ஒன்றிய பட்ஜெட் மாணவர்களின் சமீபத்திய எந்த கோரிக்கையையும் செவிமடுக்கவில்லை. பொதுக் கல்விக்கான எந்த நம்பகத்தன்மையும் அளிக்க வில்லை. நிதி அமைச்சரின் முழு பட்ஜெட் உரையில் எங்குமே “பொதுக் கல்வி - Public Education” எனக் குறிப்பிடவில்லை. கல்வித்துறையில் அரசு எந்தவித பங்களிப்பும் செலுத்த வேண்டியதில்லை என்பதை இந்த பட்ஜெட் உணர்த்துவதாக உள்ளது. அதேபோல கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஒட்டு மொத்த ஒதுக்கீட்டில் 2.50 சதவீதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட 2.64 சதவீதத்திலிருந்து 0.14 சதவீதம் குறைவாகும். இது தேசிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்ட கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 6 சதவீதத்தில் பாதி அளவு கூட இல்லை. ஏகலைவா உண்டு உறைவிட மாதிரி பள்ளிக்கு (EMRS) புதிதாக ஆசிரியர் நியமனம் செய்யவுள்ளதாக தம்பட்டம் அடித்த இந்த பட்ஜெட், அரசு புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் சிறப்பு கவனிப்பில் உள்ள மாவட்டங்க ளில் 3.4 சதவீத பள்ளிக்கு மட்டுமே இணைய வசதி (ICT) உள்ளது என்பதைப் பற்றியோ, பழங்குடி மாணவர்கள் இணைய வசதி பெறுவதில் இருந்து மிகவும் பின்தங்கி உள்ளனர் என்பதைப் பற்றியோ கவனம் கொள்ளவில்லை. பெரிதும் ஊதி பெருக்கிய ‘டிஜிட்டல் இந்தியா’ இம்மாவட்டங்களில் ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை என்பதையும் இப்புள்ளிவிவரம் காட்டு கிறது. குறிப்பாக ஏகலைவா பள்ளிகளிலேகூட போதிய உட்கட்ட மைப்பு வசதியின்மை மற்றும் ஊழியர் பற்றாக்குறை பற்றி இந்த பட்ஜெட் கவலைப்படவில்லை.
ஒன்றிய பாஜக அரசு இக்காலத்தில் பல்வேறு கல்வி உதவித் தொகைகளை நிறுத்தியுள்ளது மட்டுமின்றி, உத வித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையையும் திட்ட மிட்டு குறைத்துள்ளது. குறிப்பாக சிறுபான்மை மாணவர்க ளுக்கான பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகையையும், ஆராய்ச்சி மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகையையும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்க ளுக்கான கல்வி உதவித்தொகையையும் நிறுத்தியுள்ளது. இச்சூழலில் புதிய கல்வி உதவித் தொகை திட்டம் ஏதும் அறி விக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துள்ளது. நடைமுறை யில் உள்ள கல்வி உதவித்தொகை திட்டத்திற்கே போதிய நிதியை ஒதுக்காமல் குறைத்துள்ளது. 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டில் செலவு செய்யப்பட்ட தொகை என்பது ரூ.12,972 கோடி குறைவாகும். தேசிய கல்வித் திட்டத்திற்கு 2021-22 ஆம் ஆண்டுகளில் அதற்கு முந்தைய ஆண்டை விட ரூ.2860.23 கோடியை குறைத்துள்ளது. சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டு ரூ.1319.96 கோடி என்ற அளவில் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை வழங் கிய அளவிலிருந்து 2022-23 ஆம் ஆண்டு ரூ.1083 கோடியாக குறைத்துள்ளது. தற்போதைய பட்ஜெட்டிலும் 2023-24க்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி ரூ.1087 கோடி மட்டும் தான். அதேபோல பழங்குடி மாணவர்களுக்கான ஃப்ரீ மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை 2021-22 இல் ரூ.2651.87 கோடி என்பதிலிருந்து 2022-23ஆம் ஆண்டிற்கு ரூ.2,322 கோடியாக குறைத்தது. தற்போது 2023-24க்கு 2382.4 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது.
பட்டியல் சமூக மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை 2021-22ல் ரூ.3412.65 கோடி ஒதுக்கியதில், அந்த ஆண்டு ரூ.1978.56 கோடி மட்டுமே செலவு செய்துள்ளது. அதாவது 60 சதவீதத்திற்கும் குறைவாகவே அந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் செலவு செய்தது. கல்லூரி மற்றும் பல் கலைக்கழக மாணவர்களுக்கான பல்வேறு கல்வி உதவித் தொகைக்கும், ஜம்மு -காஷ்மீர் மாணவர்களுக்கான சிறப்பு உதவி தொகைக்கும் இவ்வாண்டு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்விக்கான ஒதுக்கீடு 2021-22ல் அதற்கு முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவு; அதிலும் செலவு செய்தது குறைவு. குறிப்பாக பள்ளிக் கல்வியில் ரூ.5,023.13 கோடி; அதாவது 10 சதம் தொகை குறைவாக செலவு செய்திருந்தது. உயர் கல்வியில் 2022-23ஆம் ஆண்டில் ரூ.38,350.65 கோடி ஒதுக்கியதில் ரூ.4819.74 கோடி குறைவாகவே செலவழித்திருந்தது. உயர் கல்விக்கான ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில், தற்போதைய திருத்தப்பட்ட புள்ளி விவரத்தின் படி 2022-23ஆம் ஆண்டு ரூ.999 கோடியை குறைத்துள்ளது. இதில் மேலும் இந்த ஆண்டு 2023-24ல் உயர் கல்விக்கான ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டை விட ரூ.443.97 கோடி குறை வாகவே ஒதுக்கி உள்ளது. மிகவும் வாய்சவடால் அடிக்கப்பட்ட ‘பிரதம மந்திரி மாணவிகள் விடுதி திட்டத்திற்கு இவ்வாண்டு ரூ.10 கோடியை குறைத்துள்ளது. மறுபுறம், ‘இந்திய அறிவு திட்டத்திற்கு (Indian knowledge system)’ ரூ.10 கோடியை ஒதுக்கி இரட்டிப்பாக்கி உள்ளது. உண்மையில் ஒன்றிய அரசின் தேசிய கல்வி திட்டம் எதை ஊக்குவிக்கப் போகிறது என்பதை இது காட்டுகிறது. உலகத்தர கல்விநிறுவனம் இந்தியாவில் உரு வாக்கப் போவதாக ஜம்பம் அடித்த திட்டத்திற்கே 2022-23ஆம் ஆண்டை விட இவ்வாண்டு ரூ.500 கோடி குறைவா கவே ஒதுக்கியுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய கல்வித் திட்டத்திற்கு கூட (National Education Mission) இந்த பட்ஜெட் டில் ரூ.600 கோடியை குறைத்துள்ளது. மேலும் கல்வி மேம் பாட்டிற்கான ஒதுக்கீட்டில் ரூ.826 கோடியை குறைத்துள்ளது.
2021 செப்டம்பர் மாதம் பொருளாதாரத்திற்கான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதற்கு 2021-22 முதல் 2025-26 ஆம் ஆண்டிற்கான ‘பிரதான் மந்திரி போஷான் சக்தி நிர்மன்’ (PM poshan) என பெயர் வைத்தது. ஆனால் இந்த புதிய திட்டத்தில் இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தை இன்னும் வழங்கவில்லை. ஆனால் உண்மை யில் ஏற்கனவே உள்ள தேசிய மதிய உணவு திட்டத்திற்கு கடந்தாண்டை விட 20.5 சதவீதம் குறைவாகவே, ரூ. 2647.17 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. மதிய உணவு திட்டத்தை தனியார்மயமாக்குவதையும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்து ஒன்றிய அரசு வேகமாக விலகி வருவதையும் இது காட்டுகிறது. அகில இந்திய உயர் கல்வி புள்ளிவிவரம் (AISHE) 2020-21ஆம் ஆண்டில் பட்டியலின (SC) மாணவர் கள் 14.7 சதவீதத்திலிருந்து 14.2 சதவீதமாக குறைந்துள்ள தாகவும், அதே போல இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் (OBC) 37 சதவீதத்திலிருந்து 35.8 சதவீதமாகவும், இஸ்லாமிய மாண வர்கள் 5.5 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாகவும் குறைந்துள் ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவர் கள் நாடு முழுவதும் 92,831 பேர் என்பதிலிருந்து 79,035 பேராக குறைந்துள்ளனர். குறிப்பாக, இந்திய சமூகத்தில் துவக்கப் பள்ளியில் சேர்ந்து உயர்நிலைப் பள்ளியை முடிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை சரி பாதி பேர் கூட இல்லை. மேலும் மேல்நிலைப் பள்ளியை முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண் ணிக்கை (GER ratio) இந்தியாவில் 30 சதவீதத்துக்கும் குறை வாகவே உள்ளனர். எனவே தான் கல்வியை மேம்படுத்திட வும், அனைவருக்குமான கல்வி வாய்ப்பை உறுதி செய்திட வும் இந்திய மாணவர் சங்கம் பட்ஜெட்டில் தற்போது ஒதுக்கும் நிதியை விட மூன்று மடங்கு கூடுதலான நிதியை ஒதுக்க வேண்டும் என்கிறது. ஆனால் தற்போதைய பட்ஜெட்டில் மாணவர்களின் நலனை பாதுகாக்கவோ, கல்வியை மேம்படுத்தவோ எந்த வித முன்னெடுப்பும் இல்லை. எனவே இந்த பட்ஜெட் மாணவர் விரோத பட்ஜெட்டாகவே உள்ளது.
கட்டுரையாளர்: மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்