articles

மேற்கு ஆசியா : பதற்ற நிலைமை அதிகரிப்பு -ச.வீரமணி

இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்திருக் கிறது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் மீது தன்னுடைய டஜன் கணக்கான ஏவுகணைகள் மூலமாக வும், ட்ரோன்கள் மூலமாகவும் பதிலடித் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக ஏப்ரல் 1 அன்று, ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடுத்தது. இதில் ஐஆர்ஜிசி (IRGC) எனப்படும் ஈரானிய புரட்சிகர காவல் படை (Iranian Revolutionary Guard Corps)யைச் சேர்ந்த, இரு உயர்மட்ட ஜெனரல்களையும் சேர்த்து  13 பேர் கொல்லப்பட்டார்கள். இது தூதரக உறவுகள்  தொடர்பான 1961 வியன்னா சிறப்புத் தீர்மானம் மற்றும் 1963 தூதரக வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் தாக்குதல்கள் தொடுக்கக்கூடாது என்கிற 1963 வியன்னா தீர்மானத்திற்கும் எதிரானதாகும். இஸ்ரேலின் செயல் மிகவும் கொந்தளிப்பாகவுள்ள மேற்கு ஆசியாவின் சூழலில் மோதலை அதிகரிப்ப தற்கான ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக மாறியுள் ளது. இப்படியாக இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் ஒரு  ரவுடியைப் போல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

34,000 பாலஸ்தீனர் படுகொலை
இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தம் தொடங்கி ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார் கள். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகப் பெரிய எண்ணிக்கை ஆவர். இஸ்ரேலின் தாக்குதல்கள் காசா பகுதிக்குள் மட்டும் நடைபெறவில்லை; மேற்குக் கரையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர் களும் குறிவைத்துத் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக் கிறார்கள். இப்போது இஸ்ரேல் தன்னுடைய தாக்கு தல்களை சிரியா, லெபனான் மற்றும் ஈரானுக்கும் விரிவுபடுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் பின்புலத்தில்...
அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தனக்கு முழு மையாக ஆதரவு அளித்துவருவதால் தன்னை  எவரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற எண்ணத்தில் இஸ்ரேல் இவ்வாறு ஆடிக்கொண்டி ருக்கிறது. ஸ்டாக்ஃஹோம் சர்வதேச அமைதி ஆய்வு  மையம் (SIPRI-Stockholm International Peace Research Institute) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2019க்கும்  2023க்கும் இடையே, இஸ்ரேல் ராணுவம் தன்னுடைய ராணுவத் தளவாடங்களில் 69 விழுக்காடு அள விற்கு அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்திருக் கிறது. உண்மையில், டமாஸ்கசில் உள்ள ஈரானிய தூதரகத்தைத் தாக்குவதற்கு அமெரிக்க ஆயுதங் களைத்தான் இஸ்ரேல் பயன்படுத்தி இருக்கிறது. இந்தச் செயலானது, அமெரிக்க ஆயுதங்கள் ஏற்று மதிக் கட்டுப்பாடு சட்டத்தினை முற்றிலுமாக மீறிய செய லாகும். இந்தச் சட்டத்தின்படி, இதுபோன்ற அமெரிக்க ஆயுதங்களை நியாயமான தற்காப்புப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் இதனை மீறி இஸ்ரேல் இவ்வாறு செயல்பட்டிருக்கிறது.  

மேலும், இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு ரஷ்யா கொண்டு வந்த முன்மொழிவினை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன. இந்திய மோடி அரசாங்கமும்கூட, இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதற்குப் பதிலாகத் தன்  ‘கவலை’யை மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வாறு இந்நாடுகளின் செயலற்ற தன்மைகள், இஸ்ரேலுக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறது.

ஈரான் மீது தாக்குதல், முதல்முறையல்ல
ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்கி இருப்பதென் பது இது முதன்முறையல்ல. ஈரானுக்குள் ட்ரோன்கள் மூலமாகப் பல முறை தாக்குதல்கள் தொடுத்திருக் கிறது, ஏராளமான படுகொலைகளையும் புரிந்திருக்கி றது; இணையவழி (சைபர்) தாக்குதல்களையும் மேற்கொண்டிருக்கிறது. 2024 ஜனவரியில் ஈரான் நகரத்தின் மீதான வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தி 100க்கும் மேற்பட்டோர் பலியாகக் காரணமானது. ஈரானின் உயர்மட்ட அளவிலான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களைப் படுகொலை செய்தது. இவை அனைத்தையும் அமெரிக்காவின் ஆசிர்வா தத்துடன், ‘ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சி யைத் தடுப்பதற்கான நடவடிக்கை’ என்ற பெயரில் மேற்கொண்டது.

சர்வதேச அணுசக்தி முகமை (IAEA-International Atomic Energy Agency) யின் டைரக்டர்-ஜெனரல் ரஃபேல் கிராசி, ஏப்ரல் 14 அன்று, “ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திட்டம் எதனையும் மேற்கொண்டிருப்ப தாகத் தகவல் எதையும் நாங்கள் பெறவில்லை” என்று கூறியிருக்கிறார். ஆனால் இது குறித்தெல்லாம் இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ அலட்டிக் கொள்ளவில்லை. இவ்விருநாடுகளுக்கும் மேற்கு ஆசியாவில் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு சவாலாக இருக்கின்ற ஈரானைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும்.

நேதன்யாகுவின் அட்டூழியம்
பெஞ்சமின் நேதன்யாகு, வேண்டுமென்றே யுத்தத்தை நீட்டித்துக் கொண்டிருக்கிறார். ‘ஹமாஸை ஒழிப்பதே எங்கள் குறிக்கோள்’ என்று கூறியே பாலஸ்தீனத்தில் இனப்படுகொலைகளைப் புரிந்து வருகிறார். எனினும் ஹமாசை ஒழித்துக்கட்டுவதில் இவர் தோல்வி அடைந்திருக்கிறார். இதுவரை, இஸ்ரேலிய பணயக்கைதிகளைக்கூட இவரால் மீட்க  முடியவில்லை. நெதன்யாகுவின் ஊழல் மற்றும் திறமையற்ற ஆட்சியால் சலிப்படைந்துள்ள இஸ்ரேல் மக்கள் மத்தியில் இது மேலும் கோபத்தை அதிகரித்துள்ளது. நெதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து இஸ்ரேலிய நகரங்களில் போராட்டங் களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். போர் முடிந்து விட்டால் தான் பதவியில் நீடித்திருக்க முடியாது என்பதை அவரும் நன்கு அறிந்திருக்கிறார்.

தீ வைக்கும் ரவுடி
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. அது தன்னை ஒரு ‘தீயணைப்பாளராக’ காட்டிக் கொள்ள விரும்பியபோதிலும், உண்மையில் அது தீ வைத்திடும் ரவுடியின் பாத்திரத்தையே வகித்து வருகிறது.

மக்கள் போராட்டம்
போர் நிறுத்தத்தை உத்தரவாதப்படுத்துவதற்காக தங்கள் நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற  அதன் நட்பு நாடுகளிலும் உள்ள மக்கள் உக்கிர மாகப் போராடிக்  கொண்டிருக்கிறார்கள்.  இந்நாடு கள் இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆயுதங்களையும், நிதி உதவியையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்  என்றும் அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார் கள். ஆனாலும் அதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஏனெனில் மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் மூலமாக தங்கள் செல்வாக்கை செலுத்துவதற்கு அது ஓர் உற்ற நண்பனாக விளங்கும் என்று அவை கருதுகின்றன. எனவேதான் தங்கள் நாடுகளில் தங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தி குறித்தும் அவை கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. எனினும் இந்நாடுகளில் விரைவில் தேர்தல் நடைபெறவிருப்ப தால், ‘இஸ்ரேலைக் கட்டுப்படுத்த முயற்சிகள்’ மேற்கொண்டிருப்பதாக நாடகமாடுகின்றன.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ வின் எதிர்வினை மீண்டும் இந்த போலித்தனமான தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜோர்டான் ஆகியவை இஸ்ரேலுடன் இணைந்து ஈரானிய ஏவுகணைகளை தடுப்பதில் பெரும் பங்கு வகித்தன. இப்பிராந்தியத்தை  விரிவான அளவிலான பெரும் போருக்குள் தள்ளக் கூடிய விதத்தில் மேலும் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று தன் ‘இரும்புக்கவச’ கூட்டாளியான இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஆனால் இதுபோன்ற வெறும் அறிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் இஸ்ரேலை கட்டுப்படுத்திட முடியாது. மக்கள் அளித்திடும் நிர்ப்பந்தம் மட்டுமே இஸ்ரேலின் ஆதரவாளர்களை அதன் ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்ற விரிவாக்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்கும். 

அனைத்து நாடுகளும்   உறவைத் துண்டிக்க வேண்டும்
அனைத்து நாடுகளும் இஸ்ரேலுடனான ராணுவம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இஸ்ரேலிய இனப்படுகொலை போருக்கு காரணமானவர்கள் சர்வதேச நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.  எல்லாவற்றிற்கும் மேலாக, 1967க்கு முந்தைய எல்லைகளைக் கொண்ட பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு  ஜெருசலேம் தலைநகராக அங்கீகரிக்கப்பட வேண்டும். இது உடனடி போர் நிறுத்தம் மற்றும்  இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங் களிலிருந்தும் வெளியேறுதலுடன் தொடங்கிட வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான   இந்தியர் நலன் காக்க...
மேற்கு ஆசியாவில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் போர் தொடருமானால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்திய அரசு இதில் தீவிரமாகத் தலையிட்டு, அவர்களின் நலனைக் காத்திடு வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். இதற்கு,  இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான தற்போதைய  கொள்கையை மாற்றியமைத்திட வேண்டும். இன்றைய பின்னணியில் இந்திய கட்டுமானத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பிக்கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானதாகும். இதனை உடனடியாக நிறுத்திட வேண்டும். இஸ்ரேலின் பிடிவாதப் போக்கை ஒன்றிய  அரசாங்கம் சந்தேகத்திற்கிடமின்றி கண்டித்திட வேண்டும். அதனுடனான அனைத்து ராணுவம் மற்றும்  பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் விலக்கிக்கொள்ள வேண்டும். பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மீண்டும் நிலைநிறுத்திட வேண்டும்.

இதனிடையே, இஸ்ரேல், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதாகக் கூறியிருக்கிறது. ஆனால் இந்தப் பதில் எந்த வடிவத்தை எடுக்கும் என்பது தொடர்பாக எந்த அறிக்கையும் இல்லை. ஈரான், ஏவுகணைத் தாக்குதல் மூலம் இஸ்ரேல் தங்கள் நாட்டின் தூதரகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலளித்துவிட்டோம் என்று கூறியிருக்கிறது. மேலும் இத்துடன் இந்த  விவகாரம் முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியிருக் கிறது. மேலும் தாக்குதல்கள் தொடுப்பதற்கு எதிராகவும் இஸ்ரேலை எச்சரித்திருக்கிறது.

இரு தரப்பினருமே நிதானத்தைக் கடைப்பிடித்திட வேண்டும் என்றும், போர் மூள்வதற்கான போக்கை நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் வேண்டு கோள் விடுத்திருக்கிறது. எனினும் இவற்றில் பெரும்பகுதி, இஸ்ரேல் மற்றும் அதன் பிரதான ஆதரவாளரான அமெரிக்காவையே சார்ந்திருக்கிறது.

ஏப்ரல் 17, 2024
- தமிழில்: ச.வீரமணி

;