articles

img

"அவான்டே...(முன்னேறு)" சுரண்டலுக்கு எதிராகப் போராட அழைப்பு

போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்திர திருவிழாவான "அவான்டே" பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நடப்பாண்டிலும் நடந்துள்ளது.

அவான்டே என்பதற்கு "முன்னேறு" என்று பொருளாகும். போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளேட்டிற்கும் இந்தப் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது. அதே பெயரில் 1976 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் கலாச்சாரத் திருவிழாவை நடத்தி வருகிறார்கள். கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களைத் தாண்டி பலரும் இந்தத் திருவிழாவில் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டிலும் போர்ச்சுகலின் செய்க்சல் நகருக்கு அருகில் உள்ள அமோரா என்ற இடத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையில் திருவிழா நடந்துள்ளது.

புத்தகக் கண்காட்சி, இசை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், திரைப்படக் காட்சிகள், கருத்தரங்கங்கள் மற்றும் கலந்துரையாடர்கள் என்று பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கலந்துரையாடல்களில் அரசியல், கலாச்சாரம், இளைஞர்களின் பிரச்சனைகள், பெண்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள், பாசிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்கள், அமைதி, உள்ளூர் மேம்பாடு மற்றும் இருப்பிடத்திற்கான உரிமை, கழிவு மேலாண்மை, தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் தற்போது எழுந்துள்ள வாழ்வாதார நெருக்ககடி ஆகியவை இடம் பெற்றன.

மைதானமே சொந்தமானது

இந்தத் திருவிழாவை நடத்துவதற்குத் தனியாக நிதி வசூல் செய்யும் பணி நடக்கிறது. இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்து, அதைப் பார்க்க வருபவர்களிடம் வசூலிக்கிறார்கள். செய்க்சல் நகருக்கு அருகில் உள்ள சிறிய நகரமான அமோராவில் தொடர்ந்து இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். மக்களிடம் வசூலிக்கும் நிதியைக் கொண்டு திருவிழாவை நடத்துவதற்கான மைதானத்தையே விலைக்கு வாங்கி விட்டார்கள். அந்த மைதானத்தில்தான் ஒவ்வொரு ஆண்டும் அவான்டே திருவிழா நடத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் இந்த மைதானத்தில் இருக்க முடியும். ஒவ்வொரு திருவிழாவிலும் மைதானம் நிரம்பி வழிகிறது.

ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பிற நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும் திருவிழா அரங்குகளில் புத்தக விற்பனை உள்ளிட்டவற்றிற்கு ஏற்பாடு செய்திருந்தன. அவான்டே திருவிழாவின் நிறைவுப் பகுதியாக மிகப்பெரிய பேரணி நடந்தது. செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற இந்தப் பேரணியின் முடிவில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெனோனிமோ டி சௌசா உள்ளிட்ட பல தலைவர்கள் உரையாற்றினர்.

அப்போது பேசிய டி சௌசா, "மேம்பாடடைந்த வாழ்விற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்குமான தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மிகச்சரியான அடையாளத்தை எங்கள் கட்சி கொண்டிருக்கிறது. அதனால்தான் இன்றும் இயங்கி வருகிறோம். எங்கள் பலமும், தவிர்க்க முடியாத எங்கள் பாத்திரமும் நாங்கள் கொண்டுள்ள கோட்பாட்டின் அடிப்படையில் உருவானவையாகும். நாங்கள் தொழிலாளர்களுடனும், பொது மக்களோடும் எப்போதும் இருப்போம். தேசிய இறையாண்மை மற்றும் விடுதலையோடு இணைந்து நிற்போம். சர்வதேசக் கோட்பாடுகளை எப்போதும் உயர்த்திப் பிடிப்போம். நாங்கள் இப்போதும், எப்போதும் போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சியாக  இருப்போம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "மக்கள் போரை விரும்பவில்லை. அமைதியையே விரும்புகிறார்கள். மக்களின் உரிமைகளுக்கு அருகில்தான் போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கும். சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடுவதன் மூலமாகத்தான் நாம் அமைதியையும், நீதியையும் அடைய முடியும். தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சூழல் கடுமையானதாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளது. பெரிய பொருளாதார வல்லமை கொண்டவர்கள் ஊகங்கள், சுரண்டல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாகப் பறித்துக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதைக் கண்டும் காணாமலும நகரும் அரசை நாம் கொண்டுள்ளோம். அதில் இருந்து விடுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.

;