articles

img

தோழர் மலேசியா கணபதி - எஸ்.ராமச்சந்திரன்

75 ஆண்டுகளுக்கு முன்னர், 04.05.1949, விடியற்காலை 3.15 மணி. மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், புடு சிறைக்கூடம். தோழர் கணபதி பேசுகிறார், தமிழிலும் சீன மொழியிலும். தன்னுடன் போராட்டக் களத்தில் இருந்தவர்களை நினைவு கூர்கிறார். மலேசிய நாட்டு மக்களின் தன்னாட்சி விடுதலைக்கும், பாட்டாளி மக்களின் பொருளாதார சமத்துவத்திற்கும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆதிக்க, கொடுங்கோன்மை ஆட்சியை அகற்றவும் ஆவேசத்துடன் முழங்குகிறார். உரத்த குரலில் உழைப்பாளிகளின் சர்வதேச கீதத்தை பாடுகிறார். காலை 3:30 மணி : சிறைக் கண்காணிப்பாளர், ஜெயிலர், சார்ஜன்ட் உள்ளிட்ட 15 நபர்கள் தோழரின் செல்லுக்கு அருகில் வந்தனர். அடுத்த சில மணித்துளிகளில் நீதிபதியுடன், மருத்து வரும் வந்து சேர்ந்தனர். சிறைக் கதவு திறக்கப்பட்டது. ஜெயிலர் தோழரை பார்த்து, ‘ மிஸ்டர் கணபதி ‘ என்று அழைத்தார்.   ‘நான் தயார்’ என்றார் தோழர்.  இரவு வழங்கப்பட்ட உணவும் தண்ணீரும் அப்படியே இருந்தது. மருத்துவப் பரிசோதனை நடந்தது. மருத்துவர் உடல்நலம் நன்றாக உள்ளது என்று அறிவித்தார். காலை 4.00 மணி : கணபதி குளியலறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் .  

குளித்த பின்னர் சிறைச்சாலைக்கு உரிய புதிய உடை வழங்கப்பட்டது. மருத்துவர் மீண்டும் பரிசோதனை செய்து நன்றாக இருப்பதை உறுதி செய்தார்.  சிறைக் கண்காணிப்பாளர் தோழரைப் பார்த்து, “ ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா ? வேறு யாருக்காவது செய்தி சொல்ல வேண்டுமா?” என்று கேட்டார். கணபதி புன்னகைத்தபடி, “மலேயா மண் மாற்றாரிடம் இருந்து விடுதலை பெற வேண்டும். மலேயா நாட்டுத் தொழிலாளி வர்க்கம் வெற்றி காணட்டும். புதிய வாழ்வு மலரட்டும். மலேயாவில் மட்டுமல்ல. உலகின் அனைத்துப்பகுதிகளும் அடிமைக் கொடுமைக்கு முடிவு கிடைக்கட்டும். இதுவே எனது விருப்பம். வாழ்க வையகம் “என்று முழங்கினார். சிறையின்  700 மீட்டர் நீளத்தைக் கடந்து தூக்கு மேடைக்குச் சென்றார். தூக்கு மேடையில் உள்ள பலகைகளின் மீது உள்ள வெள்ளை நிற வட்டத்தில் நின்றார். கால்கள் கட்டப்பட்டன. அவரது  முகம் கருப்புத் துணியால் மூடப்பட்டது. தலைக்கு மேல் தொங்கிய தூக்கு கயிற்று வளையம் கழுத்தில் மாட்டி இறுக்கப்பட்டது.  ஜெயிலர் சரியாக 5.00 மணிக்கு கையசைத்தார். பணியாளர் கைப்பிடியை இழுத்தார்.  தோழர் நின்றிருந்த இரும்புப் பலகைகள் விலகின.  உலகில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அயல்நாட்டில் அரசியல் காரணங்களுக்காக தூக்கிலிடப்பட்ட முதல் தொழிற் சங்கத் தலைவர், கம்யூனிஸ்ட், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டை தமிழர் தோழர் கணபதி அவர்களே!

தம்பிக்கோட்டை கணபதி மலேசியாவுக்கு.... 

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதி மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக பிழைப்புத்தேடி மலேசியா, பர்மா, பினாங்கு ஆகிய இடங்களுக்குச் சென்றனர்.  அவ்வாறு ஒரு குடும்பம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை கிராமத்தில் இருந்து கிளம்பியது. 1912 ஆம் ஆண்டு ஆறுமுகத் தேவர், வைரம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த கணபதி தனது பத்தாவது வயதில் நாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பிய பாய்மரக் கப்பலில் பயணத்தைத் தொடங்கினார். ஒன்பது மாதம் பயணம் செய்து சிங்கப்பூர் வந்தடைந்தார். தனது தொடக்கக் காலக் கல்வியை சிங்கப்பூரில் தான் படித்தார். பின்னர் சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டார். சில காலம் மலேயா தந்தி துறையில் பணியாற்றினார். இச்சமயத்தில் தான் தொழிலாளர்களுடன், தொழிற்சங்க அமைப்புகளுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.  மலேயாவில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டனர். கொலை, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களில்  ஈடுபடுபவர்கள் தமிழர்கள் என்று சித்தரிக்கப் பட்டது. இவற்றை எதிர்த்து பல ஆண்டுகள் நீண்ட போராட்டம் நடை பெற்றது. இதில்  முன்னின்றவர்களில் கணபதியும் ஒருவர்.

கம்யூனிஸ்ட் ஆனார் கணபதி

மலேயா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறைமுகமாகச் செயல்பட்ட தொழிற்சங்க இயக்கம், ரப்பர் தோட்டத் தொழிலா ளர் இயக்கம் ஆகியவற்றின் மூலம் அரசியல் தெளிவு பெற்று வந்தார். தமிழ் முரசு என்ற தமிழர் சீர்திருத்தப் பத்திரிகை வாயி லாக கணபதி பல தகவல்களை அறிந்தார்.அப் பத்திரிகையின்  வளர்ச்சிக்கும் பாடுபட்டார். 1935 -36ம் ஆண்டுகளில் குடியரசுப் பதிப்பகம் வெளியிட்ட, சிங்காரவேலரின் சமதர்மக் கருத்துகள் கொண்ட நூல்களால் கணபதிக்கு மார்க்சியக் கண்ணோட்டம் உருவானது.  இக்காலத்தில் தான் மலேயா கம்யூனிஸ்ட் கட்சியும் தொடங்கப்பட்டது. தமிழக கம்யூனிஸ்ட் பத்திரிகையான ஜனசக்தியும் மலேயாவில் கிடைக்கப் பெற்று கணபதியை மேலும் பக்குவப்படுத்தி வளர்த்தது. பகத்சிங்கால் தொடங்கப் பட்ட இந்துஸ்தான்  சோசலிஸ்ட்  ரிபப்ளிக்  ஆர்மியின் தூரக்கிழக்கு நாடுகளின் செயல்பாடுகள் கணபதியை கம்யூனிஸ்ட் ஆக்கி யது. கட்சி அமைப்பு, திட்டம், போராட்டம் ஆகியவற்றின் மூலம்  பிரச்சனைகளுக்கு அறிவியல்பூர்வமான தீர்வு கிடைக்கும் என்று நம்பினார். எனவே வர்க்கப் போராட்டங்களை நடத்து வதிலும், அமைப்புகளை  உருவாக்குவதிலும் தீவிரமாகச் செயல்பட்டார்.

மலேயா கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய நிலை

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழே இருந்த மலேயாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர்கள் இந்தி யர்களே. இவர்கள் மத்தியில் ஒன்பது கம்யூனிஸ்ட் கட்சிக் குழுக்கள் இருந்தன. இக்குழுக்களில்  கணபதி குழுவும், குரு  தேவனின் குழுவும் அதிக எண்ணிக்கை கொண்டதாக இருந்தது. இவை இரண்டும் முதலில் ஒன்றிணைந்தன. பின்னர் இதர குழுக்களும் ஒன்று சேர்ந்து  அகில மலேயா கம்யூனிஸ்ட் கட்சி  உருவானது. தொடக்கத்தில் சீனப் பிரிவுடனும் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொடர்பு இருந்ததால் மலேயா கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்திய,சீன கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைத்தது

கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள்

1932ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் குழுக்கள் மலேயாவில் சட்ட விரோதமாக கருதப்பட்ட மே தினத்தைக் கொண்டாடின. இரவோடு இரவாகச் செங்கொடிகள் கட்டப்பட்டன. பெரிய அரசு அதிகாரிகள் வீடுகளுக்கு முன்னேயும்  கட்டப்பட்டன. உற்சாகமாய் கோலாகலமாய் மே தின கொண்டாட்டம் மலேயாவில் முதன் முதலாக நடந்தது. 1936-ல் மலேயா கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலில் சிங்கப்பூரில் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடை பெற்றது. தந்தி அலுவலகம் இயங்கவில்லை. மின்சாரம், போக்குவரத்து, நகர சுத்தி வேலைகள் 46 நாட்களுக்கு ஸ்தம்பித்தது. இத்தகையப்  போராட்டங்களில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்றனர்.  1938 இல் கோலாலம்பூர் பகுதிகளில் ரப்பர் தோட்டத் தொழி லாளர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியோர் நடத்திய போராட்டங்கள் வெற்றி பெற்றதற்கு காரணம் மலேயா கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஆதரவும் வழிகாட்டுதலும் தான். இப் போராட்டங்களுக்கு  தோழர்கள் கணபதி, வீரசேகரன், குருதேவன், வீரபாகு, கோ.பாரதி மோகன் ஆகியோர் தலைமையேற்றனர்.       இவர்களுக்கு முன்னர் தோழர் ஆர்.எச். நாதன் போராட்டங்களை ஒருங்கிணைத்தார். கணபதி தலைமையில் இயங்கிய வாலிபர் சங்கமும் போராட்டம் வெற்றி பெறுவதற்கு  பாடுபட்டது. மலேசியாவின் சமூகம் மலாக்காயினம், சீனம், மூன்றாவதாக தமிழ் தேசிய இனம் என்றிருந்தது. இதில் தமிழ்  மக்களை மார்க்சிய, லெனினியப் பாதையில் அழைத்துச் செல்ல கணபதியும் மற்ற தோழர்களும் கடுமையானப் பணிகளை மேற்கொண்டனர். 

மலேயாவில் தீண்டாமைக்கு எதிராக...

1936- 38 ஆம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூரில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தீவிரமான இயக்கங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டது. காபிக் கடைகளில்  ‘அரிசனங்கள்’ பிற வகுப்பினருடன் சரிசமமாக அமர்ந்து சாப்பிட முடியாது. காபி  சாப்பிட விரும்பும் அரிசனங்கள் பால் டின்களில் வாங்கி வழி யில் எடுத்துச் சென்று சாப்பிட வேண்டும். இதனால் அடிக்கடி மோதல்கள் வரும். இவை தவிர பணியிடங்களில் கூலித் தொழி லாளிகள் அவர்களுக்கு மேல்  பொறுப்பில் உள்ளவர்கள் முன்னால் சைக்கிளில்  செல்ல முடியாது. வெவ்வேறு வடிவங் களில் வெளியில் தெரியாத தீண்டாமைக் கொடுமைகளும் ஆங்காங்கே நிலவின. தோழர் கணபதி அவர்களின் தலையீட்டால் இக்கொடுமைகளுக்கு முடிவு வந்தது. தோழர் கணபதியுடன் மாயூரம் முனுசாமி, மாங்குடி ராமு, கறம்பக்குடி வைத்தியலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். இதுபோன்ற பிரச்சனைகளில் சீனத் தொழிலாளர்களும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நேதாஜி தொடர்பும், சந்திப்பும்

இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. மலேசிய, சிங்கப்பூர்  பகுதிகளில் குண்டு வீச்சுக்கு பயந்து நகர்ப் புறத்திலிருந்து மக்கள் கிராமப்புறங்களுக்கு செல்லத் தொடங்கினர். கண பதியும் தோழர்களும் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதுங்கு குழிகள் ஏற்படுத்திக் கொடுப்பது முதலுதவி செய்வது, விமானத்தாக்குதலைப்  பற்றி எச்சரிக்கை செய்வது, போரைப் பயன்படுத்தி ரவுடிகளின் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.  ஐ.பி.டி. என்ற இந்திய முதலுதவிப் படை அமைப்புகள் மூலமும் இப்பணிகள் செய்யப்பட்டன. ஜப்பானின் உதவியுடன் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டும் என சுபாஷ்  திட்டமிட்டார். அதற்காக சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூர், மலேயா  வந்தார். இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். சிங்கப்பூரில் ‘ஆசாத் இன் சர்க்கார்’ என்று தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை  இந்திய தேசிய ராணுவம் நடத்தியது. அதில் கணபதி அதிகாரி யாகவும், பயிற்றுநராகவும் பணியாற்றினார். இச்சூழலில் மலேயா வந்த நேதாஜி, கணபதி, வீரசேகரன், வீரபாகு, வீரவர்மா, குருதேவன், எம்.ஆர்.கோபால், கே.எஸ்.நாதன், சோமநாதன் போன்ற கம்யூனிஸ்ட் தோழர்களையும், காங்கிரஸ் கட்சியின் சேதுப் பிள்ளையையும் சந்தித்து இந்திய விடுதலைப் போராட்ட த்திற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை என்று வேண்டுகோள் விடுத்தார்.  தோழர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஒத்துழை ப்பு தருவதாக உறுதியளித்ததும், ராணுவப் பயிற்சிப் பள்ளி களில் கணபதி உள்பட 150 தோழர்கள் பயிற்சி பெற்றனர். கணபதி மலேயாவின் எல்லைப் பகுதிக்கு சென்று ஆதரவு திரட்டினார்.  மலேயாவை கைப்பற்றிய ஜப்பானிய அரசு அங்கு பாசிச அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. மலேசியா கம்யூ னிஸ்ட் கட்சி, பாசிச ஜப்பானிய எதிர்ப்பு இயக்கத்தை முன்னி ன்று நடத்தியது.  இது மூன்று ஆண்டுகளுக்கு நீடித்தது.  உலகப்போர் முடிந்து மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி வந்தவுடன் கணபதி தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தை எதிர்த்து தீவிர போராட்டத்தை முன்னெடுத்தது.பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஜனநாயக உரிமைகளுக்காகப்  போராடக் கூடியவர்களை ஒடுக்க 1948 ஜூன் மாதத்தில் அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்தினர். துப்பாக்கி, தோட்டாக் கள், ரிவால்வார் ஆயுதங்களை வைத்திருப்பவர்களை, சட்ட விரோதமாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது  செய்யப்பட்டார்கள். சிறைகளில் சித்திரவதை செய்யப் பட்டார்கள். சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இவ்வாறு கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 20 சதவீதம் தமிழர்களே.  கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தொழிற்சங்கத் தலை வர்கள் தலைமறைவாகினர். தோழர்கள் கணபதி, வீரசேகரன் ஆகியோரும் தலைமைறைவாகி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை திரட்டுவதோடு, கொரில்லா முறையில் களத்தில் இறங்கினர். 

தோழர் கணபதி கைது,  மரண தண்டனை 

தலைமறைவாகியிருந்த தோழர் கணபதி சிங்கப்பூர், ரவாங், பத்துஆரங்  நகரங்களுக்கு இடையிலுள்ள வாட்டர் பால் தோட்டம் என்ற இடத்தில் ரிவால்வாரும், ஆறு தோட்டாக்களும் வைத்திருந்ததாக, 1948 ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பு காவல் ராணுவ படையால் கைது செய்யப்பட்டார். கோலாலம்பூரில் காவல் நிலையத்தில் பத்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட செய்தி தீயாய் பரவியது. மலேயா, சிங்கப்பூர் நாளிதழ்களில் இதுவே தலைப்புச் செய்தியாக இருந்தது. சிங்கப்பூர் வானொலி அதிகாரபூர்வமாக கணபதி கைது செய்யப்பட்டதாக அறிவித்தது.

கணபதி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்

நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிச இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர். அவர்களுடன் சேர்ந்து ஆயுதப்போர் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றத்  திட்டமிட்டீர்கள். தங்களைக் கைது செய்த போது ஆறு குண்டுகள் நிரப்பப்பட்ட ரிவால் வார் வைத்திருந்தீர்கள் என்ற அவசரகால சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருப்பதாகவும்  15.03.1949 இல் நடை பெறும் நீதிமன்ற விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சம்மன் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் 2 மணி நேர விசாரணைக்குப்  பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி கணபதியை நோக்கி, “ரிவால்வாரும், ஆறு தோட்டாக் களும் வைத்திருந்தது, அவசர கால சட்டப்படி மரண தண்ட னைக்குரிய குற்றமாகும். எனவே உங்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கி றேன் “ என்று சொன்னார் கோலாலம்பூர்  புடு சிறைக்கு மீண்டும் தோழர் கணபதி கொண்டு செல்லப்பட்டார். சிங்கப்பூர் வானொலி கணபதியின் தண்டனையை அறிவித்தது. இதைத்தொடர்ந்து மலேயா, சிங்கப்பூர் முழுவதும் கண்டண  இயக்கங்கள், கிளர்ச்சிகள் நடைபெற்றன. இந்தியா விலும் தொழிற்சங்க ,விவசாய, மாணவர், இளைஞர் அமைப்புகள் கணபதி தண்டனையை திரும்பப் பெறக் கோரி கண்டன குரல் எழுப்பினார்கள்.

மரண தண்டனையை ரத்து செய்!  தோழமையின் குரல்கள் 

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பி.சி.ஜோஷி, பி.டி. ரணதிவே, ஹிரேன் முகர்ஜி ஆகியோர் தங்கள் கண்ட னங்களை பதிவு செய்து, தோழர் கணபதியின் மரண தண்டனை யை வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஜவஹர்லால் நேரு அவர்களுக்கும், பிரிட்டிஷ் பிரதமர் அட்லி அவர்களுக்கும் அனுப்பி வைத்தனர்.  தமிழக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், எம்.கல்யாணசுந்தரம், ஏ.எஸ்.கே. அய்யங்கார், வி.பி.சிந்தன், கவிஞர் தமிழ் ஒளி,முருகேசன்,கே.டி.ராஜு,  அனந்த நம்பியார் ஆகியோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து, கணபதியை உடனடியாக விடுதலை செய்யக் கோரி  தீர்மானங்களை நிறைவேற்றினர். இதைத் தவிர தமிழகத்தில் தந்தை பெரியார், குத்தூசி குருசாமி, சி.என்.அண்ணாதுரை ஆகியோரும் குரல் எழுப்பினர். காங்கிரஸ் தலைவர் காமராஜரை சந்தித்தும் நடவடிக்கை மேற்கொள்ள செய்தனர். தமிழகத்தில் வெளியான வார, மாத நாளிதழ்கள் அனைத்தும் தோழர் கணபதியின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மலேசியாவுக்கான இந்திய தூதர் ஜான் திவி அவர்களுக்கு கடிதம் எழுதி, மலேசியா வில் உள்ள பிரிட்டிஷ் அரசுக்கு கருணை அடிப்படையில் கணபதியை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஐ.நா மன்றத்தில் இந்தியாவின் பிரதிநிதி வி.கே.கிருஷ்ண மேனன் கணபதியை விடுதலை செய்ய வேண்டுகோள் விடுத்து, ஐ.நா. உடனடியாக தலையிட்டு, ஆவண செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இந்தியா, தமிழகத்தில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து,  04.04.1949 அன்று கணபதி மேல்முறையீடு செய்தார். மனுவை  விசாரணைக்கு ஏற்றாலும் 24 4.49 அன்று மரண தண்டனை உறுதி செய்யப் பட்டது என்று அறிவித்தனர்.மீண்டும் கிளர்ச்சிகள், போராட்டங் கள், வேண்டுகோள்கள் கண்டனங்களின் விளைவாக 23.4.49 அன்று சிங்கப்பூர் வானொலி கணபதியின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது. மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் அது அதிக நாள் நீடிக்கவில்லை. 30.04.1949 அன்று சிறை கண்காணிப்பாளர், தோழர் கணபதியைச் சந்தித்து தங்களை 04.05. 1949 அன்று காலை 5 மணிக்கு தூக்கிலிட உத்தரவு வந்துள்ளதாக அறிவித்தார். மலேசியத் தொழிலாளர்கள் தற்போது பெற்று வரும் உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராடி தனது இன்னுயிரை தூக்கு மேடையில் பலி கொடுத்த  தோழர் கணபதி காலம் கடந்தும் என்றென்றும்  நினைவு கூரப்படுவார்.