திருமதி பாமதி ஐஏஎஸ் அவர்களின் அறிக்கை வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஆணையத்தின் அதிகாரி, நடந்த கொடுமைகள் அனைத்தும் உண்மைதான் என்று அறிக்கை கொடுத்தது சாதாரண விசயமல்ல. அதுவும் அன்றைய அதிமுக ஆட்சியின் அணுகுமுறையை அறிந்தவர்களுக்கு இதன் முக்கியத்துவம் புரியும். மிகவும் துணிச்சலான செயல் இது.
1992 ஜூன் 20 தொடங்கி 22 வரை வரலாற்றில் கண்டிடாத கொடுமை வாச்சாத்தி கிராமத்தில் அரங்கேறியது. ஆம்... தர்மபுரி மாவட்டம், சித்தேரிமலை அடிவாரத்தில் உள்ளது வாச்சாத்தி. அரூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள அந்த கிராமத்தில் அன்றைக்கு 186 குடும்பங்களை சேர்ந்த 655 பேர் வசித்து வந்தனர். இதில் 643 பேர் மலையாளி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 12 பேர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 75 விழுக்காட்டினர் சொந்த நிலம் வைத்திருந்தனர். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் இவர்களது பிரதான தொழிலாக இருந்தது. வறட்டாறு என்கிற ஓடையும், ஒரு ஏரியும், கிணறுகளும் பாசன ஆதாரமாக இருந்தன. ஊரின் மையத்தில் கிராமத்திற்கே உரித்தான பெரிய ஆலமரம் இருந்தது. பொதுவான அனைத்து நிகழ்வுகளும் அங்கேதான் நடக்கும். வரலாறு காணாத, எலும்பையும் உறையச் செய்யும் அந்த வன்கொடுமையும் அங்குதான் நிகழ்த்தப்பட்டது. அரசு எந்திரம் மனித வடிவில் எத்தகைய மிருகத்தனத்தோடு செயல்படும், தனக்கு எதிரானது குறித்தும் வழக்குகளை எப்படியெல்லாம் சிதைக்கும், அரசியல் சதிராட்டம், ஆளும் வர்க்க நலன், ஆளும்கட்சியின் சதி போன்றவை குறித்தும், கொலை சதித் திட்டங்களை முறியடித்து 31 ஆண்டு காலம் நெடும் போராட்டம் நடத்தி நீதியை நிலைநாட்டியதை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் அன்றைய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் இன்றைய மாநிலத் தலைவருமான பெ.சண்முகம் விவரிக்கிறார்:
- சந்திப்பு : செ. கவாஸ்கர்
கேள்வி : வாச்சாத்தி சம்பவம் எப்போது உங்கள் கவனத்திற்கு வந்தது?
பெ.சண்முகம்: 1992 ஜூலை 7 அன்று சித்தேரி மலைவாழ் மக்கள் சங்க மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்ற சங்கத்தின் தலைவர் பாஷா ஜான், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் சித்தேரி மலையைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் வந்து தங்கியிருந்த வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த இருவர், வாச்சாத்தியில் நடந்த கொடுமைகளை தெரிவித்தனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சியில் சந்தித்து பாஷா ஜான் மற்றும் கிருஷ்ணமூர்த்தியும் நானும் கலந்து பேசினோம். ஜூலை 13 அன்று அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, வட்டாட்சியரிடம் மனு கொடுத்தோம்.
சூறையாடப்பட்ட வாச்சாத்தி கிராமத்திற்கு என்றைக்கு எப்படி சென்றீர்கள்?
ஜூலை மாதம் 14ஆம் தேதி கையில் 10 ரூபாய்தான் இருந்தது. இருந்த 10 ரூபாய்க்கு பொரிகடலை வாங்கி 8 பேர் தின்றுவிட்டு, ஏதோ தைரியத்தில் ஒரு காரை எடுத்துக் கொண்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை, மலைவாழ் மக்கள் சங்க தலைவர் பாஷாஜான், பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்க கமிட்டி செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் வட்டச் செயலாளர் விஸ்வநாதன், மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி என்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் எச்.ஆர்.கணேசன் ஆகிய 7 பேர் மற்றும் கார் ஓட்டுநர் என 8 பேர் வாச்சாத்திக்கு சென்றோம். அந்த கிராமத்தில் அன்றைக்கு எந்த ஒரு ஜீவராசியும் இல்லாத மயான அமைதி நிலவியது. அனைத்து வீடுகளும் நொறுக்கப்பட்டுக் கிடந்தன. ஒரு சந்தில் ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த சாலா என்பவரைக் கண்டோம். அவரிடம் பேசினோம். மலைகளில் மறைந்திருந்த சுமார் 45 பேரை அழைத்துக் கொண்டு வந்தார். அரசு நிர்வாகம் நடத்திய வன்முறை வெறியாட்டங்களை, பாலியல் கொடூரங்களை அவர்கள் விவரித்தனர்.
ஜூன் 20ஆம் தேதிக்கு பிறகு வாச்சாத்தியில் என்ன நடந்தது?
அரூர் வனத்துறை அலுவலகத்தில் அடைக்கப் பட்டிருந்த ஊர்மக்களை ஜூன் 20 அன்று நடந்த கொடிய பாலியல் வல்லுறவுக் கொடுமைகளை எதிர்கொண்ட 18 பெண்களும், ஜூன் 21ஆம் தேதி காலையில்தான் சந்திக்கின்றனர். அப்போதுதான் உறவினர்களிடம், தங்களுக்கு நேர்ந்த கொடுமை களைத் தெரிவிக்கின்றனர். அப்போதும் பல பெண்கள் உதிரப்போக்கோடு இருந்துள்ளனர். அன்றைய தினம் மாலை அரூர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பாக, பாலியல் வல்லுறவு நடந்தது, அடித்தது குறித்து நீதிபதியிடம் சொன்னால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டி வரும் என காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். மொத்தமாக 200 பேரைக் கொண்டு சென்று நீதிமன்றத்தில் கும்பலாக நிறுத்திய நிலையில் நீதிபதி தனித்தனி யாக விசாரிக்காமல், மொத்தமாக சிறையில் வைக்க உத்தரவிடுகிறார். 21 அன்று காலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமானுஜம் (தமிழக டிஜிபியாக இருந்து ஓய்வுபெற்றவர்) வாச்சாத்திக்கு சென்று பார்வையிடுகின்றார். அதன்பிறகு அங்கு முகாமிட்டி ருந்த 3 துறையினரும் சேர்ந்து வீடுகளையும், பண்டபாத்திரங்களை அடித்து நொறுக்குகின்றனர். நகை, பணம், புடவைகளை அள்ளிக் கொள்கின்ற னர். ரேசன் அட்டை, சாதிச் சான்றிதழ், மாணவர்களின் நோட்டு புத்தகங்கள், இதர சான்றிதழ்களை கிழித்தெறிகின்றனர். மின் இணைப்பு பெட்டிகளை, ரேசன் கடைகளை உடைத்தெறிந்தனர். குடிக்க தண்ணீர், இருக்க வீடு, உடுத்த உடை, பயன்படுத்த பொருட்கள் என எதுவும் இருக்கக் கூடாது; மக்கள் மீண்டும் ஊரில் வந்து வாழ முடியாத வகையில் வன்மத்தோடு அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டனர். வீட்டில் இருந்த சமையல் பொருட்களை எடுத்து, கோழி, ஆடுகளை வெட்டி கறி சமைத்து சாப்பிட்டனர். அவற்றின் தோல், மண்ணெண்ணை, எஞ்சின் ஆயில் ஆகியவற்றை ஊர் மக்கள் குடிநீர் எடுக்கும் பொதுக் கிணற்றில் கொட்டினர் (அந்த கிணற்றை இப்போது வரை மக்கள் பயன்படுத்து வதில்லை). சாப்பிட்ட எச்சில் எலும்புகளை குழம்பில் கொட்டி, தண்ணீரை ஊற்றி எடுத்துவந்து, வனத்துறை அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு தரையில் தேக்கு இலையை பரப்பி அதில் மண்ணோடு சேர்த்து தின்ன வைத்தனர். மேலும், ஆடு, மாடு, பம்புசெட்டுகளை கொண்டு சென்று சந்தையிலும் விற்றனர். 20ஆம் தேதி வாச்சாத்தி கிராமத்தில் வல்லுறவு செய்து, வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வருகிற வழியிலும், வனத்துறை அலுவலகத்தில் இரவு முழுவதும், 21ஆம் தேதி அரூரில் இருந்து சேலம் சிறைக்கு கொண்டு சென்று விடும் வரை, அந்த 18 பெண்களுக்கும் தொடர் பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திக் கொண்டே இருந்தனர். அனைத்து விதமான குற்றங்களையும் தெரிந்தே செய்தனர். வனத்துறை அலுவலகத்தில் வைத்து இரவு முழுவதும் அடித்து சித்ரவதை செய்வது, ஊர்கவுண்டர் பெருமாளை அடித்து காயம் ஏற்படுத்தியதுடன் உற வினர்களான பெண்களின் புடவைகளை ஊர்கவுண்ட ரை விட்டு அவிழ்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தியது, பெண்களை விட்டு ஊர்கவுண்டர் உடையை கழற்றச் சொல்லியது, ஒவ்வொருவரையும் துடைப்பத்தால் அடிக்கச் சொல்வது என சொல்லொண்ணாக் கொடுமைகளை குழந்தைகளின் கண்முன்னால் வனத்துறையினர் அரங்கேற்றியுள்ளனர். அந்த 28 குழந்தைகளின் மனநிலை எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதைக் கற்பனை கூட செய்யமுடியவில்லை.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு எப்படி வந்தது?
வாச்சாத்தியில் நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து நீதி விசாரணை கோரி ஜூலை 16 அன்று முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பினேன். அந்தச் செய்தியை தீக்கதிர் நாளேடு தவிர வேறு எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை. எனவே, 18 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.நல்லசிவன் எம்.பி., நீதி விசாரணை கோரி முதலமைச்சருக்கு மனு அனுப்பினார். அது அன்றைய மாலை செய்தி தாள்களிலும், மறுநாள் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியானது. இதனையடுத்து 21 அன்று வனத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்த சம்பவத்தை மறைத்து மறுப்பு அறிக்கை வெளியிட்டார். குற்றம் நடக்கவில்லை என்றால் நீதி விசார ணைக்கு தயங்குவது ஏன் என மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியது. மருத்துவ பரிசோதனை அறிக்கை யில் பாலியல் வல்லுறவு நிகழவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூற, சிறையில் உள்ள பெண்களுக்கு எப்போது மருத்துவ பரிசோதனை நடந்தது என்று மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி யது. இப்படியாக அறிக்கைப் போர் நடந்தது. இதற்கிடையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் 30.7.92 அன்று உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.
“குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் படித்தவர்கள், உயர் அதிகாரிகள். இவர்கள் இத்தகைய குற்றங்களை செய்திருப்பார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை” என்று கூறி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியான பத்மினி ஜேசுதுரை தள்ளுபடி செய்தார். (வெண்மணி தீர்ப்பிலும் இதே போன்று கூறித் தான் குற்றவாளிகளை உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது). அதை எதிர்த்து செப்.3 அன்று உச்சநீதிமன்றத்தில் ஏ.நல்லசிவன் எம்.பி., வழக்கு தாக்கல் செய்தார். அதனை செப்.8 அன்று விசாரித்த நீதிமன்றம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து தீர்வுகாண சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. ஜூலை 31 அன்று வாச்சாத்திக்கு வந்த ஏ.நல்ல சிவன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு சென்று ஆக.5 அன்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினார். தேசிய அளவில் இந்தப் பிரச்சனை விவாதத்திற்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் படிப்படியாக நீதிமன்றம் பிணை வழங்குகிறது. அவ்வாறு சிறையில் இருந்து வெளியே வந்த பாதிக்கப்பட்ட பெண்களில் சிலரோடு சென்று ஆகஸ்ட் மாதம் 22 அன்று அரூர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தோம். அதன் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிய ஆய்வாளர் மறுத்து விட்டு, சிஎஸ்ஆர் மட்டும் தந்தார். தமிழ்நாட்டில் நடந்த ஒரு குற்றத்திற்கு மாநில காவல்துறையால் இன்று வரை எப்ஐஆர் பதிவு செய்யப்படாத ஒருவழக்கு வாச்சாத்தி வழக்கு. இதற்கிடையில் கோட்டாட்சியர் விசாரணை அறிக்கை 10.8.92 அன்று மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதில் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும், மக்கள் தங்கள் வீடுகளை தாங்களே சேதப்படுத்திக் கொண்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
சட்டமன்றக் கூட்டத்தில் வாச்சாத்தி வழக்கு விவாதமானதா?
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நீதி விசாரணை கோரி உடனடியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்ட மன்றத்தில் 1992 செப்.23 அன்று தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வி.தம்புசாமி வாச்சாத்தி குறித்து பேசினார். இதனை மறுத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்தார். இந்த வழக்கை எதிர்த்து தமிழக அரசு ஒரு வழக்கு தாக்கல் செய்தது. எனவே, கிராமத்தை புனரமைக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோரினோம். அதனையேற்று, கிராமத்தை சீரமைக்க நீதி அரசர் பக்தவச்சலம் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு எவ்வாறு விரைவுபடுத்தப்பட்டது?
1992 ஜூலை 25 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளேட்டில் வாச்சாத்தி குறித்து செய்தி வெளியானது. ஜூலை 31 அன்று ஏ.நல்லசிவன் எம்.பி., அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஜி.வீரய்யன், கே.வரதராசன், முன்னாள் எம்எல்ஏ அண்ணாமலை ஆகியோர் வாச்சாத்தி கிராமத்திற்கு சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து ஆக.3 அன்று பட்டியலினத்தவர் - பழங்குடியினர் ஆணையத்தின் தென்மண்டல ஆணையத்தின் தலைவர் பாமதி ஐஏஎஸ் அவர்களிடம் மைதிலி சிவராமன் புகார் அளித்தார். அதனடிப்படையில் பாமதி அவர்கள் ஆக. 6-8 தேதிகளில் நேரடியாக வாச்சாத்திக்கு வந்து ஆய்வு செய்து தேசிய ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார். நாங்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உறுதி செய்த அவர், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களை நேரடியாக விசாரிக்க முடியவில்லை; எனவே, பாலியல் குற்றச்சாட்டு குறித்து உறுதியாக தெரிவிக்க இயலவில்லை என்று தெரிவித்தார். திருமதி பாமதி ஐஏஎஸ் அவர்களின் அறிக்கை வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஆணையத்தின் அதிகாரி, நடந்த கொடுமைகள் அனைத்தும் உண்மைதான் என்று அறிக்கை கொடுத்தது சாதாரண விசயமல்ல. அதுவும் அன்றைய அதிமுக ஆட்சியின் அணுகு முறையை அறிந்தவர்களுக்கு இதன் முக்கியத்துவம் புரியும். மிகவும் துணிச்சலான செயல் இது. இதற்கிடையில், வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு பாமதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. இதற்குள்ளாக சிறையில் இருந்தவர்கள் அனை வரும் விடுதலையாகி இருந்தனர். எனவே, பாமதி மீண்டும் விசாரணை நடத்தி, பாலியல் வல்லுறவு, சந்தனை கட்டை கடத்தல் புகார்களை திறமை வாய்ந்த புலானாய்வு பிரிவு விசாரிக்க பரிந்துரை செய்து 11.12.1992ல் அறிக்கை தாக்கல் செய்தார். அதனை யேற்ற உயர்நீதிமன்ற நீதி அரசர் அப்துல் ஹாதி அவர்கள் 24.2.1995ல் சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டார். இதை எதிர்த்த தமிழக அரசின் மனுக்களை உயர்நீதிமன்ற முழு அமர்வு மற்றும் உச்சநீதி மன்றமும் தள்ளுபடி செய்தது.
சிபிஐ இந்த வழக்கை எவ்வாறு கையாண்டது?
டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையிலான சிபிஐ குழு விரிவான, திறமையான விசாரணையை நடத்தியது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட 18 பெண்களும் குற்றவாளிகளை அடையாளம் காட்ட, சேலம் சிறை வளாகத்தில், ஊத்தங்கரை மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவர் பிரேம்குமார் முன்னிலையில் அரூர் கிளைச் சிறைச்சாலையில் 14.7.1995 அன்று அடையாள அணி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆட்களை திரட்ட கால அவகாசம் வேண்டு மென்று மாவட்ட வன அலுவலர், மாவட்ட வன கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டதால் அணிவகுப்பை நடத்தவில்லை. இரண்டாவது முறையாக 1.8.1995 அன்று நடத்த திட்டமிடப்பட்டி ருந்தது. வனத்துறை ஒத்துழைக்காததால் நடக்க வில்லை. மூன்றாவது முறையாக 15.9.1995 அன்று சேலம் மத்திய சிறை கவாத்து மைதானத்தில் 1:5 என்ப தற்கு மாறாக, 1489 பேரை ஒன்றாக நிற்க வைத்து, மாஜிஸ்ட்ரேட்டையே மிரட்டி கலவரத்தை உருவாக்கினார்கள் (சிறைக்கு எதிரே உள்ள பங்களாவில் இருந்து கொண்டு அமைச்சர் செங்கோட்டையன் வழிகாட்டல்படி கலவரத்தை நடத்தினர்). பின்னர் நீதிபதி அவர்கள், ‘எனக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பில்லை’ என்று உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளார். மேற்கண்ட கலவரத்தைக் கண்டித்து மாநிலச் செய லாளர் என்.சங்கரய்யா அறிக்கை வெளியிட்டார்.
இதனால் மாஜிஸ்ட்ரேட் அடையாள அணி வகுப்பை நடத்த முடியவில்லை என்று உயர்நீதி மன்றத்திற்கு அறிக்கை அளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்டோபர் 5 அன்று மாநிலம் முழுவதும் அமைச்சர் செங்கோட்டையன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதனையடுத்து உயர்நீதிமன்றம் அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, சேலம் மாவட்ட நீதிபதி அடையாள அணிவகுப்பை நடத்த உத்தரவிட்டார். அதன்பிறகு 5 நாட்கள் நடந்த அணி வகுப்பில் பாலியல் வல்லுறவு செய்த 12 பேரை பெண்கள் சரியாக அடையாளம் காட்டினர். சுமார் 100 காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இந்த அடையாள அணிவகுப்பு நடந்து முடிந்தது. இது எங்களுக்கும் நீதித்துறைக்கும் ஒரு சவாலான பணியாக இருந்தது என்பதே உண்மை. இறுதி யாக 10.10.1995 முதல் 13.10.1995 வரை மற்றும் 16.10.1995இல் மருத்துவ பரிசோதனை என 6 மாதம் இழுத்தடித்த னர். இதன்பிறகு 23.4.1996ல் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. சிபிஐ-தான் 269 பேர் குற்றவாளிகள் என பட்டியலிட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு அரசு ஊழியர்கள் யாராவது உதவினார்களா?
1992 ஜூலை 14 அன்று வாச்சாத்தி சென்று விட்டு அங்கிருந்து நேராக சேலம் சிறையில் உள்ள வர்களை பார்க்க சென்றோம். அப்போது பாலியல் வல்லுறவு நடந்திருப்பதை சேலம் சிறை வார்டன் லலிதாபாய் உறுதி செய்தார். பாதிக்கப்பட்ட பெண்களை சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததையும் கூறினார். பின்னர், சிறப்பு நீதிமன்றத்திலும் துணிச்சலாக சாட்சியமும் அளித்தார். அந்த சாட்சியமும், பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியமும் பாலியல் வல்லுறவு குற்றத்தை நிரூபிப்பதில் பெரும்பங்காற்றியது.
சிபிஐ அறிக்கை தாக்கலை தொடர்ந்து என்ன நிகழ்ந்தது?
சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துவிட்டு (23.4.1996), குற்றவாளிகளை 16.10.1996-ல் கைது செய்து கோவை சிறையில் அடைக்கிறது. அதை எதிர்த்து குற்றவாளிகளின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை அரசு சட்டவிரோத மாக உடனே விடுதலை செய்தது. எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்ததால், சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று 1996 அக்டோபர் 1 அன்று தலைமைச் செயலாளரைச் சந்தித்து வற்புறுத்தினோம். இதற்காக 1997ல் டிசம்பர் 28 அன்று அரூரில் சாலை மறியலில் ஈடுபட்டோம். பல்வேறு வகைகளில் தொடர்ந்து வற்புறுத்தியும் அரசு, சிறப்பு நீதிமன்றம் அமைக்காமல் ஆட்சிக் காலம் முழுவதும் தவிர்த்து வந்தது. 2007ஆம் ஆண்டு வரை வழக்கை கிடப்பில் போடப்பட்டது. அதிகார வர்க்கத்தை நம்பித் தான் ஆளும்கட்சி இருக்கிறது என்பதால், அதிகார வர்க்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுகள் தயாராக இல்லை.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவில் வழக்கு பதியப்பட்ட நிலையில், நிவாரணம் கிடைத்ததா?
நிவாரணத்தைப் பெறவும் பெரும் போராட்டம் நடத்தினோம். நிவாரணம் வழங்க கோரி 2002ஆம் ஆண்டு நவம்பரில் உயர்நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தாக்கல் செய்தோம். ஒரு மாதத்தில் நிவார ணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால் அதிமுக ஆட்சிக் காலம் முழுவதும் நஷ்ட ஈட்டை வழங்கவில்லை. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும் நிவார ணம் கிடைக்காததால், 2007ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தோம். அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், நிவாரணத் தொகை பெருமளவில் இருப்பதால் தரமுடியாது என்றார். அதை நிராகரித்த நீதிமன்றம் நிவாரணத்தை வழங்க ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. அக்டோபர் வரை நிவாரணத்தை தராததால் நவம்பர் மாதம் 5ஆம் தேதி தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு படிப்படியாக சுமார் 3.50 கோடி ரூபாய் வரை நிவாரணம் பெற்றோம்.
வாச்சாத்தி வழக்கு மீண்டும் எப்போது விசாரணைக்கு வந்தது?
அரசு சிறப்பு நீதிமன்றம் அமைக்காததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தோம். அதன்பிறகு கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தை, சிறப்பு நீதிமன்றமாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகள் அதிகமாக இருப்பதால், புதிய கட்டி டம் கட்டி, அந்த கட்டிடத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2007ஆம் ஆண்டு நீதிபதி அசோக்குமார் விசாரிக்க தொடங்கினார். அதன்பிறகு நீதிபதிகள் மதி வாணன். நீதிபதி சிவக்குமார் ஆகியோர் விசாரித்த னர். அதன்பிறகு. 2008ஆம் ஆண்டு வழக்கு தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. நீதிபதி குமரகுரு 2011ஆம் ஆண்டு செப் 29 அன்று தீர்ப்பு அளித்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், நீதிபதி குமரகுரு ஒரு சாட்சியை கூட நேரில் பார்க்க வில்லை; விசாரிக்கவில்லை. நீதிபதிகள் அசோக் குமார், மதிவாணன், சிவக்குமார் பதிவு செய்து வைத்திருந்த ஆவணங்களின் அடிப்படையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என ஏன் குறிப்பிடுகிறீர்கள்?
உலகிலேயே அரசுப் பதவியில் இருந்தவர்களில் ஒரே நேரத்தில் இத்தனை பேர் தண்டிக்கப்பட்ட முதல் வழக்கு இதுதான். குற்றம்சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் இறந்துபோன 54 பேரைத் தவிர்த்து 215 பேருக்கும் (4 ஐஎப்எஸ் அதிகாரி உள்ளிட்ட வனத்துறையினர் - 126, காவல்துறையினர் - 84, வருவாய்த்துறையினர் 5) அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதிக காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படட 12 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். எஞ்சியவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சிறையில் இருந்தவர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்று ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இந்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 27 பேர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 12 வருடமாக நடந்த அந்த வழக்கில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, மேல்முறையீடுகளை தள்ளு படிசெய்து நீதியரசர் பி.வேல்முருகன்தீர்ப்பளித்தார்.
மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எந்த வகையில் மேம்பட்டதாக இருக்கிறது?
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இறந்த ஒருவரை தவிர்த்து 214 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. எனவே, 214 பேரையும் உடனடியாக கைது செய்து, தண்டனை அனுபவிக்காத மீதி காலம் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்பது. வாச்சாத்தி வன்கொடுமை நடந்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்த தசரதன் ஐஏஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ராமானுஜம் ஐபிஎஸ், மாவட்ட வனத்துறை அதிகாரி எல்.நாதன் (ஏ3) ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும்; அதில் 50 விழுக்காட்டை குற்றவாளி களிடம் இருந்து அரசு வசூலித்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை தர வேண்டும்; வாச்சாத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமத்தின் வளர்ச்சிக்கும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது, இனி என்னென்ன செய்ய உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அதிகாரி ஆகியோர் தண்ட னைக்கு உள்ளாக்கப்பட காரணம் என்ன?
1992 ஜூலை 14 அன்று வாச்சாத்திக்கு சென்று, அங்கிருந்து சேலம் பெண்கள் சிறை, ஆண்கள் சிறைக்கு சென்று விசாரித்துவிட்டு, தர்மபுரிக்கு வந்து இரவு 11 மணிக்கு ஆட்சியரை சந்திக்கச் சென்றோம். அனுமதி மறுத்ததால் கேட்டை பலமாக அசைத்துக் கொண்டிருந்தோம், அதன்பிறகு காவலர் வந்து திறந்தார். ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். அப்போது அப்படியா நடந்தது என்று வியப்பாக கேட்டார். அதெல்லாம் நடிப்பு என்பது பின்னர்தான் தெரிந்தது. நள்ளிரவில் சந்தித்து மனு கொடுத்த நிலையில் மறுநாள் காலை நாளிதழ்களில் (ஜூலை 15) ஆர்டிஓ விசாணைக்கு உத்தரவிட்டதாக செய்தி வந்தது. 1992 ஜூன் 21 அன்று வாச்சாத்திக்கு காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அதிகாரி வாச்சாத்திக்கு சென்று வந்துள்ளனர். 22ஆம் தேதியே அமைச்சர் செங்கோட்டையன் அரூருக்கு வந்துள்ளார். அவரிடம் வாச்சாத்தி அதிமுக கிளைச்செயலாளராக இருந்த குணசேகரன், நடந்த கொடுமைகளை விளக்கி மனு கொடுத்துள்ளார். அன்றைய தினம் அமைச்சரை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் சந்தித்துப் பேசியுள்ளனர். ஜூன் 25 அன்று ஊர் பெரியவர்கள், மற்ற கிராமத்தில் உள்ள இதே சமூகத்தை சேர்ந்த வர்கள், தாக்குதல் தொடர்பாக ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் ஜூலை 14ஆம் தேதி நள்ளிரவு சந்தித்து மனு அளித்தபோது எதுவுமே தெரியாதது போல் ஆட்சியர் பேசினார். இப்படி குற்றத்தை மறைத்தது, குற்றவாளிகளை பாது காத்தது போன்ற குற்றத்திற்காக இந்த 3 உயர் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது, சிபிஐ அதிகாரிகளிடம் குற்றவாளிகள் பட்டியலில் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயரை சேர்க்காதது ஏன் என்று தனிப்பட்ட முறை யில் கேள்வி எழுப்பினோம். அப்போது, அவர்களை சேர்த்தால் ஒட்டுமொத்த வழக்கையும் திசை திருப்பிவிடுவார்கள். வழக்கை பலவீனப்படுத்தும் என்று தெரிவித்தனர். ஆனால், உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் பட்டியலிலேயே இல்லாத ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது துணிச்சலான நடவடிக்கை.
வாச்சாத்தி வழக்கிற்கு என்ன மாதிரியான உதவிகள் கிடைத்தன?
1992 ஜூலை 14 அன்று அந்த ஊருக்குச் சென்ற நாங்கள் குடிக்க தண்ணீர் கேட்டோம். ஒருபெண்மணி கொட்டாங்கச்சியில் தூரமாக சென்று தண்ணீர் கொண்டு வந்தார். சங்கடப்பட்டு, ஏன் இப்படி என்று கேட்டோம். குடிக்க ஒரு டம்ளர் கூட விட்டு வைக்கா மல் அனைத்து பொருட்களையும் உடைத்து சூறையாடிவிட்டனர் என்று கூறினார்கள். ஒருசேர தண்ணீர் எடுத்து வந்து தர 4 கொட்டாங்கச்சி கூட இல்லாத நிலையில் மக்கள் இருந்தனர். இதனையறிந்து சிஐடியு - தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் உண்டியல் வசூல் செய்தனர். சுமார் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலித்து 186 குடும்பத்திற்கும் தேவையான சமையல் பாத்திரங்களை வாங்கி வந்து சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் வழங்கினார். திருப்பூர் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து போர்வை, சேலை உள்ளிட்ட உடைகளை அனுப்பினர். மக்கள் மறுபடி வாழ்க்கையை தொடங்குவதற்கான ஏற்பாடு களை மார்க்சிஸ்ட் கட்சியும், சிஐடியு அமைப்பும் செய்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் டில்லிபாபு அரூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வாச்சாத்தியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, வீடு களுக்கு குழாய் இணைப்பு வாயிலாக தண்ணீர் தரப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் மாநிலம் முழுவதும் வாச்சாத்தி வழக்கு நிதியை வசூலித்து கொடுத்தனர். வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்கள் போன்ற அமைப்புகளின் நிதியுதவி இல்லாமல் வழக்கை நடத்தி இருக்க முடியாது.
இத்தனை அடக்குமுறை, திசைதிருப்பல்களுக்கு இடையே அரசு எந்திரத்தை எதிர்த்த இந்த வழக்கின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது எது?
நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது ஒருபுறம் என்றாலும், வாச்சாத்தி விவகாரம் மக்கள் போராட்டமாக மாறியது முக்கியக் காரணம். 1992 ஜூலை 22 அன்று அரூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் - பொதுக் கூட்டம் நடக்கிறது. ஜூலை 30 அன்று தருமபுரியில் நடந்த கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த சம்பவம் குறித்து ஏ.நல்லசிவன், ஆர்.உமாநாத் போன்ற தலை வர்கள் பேசினார்கள். செப்.4 அன்று அரூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி னேன். போராட்டத்தின் நான்காவது நாள் பிற்பகலில் (செப்.7) காவல்துறை கைது செய்தது. அதன்பிறகு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை, ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டம் தொடர்ந்தது. செப்.24 அன்று உயர்நீதிமன்றம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிரச்சனையை மக்கள் போராட்டமாக மாற்றியதும், வழக்கை அமைப்பு ரீதியாக நடத்தியதும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆசைவார்த்தை, அச்சுறுத்தல், மிரட்டலுக்கு அடிபணியாமல் சாட்சி கூறி, அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டியதும், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக உறுதியோடு நின்றதும் மற்றொரு காரணம்.
வழக்கறிஞர் குழு எத்தகைய பங்களிப்பை செய்தது?
வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை, ஜி.சம்கிராஜ், ஆர்.இளங்கோ, டி.சுப்புராம் ஆகியோரைக் கொண்ட வழக்கறிஞர் குழு தன்னல மற்று கூட்டு உழைப்போடு அர்ப்பணிப்புடன் செயல்பட்டது. கட்சி கொடுத்த வழக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற உணர்வோடு ஒரு பைசா கூட பெறாமல் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நமது குழு வழக்கை நடத்தியது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சிறப்பு நீதிமன்ற சிபிஐ வழக்கறிஞராக கே.ஜெயபாலனை நியமிக்க வைத்தோம். விசாரணை நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பில் 12 பேர் வாதாடிய போது, வழக்கறி ஞர் கே.ஜெயபாலன் தனித்து எதிர்கொண்டார். அவருடைய வாதத்திறமையும் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
வாச்சாத்தி மக்களுக்கும், வழக்கை முன்னெடுத்தவர் என்ற வகையில் உங்களுக்கும் மிரட்டல் வந்ததா?
மொரப்பூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த சிங்காரம் மற்றும் அதிமுக ஆட்கள் கிராமத்திற்கு வந்து பல்வேறு முறைகளில் மக்களை அச்சுறுத்தினர். கோடிக்கணக்கான ரூபாய்க்கு மக்களை விலை பேசினார்கள். அண்ணாமலையை யும், சண்முகத்தையும் ஏதாவது ஒரு ஆக்சி டெண்ட் நடத்தி முடித்துவிடலாம் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசினார். இதனை தொலைத் தொடர்பு தோழர்கள் பதிவு செய்து கொடுத்தனர். அதனை வெளியிட்டு மாநிலம் முழுவதும் இயக்கம் நடத்தினோம். அம்பலப்பட்டுப் போனதால் அந்த முயற்சியை விட்டுவிட்டனர்.
தமிழ்நாடு அரசுக்கு என்ன கோரிக்கை வைக்க விரும்புகிறீர்கள்?
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அன்றைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 பேருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும். வாச்சாத்தி கிராமத்தின் மேம்பாட்டிற்கு விரிவான அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் தாமதமின்றி தாக்கல் செய்ய வேண்டும். 30 வருடங்களுக்கு மேலாக நீதிக்காக காத்திருந்த மக்களுக்கு உறுதியான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தந்துள்ளது. அதை தாமதமின்றி செயல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதுகுறித்து 2023 அக்டோபர் 8 அன்று முதலமைச்சர் அவர்களை நேரடியாகச் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.
நீதிமன்ற தீர்ப்புகள் என்ன உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது?
செங்கொடி இயக்கம் தலையிடாமல்போயி ருந்தால் வழக்கின் திசைவழி வேறுவிதமாக இருந்திருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். தீர்ப்புகளின் வாயிலாக சந்தனக்கட்டை திருடர்கள் என்ற பழியிலிருந்து வாச்சாத்தி மக்கள் விடு விக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு உயர் பொறுப்பில் இருந்தாலும், சட்டப்படி தண்டிக்க முடியும் என்ற நம்பிக்கையை நாடு முழுவதும் உள்ள பாதிக்கப் பட்ட மக்களுக்கு இந்த தீர்ப்பின் மூலம் உறுதிப் படுத்தி இருக்கிறோம். உறுதியாகவும், தொடர்ந்தும் ஒன்றுபட்டுப் போராடினால் வெற்றி பெற முடியும் என்பதற்கு வாச்சாத்தி வழக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
தீர்ப்பு குறித்து அதிமுக எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளதே…
குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சிபிஐ, மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கம்யூனிஸ்ட்டு களாகிய நாங்கள் பொய் சொல்கிறோம் என்று சட்டமன்றத்திலேயே பொய்சொன்ன அதிமுகவும், அன்றைய அமைச்சர் செங்கோட்டையனும் இப்போது என்ன சொல்வார்கள்? தீர்ப்பு வந்து இரண்டுவாரம் கடந்த பிறகும், அதிமுக தலைமை ஏன் வாய்மூடி மவுனியாக இருக்கிறது? மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மூடி மறைத்த குற்றத்திற்காக வாச்சாத்தி மக்களிடம் அதிமுக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டாமா? குற்றங்களை மூடி மறைத்தது, குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியென்றால் அதேகுற்றத்தைச் செய்த, அதற்கு மூல காரணமாகச் செயல்பட்ட செங்கோட்டையனும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவரே. அதற்கான முயற்சியை சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி எடுப்போம்.