திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கீரனூரைச் சேர்ந்தவர் தோழர் ஆறுமுகம். அவர் ஒரு சலவைத் தொழிலாளி. அவரால் தினமும் தீக்கதிர் படிக்காமல் இருக்க முடியாது. அதே போல கட்சி உறுப்பினருக்கான லெவியை ஒவ்வொரு மாதமும் கட்டாமலும் இருக்க முடியாது. அப்போது தீக்கதிர் நாளிதழ் மூன்று ரூபாய். மாதச் சந்தா ரூ.90. அதேபோல கட்சி லெவி மாதம் ரூ.60. தோழர் ஆறுமுகம் தீக்கதிருக்காகவும், லெவிக்காக வும் சேர்த்து மாதம் ரூ.150ஐ தவறாமல் செலுத்தி வந்தார். அவ்வாறு தவறாமல் செலுத்துவதற்கு எவ்வளவு அத்தியாவசிய செலவுகள் இருந்தாலும் தினமும் ஐந்து ரூபாயை, அவர் வீட்டு உண்டியலில் போட்டு வந்தார். மாதக் கடைசியில், உண்டியலைத் திறந்து தீக்கதிருக்கான மாதச் சந்தாவையும், கட்சி லெவியையும் செலுத்திவிடுவார். தோழர் ஆறுமுகம் இறந்த போது, குழிமேட்டில் அவருக்குப் பிடித்தமானவற்றை வைத்து அவரது குடும்பத்தினர் வணங்கினர்.அதில் தீக்கதிர் நாளிதழும் இருந்தது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ராமசாமி, தோழர் ஆறுமுகத்தை பற்றி விவரித்த பொழுது, அகில இந்திய மாநாட்டு பேரவைக்கு வந்த பழனி தோழர்கள் உணர்ச்சி வசப்பட்டதைக் காணமுடிந்தது. தோழர் ஆறுமுகத்தின் அனுபவ நீட்சியாக, திண்டுக்கல் மாவட்டக் குழு வேண்டுகோளை ஏற்று, பேரவைக்கு வந்த கட்சி உறுப்பினர்கள் சின்டெக்ஸ் வடிவத்தில் இருந்த சிறு உண்டியல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். கட்சியின் வழிகாட்டுதலின்படி, தினமும் பத்து ரூபாயை உண்டியலில் சேமிக்க உள்ளனர். சேரும் பணத்தை செந்தொண்டர் சீருடைக்கும் மாநாடு செல்வதற்கான போக்குவரத்திற்கும் பயன்படுத்த உள்ளனர். வீதிகளில் தோழர்களால் தூக்கிச் சுமக்கப்பட்ட உண்டியல்கள், தோழர்களின் வீடுகளுக்குள்ளும் வருகிறது. இது திருப்பதிக்கான உண்டியல் அல்ல. கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கான மதுரை உண்டியல்.