articles

உச்சநீதிமன்ற தீர்ப்பின் துணையுடன் மீனவர் விரோத திட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கும் மோடி அரசு - எம்.கருணாமூர்த்தி

கடல் பகுதி இரண்டாக பிரிப்பு-தனியாக கட்டணம்- மீன்களுக்கு வரி:

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் தடை சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக் கால தடைவிதித்து தீர்ப்பு வழங்கியதை கண்டித்தும் விசைப்படகுகள் அரசால் தடை செய்யப் பட்ட இரட்டைமடி வலையின் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும் மேற்படி மீன்பிடிப்பில் அதிக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் ஈடுபடுவதையும் தடுத்து தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மீன்வளத்துறையும் உறுதியான  நட வடிக்கை மேற்கொள்ள   வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி  31 அன்று தமிழ்நாட்டின் 11 கடலோர மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் கடலூர், மயிலாடுதுறை, புதுக் கோட்டை, இராமநாதபுரம், தஞ்சை , தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை எடுத்து ரைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட பிரதிநிதிகள் பேசுகை யில், உச்சநீதிமன்றத்தின் இந்த தற்காலிக தடை நீக்க தீர்ப்பு திரும்பப்பெறப்படவில்லையானால் மிகக் கடுமையான போராட்ட நிகழ்வுகள் நடைபெறுவது தவிர்க்க முடியாது என்று கூறினர்.   இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில் சிஐடியு கடல் தொழிலாளர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி பேசுகையில், மீனவர்களையும் மீன்பிடித்தொழிலையும் கடுமையாக பாதிப்புக்குள் ளாக்கும் இந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி இராம நாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கம் ( சிஐடியு) சார்பில் 2 ஆயிரம் மீனவர்களை திரட்டி சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இதுபோன்ற போராட்ட நடவடிக்கைகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனித்தனியாகவும்  ஒட்டு மொத்தமாகவும் நடத்தப்பட வேண்டும் என்றார். தஞ்சை மாவட்டத் தலைவர் ஜெயபால், தூத்துக் குடி மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் கயஸ் ஆகியோர் உச்சநீதிமன்ற தீர்ப்பு சம்பந்தமாக சட்டரீதியான மேல் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என்று தெரிவித்தனர். 

 ஒன்றிய அரசின் நயவஞ்சக திட்டம் 

இக்கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணி யில் ஒன்றிய அரசின்  தலையீடு குறித்தும் முன் வைக்கப்பட்ட கருத்துகள் வருமாறு:  உச்சநீதிமன்றம்   வாரத்தில் இரண்டு நாட்கள் சுருக்குமடி வலையில் மீன்பிடிப்பதற்கான  அனுமதி வழங்கியதுடன்  அது 12 நாட்டிகல் கடல் பகுதிக்கு அப்பால் நடைபெற வேண்டும் என எல்கை நிர்ணம் செய்துள்ளது. மேலோட்டமாக பார்த்தால் இதில் பெரிய அளவில் பாதிப்பில்லாதது போல் தோன்றும். ஆனால் இதில் தான் ஒன்றிய அரசின் நயவஞ்சக திட்டம் ஒளிந்துள்ளது.   ஒன்றிய அரசால்  கடந்த 2019 ஆம் ஆண்டு  சாகர்மாலா என்றொரு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் நமது நாட்டில் சொந்த கடல் பகுதியை மட்டுமல்ல, நமது வாழ்வி டத்தை விட்டே வெளியேற்றப்படுவோம்.இதனால் தான் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி அந்த திட்டத்தை  நிறைவேற்றவிடாமல் செய்தோம்.  அதனை தொடர்ந்து தற்காலிகமாக இதனை நிறுத்தி வைத்த ஒன்றிய மோடி அரசு, அதன் பிறகு தனது நாசகர திட்டத்தை பல வடிவங்களில் மறைமுக மாக அமல்படுத்தி வருகிறது.  அதன் ஒரு பகுதி தான் தற்போதைய சுருக்குமடி வலை மீதான உச்சநீதி மன்றத்தின் எல்கை நிர்ணயத்துடன் கூடிய அனுமதி ஆகும். 

அந்நிய கப்பல்களுக்கு தாரை வார்க்க...

இத் திட்டத்தின் ஒரு பகுதியானது அந்நிய நாட்டு மீன்பிடி  கப்பல்களுக்கு இந்திய கடல் பகுதியை  முழுமையாக தாரை வார்ப்பதாகும் .   அதனடிப்ப டையில் நமது மீனவர்கள்  நமது கடல் பகுதியில் 12 நாட்டிகல் தொலைவு பகுதி மட்டுமே மீன்பிடிக்க லாம். ஏனெனில் அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாம். அதற்கு வழக்கமாக தமிழ்நாடு மீன்வளத்துறையில்  அனுமதி பெற்று தொழில் செய்யலாம் என்றும் அதே நேரத்தில் 12 நாட்டிகல் தொலைவுக்கு மேல்  மீன்பிடிப்பதானால் ஒன்றிய  அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும்  ஏனெ னில் அதற்கு மேற்பட்ட கடல்பகுதி  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதி என்றும் கூறி நமது கடல் பகுதியையே இரண்டாக பிரிக்கும் சூழ்ச்சியை அமல்படுத்த முயன்றனர்.  இதன் மூலம் நமது கடல்பகுதியில் நமது மீன வர்கள் தொழில் செய்ய ஒன்றிய அரசின் நிர்வா கங்களிடம்  அனுமதி பெற வேண்டும் என்றும் அதற்கு  தனியாக கட்டணம் செலுத்தி பல்வேறு நிபந்தனைக ளுடன்  லைசென்ஸ் பெற வேண்டும் என்றும் அதிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மீன் பிடித்தால் அதற்கு 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்றும்  இன்னும் பல மோசமான மீனவர் விரோத  திட்டங்களு டன் அமல்படுத்த முயன்ற  அந்த சாகர்மாலா திட்டத்தையே தற்போது  உச்சநீதிமன்றம் மூலமான   சுருக்குமடி வலையில் மீன்பிடிப்புக்கான அனுமதி வழங்குவதன் மூலம் அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது எதிர்காலத்தில் சுருக்குமடி மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களையும் சேர்ந்தே மிகக் கடுமையாக பாதிக்கும்.

நாம் பிடித்து வரும் மீனுக்கு விற்பனை வரி செலுத்தும் நடவடிக்கை அவர்களிடமிருந்தே துவங்கும். பிறகு அது அனைவருக்குமானதாக மாறும். எனவே ஒன்றிய அரசின் இந்த நாசகர முயற்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் குழி தோண்டி புதைக்க வேண்டியது அவசியமாகும்.  

அதிக குதிரை திறன் எந்திரம்...

அடுத்து விசைப்படகுகளில் கணிசமான பிரிவினர் அரசு அனுமதித்துள்ள விதிமுறைகளுக்கு மாறாக அதிக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட படகுகளை பயன்படுத்தி தொழில் செய்து வருகின்றனர்.  எனவே இப்படகுகள் மீது முறையான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு கடந்த 2011  மற்றும் 2016 ஆண்டுகளில்   1983 தமிழ்நாடு கடல்  மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தில் விசைப்படகு களுக்கு சாதகமாக படகுகளின் அளவு மற்றும் இன்ஜின்களின் குதிரை திறனை உயர்த்தி  கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும் . குறைந்த பட்சம் இந்த சட்ட திருத்தங்க ளை ஆழம் மிக குறைவான பாக்ஜலசந்தி கடல் பகுதியிலாவது அமல்படுத்தாது இருக்க வேண்டும்.

மீன்வளத்துறையில் கருப்பு ஆடுகளை களையெடுத்திடுக! 

அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி மீன்பிடிப்பை தமிழ்நாடு ஆட்சியாளர்களும் மீன்வ ளத்துறையில்பணியாற்றும் பல அதிகாரிகளும்  மறை முகமாக அனுமதித்து முறைகேடாக பணம் சம்பாதித் ததன் விளைவாக நமது கடல்பகுதியில் மீன்வளம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளது.இச் சூழலில் இதே மீன்பிடிப்பு இலங்கை  கடல்பகுதியில் தொடர்ந் ததன் விளைவாக இலங்கை கடற்படையின் பல்வேறு நெருக்கடிகளுக்கு  தமிழ்நாடு மீனவர்கள் ஆளாக நேரிட்டது. இதனால் நம் மீனவர்கள் அடைந்த துன்ப துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனை உயிரிழப்புகள்,  எத்தனை உடமை இழப்புகள்.  இத்தனை நடந்தும்  விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி வலையில் மீன்பிடிப்பது மட்டும் நின்றபாடில்லை. இதனால் நாம் பல ஆண்டுகளாக இலங்கையின் நமது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிக ளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்திருக்கிறோம்.   எனவே இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் நமது கடல் பகுதியில் இருக்கும் கொஞ்ச நஞ்சமுள்ள மீன்வளத்தையாவது பாதுகாக்க வும்  மேலே கண்ட சட்ட விரோத மீன்பிடிப்புகளை தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். அதற்கு முதல் கட்ட நடவடிக்கையாக மீன்வளத்துறை யில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும். செய்யுமா இந்த அரசு!


 

 

 

;