articles

img

‘சீரமைக்கப்படும்’ பொருளாதாரத்தில் சீர்குலையும் பெண் தொழிலாளர் நிலை - ஆர்.எஸ்.செண்பகம்

இந்தியத் தொழிலாளர் படையில் பாலின இடைவெளி நிலையான முரண்பாடாக உள்ளது. பெண்களுக்கு கிடைக்கும் வேலைக ளில் பெரும்பாலானவை பணிப் பாதுகாப்பற்ற வேலைகளாகும். ஒப்பந்தத் தொழிலாளர்கள், குறித்த காலத்திற்கு பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் அல்லது பயிற்சி பெறுபவர்கள் போன்றோரும் சொந்தத் தொழில் புரிவோரும் இதில் அடங்குவர். மகப்பேறு காலத்தில் கூட ஊதியத்துடன் கூடிய விடுப்பினை பெற முடியாதவர்களாக உள்ளனர். 2021-2022ல் கொரோனாவிற்குப் பிறகு, 60% உழைக்கும் பெண்கள் சுயதொழில் செய்பவர்களாக இருந்தனர். சுய தொழில் செய்யும் பெண் தொழிலா ளர்களின் எண்ணிக்கை 2022-2023ல் 70.1% ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வர்கள் ஊதியம் இல்லாத குடும்ப வேலைகளில் அல்லது குடும்ப நிறுவனங்களில் - குடும்ப நிலங்க ளில் வேலை செய்கிறார்கள்.   அவர்கள் தொழிலா ளர்களாக அங்கீகரிக்கப்படுவதில்லை.  மொத்த பெண் தொழிலாளர்களில் ஊதியம் பெறாத பெண்கள் 2017-2018ல் 31.7%ஆக இருந்தனர்.  இந்த எண்ணிக்கை   2022-2023ல்  37%ஆக உயர்ந்துள்ளது.  இப்படி சம்பளம் கொடுபடா வேலை களில் பெண்களை பணியமர்த்துவதால், பொருளா தார ரீதியாக பாலின சமத்துவமின்மை நிரந்தரமாக நீடிக்கிறது. தொழிலாளர் சந்தையில் பெண் தொழி லாளர் பங்கேற்பு விகிதம் ஜனவரி - ஏப்ரல் 2022 இல் 9% ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவில் 2030  ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் உழைக்கும் வயதினர் 70 சதவீதமாக இருப்பார்கள். இது உலகில் மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இந்த நிலையில், இந்தியத் தொழிலாளர் படையில் பெண்களின் குறைந்த பங்கேற்பு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

பெண் தொழிலாளர்களின்  எதிர் காலப் பணிச்  சூழல்

ஒரு நாளில் சராசரியாக 7.2 மணி நேரத்தை பெண்கள் சம்பளம் கொடுபடா வீட்டு வேலைகளில் செலவிடுகின்றனர்.  ஆண்கள் 2.8 மணி நேரம் மட்டுமே செலவிடுகின்றனர். குடும்பப் பராமரிப்பு உள்ளிட்ட பெண்களின் வீட்டுச் சுமை அவர்கள் மீதிருந்து விலக்கப்படுவதே இல்லை என்பதையே இது காட்டுகிறது.  இதைத் தாண்டி பெண்கள் வேலைக்குச் செல்லும் போது, வேலையின் தரம் முக்கியமானது. கண்ணிய மான வேலையுடன், நியாயமான வருமானம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகள் ஆகியவை அடிப்படை இலக்காக வரை யறுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், வீட்டில் உள்ள பராமரிப்புப் பணிகளைக் குறைத்து மறுபகிர்வு  செய்வதுடன், பராமரிப்பிற்கான உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் அரசுத் தரப்பில் அதிக முதலீடு கள் செய்யப்பட வேண்டும்.

டிஜிட்டல்  பொருளாதாரத்தில் பெண்கள்

இன்றைய டிஜிட்டல் பொருளாதாரம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியைப் பற்றியது மட்டுமல்ல; வணிகச் செயல்பாட்டில் ‘டிஜிட்டல் நுண்ணறிவு’ எவ்வாறு பல்வேறு மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது என்பதையும் பற்றியது. டிஜிட்டல் ஆட்டோமேஷன் மற்றும் மனித இயந்திரமயமாக்கல், கிளவுட் கம்ப்யூட்டிங், பெரிய அளவில் தரவு பகுப் பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் என அனைத்தும் அனைத்துத் துறைகளி லும் கோலோச்சத் துவங்கியுள்ளன. 2025 ஆம் ஆண்டு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 1 டிரில்லி யன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று பொருளா தார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இது தேசிய மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் 18-23% ஆக இருக்கும். இந்தச் சூழலில் வேலையின் எதிர்காலம் குறித்த ஆய்வறிக்கையானது, பொருளாதாரத்தின் இந்த டிஜிட்டல் மறுசீரமைப்பு, தற்போதுள்ள பாலினம் சார் வேலை வாய்ப்புகளை சீர்குலைக்கும் என்று தெளி வாகக் கூறுகிறது. “பல நாடுகளின் ஆய்வுகள், தொழி லாளர் சந்தைகளில் இந்த டிஜிட்டல் மறுசீரமைப்பில், டிஜிட்டல் ஆட்டோமேஷன் என்பது, நடுத்தர வேலைத் திறன் பெற்றவர்களை வெளியேற்றிவிடும். பெண்கள் அதிகமாக உள்ள வேலைகளில் இத்தகைய தொழில் நுட்பத்தால் பெருமளவில் பணி இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. முதலாளிகளும் ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அபாயம் உள்ளது. ஆனால் பெண் தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் ஆயத்த ஆடை, பின்னலாடை உற்பத்திப் பிரிவிலும், வீடு சார் வேலைகளான  சுத்தம் செய்தல், சமைத்தல் மற்றும் அழகுக்கு அழகு சேர்த்தல் போன்ற தொழில்களில் கூட பெண் தொழிலாளர்கள் கணிசமான வேலை இழப்பினை சந்திக்கக் கூடும் என்ற அச்சம் எழுந் துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் தொழிலாளர்களின் நிபந்தனைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் பேரம் பேசும் திறன் பாதிக்கப்படும். அதீத கண்காணிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு இல்லாமை உள்ளிட்ட உரிமை மீறல்களும் எதிர்கால சவால்களாக இருக்கும்.  

டிஜிட்டல் - கார்ப்பரேட்மயமாகும் விவசாயத் துறை

இந்தியாவில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் விவசாயத் துறையும் டிஜிட்டல் - தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வேகமாக மறு சீரமைக்கப்படுகிறது.  பண்ணை ஆலோசனைகளை வழங்குதல், நிதியுதவிக்கான அணுகல், தயாரிப்பு  ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்கம், விலை நுண் ணறிவு போன்ற அனைத்திலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. பெண்களின் சமத்துவமற்ற சமூகச் சூழல் மற்றும் ஆதார மற்றும் தொழில்நுட்ப வளங்களை அணுக முடியாமை ஆகியவற்றால் விளிம்புநிலையில் உள்ள பெண் விவசாயிகள் தொழில்நுட்ப சீர்திருத் தங்களினால் பயனடைய மாட்டார்கள்.  நில உரிமை யாளர்கள் அல்லது உள்ளூர் இடைத்தரகர்களிடம் கூலிக்கு திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.  விவசாயத்தில் இன்று தேவைப்படுவது தரமான உள்ளீட்டுப் பொருட்கள், குளிர்பதன கிட்டங்கி கள், மானியத்துடன் கூடிய போக்குவரத்து வசதிகள், விவசாய விளை பொருட்களுக்கான சட்டப்பூர்வ மாக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை தானே தவிர; கார்ப்பரேட்மயமாகும், டிஜிட்டல் விவசாய உற்பத்தி அல்ல. 

எனவே, பெண்களின் திறன் மேம்பாட்டிற்கு அரசும் அதிக நிதி ஒதுக்கீடு செய்வதுடன், குடும்பங்க ளிலும் பெண் கல்விக்கான, திறன் மேம்பாட்டிற்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. இந்த டிஜிட்டல் யுகத்தில், பெண்களின் பொருளா தார சுயசார்பிற்கான போராட்டத்தில் நான்காம்  தொழிற்புரட்சி கூடுதல் சவாலாகியுள்ளது.

;