articles

img

அம்பலமாகி நிற்கும் பாஜக-திரிணாமுல் கூட்டு

"வேலை கொடு.." என்று எழுதப்பட்ட பதாகையோடு, நான்கு பேர் திடீரென்று எழுந்து முழக்கமிட்டபோது திரட்டப்பட்டிருந்த கூட்டம் அதிர்ந்தே போனது. மேற்கு வங்கத்தில் மாநில அரசு ஊழியர் ஆவதற்கான தேர்வில் தகுதி பெற்றும், பணி நியமனம் கிடைக்காதவர்களில் இந்த நான்கு பேரும் அடங்குவர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கூடுதல் அதிர்ச்சி. தன் முகத்திற்கு எதிரே இப்படியெல்லாம் ஜனநாயகக் குரல்கள் எழுவதை எப்போதுமே விரும்பாத அவர், அதே கூட்டத்திலேயே இவர்களுக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு மேலும் அம்பலமானார்.

"நான் இவர்களை நியமிக்கவே விரும்புகிறேன். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சாரயாவும்தான் நீதிமன்றத்தை நாடி முட்டுக்கட்டை போடுகிறார்கள். அவர்களுக்கு முன்னால் போய் முழங்குங்கள்" என்றார். தகுதி பெற்றும், வேலை கிடைக்காதவர்கள்தான் வழக்கு போட்டிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் சார்பில்தான் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா வாதாடிக் கொண்டிருக்கிறார் என்பதையும் வசதியாக மறந்துவிட்டார்.

கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதால்தான் தகுதியானவர்களுக்கு வேலையைத் தரவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தகுதி பெற்ற தேர்வர்களின் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக, நடிகையும், அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவருமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து கோடி, கோடியாகப் பணக்கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது பணி நியமனத்திற்காக பெறப்பட்ட லஞ்சப்பணம் என்று கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் போராட்டங்களை நடத்தியுள்ளன. ரயில்களில் ஏறி, பயணிகள் மத்தியில் சோதனை, பணம் சிக்கியது மற்றும் பார்த்தா சட்டர்ஜி கைது ஆகியவற்றை அறிவிக்கும் வித்தியாசமான போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் மேற்கொண்டது.

அண்மையில் சில விருதுகளை மேற்கு வங்க அரசு அறிவித்தது. அந்த விருதுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி போன்றவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக இரட்டை வேடம்

பணம் கைப்பற்றப்பட்டவுடன், திடீரென்று பாஜக தலைவர்கள் புதுதில்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்கள். இந்த பணம் கைப்பற்றப்பட்டதற்கு அமலாக்கத்துறைதான் காரணம் என்றுகூறி தட்டிக் கொடுத்துக் கொள்கிறார்கள். மேற்கு வங்கத்தில் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவிக்கிறார்கள். ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று, நேற்று தங்கள் போராட்டங்களை நடத்தவில்லை. ஆனால், பணம் கைப்பற்றப்பட்டவுடன் திடீரென்று களத்தில் பாஜகவினர் குதிக்கிறார்கள்.

எந்தவித  பங்களிப்பும் செலுத்ததாத பாஜக, அரசியல் ரீதியான லாபத்தை எடுக்கப் பார்க்கிறது என்று தேர்வர்களின் வழக்கறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா கூறியுள்ளார். இது பற்றி மேலும் பேசிய அவர், பாஜகவுக்கும், திரிணாமுலுக்கும் இடையில் புரிதல் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதனால்தான் நாரதா மற்றும் சாரதா விவகாரங்களில் எந்தவித நடவடிக்கையையும் மத்திய புலனாய்வுத்துறை எடுக்கவில்லை.

ஆனால், இந்த முறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான காரணம் பாஜக அல்ல. வழக்கு போட்டிருப்பது பாதிக்கப்பட்ட தேர்வர்கள் மற்றும் அதில் நீதிமன்றத்திலும், வீதிகளிலும போராடிக் கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும். இந்த அரசு ஊழியர் தேர்வாணைய ஊழலை கொல்கத்தா நீதிமன்றம் கண்காணிப்பதுதான் இந்த சோதனைகளும், பணம் கைப்பற்றப்பட்டிருப்பதற்கும் காரணமாகும் என்று குறிப்பிட்டார். ஒருவேளை இந்த வழக்கையும் சிபிஐ நடத்தியிருந்தால் பாஜக தலையீட்டால், இவ்வளவு முன்னேற்றம் கூட இருந்திருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூறுகின்றனர்.

;