articles

புள்ளி விவரம் இனிக்கும்... பிறகு புளிக்கும்! -க.சுவாமிநாதன்

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 59 மாதம் இல்லாத அளவுக்கு குறைவான விகிதத்தை ஜூலை 2024 இல் எட்டி இருக்கிறதே. விலைவாசி கட்டுக்குள் வந்து விட்டதா?

புள்ளி விவரங்கள் பசி ஆற்றுமா? புள்ளி விவரங்கள் நாவில் இனிக்குமா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் “ஆம்” என்பது பதில் என்றால் விலைவாசியும் கட்டுக்குள் வந்து விட்டதா என்ற கேள்விக்கும் பதில் “ஆம்” எனக் கொள்ளலாம். 

அண்டா காகசம்

ஜூன் மாதம் 5.1 % ஆக இருந்த சில்லறை பணவீக்கம் ஜூலையில் 3.54 % ஆக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி சொல்கிற 4 சதவீத கட்டு எல்லைக்குள் வந்து விட்டது! 2019 செப்டம்பருக்கு பின் இவ்வளவு குறை வாக இருப்பது இப்போதுதான்! உணவுப் பொருள் பண வீக்கம் 9.4% சதவீதமாக ஜூனில் இருந்தது. அதுவும் ஜூலையில் 5.4 %  ஆக குறைந்துள்ளது. இது என்ன மேஜிக்! நிர்மலா சீதாராமன் அம்மையார் கைகளில் மந்திரக் கோல் ஏதும் வந்து விட்டதா? அண்டா  காகசம்... அபுகா ஹுகூம்... குறைந்திடு பணவீக்கம் என்று..!

அதெல்லாம் ஒன்றுமில்லை. புள்ளி விவர மாயை அவ்வளவுதான். இந்த ஆண்டு ஜூலை பண வீக்கம் எப்படி கணக்கிடப்படும்? போன ஆண்டு அதே ஜூலை மாதம் என்ன விலைவாசி இருந்ததோ அதை அடிப்ப டையாக கொண்டு உயர்வு கணக்கிடப்படும். போன ஆண்டு ஜூலை மாதம் விலைவாசி பீக்கில் இருந்தால் இந்த ஆண்டு ஜூலை மாத கணக்கு பண வீக்கத்தை குறைத்துக் காண்பிக்கும். ஜூலை 2023 இல் சில்லறை பண வீக்கம் 7.4 % என்ற அளவில் இருந்தது. உணவுப் பொருள் பண வீக்கமோ 11.5 % என்ற உச்சத்தில் இருந்தது. ஆகவே போன ஆண்டு ஜூலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2024 ஜூலை கணக்கில் உயர்வு சதவீதம் குறைவாக உள்ளது. புள்ளி விவரம் எதுக்கலிக்கிறது... அவ்வளவுதான்.

வச்சு செய்யும்

ஆனால் உண்மை என்ன? ஜூன் மாதத்தை விட 1.4 சதவீதம் ஜூலையில் பணவீக்கம் அதிகம். 2.8 சதவீதம் உணவு விலைகள் அதிகம். 

ஆனால் ஜூலை 2024 லிலும் கூட தானிய பண வீக்கம் 14.77 சதவீதம். பருப்பு பண வீக்கம் 8 சதவீதம். மாமிசம், மீன், முட்டை எல்லாம் 6 சதவீதத்திற்கும் அதிகம்.

கொஞ்சம் பொறுங்கள். ரொம்ப கொண்டாடாதீர்கள். ஆகஸ்ட் மாதம் வரை தான் காய்கறி வகையறாக்களில்  “அடிப்படை ஆண்டு தாக்கம்” (Base Effect) சாதகமாக இருக்கும். அதற்கு பிறகு காய்கறி பண வீக்கம் ‘வச்சு செய்ய ஆரம்பிக்கும்’ என்று “இண்டியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச்” நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பராஸ் ஜஸ்ரால் எச்சரிக்கிறார். (இந்து ஆங்கில நாளிதழ் - 13.08.2024 ).

அப்புறம் ஆட்சியாளர்களுக்கு புள்ளி விவரம் புளிக்கலாம்.

-க.சுவாமிநாதன்