articles

img

குடியரசு காக்க களமிறங்குவோம்! - சி.பி.கிருஷ்ணன்

2022 ஜனவரி 26ஆம் நாள் நமது அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 72 ஆண்டுகள் நிறைவடை கின்றன. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டை சுதந்திர, சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியர சாக உருவாக்கி, நம் குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைக்கவும்; சிந்திக்க, வெளிப்படுத்த, நம்பிக்கை கொள்ள, வணங்க சுதந்தி ரம் உறுதி செய்யவும், தகுதி நிலை மற்றும் வாய்ப்பில் சமத்துவம் நிலைநாட்டவும்; தனி ஒருவரின் மாண்புக் கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் சகோதரத்துவத்தை அனைவரி டையே வளர்க்கவும்; திண்ணமாக உறுதி ஏற்று நமக்கு நாமே அரசமைப்புச் சட்டத்தை வழங்கிக் கொள்கி றோம் என்று நமது அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை கூறுகிறது. இவையெல்லாம் இன்று உறுதி செய்யப்பட்டுள் ளதா? சோசலிசப் பாதையில் பயணிக்கிறோமா? நமது நாடு மதச் சார்பற்ற ஜனநாயக குடியரசா? இப்படி பல கேள்விகள் நம் முன்னே எழுகின்றன.

வழி காட்டும் கோட்பாடுகள்

இத்துடன் வழி காட்டும் கோட்பாடுகள் என்பது நமது அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய பகுதியாகும். இவற்றை எந்த நீதிமன்றத்திலும் அமல்படுத்த நிர் பந்திக்க முடியாது; இருப்பினும் சட்டங்கள் இயற்றும் போது இந்த கோட்பாடுகளை கணக்கில் கொள்ள வேண்டியது அரசின் கடமை என்று தெளிவாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமானத்தில் ஏற்றத் தாழ்வு குறைக்கப்பட வேண்டும்; தகுதியில், வசதி வாய்ப்புகளில் ஏற்றத் தாழ்வை போக்கிட முயல வேண்டும்; எல்லா குடி மக்களுக்கும் – ஆண்கள், பெண்களுக்கு சம மாக – வாழ்வதற்கான வழி முறைகளுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்; ஒரு சிலரிடம் சொத்துக்க ளும், உற்பத்தி சாதனங்களும் குவியும் வகையிலும், பெரும்பாலான மக்களின் நலனுக்கு ஊறு விளை விக்கும் வகையிலும் அரசின் பொருளாதார செயல்பாடு அமையக் கூடாது; ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்; ஆண், பெண் தொழிலாளர்களின் ஆரோக்கியமும், சக்தியும் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது; - இப்படி பல கோட்பாடுகள் இதில் இடம் பெற்றுள் ளன. ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது?

பொருளாதார ஏற்றத் தாழ்வு

பொருளாதார ஏற்றத் தாழ்வு முன்னெப்போதையும் விட இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. 1 சதவீதம் பெரும் பணக்காரர்கள் கையில் நாட்டின் மொத்த சொத்தில் 44 சதவீதம் உள்ளது. மாறாக கீழ் நிலையில் உள்ள 70 சதவீதம் மக்களிடம் அதாவது 98 கோடி மக்களிடம் 10 சதவீதம் சொத்து மட்டுமே உள்ளது. 100 பெரும் பணக்காரர்களின் சொத்து இந்த ஆண்டு 57.3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே சமயம் 4.6 கோடி இந்தியர்கள் கொடிய வறுமை யில் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மதச்சார்பின்மைக்கு ஆபத்து

தர்ம சன்சத் என்ற பெயரில் ஹரித்துவாரில் 2021 டிசம்பர் 17 முதல் 19 வரை இந்து மத சாமியார்களும், ஆளும் பாஜக பொறுப்பாளர்களும்  வெறுப்புப் பேச்சை பரப்பினார்கள். இனப் படுகொலைக்கு அறைகூவல் விடுத்தார்கள். கொலை செய்ய சபதமேற்றார்கள். ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் யாரும் இதை கண்டிக்கவில்லை. உத்தரகண்ட் அரசு மிகுந்த அழுத்தத்திற்கு பிறகு மெதுவாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முற்பட்டுள்ளது. அதுவும் சில பேர் மீது மட்டும். மதச்சார்பற்ற குடியரசை சீர்குலைக்க அனைத்து நடவடிக்கைகளும் ஒன்றிய ஆட்சியாளர்க ளின் ஆதரவுடன் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனநாயகம் காற்றில் பறக்கிறது

ஜனநாயகம் காற்றில் பறக்கிறது. மனித உரிமை கள் மீறப்படுகின்றன. தேர்தலில் பணம் ஆறாக ஓடு கிறது. அரசியல் வியாபாரமாகிறது. தேர்தலுக்கு செல வழித்த பணத்தை விட பல மடங்கு சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் செயல்படுகின்றனர். இது ஊழ லுக்கு வழி வகுக்கிறது. தனி நபர் உரிமைகள், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் காலில் போட்டு மிதிக்கப் படுகிறது. ஒன்றிய அரசின் கொள்கைகளை, நட வடிக்கைகளை விமர்சனம் செய்யும் ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றன. விலைக்கு வாங்கப்படுகின்றன.

வழி காட்டும் கோட்பாடுகளுக்கு நேரெதிரான பாதையில்...

பொதுத்துறைகள் விற்கப்படுவதன் மூலம் ஒரு புறம் அடிப்படை சமூக பாதுகாப்புகளுடன் கூடிய கண்ணி யமான வேலையும், சமூக நீதியும் பறி போகின்றன. மறுபுறம் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலை யில் உத்தரவாதமான சேவை மறுக்கப்படுகின்றது. தனி யார் முதலாளிகளின் லாப வேட்டைக்கு சாமானிய மக்கள் இரையாகின்றனர். குறைந்த பட்ச கூலி உத்தரவாத சட்டம் பெரும்பா லும் அமலாகவில்லை. ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் இன்னமும் ஏராள மான முறைசாரா துறைகளில் எட்டாக் கனியாகவே உள்ளது. குழந்தை உழைப்பு முழுமையாக தொடர்கிறது. தொழிலாளர் சட்டங்களை வெறும் 4 தொகுப்பு களாக மாற்றி, இருக்கின்ற உரிமைகளையும் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது ஒன்றிய பாஜக அரசு. இத னால் தொழிலாளர்கள் மேலும் கடுமையாக சுரண்டப் படுவார்கள். நிரந்தர வேலையெல்லாம் ஒப்பந்த வேலை யாகவும், பயிற்சி வேலையாகவும், குறிப்பிட்ட கால வேலையாகவும் மாற்றப்படுகின்றன. தொழிலாளர்க ளுக்கு அடிப்படை உரிமையான சங்கம் சேரும் உரிமை கூட மறுக்கப்படுகின்றது. அவர்களின் ஆரோக்கியம் மிகப் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது. 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளை ஓட்டாண்டி யாக்கி நிலக் குவியலுக்கும், விவசாயத்தை கார்ப்ப ரேட் மயமாக்குவதற்குமே பயன்பட்டிருக்கும். அவை விவசாயிகளின் கடும் போராட்டத்தினால் கை விடப்பட்டன. ஆனாலும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட மற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் குறித்த காலத்தில் தீர்க்கப்படாததால் விவசாயிகள் 2022 ஜனவரி 31 ஆம் நாளை ‘துரோக தினமாக’ அறிவித்து மீண்டும் போராடப் போகிறார்கள். ஆக வழி காட்டும் கோட்பாடுகளுக்கு நேரெதிரான பாதை யில் தான் ஒன்றிய அரசு பயணித்துக் கொண்டிருக்கி றது. பல மாநில அரசுகளும் கூட இந்தப் பாதையி லேயே பயணிக்கின்றன.

இடதுசாரிகள் மட்டுமே உண்மையான மாற்று

இடதுசாரி கட்சிகள் மட்டுமே இதற்கு உண்மை யான மாற்றாக, அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் ஆட்சி நடத்துவதுடன், அதற்காக எல்லா வகையிலான போராட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதிதான் 10 மத்திய தொழிற்சங்கங்களும், 70 அகில இந்திய சம்மேள னங்களும் இணைந்து நடத்தும் 2022 பிப்ரவரி 23-24  நாடு தழுவிய வேலை நிறுத்தம்.  இந்த வேலை நிறுத் தத்திலும், தொடர்ந்த இத்தகைய இயக்கங்களிலும் பெருவாரியான மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வ தன் மூலமாக மட்டுமே நமது அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க முடியும். அதன் உண்மையான அர்த்தத்தில் அதை அமலாக்க முடியும்.



 

;