articles

img

கூட்டுறவு அமைப்புகளை தமிழக அரசு சீரமைத்திட வேண்டும் - ஆ.கிருஷ்ணமூர்த்தி

‘ஜனநாயக முறையில் நிர்வாகம்’ என்பது கூட்டு றவின் தத்துவமாகும். அங்கத்தினர்கள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களாலேயே ஜனநாயக கோட்பாட்டின்படி நிர்வகிக்கப்படவேண்டும். ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகமும் கூட்டுறவுச் சட்டம், விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின்படி அளிக்கப்படும் அதிகாரங்களையும், கடமைகளையும் செயல்படுத்தும்” என தமிழ்நாடுகூட்டுறவு சங்கங்கள் சட்டப்பிரிவு 33-ல் வரையறுத்து சொல்லப் பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்புக்களைப் பாதுகாக்கவும், கூட்டுறவு அமைப்புக்கள் தன்னாட்சி பெறவும், கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் தலையீட்டை தவிர்க்கவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது அரசியலமைப்புச் சட்டத்தில் 97வது திருத்தம் 2009 (11.11.2009) இல் முன்மொழியப்பட்டது.  நீண்டவிவாதத் திற்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டு,  2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக தமிழகத்திலும்  2013 ல் (30 1. 2013) தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தில் 33-ஏ என்ற பிரிவு உருவாக்கப்பட்டு திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன.

2013 தேர்தல் 

இந்த திருத்தங்களின் அடிப்படையில், 15 ஆண்டு களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த கூட்டுறவு தேர்தல் 2013-ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கி ஐந்து கட்டமாக நடைபெற்றது. உறுப்பினர் சேர்ப்பு தொடங்கி ,நிர்வாககுழு தேர்தல்வரை அன்றைய ஆட்சியாளர்களின் விருப்பப்படியே நடைபெற்றது. பெயரளவில் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையமும் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்பட்டது.  சுமார் 2.04  கோடி உறுப்பினர்களை கொண்ட  21027  கூட்டுறவு சங்கங்களில்  2.05 லட்சம் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், 0.45 லட்சம் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான இடங்கள் சேர்த்து. 2.5 லட்சம் இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றதாக அப்போது  (2013)  தேர்தல் ஆணையம் அறிவித்தது. மீண்டும் ஐந்து ஆண்டுகாலம் பதவி நிறைவு பெற்ற பின்  2018-ல் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஐந்து கட்டமாக அறிவிக்கப்பட்டது. இதில் 4 கட்ட தேர்தல் நடைபெற்றள்ளது.  நீதிமன்ற வழக்குகள் காரணமாக 5வது கட்ட தேர்தல் இதுவரை நடைபெறவில்லை.       

தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான கூட்டுறவு நிர்வாகங்களால் கூட்டுறவு நிறுவனங்களின் நிதி ஆதாரம் சுரண்டப்பட்டு, பணிநியமனம், கொள்முதல், ஏலம், விற்பனை, கட்டமைப்புபணிகள், கடன் வழங்குதல், பயிர்க்கடன் வழங்குதல், நகைக்கடன், கிடங்கு கட்டுதல், அலுவலகம் புதுப்பித்தல், பொங்கல் பரிசு போன்ற இலவசங்கள் வழங்குவதற்கான கொள் முதல் உள்ளிட்ட பலவகைகளில் முறைகேடுகள், விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி யது.  நிர்வாக சீர்கேடுகள் மலிந்துவிட்ட நிலையில் கூட்டுறவு மீதான நம்பிக்கையின்மை வளர்ந்து வரும் நிலையில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் தொ டர்பாக  தமிழக அரசு குழுக்களை அமைத்து ஆய்வு  செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அமைப்புகளை சீர்செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தற்போது தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க இயலாது.  இந்நிலையில், அரசியலமைப்பு சட்டதிருத்தம் 97ல் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் விவ காரங்கள்,  அவர்களின் பதவிகாலம்,  மேலாண்மை உள்ளிட்ட விவரங்களை 9பி பகுதி வழங்குகிறது. கூட்டுறவு சங்கங்கள் மாநில பட்டியலில் இடம்பெற்று இருப்பதால்; மாநில அரசு இயற்றிய சட்டத் திருத்த விதிகளை மீறி உள்ளதாக குஜராத் உயர்நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசார ணைக்குப் பின் குறிப்பிட்ட பகுதிகளை ரத்து செய்து 2013ல் உத்தரவிடப்பட்டது.  இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்தது, 

நீதிபதிகள் ஆர்.எஸ். நாரிமன்,  கே.எம்.ஜோசப்,  பி.ஆர். கவாய் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து 20.07.2021ல் வழங்கிய தீர்ப்பில் குஜராத் நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதாரவாக இரு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். கூட்டுறவு சங்கங்களின் விவகாரம் மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சங்கங்களை அமைப் பது,  நிர்வாகிப்பது தொடர்பாக. ஒன்றிய அரசு சட்டம் இயற்ற இயலாது எனவும்,  அரசியல் அமைப்புச் சட்டத்தின் புதிதாக இணைக்கப்பட்ட 9பி, பகுதியை ரத்து செய்தும் உத்தரவிட்டனர். இதன் அடிபடையில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தில் திருத்தங் கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  

பதவிக் காலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என இருந்ததை 33 (10 ) சட்டப் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு பதவிக்காலம் 5 ஆண்டுகள் என மாற்றம் செய்யப்பட்டது.  தற்போது மீண்டும் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிர்வாகக்குழு உறுப்பினர் எண்ணிக்கை

தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்வாகக்குழு உறுப்பி னர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் அதிகபட்சம் 29 ஆக இருந்தது. அதில் தொடக்க நிலை சங்கம் குறைந்த அளவு 7, அதிக அளவு21,  மத்திய சங்கம் குறைந்த அளவு 11, அதிக அளவு 21, தலைமைச் சங்கம் குறைந்த அளவு 11, அதிக அளவு 21 என 2013 இல் திருத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தொடக்க நிலை சங்கம் குறைந்த அளவு 7,அதிக அளவு 17, மத்திய சங்கங்களில் குறைந்த அளவு 11,  அதிக அளவு 27, தலைமைச்சங்கம் குறைந்த அளவு 11, அதிக அளவு 29  என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நியமனம் தொடர்பாக

இச்சட்டத் திருத்தத்தில் பிரிவு 33ல் நியமனங்கள் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, அதில் பதிவு பெற்ற சங்கத்தின் உறுப்பினர்களிடையே யிருந்து அல்லது அரசுப் பணியாளர்களிடையேயிருந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் குழுவின் உறுப்பி னர்கள் அனைவரையும் அல்லது எவரையும் அரசு அல்லது பதிவாளர் நியமிக்கலாம். குழு உறுப்பினர்கள் அனைவரையும் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாக நியமனம் எதுவும் செய்யப்படுதல் கூடாது என திருத்தம் செய்யப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. காரணம், தேர்தலின்றி நேரடி நியமனம் என்பது ஜனநாயக மரபுக்கு எதிரானது. மேலும், “செயலாட்சியர்” என்ற சொற்றொடர் மீண்டும், “தனி அலுவலர்” என திருத்தம் செய்யப் பட்டுள்ளது. மேலும் இச்சட்டங்கள் தொடர்பாக சில திருத்தங்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த கால அனுபவங்களைக் கணக்கில் கொண்டு

கூட்டுறவு தேர்தல் கடந்த காலங்களில் நடைபெற்ற போது நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் ஏராளம். பெருந்தொற்றுக் காலத்தில் கடுமையான பொருளா தார நெருக்கடியை சந்தித்துவரும் வேளையில் கூட்டுறவு அமைப்புகளின் தேவை அதிகரித்துள்ளது.  அதே வேளையில் கூட்டுறவு அமைப்புகளை சீர்திருத்த வேண்டிய பொறுப்பும்,  கடமையும் தமிழக அரசிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு தேர்தலை நியாயமாக, ஜனநாயகப்பூர்வமாக நடத்திட தேர்தல் ஆணையம் சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

  •     உறுப்பினர் சேர்ப்பிற்கு கால அவகாசம் நிர்ணயித்து தகுதியான அனைவரும் உறுப்பினராகும் உரிமையை அளிக்கவேண்டும்.
  •     உறுப்பினர்பட்டியல் ஆறுமாதகாலத்திற்கு முன்பே வெளியிடப்பட்டு சேர்த்தல் நீக்கல் என்பதற்கான உரியகால அவகாசம் அளித்து உறுப்பினர் பட்டியல் இறுதி செய்திடவேண்டும்.  
  •     உறுப்பினர் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
  •     வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, திரும்ப பெறுதல் போன்றவற்றிற்கு உரிய காலஅவகாசம் அளித்து தேர்தல் கால அட்டவணையை பொதுவெளியில் விளம்பரப்படுத்துவதோடு,  இவை அனைத்தும் நேர்மையாக நடத்துவதை உறுதி படுத்த வேண்டும்.
  •     வாக்குப்பதிவின் போது அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.
  •     கூட்டுறவு தேர்தலில் இடஒதுக்கீடு அமலாக்கப்படுவதனால்  (பெண்கள் 30சதம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்18 சதம்) வாக்குச்சீட்டு வெவ்வேறு வண்ணங்களில் அளிப்பதை உறுதி செய்திட வேண்டும்.
  •     வாக்காளர்களுக்கான தகுதிகள், வேட்பாளர்களுக்கான தகுதிகள் அனைத்து உறுப்பினர்கள் அறியும் வகையில் அறிவிப்பு செய்திட வேண்டும். தேர்தல் தொடர்பான விதி முறைகள் அடங்கிய கையேடு அனைத்து       உறுப்பினர்களும் அறியும் வகையில் பொது வெளியில் விளம்பரம் செய்திட வேண்டும்.
  •     தேர்தல் நடத்த போதுமான இடவசதி உட்பட வாக்குச்சாவடி அமைத்து தேர்தல் நடைபெற வேண்டும். வாக்காளர் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க போதுமான பாதுகாப்பு வசதியும் உறுதி செய்திட வேண்டும்.
  •     தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக்குழுக்களில் கூட்டுறவுத் துறை, அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமான செயல்பாட்டை அனுமதிக்கும் வகையில் சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். 
  •     கூட்டுறவு நிறுவனங்களில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைக் களைந்து,  ஜனநாயகக் செயல் பாட்டை உறுதிபடுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கட்டுரையாளர்  :  ஒருங்கிணைப்பாளர், ‘கூட்டுறவை பாதுகாப்போம்’


 

;