ஊடகங்கள் ஜனநா யகத்தின் நான்கா வது தூண் என்கிறோம். அப்படி யென்றால் முதலாவது தூண் எது? நிர்வாகம் - அதாவது அரசு. இந்த அரசுதான் ஜனநாயகம் என்ற மக்களாட்சியை நிலை நிறுத்த வேண்டும். இதிலே ஊறு ஏற்பட்டால், ஒரு பக்கச் சாய்வு இருந்தால், மக்கள் விரோத செயல்கள் இருந்தால், ஜனநாயகம் சாய்ந்து சரிந்து விடும். சர்வாதிகாரம் மேலெழும். அப்படி ஆகிவிடாமல் ஒழுங்கு படுத்துவது தான் மற்ற மூன்று தூண்களின் வேலை. ஒரு வேளை அவையும் சாய்ந்தால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது. எனவேதான் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் சரி செய்யவும் ஜனநாயகம் பாதுகாக்கப்படவும் நீதிமன்றத் தீர்ப்புகளும், சட்டம் இயற்றும் அமைப்புகளின் விவாதங்களும், ஊடகச் செய்திகளும் விமர்சனங்களும் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றைத் தொகுத்துப் பார்த்தாலே அது அரசின் வரலாறாக, அரசியல் வரலாறாகப் பரிணமிக்கும். அப்படிப்பட்ட பணி அரிதாகவே நடக்கிறது. அப்படி ஒரு அரிதான பணியை ஊடகவியலாளர் கே.கே.சுரேஷ் குமார் செய்திருக்கிறார்.
2001 ஜூன் மாதக் கடைசியில் நடந்த ஒரு அரசியல் பழிவாங்கல் சம்பவத்தை அவர் ஆவணப்படுத்தி இருக்கிறார். எவ்வளவோ செய்திகள் சேகரிக்கப்படுகின்றன; அச்சிடப் படுகின்றன; ஒலி/ஒளிபரப்பப்படுகின்றன. அத்தனையும் அன்றன்றைக்கு முக்கிய மானவைதான். ஆனால் வரலாறாய் மாறப் போவது எது? மாற்ற வேண்டியது எது? என்பதைத் தொலைநோக்காகக் காண்பது எளிதல்ல. எளிதற்ற அந்த செயலை எளிமை யான நடையில், பாமரர்களும் படித்துணரும் வகையில், நிகழ்வுகளை மனத்திரையில் ஓட விடுவது போன்ற உணர்வுப்பூர்வமான, உணர்ச்சி ததும்பும் எழுத்துக்களால் சுரேஷ்குமார் ஆக்கித் தந்திருக்கும் நூல் “நள்ளிரவில் கலைஞர் கைது - ஒரு நிருபரின் நேரடி சாட்சியம்.” தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் நடந்த அதிமுக ஆட்சியில் 2001 ஜூலை 25ல் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் மாவட்ட சன் டிவி செய்தியாளர் சுரேஷ் கைது, ஜூலை 29ல் இதற்குக் காரணமும் நியாயமும் கேட்க முயன்ற ஊடகவியலாளர்கள் சென்னையில் கைது, ஜூலை 30ல் நள்ளிரவில் கலைஞர் கைது, ஆகஸ்ட் 12ல் திமுக பேரணி, இது பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தி யாளர்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல், இதற்குக் கண்டனம் முழங்கி ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் செய்தியாளர்களின் எழுச்சி மிகு உண்ணாவிரதப் போராட்டம்...... இப்படி அடுக்கடுக்கான சம்பவங்களின் பதிவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கி நம்மை இழுத்துச் செல்கின்றன. ஜனநாயகத்தில் அரசு எனும் தூண் அராஜகத்தில் இறங்கி பழிவாங்க முற்பட்டால் எப்படி இருக்கும் என்பதை உணரச் செய்கிறது இந்நூல்.
கலைஞர் கருணாநிதி முன்னாள் முதலமைச்சர், வயது முதிர்ந்தவர் என்றாலும், முரசொலி மாற னும், டி .ஆர். பாலுவும் மத்திய அமைச்சர் களானாலும் போலீஸ் சட்டை செய்யாது, அது மிரட்டும்; அத்துமீறும்; அடித்துத் துவைக்கும்; மனிதாபிமான மின்றி நடந்துகொள்ளும்; நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காது என்பதற்கெல்லாம் தரவுகளை அப்படியே நூலில் ஆவணப்படுத்தி இருப்பது சிறப்பு; பாராட்டுக்குரியது. தேசிய மனித உரிமை ஆணையம், இந்தியப் பிரஸ் கவுன்சில், நீதிமன்றங்கள், பத்திரிகையாளர் கள், பத்திரிக்கையாளர் அமைப்புகள் தலையீடு வலுவாக இருந்தால் ஆட்சி அதிகாரத்தின் கொடுங்கோல் மாற்றப்படும் என்பதற்கு இந்த நூலில் உள்ள வரலாற்றுப் பதிவுகள் சான்றாக உள்ளன. கவிக்கோ அப்துல் ரகுமான், நீதியரசர் சந்துரு, பத்திரிகையாளர் மணி ஆகியோரின் முன்னு ரைகளும் நூலுக்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக சிறைக் கைதிகளை ரத்த உறவினர்கள் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது என்ற விதிகளுக்குத் தாம் தடையாணை பெற்றதா லேயே மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறையில் கலைஞரைப் பார்க்க முடிந்தது; அவர் கடுமையான அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்ததால் அப்போது ஆளுநராக இருந்த ஃபாத்திமா பீவியின் பதவிக்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடிந்தது என்று கூடுத லாக இரண்டு புதிய தகவல்களை முன்னுரை யின் வழியாக நீதியரசர் சந்துரு தந்துள்ளார்.
“தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவத்திற்கிணங்க காவல்துறை அதிகாரி ஒருவரின் கழிவிரக்க வாக்குமூலம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது காலம் கடந்தது; பயன் விளைக்காதது என்றாலும் இதைப்போல் எத்தனை வாக்குமூலங்கள் எத்தனைபேர் மனங்களில் கிடக்கின்றனவோ யார் அறிவார்? அவற்றில் ஒன்றையேனும் வெளிக்கொண்டு வந்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. மொத்தத்தில், அரசியலில் காழ்ப்புணர்வும் வன்மமும் கலந்துவிட்டால் அது எப்படி வெறியாட்டம் ஆடும் என்பதற்கான வரலாற்றுச் செய்திகளுடன் இந்நூல் வந்துள்ளது. கடந்த கால அரசியல் வரலாற்றின் ஒரு இருண்ட பகுதியை எதிர்காலத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் இந்நூல், அரசியல் நோக்கர்களுக்குப் பெரிதும் பயன்படும். வரலாற்றில் மறக்க முடியாதவற்றைப் பதிவுகளாக்க ஊடகவிய லாளர்களுக்கு ஊக்கமளிக்கும்.
நள்ளிரவில் கலைஞர் கைது - ஒரு நிருபரின் நேரடி சாட்சியம்
வெளியீடு: யாழ்கனி பதிப்பகம்
பக்கம் 242 ரூ. 240/-
தொடர்புக்கு: 98400 78307
மின்னஞ்சல்: yazhkani2016@gmail.com