articles

img

ஸ்ரத்தா வாக்கரை எது காப்பாற்றியிருக்க முடியும்? - பிருந்தா காரத்

அசாம் முதல்வர் சர்மா நாகரிகமான மொழியை  வெளிப்படுத்துவதற்கு அறியப்பட்டவர் அல்ல. ஆனால் அவர் இந்த முறை அநாகரிகமாக பேசுவதில் தனது சாதனையை தானே தோற்கடித்துக்கொண்டார். குஜராத் தேர்தலில் சூரத் நகரில் பேசும் பொழுது அவர்கூறினார்: “மோடிக்கு வாக்களியுங்கள். நாட்டிற்கு வலிமையான தலைவர் இல்லை என்றால் ஆஃப்தாப் போன்ற கொலையாளிகள் ஒவ்வொரு நகரத்திலும் வெளிப்படுவார்கள். நாம் நமது சமூகத்தை பாதுகாக்க இயலாத சூழல் உருவாகும்.” தில்லியில் ஸ்ரத்தா எனும்  இளம் பெண்ணை கொன்று அவரது உடலை துண்டு  துண்டாக வெட்டிய கொடூர செயலை செய்த ஆஃப்தாப்  எனும் பெயரையே அசாம் முதல்வர் குறிப்பிடுகிறார்.  சர்மா அசாம் மாநிலத்தின் முதல்வர். தேசிய பாதுகாப்பு குடும்ப ஆரோக்கிய அமைப்பு (NFHS)ஆய்வு செய்ததில் குடும்ப வன்முறைகள் அதிகம் நடக்கும் மிக மோசமான ஐந்து மாநிலங்களில் சர்மா  முதலமைச்சராக ஆளுகிற மாநிலமும் ஒன்றாகும்  என்று கூறியுள்ளது. அவரது மாநிலத்தில்  இம்மாதிரி யான வன்முறைகள் பதிவு கூட முறையாக செய்யப்படு வதில்லை. மேலும் இது மாதிரியான  குடும்ப வன்முறையை நியாயப்படுத்துதல் அதிகமாக உள்ள மாநிலங்களில் அசாமும் ஒன்று .  

என்றைக்காவது அவர் இந்த பிரச்சனைகளைப் பற்றி  பொது வெளியிலோ அல்லது அவரது அரசாங்கத்தின் கொள்கை என்ன என்பது குறித்தோ பேசியுள்ளாரா? தேசிய ஆய்வு 2021 அறிக்கை இந்தியாவில் குடும்ப வன்முறை மற்றும் பாலியல்  வன்முறைகள்  மூன்றில்  ஒரு பகுதி பெண்களுக்கு நடைபெறுகிறது என அதிர்ச்சி தரும் தகவல்களை கூறுகிறது. இதனால் பாதிக்கப்படும் 77 விழுக்காடு பெண்கள் குடும்ப வன்முறைகள் குறித்து புகார் பதிவு கூட செய்வதில்லை என்பது நம்மை கவலை கொள்ள  செய்கிறது.

ஸ்ரத்தாவும் பில்கிஸ் பானுவும்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆணும் பெண்ணும் சமம் என்று உத்தரவாதம்  அளித்துள்ளது. எனினும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இந்த உத்தரவாதம் ஆண்கள் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றும் குடும்ப வன்முறைகளில் சிக்கி  சிதைந்துள்ளது. இந்த வன்முறைகளில் பெரும்பான்மை யானவற்றில் புகார் பதிவு கூட செய்யப்படுவது இல்லை.  மனைவிகளை துன்புறுத்தும் இந்த ஆண்கள் அனைவரும் ஆஃப்தாப்களா? இந்த திருமணங்கள் அனைத்தும் “லவ் ஜிஹாதா?” பெண்கள் ஏன் தங்கள்  குடும்பத்திற்குள்ளேயே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள்? அசாம் முதலமைச்சர் கூப்பாடு போடும் அந்த “வலிமையான தலைவர்” எங்கே? இந்த  குடும்ப வன்முறையை  ஏன் அந்த வலிமையான தலைவரால் தடுக்க இயலவில்லை?  இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை கக்கும் சர்மா போன்ற தலைவர்கள் இத்தகைய குற்றங்களின் ஆணி வேர் எது என்பதை ஆய்வு செய்வதற்கு மாறாக  மதவாதத்தை மேலும் கூர்மைப்படுத்துகின்ற கைங்கரி யத்தை செய்கின்றனர். அத்தகையவர்கள் இந்த சமூகத்தின் சாபக்கேடு! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி சர்மா போன்றவர்களுக்கு கவலை அல்ல என்பது தெளிவு. உண்மை தரவுகள் குறித்தும் சர்மா கவலைப்பட தயாராக இல்லை. 

ஸ்ரத்தாவின் படுகொலை தில்லியில் நடந்துள்ளது. தில்லி காவல்துறை, சர்மா கூறும் “வலிமையான தலைவரின்” அரசாங்கத்தின் கீழ்தான் உள்ளது. தில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற மோசமான நகரமாக தில்லி மாறியுள்ளது. எங்கே அந்த வலிமையான தலைவர்? அவரும் அவரது நிழலும் பாலியல் பலாத்காரமும் கொலையும் செய்த படுமோசமான குற்றவாளிகளை விடுதலை செய்வதில் மும்முரமாக இருந்தனர். ஏனெனில் அந்த குற்றவாளி களின் பெயர் ஆஃப்தாப் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் பெயர் ஆப்தாப் என  இருக்கலாம். அல்லது பில்கிஸ் பானு வழக்கில் பாலியல் வல்லுறவு மற்றும் கொலைகளை செய்த ஜஸ்வந்த் நை,  கோவிந்த் நை, ஷைலேஷ்பட், ராதேஷியாம்  ஷா,  பிபின் சந்திர ஜோசி, கேஷர் பாய் ஓஹானியா,  பிரதீப் மோர்த்தியா , பகா பாய்  ஓஹானியா, ராஜு பாய் சோனி,  மித்தேஸ்  பட் மற்றும் ரமேஷ் சந்தனா என இருக்க லாம். அல்லது  இளம் தலித் பெண்ணை ஹத்ராசில் பாலியல் வல்லுறவு மற்றும் கொலைகளில் ஈடுபட்ட சந்திப் ராமு, லவ் குஷ், மற்றும் ரவி என இருக்கலாம். குற்றங்களை வகுப்புவாத மயமாக்குவது என்பது  இந்திய சட்ட முறைகளின் மீது ஏவப்படும் மோசமான தாக்குதல்.

பெண் தனது துணையை தானே தேர்வு செய்வது தவறா?

தேர்வு செய்வது தவறா? பெண்களை நோக்கிய உண்மைக்கு மாறான பொருந்தாத இது மாதிரியான கருத்துகளை முன்வைப்பது அசாம் முதலமைச்சர் மட்டுமல்ல. இந்த வரிசையில் இன்னொரு பிரகஸ்பதி உள்ளார். மோடி அரசாங்கத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சராக உள்ள கவுசல் கிஷோர் கூறியுள்ளார்: “படித்த பெண்கள் இது மாதிரியான உறவுகளை உருவாக்கி கொள்ளக் கூடாது.   இதிலிருந்து அவர்கள்  பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர்களின்  அனுமதியுடன்தான் பெண்கள் யாருடனாவது தங்க வேண்டும். மேலும் தங்களுடைய இந்த உறவை பதிவு செய்ய வேண்டும்.” பாதிக்கப்பட்டு பலியான பெண்ணையே குற்றவாளியாக சித்தரிக்கும் இந்த கருத்தை பலரும் மிகச்சரியாக கடுமையாக விமர்சித்துள்ளனர். இவரது கருத்து முன்வைக்கும் அம்சங்கள் என்ன?

1. ஸ்ரத்தா எனும் பெண் பெற்றோர்களின் விருப்பத்தை மீறி தன்னுடைய துணையை தானே தேர்வு செய்தது தவறு.
 2. திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்ததற்கு மாறாக ஸ்ரத்தா இந்த  உறவு முறையை பதிவு செய்திருந்தால் அதாவது திருமணம் செய்து இருந்தால் இது மாதிரியான சம்பவம் நடந்திருக்காது 
3. இது அப்பெண்னுக்கு தெரிந்திருக்க வேண்டும்; ஏனென்றால் அவள் படித்தவள்.

இவரது கருத்துக்கு நாம் ஆழமாக கவலையுடன் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. ஏனெனில் இதுவரை இவரது கருத்தை அரசாங்கத்தில் உள்ள அல்லது அவரது கட்சியில் உள்ள எவரும் மறுக்கவில்லை.  அமைச்சர் படித்தவர் என்று ஊகித்து கொண்டால் அவருக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். தேசிய குற்றங்கள் பதிவு ஆணையம் (NCRB)  சமீபத்திய அறிக்கையில் கடந்த வருடம் 2021இல் வரதட்சணை கொடுமையாலும் அதை சார்ந்த இதர பிரச்ச னைகளாலும் 6,589 பெண்கள் கொல்லப்பட்டி ருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. இந்த படுகொலை கள் எல்லாமே பெற்றோர்களால் அங்கீகரிக்கப்பட்ட  திருமணங்களில் நடைபெற்ற சம்பவங்கள். ஏனெனில் இந்த புள்ளிவிவரங்கள் தேசிய குடும்ப ஆய்வுகளிலிருந்து  (NFHS) எடுக்கப்பட்டவை.  பெற்றோர்களின் அங்கீகாரம் இருந்த காரணத்தாலேயே திருமணமான இளம் பெண்கள் வரதட்சணை காரண மாக கொலை செய்யப்படுவது தடுக்கப் பட்டதா?  அல்லது மூன்றில் ஒரு பகுதி  பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனரே! அதனை பெற்றோரின் அங்கீகாரம் பெற்ற திருமணங்களில் தடுக்க முடிகிறதா?திருமணமான பெண்கள் மீதான வன்முறை (கொலை கள் உட்பட) அனைத்துவித திருமணங்களி லும் நடக்கிறது. பெற்றோர் அங்கீகரித்த கணிசமான திருமணங்களிலும் இது  நிகழ்கிறது.

அநீதி கொண்ட நீதி 

திருமணம் இல்லாமல் ஆண்- பெண் சேர்ந்து வாழும் உறவுமுறை  பற்றி சட்டங்கள் என்ன சொல்கின்றன என்பதை அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டும். குடும்ப வன்முறை சட்டம் இதற்கு பொருந்தும் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். குடும்ப வன்முறைகள் பற்றிய புகார்கள் முன்வந்தால் இத்தகைய வாழ்வுமுறையை சட்டங்கள் அங்கீகரித்து தீர்வு  காண முயல்கின்றன. மேலும் இந்த வாழ்வு முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்துவித பரம்பரை  உரிமைகளும் உண்டு எனவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. திருமண உறவில் இருந்தாலும் சரி; அல்லது பெண்கள் தனியாக வாழ்ந்தாலும் சரி; குழந்தை  பெறுவது அல்லது பெறாமல் இருப்பது எனும் பெண்களின் உரிமையை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அங்கீகரித்துள்ளது.  அமைச்சரின் கருத்துக்களை மறுப்பது என்பது அவர் பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டுவதால் மட்டுமல்ல; அங்கீகரிக்கப்பட்ட திருமணங்களில்  பெண்கள் சந்திக்கின்ற குடும்ப வன்முறைகள் மறைக்கப்பட்டு நியாயப்படுத்தப்படுகின்றன. மேலும் ஆணாதிக்கம் வரைந்த “லட்சுமண கோட்டை”, ஸ்ரத்தா செய்தது போல, தாண்டினால் உருவாகும் வன்முறை கள் தவிர்க்க இயலாது எனும் நியாயம் கட்டமைக்கப்படு கிறது. இத்தகைய “அநீதி படைத்த நீதிகளை” அள்ளிவிடும் போக்கு பெண்களுக்கு தம்மீது களங்கம் கற்பிக்கப்படும் எனும் பயம் விளைவிக்கிறது. சேர்ந்து வாழும் உறவுமுறையில் ஏற்படும் வன்முறை குறித்து வெளிப்படுத்துவதற்கு மேலும் தடைகளை உருவாக்குகிறது. இத்தகைய வன்முறை நிறைந்த உறவை முறித்துக் கொண்டு வெளிவருதற்கு தயக்கத்தையும் பயத்தையும் தோற்றுவிக்கிறது. 

வன்முறைச் சூழலிலிருந்து வெளியேறும் உரிமை பெண்ணுக்கு தேவை

ஸ்ரத்தா  வாக்கரை பயங்கரமான முறையில் கொலை செய்த  ஆஃப்தாப் பூனாவாலா, மிகக் கொடூர மான முறையில், மனிதத் தன்மையற்ற முறையில் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டியது என்பது எதை வெளிப்படுத்துகிறது? ஆஃதாபின் மிருகத்தன்மை மட்டுமல்ல; பெண் மீது வன்முறை ஏவுவதை வழக்கமாக கொண்டுள்ள ஒரு மனிதனுடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் பரிதாபத்தையும் அந்த உறவை முறித்துக் கொண்டு வெளிவர இய லாத அவரின் சூழலையும் வெளிப்படுத்துகிறது. ஸ்ரத்தா வின் நலம் விரும்பிகள் முன்வைத்துள்ள வாக்கு  மூலங்களை கவனிக்கும் பொழுது அவர் தனக்கு  நேர்ந்த கொடுமைகளை அவர்களுடன் பகிர்ந்துள்ளார்  என்பது வெளிப்படுகிறது. எனினும் அவரை வன்முறை கள் நிறைந்த அந்த மோசமான உறவிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் சாத்தியமாகவில்லை. இப்பொழுது ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும் வன்முறை பற்றிய பல சாட்சி யங்கள் ஸ்ரத்தாவின் நண்பர்களால் காவல்துறையிடம் பகிரப்படவில்லை. குடும்ப  உறவுகளில் ஆண்களால் நடத்தப்படும் வன்முறை இயல்பானது என்பதை நமது கலாச்சாரம் வலுப்படுத்துகிறது. இத்தகைய வன்முறை வழக்கமான ஒன்றுதான் என போதிக்கப்படுகிறது. அத்தகைய வன்முறையை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அனுசரித்துப் போக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படு கிறது. இதை எதிர்த்து ஒரு பெண் கேள்வி கேட்டால் “பதிவிரதை” எனும் பெயரில் இதனை ஏற்றுகொள்ள வேண்டுமா என எதிர்த்தால் அந்த பெண்ணை அவதூறு  செய்யும் கலாச்சாரம் நிலவுகிறது. மனுஸ்மிருதியின் வார்த்தைகளில் “ஒரு சிறந்த பெண் என்பவள் தனது  கண வனை கடவுளாக பூஜிக்க வேண்டும்” என கூறப்படுகிறது.

 இன்றைய நமது கல்வி முறை இளம் தலைமுறைக்கு  இது மாதிரியான கருத்துக்களை  அகற்றப்பட வேண்டும் என எடுத்துச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்; இத்த கைய பத்தாம்பசலித்தனமான கருத்துகளை எதிர்த்து  கேள்வி கேட்க வேண்டும் என்று கூட போதிப்பது இல்லை. மாறாக ஆண் குழந்தைதான் வேண்டும் எனும்  கோட்பாடுகள்தான் வலுவாக உள்ளன. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் இதை ஆதரிப்பவர்களாகவே இருக்கின்றனர் . நம்முடைய குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும் என யு.ஜி.சி. ஒரு வழிகாட்டுதலை கொடுத்துள் ளது. அதில் “காப் பஞ்சாயத்து” எனப்படும் மோசமான ஆணாதிக்கமும் சாதியமும் அடிப்படையாக கொண்ட கட்டப்பஞ்சாயத்து முறையை புகழ்ந்தும் ஆணவக் கொலைகளுக்கு காரணமானவை என  உச்சநீதி மன்றம் கண்டித்த சாதிய நிறுவனத்தையும் கல்வி நிலை யங்களில் போதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பெண்கள் உரிமையையும் சமத்துவத்தையும் முன்வைக்கும் முக்கியமான நகர்வை கடுமையாக சிதைக்கும் சூழல் கடந்த 10 ஆண்டுகளாக நிலவிவரு கிறது. இந்த அரசாங்கத்தின் கீழ் இந்தியாவில் ஆணாதிக்க மோசமான சிந்தனைகள் புத்துயிர் பெற்றுள் ளன. பெண்களின் சுயசெயல்பாடுகளை எதிர்க்கும் சிந்தனைப் போக்குகளை ஊக்கப்படுத்த இந்த ஆட்சி  தயங்குவதே இல்லை. மனுஸ்மிருதிதான் நமது  அரசியல் சட்டத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும் என கோரிய சக்திகள்தான் இன்று ஆட்சியில் உள்ளன. இத்தகைய கலாச்சாரத்தை ஊக்கப்படுத்துபவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை நமது பெண் குழந்தைகள் அரசியல் சட்டம் உத்தரவாதப்படுத்திய உரிமைகளை செயலாற்றுவதில் கடும் முட்டுக்கட்டைகளை சந்திப்பர். இந்த உரிமைகள் நீண்ட கடுமையான போராட்டத்துக்கு பின்னர் வென்றவை ஆகும். எந்த ஒரு  பெண்ணும் எவ்வித வாழ்வு உறவு முறையிலும், அது  அவளது பெற்றோரால் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தா லும் அல்லது தானாகவே சுயமாக தேர்வு செய்ததாக இருந்தாலும், வன்முறையைச் சந்திக்கின்ற சூழல் இருக்கக்  கூடாது.  வன்முறையைச் சந்தித்தால் அதி லிருந்து வெளியேறும் உரிமை பெண்ணுக்கு இருக்கும் வாய்ப்பு கொண்ட ஒரு சமூகத்தையும் சமூகக் கட்டமைப்பு களையும் நாம் உருவாக்க வேண்டும். இதுதான் ஸ்ரத்தாவை காப்பாற்றியிருக்க முடியும்.

-நன்றி: என்.டி.டி.வி. /  -தமிழில்: ஆர். மைதிலி


 

;