“கடினமாக வேலை பார்க்காதீர்கள், ஸ்மார்ட் டாக வேலை பாருங்கள்” என்ற ஆலோ சனை இந்தக் காலத்தில் சொல்லப்படாத இடமே இல்லை. இந்த ‘ஸ்மார்ட்’ என்ற சொல் நம்மை அடிக்கடி வந்து தாக்குகிறது. சென்னை ‘ஸ்மார்ட் சிட்டியில்’ ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு தொழிலாளி, தனது ‘ஸ்மார்ட் போனில்’ வாடிக்கையாளர்களை ஏற்கிறார். இவர் தான் ஸ்மார்ட்டாக வேலை பார்க்கிறாரே என்று பேச்சுக் கொடுத்தால், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு முதல் வரி, லைசன்ஸ் மற்றும் இதர கட்டணங்களின் சுமை குறித்து புலம்பல் தொடங்குகிறது. எத்தனை கடுமையாக உழைத்தாலும் வீட்டுக்கு தேவையான வருவாயைத் திரட்ட முடியவில்லை; அதுவும் கொரோனா காலத்தில் ‘ஸ்மார்ட் கடன்’ வேறு பெற்றி ருப்பதாகவும், அதற்கும் சேர்த்து உழைப்பதாகவும் தெரிவிக்கிறார்.
அவருடைய பிரச்சனையெல்லாம் கண்ணுக்கே தெரியாத ஒரு கயிறு கொண்டு தன்னைக் கட்டுப் படுத்தும் செயலியை இயக்குகிற ‘ஸ்மார்ட்’ மூலதனம் பற்றியதாக இருக்கிறது. ஒரு எளிமையான கேள்வியை முன்வைத்தார்; “ஆட்டோ ஓட்டுநர் மீது மீட்டர் கட்ட ணம் நிர்ணயிக்க முடிகிற அரசாங்கத்தால் இவர்கள் குவிக்கும் லாபத்தைப் பற்றி ஏன் கேள்வி கேட்க முடியவில்லை?; “அரசாங்கமே ஒரு செயலியை உருவாக்கினால், நாங்கள் கட்டும் வரிப்பணத்திற் காவது ஒரு பலன் இருக்கும் அல்லவா”? கடினமாக உழைப்பவர்களே பெரும்பான்மையாக வாழும் ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்கான கேள்வி இது. சிஐடியு தொழிற்சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்து தனது போராட்டங்களை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இருப்பினும், முதலில் கேட்ட கேள்வி அப்படியே இருக்கிறது. இதுதான் வரப்போகிற ‘ஸ்மார்ட்’ யுகத்திற்கான முன் அறிவிப்பா?
நிதி ஆயோக் அறிக்கை
ஜூன் 2022-இல் நிதி ஆயோக் ஒரு கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு “இந்தியாவில் வளர்ந்துவரும் ஜிக் மற்றும் தளப் பொரு ளாதாரம்: எதிர்காலத்திற்கான பார்வையும், பரிந்துரை களும்”. மொத்தம் 16 பக்கங்கள் கொண்ட கோப்பில் 6 பக்கங்கள் மட்டுமே உள்ளடக்கம் இருந்தது. ‘ஜிக்’ அல்லது ‘தள’ பொருளாதாரம் என்றால் ஓலா, சொமாட்டோ, அமேசான் போல ஏதாவது இணைய தள சேவையை நடுவில் வைத்துக்கொண்டு முற்றிலும் நிரந்தரமற்ற/முற்றிலும் தற்காலிகமான தொழிலாளர்க ளைக் கொண்டு பணி செய்கிற சூழலை குறிப்பிடு கிறது.
சமைத்த உணவுகள், காய்கனி, மளிகைப் பொருட்கள், போக்குவரத்து சேவைகள், மின்னணு பொருட்கள் வணிகத்தில் நாம் சாதாரணமாக இணைய தள அடிப்படையிலான வியாபாரத் தொழில்நுட்பங்க ளை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். இதற்கு முன்பே ரியல் எஸ்டேட் வணிகத்திலும், பயன்படுத்திய பொருட்களின் வணிகத்திலும் இந்த தளங்கள் பிரபல மாக இருந்தன. இன்னும், வங்கிச் சேவை தொடங்கி, மருத்துவர், வழக்கறிஞர் மற்றும் தட்டுமுட்டு பணிகள் வரை எல்லாவற்றிற்கும் இதுபோன்ற தளங்கள் உரு வாகின்றன. அரசின் அறிக்கை அதில் சில தொழில்களை மட்டும் கணக்கில் கொண்டுள்ளது. 77 லட்சம் பேர் ‘தள பொரு ளாதாரத்தில் பணியாற்றி வருவதாகவும் 47 சதவீதம் பேர் நடுத்தரத் திறன் கொண்ட பணிகளை செய்வதா கவும், 22 சதவீதம் பேர் உயர் திறன் கொண்ட பணி களை செய்வதாகவும், 31 சதவீதம் பேர் குறைந்த திறன் கொண்ட பணிகளில் இருப்பதாகவும் சொல்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் இந்த வகையிலான வேலை செய்வோர் எண்ணிக்கை 2.35 கோடியாக அதிகரிக்கும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.
சொல்லாமல் விட்டவை!
அரசின் அறிக்கை சொல்வதை விடவும், சொல்லா மல் விட்டதில்தான் ஆபத்தான செய்திகள் ஒளிந்தி ருக்கின்றன. முதலில் குறிப்பிட்ட ஆட்டோ தொழிலாளர் உட்பட பல்வேறுபட்ட இந்தத் தளங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுடைய கவலைகளை அறிக்கை கணக்கிலெடுக்கவில்லை. கடந்த ஆண்டு செப் டம்பர் மாதத்தில் ஐ.எப்.ஏ.டி என்ற கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், 0.15% தொழிலாளர்கள் மட்டுமே தங்களுக்கு ஏதாவதொரு விபத்து காப்பீடு இருப்பதாக தெரிவித்தி ருக்கிறார்கள். பெரும்பகுதியினருக்கு எந்த விதமான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லை. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, குறைந்தபட்ச ஊதிய சட்ட வரம்பிற்குள் கொண்டு வருவது, மருத்துவ காப்பீடு, விபத்துக்காப்பீடு போன்றவை குறித்து அரசாங் கத்தின் அறிக்கை எதையும் பேசவில்லை. இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில், செயலி வழியாக பணி கொடுக்கும் நிறு வனங்கள் தங்களை ‘இடைநிலை தளம்’ என்ற அளவில் குறிப்பிட்டு தப்பித்துக்கொள்ள முடியாது என்பதை அந்த நாட்டு நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. அப்ப டியானால் தொழிலாளர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் வழங்குவது அந்த நிறுவனத்தின் கடமை என்றாகிறது. ஆனால், நிதி ஆயோக் இந்த வளர்ச்சிப் போக்குகளை கண்டும் காணாமல் கடக்கி றது. அதே இங்கிலாந்தை உதாரணம் காட்டி, ‘குறைந்த பட்ச சம்பளமாக ஏதாவது நிர்ணயிக்க வேண்டும்’ என்று மட்டும் நிறுவனங்களை கெஞ்சுகிறது.
இரட்டைச் சுரண்டல்
4 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்ன ணியில், உற்பத்தி முறையிலும் உற்பத்தி உறவுகளி லும் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நாம் கண்டு வரு கிறோம். முதலாளித்துவம் தனக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் லாபத்தை உறிஞ்சுகிறது. வேலை நாளை நீட்டுவது, ஊதியத்தை குறைப்பது, தொழிலா ளர் உரிமைகளை மறுப்பது, தொழிலாளர்களை மறை முகமாக கட்டுப்படுத்துவது, இதுதான் முதலாளித்து வம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள். நிரந்தரமான பணிகளை சில மணி நேர ஒப்பந்தப் பணிகளாக மாற்றுவதை இணையதள செயலிகள் சாத்தியமாக்கியிருக்கின்றன. தொழிலாளர்களின் உழைப்பையே சந்தையில் சில்லறை வணிகம் செய்கி றார்கள். அவர்கள் சொல்லும் சந்தை விதிப்படி பார்த்தால் ‘கிராக்கி’ அதிகமானாலோ, திறனுக்கு ஏற்ப வோ மதிப்பு கூட வேண்டும். ஆனால், அந்த சந்தையை மொத்தமும் கட்டுப்பாடற்ற சுரண்டலே ஆதிக்கம் செய்கிறது. எனவே மதிப்பு குறைக்கத்தான் படுகிறது. சுரண்டல் ஸ்மார்ட் ஆகிறது. மேலும் இந்த நிறுவனங்கள் நுகர்வோரின் விபரங்களையும் பண்டமாக்குகிறார்கள்.
வாங்கும் திறன் படைத்த வாடிக்கையாளர்களின் விபரங்களையும், அவர்களின் நுகர்வு நடவடிக்கையை பற்றிய விபரங்களையும் திரட்டுகிறார்கள். அதன் மூலம் தங்கள் வியாபாரத் தந்திரங்களை மேம்படுத்து கிறார்கள். கறிவேப்பிலை, கீரை வியாபாரம் வரையி லும் வியாபிக்க இது அவர்களை அனுமதிக்கிறது. போக்குவரத்து சேவையை எடுத்துக்கொண்டால், கிராக்கியை கணக்கிட்டு கூடுதலாக சுரண்டுவதற் கான மொத்த ‘சுதந்திரமும்’ ஸ்மார்ட் முதலாளிக்கு சென்று விடுகிறது.
1) குறைந்தபட்ச கூலி உட்பட எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லாத தொழிலாளர்கள்,
2) வாங்கும் சக்தி படைத்த சந்தையாக அமைந்தமக்களின் விபரங்கள்,
3) உற்பத்தியையும் சந்தையையும் நேராக இணைப்பதன் மூலம் ஏகபோகத்திற்கு கிடைக்கும் அதிகபட்ச லாப சாத்தியம்,
4) நவீன சுரண்டலுக்கு சாதகமான அரசின் கொள்கைகள்
என நான்கும் சேர்ந்து ‘அதீத லாபத்தை’ குவிக்க சாதகமான சூழலை உருவாக்குகிறது. இது அபாயகர மான எதிர்காலத்திற்கான முன் அறிவிப்பு.
ஸ்மார்ட் முதலாளிகளும் அதை எதிர்த்த மாற்றும்
5ஜி தொழில்நுட்பத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளில் ‘அதானி நிறுவனம்’ ஓடிச் சென்று விண்ணப்பித்த செய்தியை படித்திருப்போம். அவர்கள் நுகர்வோர் சந்தைக்குள் வரப்போவதில்லை; ஆனால், தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் இணைய சேவையை வழங்கப்போவதாக தெரிவித்திருக்கி றார்கள். ஆம், விரைவில் ஒரு ‘அல்ட்ரா ஸ்மார்ட்’ யுகம் வர இருக்கிறது. அது தொழில் உற்பத்தியை புரட்டிப் போடப் போகிறது. அதையும் ‘லாப வெறியே’ வழி நடத்தும் என்றால், தொழி லாளர்களின் முதுகெலும்பு மென்மேலும் ஒடிக்கப் படும். வேலைப்பாதுகாப்பு உள்ள பணியில் இருக்கிற- நிரந்தரத்தன்மை கொண்ட தொழிலாளர்க ளை அது பதம் பார்க்கும். எனவே, ஸ்மார்ட் யுகத் திற்கான முழக்கங்களை வடிப்பது நம் முன் உள்ள அவசரக் கடமையாகும். கேரள அரசாங்கம் சமீபத்தில் திரைப்பட விநியோ கத்தை இணையதளம் மூலம் மேற்கொள்ளும் ஒரு சேவைக்கான அழைப்பினை விடுத்திருந்தது. பல்வேறு சினிமா தயாரிப்பாளர்களும் தங்கள் படங் களை இந்த தளத்திற்கு கொடுக்கலாம். நவம்பர் முதல் தேதியில் இருந்து அந்த சேவை தொடங்கும். இது அரசின் கொள்கை உருவாக்க தளத்தில் இருந்து செய்யப்படும் முக்கியமான தலையீடு ஆகும். சந்தையை சில நிறுவனங்களின் ஏகபோகத்தில் விட்டு வைக்க முடியாது என்ற செய்தி அதில் இருக்கிறது.
இணைய வசதியை அடிப்படை உரிமை என்று அறிவித்திருப்பதும். அனைத்து கிராமங்களையும், எல்லா வீடுகளையும் இணைய வசதி கொண்டதாக மாற்றியமைப்பதும் கூட எதிர்காலத்தை முன் உணர்ந்த நடவடிக்கையே. அறிவு சார் பொருளாதா ரம் என்ற எதிர்காலத்தை நோக்கி கேரள அரசாங்கம் பயணிக்கிறது. இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கை களை மேற்கொள்ள முடிந்துள்ளது.
ஸ்மார்ட் ஆகிறதா களம்!
போராட்டக் களத்தில் இருந்தும் இதுபோன்ற முழக்கங்கள் எழுகின்றன. ‘மீட்டர் கட்டணம்’ கேட்டு வந்த ஆட்டோ/கார் வாகனம் ஓட்டும் தொழிலா ளர்கள், செயலி சேவையை அரசு நடத்த வேண்டும் என கோருவது அந்த வகைதான். அதே போல நம்முடைய வேறு பல கோரிக்கைகளும் நவீனமாக வேண்டியுள்ளது. நவீன நுட்பங்கள் வரும்போது, தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைத்து, அதிக எண்ணிக் கையில் வேலை கொடுக்க வேண்டும். சந்தை என்பது பொருட்களை மட்டும் கொண்டதல்ல; வாங்கும் சக்தியுள்ள வாடிக்கையாளர்களையும் கொண்டது என்பதால் இது கவனம் குவிக்க வேண்டிய பிரச்சனை.
போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளை எல்லா இடங்களிலும் உத்தரவாதப்படுத்துவது அரசின் கடமையாகும். அத்துடன் குறைந்தபட்ச கூலி கணக்கீட்டின் போது ரீசார்ஜ் கட்டணம், வாகனங்கள் பராமரிப்பு, எரிபொருள் செலவு மற்றும் ஸ்மார்ட் போன்களை பராமரிப்பதற்கும், வாங்குவதற்குமான செலவுகள் உள்ளடங்க வேண்டும் ஆகிய உடனடிக் கோரிக்கைகளுக்கும் வடிவம் கொடுக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், கழிப்பிட வசதியும், ஓய்வு எடுப்பதற்கான இடத்தை உறுதி செய்வ தும் இந்த துறையில் லாபம் குவிக்கும் நிறுவனங்க ளின் கடமை அல்லவா?
வணிகம் செய்வதற்கான இடம் பொதுவெளி என்பதில் இருந்து ஒருவரின் கையடக்க தொலைபேசி என்று மாறுகிறது என்பதால் அது வணிகர்களுக்கு இடையிலான வாய்ப்புகளிலும் சமனற்ற சூழலை உருவாக்குகிறது. இதே சூழலை நுகர்வோர் பக்கம் இருந்து பார்த்தால் - பொருட்களை விற்கும் - வாங்கும் செயலிகளின் நுட்பங்கள் மூடுமந்திரமாக இருப்பதால், தனக்கு வேண்டியதை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையே பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில் தனிநபர் விபரங்கள், தரவு களை எவ்வாறு பயன்படுத்தக்கூடாது என்பதை அரசு தெளிவாக்க வேண்டும். ஆனால், இந்தியா போன்ற முதலாளித்துவ நாடுகளில் இவை அனைத்திலும் பெருநிறுவனங்களின் லாப நோக்கம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது; அதுவே விதிகளை வடிவமைக்கிறது.
ஆம், இப்படித்தான் முதலாளித்துவம் தனது சுரண்டலை ’ஸ்மார்ட்’ ஆக்குகிறது. தொழிலாளி வர்க்கமும் தனது மாற்றுக்கான முழக்கங்களை ‘ஸ்மார்ட்’ ஆக்கிட வேண்டும். இவ்வாறாக, ஸ்மார்ட் யுகத்தின் கதவுகள் திறக்கின்றன.
கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்