articles

img

வாழ்வாதார இழப்பை ஈடு செய்து வாழ்வுரிமையைக் காத்திடுக! - பெ.சண்முகம்

புதிய விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ள பரந்தூர் பகுதி கிராமங்களு க்கு ஜனவரி 22ஆம் தேதி சென்றிருந்தேன். என்னுடன் எத்தனை பேர் செல்ல வேண்டும். எத் தனை வாகனங்களில் செல்ல வேண்டும். ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது, குறிப்பிட்ட கால அளவுக்குள் சென்று வந்துவிட வேண்டுமென பல்வேறு நிபந்தனை கள் விதித்து பெரிய மனதுடன் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. என்னுடன் வந்த தோழர்களின் எண் ணிக்கையை விட உளவுத்துறையினரின் எண்ணிக்கை அதிகம். கிராமங்களைச் சுற்றி காவல்தடுப்புகள், தற்கா லிக காவல் நிலையங்கள். இத்தனை நிபந்தனைகள், கெடுபிடிகளுக்கு மத்தியில் அங்கு சென்றதற்கு காரணம் பாதிக்கப்படும், போராடிக் கொண்டிருக்கும் மக்களை சந்திக்க வேண்டுமென்பதற்காகத்தான். ஏற் கனவே, ஒருமுறை திட்டமிட்டு, காவல்துறை உயரதி காரிகளின் வேண்டுகோளுக்கிணங்க எனது பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனால், இந்த முறை அவர்களால் மீண்டும் பயணத்தை தடுப்பது சாத்திய மில்லாமல் போய்விட்டது. 

ஆபத்தில் உள்ள ஏகனாபுரம்

சிட்டிசன் திரைப்படத்தில் ஒரு கிராமமே முழுதாக புதைக்கப்பட்டு காணாமல் போகுமே, அதைப் போலவே கிராமம் மொத்தமும் விமான நிலையத்திற் காக அப்புறப்படுத்தப்படும் ஆபத்தில் உள்ள ஏகனா புரம் கிராமத்திற்கு முதலில் சென்றோம். நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். எங்கள் கிராமத்தையும், விளை நிலத்தையும் காப்பாற் றிக் கொடுங்கள் என்பது அக்கிராம மக்களின் ஏகோ பித்த கோரிக்கை.  ஊருக்கு அருகில் நீர்நிறைந்த ஏரி. ஊரைச் சுற்றி நஞ்சை நிலம். அருகில் கால்வாய் என முப்போகம் விளையும் பகுதியாக அது காட்சியளிக்கிறது. 180 நாட்க ளுக்கு மேலாக அம்மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் நிலமற்ற, புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் பட்டியல் சாதி மக்களும் கலந்து கொண்டுள்ளனர். விமான நிலை யத்திற்கான மொத்தப் பரப்பளவு 4563.56 ஏக்கர். இதில்  சுமார் 2500 ஏக்கர் விளை நிலங்கள். சுமார் 1000 ஏக்கர் 13 ஏரிகளின் பரப்பளவு. இந்த 13 ஏரிகளும், தாமரை பூத்த தடாகங்களாக நீர் நிரம்பி இருக்கின் றன. சுமார் 400 ஏக்கர் தான் அரசு புறம்போக்கு நிலம். அரசு புறம்போக்கு நிலம் என்றாலும் அவை மேய்ச்சல் நிலங்களாகும். அந்த கிராமங்களிலுள்ள கால்நடைக ளுக்கான மேய்ச்சல் நிலங்கள் இதனால் இல்லாமல் போகும். சுமார் 100 ஏக்கர் காப்புக் காடாக அறிவிக் கப்பட்டுள்ள பகுதி. இத்தகைய நிலையில் அங்கு விமான நிலையம் அமைப்பது சட்டப்படியும், விதிகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகள் அடிப்படையிலும் சாத்தி யமா என்ற கேள்வி எழுகிறது. 

மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய முதற்கட்டப் பணி கள் எதையும் இதுவரை அரசு செய்யவில்லை. மாறாக, வருவாய்த்துறை, காவல்துறை, ஆளுங்கட்சி பிரமுகர் கள் மூலம் சாம, பேத, தான போன்ற வழிமுறைக ளை அரசு கடைப்பிடிக்கிறது. தண்டம் (ஆயுதத்தை) இதுவரை பயன்படுத்தவில்லை. ஆனால், இவையெல் லாம் சட்டவிரோதமான நடவடிக்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ‘‘நிலம் கையகப் படுத்துதல் சட்டம் 1894’’ என்ற சட்டத்தை பயன்படுத்தித் தான் அரசு எவருடைய நிலத்தை வேண்டுமானாலும் கையகப்படுத்தி வந்தது. நிலஉரிமையாளரின் ஒப்பு தலை பெற வேண்டிய அவசியமில்லை. இழப்பீடு அரசு அறிவித்தது தான். அது குறைவானது என்றால் நீதிமன்றத்திற்குத்தான் செல்ல முடியும். நிலம் கையகப்படுத்துவதை தடுக்க முடியாது. ஆனால் இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டம் ‘‘நிலம் கையகப்படுத்துதல், நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு  மற்றும் மறுகுடியேற்றம் சட்டம் 2013’’ ஆகும். இந்த சட்டத்தின் அடிப்படையில் தான் அரசு இப்போது நிலத்தை கையகப்படுத்த முடியும்.  அப்படியானால் இச்சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி அரசு செயல்பட வேண்டும். ஆனால், இது வரை விமான நிலையம் அமைப்பது தொடர்பான அர சாணை எதுவும் வெளியிடப்படவில்லை. எந்தெந்த சர்வே எண் உள்ள நிலத்தை கையகப்படுத்தப் போகி றார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. நில உரிமையாளர்களுக்கு முறையாக அழைப்பாணை அனுப்பி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதற்கான அறிக்கை வெளி யிடப்படவில்லை. நிலம் கையகப்படுத்தப்படுவதால், திட்டத்தைச் செயல்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் சம்பந்தமான அறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க  மதிப்பீடு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆய்வறிக்கை களை தயாரித்து அரசு பொதுமக்கள் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். இதில் ஒன்றைக் கூட அரசு இதுவரை செய்யவில்லை. இவற்றையெல்லாம் செய் யாமல் அரசால் ஒரு செங்கல்லைக் கூட நடமுடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஆனால் அதிகாரிகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவதால் மக்கள் மத்தியில் பதற்றமும், அச்சமும் ஏற்பட்டுள்ளதையே காண முடிந்தது. 

மூடி மறைத்துச் செயல்படுவதேன்?

நிலம் அங்கேயே தான் இருக்கப் போகிறது. நிலத்தை யாரும் திருடிச் சென்றுவிடப் போவதில்லை. மக்களும் தங்களுடைய வீடு, நிலத்தை விட்டு விட்டு வேறெங்கும் செல்லப் போவதில்லை. பின்னர் எதற்காக அரசு வெளிப்படைத்தன்மை இல்லாமல் எல்லாவற்றையும் மூடி மறைத்துச் செயல்படுகிறது என்ற கேள்விக்கு அரசு பதில் சொல்லியாக வேண் டும். சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி யில், அரசு திட்டங்களுக்கு  நிலம் கையகப்படுத்தும் போது விவசாயிகள் ஒப்புதல் பெற்று கையகப்படுத்தப் படும் என்று திமுக கூறியிருந்ததை கவனப்படுத்துகி றோம். இத்தகைய ஜனநாயக அணுகுமுறை பரந்தூர் விமான நிலைய விஷயத்தில் இல்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம்.  மக்களின் வாழும் உரிமை பறிக்கப்படும் போது  போராடத்தான் செய்வார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது இத்தகைய போராட்டங்களை ஆதரித்தி ருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, திமுக அரசு, பரந்தூர் விமான நிலையம் தொடர்பான பிரச்ச னையில் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துக!

காவல்தடுப்புகள், தற்காலிக காவல்நிலையங்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதன் மூலம் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். சட்டப்படி செய்ய வேண்டிய அப்படையான பணிகளை முறையாகச் செய்யுங்கள். விமான நிலை யம் அமைப்பதற்கான எல்லாவிதமான, சட்டப்பூர்வ மான நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்துவிட்டு மக்க ளிடம் சென்று காரண காரியங்களை விளக்குங்கள். மாறாகச் செயல்பட்டால் ஜனநாயக நாட்டில் எவரும் ஏற்க மாட்டார்கள். மக்களும் ஏற்க மாட்டார்கள். வாழும் உரிமை என்பது அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது.  அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடும் மிகவும் சொற்பமாக இருக்கிறது. உண்மையில் நிலங்களின் விற்பனை விலைக்கும், அரசின் வழிகாட்டும் மதிப்புக்கும் மிகப் பெரும் இடைவெளி இருக்கிறது. பத்திரப்பதிவு அலுவல கங்களில் வாங்கும் விலையை மறைத்து, பத்திரப்பதிவு செய்யப்படுகிறது என்பது உலகம் அறிந்த ரகசியம். ஆனால் அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களில் நில விற்பனை விபரங்களிலிருந்து மூன்றாண்டு சராசரியை கணக்கிட்டு நிலத்திற்கான இழப்பீட்டை தீர்மானிக்கி றார்கள். பல கிராமங்களில் நில விற்பனை என்பது சமீப ஆண்டுகளில் நடைபெறவில்லை என்ற நிலையில் விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்காத சூழல் இருக்கிறது.

5 மடங்கு குறைவான இழப்பீடு

உதாரணத்திற்கு திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை அமைக்கப்பட வுள்ள 6 வழிச்சாலைக்கு விவசாயிகளிடமிருந்து அரசு நிலத்தை கையகப்படுத்துகிறது. இதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ள இழப்பீடு 1.25 மடங்கு மட்டுமே. ஊரில் தற்போது 1 ஏக்கர் 15 லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிற தென்றால் அரசு தீர்மானித்திருக்கிற தொகை 3 லட்சம் ரூபாய் மட்டுமே. விவசாயிகள் எப்படி நிலத்தை கொடுப்பார்கள்? இந்த நிலத்தை எடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு வழங்குகிறார்கள்.  கேரள மாநில அரசு இதே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்துள்ளது. காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டுள்ள 4 வழிச்சாலைக்கு விவசா யிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை 1 ஏக்கருக்கு 30 லட்சம் ரூபாய். ஏன் தமிழ்நாடு அரசு, இப்படி ஒரு இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்காமல், அவர்க ளின் வயிற்றில் அடிக்கும் வகையில் மிக குறைந்த  தொகையை எதற்காக தீர்மானிக்க வேண்டும்? நிலத்தை இழக்கும் விவசாயிகள், நில உரிமையாளர் கள் வாழ்நாள் முழுவதும் அவர்களது குடும்பம் நிம்மதி யாக வாழ்வதற்குரிய வகையில் இழப்பீட்டை வழங்க அரசு முன்வர வேண்டும்.

அரசின் சொத்துக்கள் ஆட்சியாளர்களால் தனி யாருக்கு விற்பனை செய்யப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக் கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து ஒரு சில முதலாளிகள் கோடிக்கணக்கில் வாழ்நாள் முழுவதும் கொள்ளை லாபமடிக்க, மக்கள் வாழும் உரிமையை இழக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அமைய இருக்கும் விமான நிலையம் காலமெல்லாம் அரசின் சொத்தாகவே இருக்கும் என்ற உத்தரவா தத்தை தமிழக அரசால் தரமுடியுமா? எனவே, மேற் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் கணக்கிலெ டுத்துக் கொண்டு அரசு செயல்பட வேண்டும். தேவை யேற்பட்டால் பொருத்தமான வேறு பகுதியில் விமான நிலையம் அமைப்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். 

கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

 

;