌. ஆனால் உண்மையில் ஈவன் போல்டிங்  எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

மக்கள் அனைவரின்...
மிக மோசமான ஆண்டின்... 
மிக மோசமான பருவத்தில் 
மிக மோசமான நேரத்தில்...
இந்த இரக்கமற்ற பட்டியலைத்
மட்டுமே தயாரிக்க முடிந்திருக்கிறது... 

கட்டுரையாளர் : சிபிஐ(எம்), மாநிலக்குழு உறுப்பினர்




 




 

;