articles

img

மோடி காண்பாரா, பிரிட்டனின் கொள்கை மாற்றத்தை?

1994-லேயே தனியார்மயமாக்கப்பட்ட பிரிட்டிஷ் ரயில்வே இப்போது “கிரேட் பிரிட்டிஷ் ரயில்வே” என்கிற பெயரில் முழுமையான அரசு உடைமையிலும் கட்டுப்பாட்டிலும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 1994 வரை அரசு உடைமையாக இருந்த பிரிட்டிஷ் ரயில்வே 25 ரயில் ஆப்பரேட்டிங் கம்பெனிகள், ரயில் டிராக், சிக்னல்கள்,  ரயில்வே நிலையங்கள் ஆகியவற்றுக்குத் தனி கம்பெனிகள் என்றவாறு பிரித்து அவை தனியார்மயம் ஆக்கப்பட்டிருந்தன. சில ஆண்டுகளிலேயே ரயில்களின் நேரம் முறை தவறிப் போனதுடன் விபத்துகளும் தினசரி நிகழ்வுகளாகிவிட்டன. இதைத் தொடர்ந்து ரயில்வே டிராக், சிக்னல்கள், ரயில்வே நிலையங்கள் முதலான அடிப்படைச் சேவைகளின் உடைமை, பராமரிப்பு முதலானவையெல்லாம் அரசு உருவாக்கிய நெட்ஒர்க் ரயிலுக்குக் கைமாற்ற வேண்டி வந்தது.

 தனியார் ரயில் ஆப்பரேட்டிங் கம்பெனிகளோ வருமானம்அதிகமுள்ள  நேரம் முறையிலும்  ரூட்டுகளிலும் மட்டுமே ரயில்சர்வீஸ்களை வரைமுறைப்படுத்தின. மற்ற சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டன. பல மிகமுக்கியமான ரயில் பாதைகளும் மூடப்பட்டன. கூட்டம் நெரிசலான பயணிகள் ரயில்களும், ரத்து செய்யப்பட்ட சர்வீஸ்களும், அதிக கட்டணங்களுமாக ஆனதுபிரிட்டிஷ் ரயில்வே. ரயில் பயணம் என்பது மக்களுக்கு மிகக் கஷ்டமாக ஆனது.லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ரயில் ஆப்பரேட்டிங் கம்பெனிகள் கொடிய கொரோனா காலத்தில் ரயில் சர்வீஸ்களை நிறுத்திவைத்தன. ரயில்வேயின் உபயோகம் 100 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாகக் குறைந்தது. இதைத் தொடர்ந்து ரயில் சர்வீஸ்களை அரசுக் கம்பெனிகள் மேற்கொண்டதுடன் 12 பில்லியன் பவுண்ட்ஸ் மானியம் வழங்கி ரயில் சர்வீஸ்களை மீட்டெடுத்து நிலைநிறுத்தின. அத்துடன், ரயில்வே மறுசீரமைக்கப்பட்டது பற்றி ஆராய்ந்து அறிக்கை வழங்குவதற்கு “வில்லஸ்ஷெய்ம் கமிட்டி”யை நியமித்தது. இந்தக் கமிட்டியின் பரிந்துரைகளை அங்கீகரித்துத்தான் கிரேட் பிரிட்டிஷ் ரயில்வேயை அரசு உருவாக்கியது. அதுமட்டுமல்ல, தனியார்மயம் மூலம் மூடப்பட்ட இருப்புப் பாதைகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதுடன் புதிய இருப்புப் பாதைகளை நவீனப்படுத்துவதற்குப் பெரும் முதலீடுசெய்யவும் பிரிட்டிஷ் அரசு தீர்மானித்தது.

பழைய ரயில் போல பலவீனமான வெடிப்பு
ஏற்கெனவே ஸ்காட்லாண்டு, வேல்ஸ் மாகாணங்கள் தங்கள் வரம்புக்குள் உள்ள ரயில்களை ஏற்றெடுத்திருந்தன. பிரிட்டிஷ் ரயில்வேக்குச் சமமாக ஏற்கெனவே தனியார்மயம் ஆக்கிய அர்ஜென்டீனா ரயில்வேயும் பெரும் சீர்குலைவைத் தொடர்ந்து அதை அரசு மேற்கொண்டதுடன், மீண்டும் போக்குவரத்துக்குத் தகுதி உள்ளதாக ஆக்குவதற்குப் பெருமளவில் முதலீடும் செய்தது. 2020-ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா நினைவேந்தல்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியது  இங்குக் குறிப்பிடத்தக்க முக்கியமானதாகும்: “கோவிட் கொள்ளை நோய்க் காலம் ஒரு பழைய ரயில் போல நமது பலவீனமான சமூக அமைப்பின் வெடிப்புகளைத் தெளிவாகக் காட்டுகிறது. எல்லோருக்கும் ஆரோக்கியப் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து, அடிப்படையான வருமானம் முதலான ஒரு புதியதலைமுறைச் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றுதவிர்க்க முடியாதனவாக ஆகியிருக்கின்றன. வளர்ந்துவருகிற அசமத்துவம் கிட்டத்தட்ட வெடிக்கும் நிலையை அடைந்திருக்கிறது. உலகில் மிகப்பெரும் 26 முதலாளிகளின் சொத்து மதிப்பு உலகின் 50 சதவீதத்தினரின் மொத்த சொத்து மதிப்புக்குச் சமமாக உள்ளது.” என்றார்.

போரிஸ் ஜான்சன் கற்றுக்கொண்டது...
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதும் நடைபெற்ற முதலாவது பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசியதும் இதற்கு மாறுபட்டதல்ல. “நான் ஒரு இடதுசாரியல்ல...” –என்று சொல்லிக் கொண்டு அவர் கூறினார்: “ சுகாதாரம், போக்குவரத்துத் துறைகள் உள்ளிட்ட சேவைத்துறைகள் பொதுத்துறையில் இருக்க வேண்டும் என்பதை இந்த கோவிட் காலம் எனக்குக் கற்றுத் தந்தது.”-இது அவரிடமிருந்து திடீரென வெளிப்பட்டதல்ல என்பதை பிரிட்டன் சம்பவப் போக்குகளைக் கவனித்துவந்த எவரும் புரிந்து கொள்வார்கள்.பிரிட்டிஷ் ரயில்வேயை மீண்டும் தேசவுடைமை ஆக்கவேண்டும் என்பது கடந்த இரண்டு தேர்தல்களில் அந்நாட்டுதொழிற்கட்சியின் (லேபர் பார்ட்டியின்) முக்கிய தேர்தல் முழக்கங்களில் ஒன்றாக இருந்தது. இதற்குப் பொதுசமூகத்தில் விரிவான நல்ல ஆதரவும் கிடைத்தது. அதுமட்டுமல்ல, 1989-லேயே நடைமுறைப்படுத்திய நீர்விநியோகத் தனியார்மயம், ப்ரொபேஷன் சர்வீஸ், குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள், நர்சரிகள், லண்டன் அண்டர் கிரவுண்ட் ரயில்வே,பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் (1981) ஆகியவை தனியார்மயம் ஆகியவையெல்லாம் அரசுக்குப் பெரும் பொருளாதார இழப்பையும், சேவைகள் முழுவதற்கும் சீர்குலைவையும் உண்டுபண்ணின. இதனால் சமூக ரீதியில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது. இது சம்பந்தமான ஆய்வு அறிக்கைகள்இன்று பிரிட்டிஷ் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளன.

நவீன தாராளமயக் கொள்கையின் சாரம் பொதுச்சேவைகளையும், பொதுச்சொத்துக்களையும் தனியார்மயம் ஆக்குவதுதானே? அத்தகைய கொள்கைகளின் முக்கிய சிற்பியாகிய மார்க்கரெட் தாட்சர் சொல்லிக் கொண்டது போல  பொதுச்சொத்துக்கள் பெரும் செல்வந்தர்களுக்கும், அதிகாரமையங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கும் கைமாற்றம் செய்யப்படுவதாக இருந்தது. பொதுத்துறை விற்பனையின் ஆரம்பக் கட்டத்தில் பங்கு உடைமையாளராகிய தொழிலாளர்கள் உடனடியாக அவற்றை விற்றுக் கைவிட்டனர். அரசு எல்லா துறைகளிலிருந்தும் வெளியேற வேண்டுமென்றும், பணக்காரர்களின் மீதான வரியை வேண்டாம் என முழு சுதந்திரமாக வர்த்தகச் சக்திகளைக் கட்டவிழ்த்துவிட வேண்டுமென்றும் நவீன சுதந்திரவாதப் பிரமுகர்கள் உரக்கக் கூறினார்கள். ஆனால், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனோ கார்ப்பரேட்டுகளுக்கு அதிக வரி விதிக்கவும், (3.6 டிரில்லியன் டாலர்) 6 டிரில்லியன் டாலராக அரசாங்கத்தின் செலவை அதிகரிக்க
வும்  முடிவு செய்தார். 

அசையாத பாறையா?
ஆனால் கொரோனா காலத்தை ஒரு பொன்னான சந்தர்ப்பமாகக் கண்டு, “இப்போது இல்லையென்றால் இனிஒருபோதும் இல்லை” என்று கட்டவிழ்த்துவிட்டு தேசத்துச்செல்வம் முழுவதையும் ஒருபிடி கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கைமாறுவதற்கு அவசரம் காட்டுகிறார் மோடி.கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு ஒரு பொருளாதார உதவியும் வழங்கவில்லை.  ஆனால், நவரத்னக் கம்பெனிகளாகிய பி.பி.ஸி.எல்., ஸ்ட்டீல்அத்தாரிட்டி, பி.இ.எம்.எல்., லைஃப் இன்சூரன்ஸ், வங்கிகள்முதலானவற்றையெல்லாம் விற்றுவிடுகிற அவசரத்தில் மோடி அரசு உள்ளது. இந்திய மக்களின் பாரம்பரியச் சொத்தாகிய ரயில்வேயைத் துண்டு  துண்டாக ஆக்கி அவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ரயில்கள், கோச் பாக்டரிகள்,என்ஜின் நிர்மாண கூடங்கள், பணிமனைகள், ரயில்வே நிலையங்கள், ரயில்வே நிலம், குடியிருப்புகள், விளையாட்டுத்திடல் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரயில்வேயின்செயல்திறனுக்கு  ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியமானது என்பதை பிரிட்டிஷ் மற்றும் அர்ஜென்டினாவின் அனுபவங்கள் உணர்த்தும்போது இங்கே நமது ஒன்றிய அரசுஇந்த முறையில் ‘முன்னோக்கி’ச் செல்லுவது துரதிருஷ்டமானது. 

கொரோனா கொள்ளை நோய் தந்த அனுபவங்களை உள்வாங்கி, தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு உலகமெங்கும் இடது-வலது வேறுபாடு இல்லாமல் ஆட்சியாளர்கள் ஒன்றுபட்டுச் செயல்படும்போது மோடி அரசுக்குத் தனது அசையாத பாறைக் கொள்கையை எவ்வாறு- எத்தனை நாட்கள் முன்னெடுத்துச் செல்ல முடியும்? இனியாவது ஒரு மறுசிந்தனைக்கு மோடி அரசு முன்வந்தால் நல்லது. இல்லையெனில், தொழிற்சங்கம்- தொழிலாளர் - விவசாயிகள் சங்கங்களின் ஒற்றுமை மேடை நடத்திவருகிற போராட்டங்கள் மேலும் தீவிரமாகும். ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகளைத் தனியார்மயம் ஆக்கும் நடவடிக்கைக்கு எதிராகவும், தொழிலாளர் சட்டங்களுக்கும், விவசாயச் சட்டங்களுக்கும் எதிராகவும், பொருளாதார உதவிக்காகவும், இலவச ரேசன் பொருள்களுக்காகவுமான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். வேறு வழியில்லை. அரசியல் மற்றும் அமைப்பு வேறுபாடுகள் இல்லாமல் தொழிலாளர்களும் விவசாயிகளும் இதர உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டு அணிவகுக்கும்போது வெற்றி மிக நிச்சயம்!

கட்டுரையாளர் : ஆர்.ஜி.பிள்ளை

நன்றி: தேசாபிமானி,மலையாள நாளிதழ் (14.6.2021), 

தமிழில்: தி.வரதராசன்