articles

img

தலை சுற்ற வைக்கும் டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை ஒளிந்திருக்கும் மேலாதிக்க சூட்சுமம் - க.சுவாமிநாதன்

தலை சுற்ற வைக்கும் டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை ஒளிந்திருக்கும் மேலாதிக்க சூட்சுமம் - க.சுவாமிநாதன்

டொனால்டு டிரம்ப் தற்போது எடுக்கும் அயலுறவுக் கொள்கை முடிவு கள் அரசியல் விமர்சகர்களைக் கூட தலை சுற்ற வைத்துள்ளது. நாயகன் படத்தில் வந்த வசனம் மாதிரி “நீங்கள் நல்லவரா, கெட்ட வரா?” என்று கூட சிலரை குழம்ப வைக்கிறது. உக்ரைன் பிரச்சனையில்  சமாதான தூதராக காட்சி யளிக்கிறார். “காசா” பிரச்சனையில் இன அழிப்பைப் பேசுகிறார். ஆகவே உலகம் மீதான இவரின் கொள்கை களின் தாக்கம் நேர்மறையானதாக இருக்குமா? எதிர்மறையானதாக இருக்குமா? என்று விமர்ச கர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் இந்த குழப்பம் டிரம்ப்பை பற்றி புரிந்து கொள்ளாததால் அல்ல. ஏகாதிபத்திய செயல்பாடுகள் குறித்த ஆழமான புரி தலை உள்வாங்காததால் ஏற்படுகிற தடுமாற்றமே யாகும்.

முட்டுச்சந்தில் முழிப்பதே காரணம் '

அமெரிக்கா தலைமையிலான மேலை ஏகாதிபத்தி யம் தன்னைத்தானே ஒரு முட்டுச் சந்துக்குள் கொண்டு  போய் நிறுத்திக் கொண்டு விட்டது என்பதே டிரம்ப்  நடவடிக்கைகளின் பின்புலம். தற்போது அதன் முன்னால் இருக்கும் தெரிவுகள் இரண்டே இரண்டு. ஒன்று, உக்ரைன் போரை அடுத்த கட்டத்திற்கு தீவிரப்படுத்துவது. இது அணு ஆயுத மோதலுக்கு கூட கொண்டு போய் சேர்க்கும். இரண்டாவது, ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை படிப்படியாக அரிக்கச் செய்வதாகும்.  இத்தகைய தீராச்சிக்கலில் இருந்து ஏகாதிபத்திய முகாமை விடுவிப்பதே டிரம்ப் நடவடிக்கைகளின் நோக்கம்.  ஆகவே டிரம்ப் விரும்புவது சமாதானமா? போரா? - என்பதல்ல பிரச்சனை. அவர் ஐரோப்பிய நலன்களை மனதில் வைத்திருக்கிறாரா இல்லையா என்பதுமல்ல பிரச்சனை. ஏகாதிபத்தியத்தை இத்தகைய சுழலுக்குள் இருந்து மீட்பதற்கான உத்தியை அவர் கையாளுகிறாரா என்பதுதான்.  

பொய்யாகிப் போன கணக்குகள்

ஏகாதிபத்திய முகாமை இந்த சுழலுக்குள் இருந்து மீட்பதற்கு டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு கையில் கம்பு... இன்னொரு கையில் கேரட்...  என்ற வகையிலானது ஆகும். உக்ரைன் போர் மூல மாக ரஷ்யாவை சரணாகதி அடைய வைக்கலாம் என்ற ஏகாதிபத்திய முகாமின் மதிப்பீடு பொய்யாகிவிட்டது. இந்த போரில் உக்ரைன் தனது தளங்களை இழந்து வருகிறது. பொருளாதாரத் தடைகள் மூலமாக ரஷ்ய கரன்சியான “ரூபிள் தூள் தூளாகும்” (Reduce the Rouble to Rubble) என்ற கணக்கும் எதிர் விளைவு களையே தந்துள்ளது. ஆரம்பத்தில் ரூபிள் மதிப்பு சற்று வீழ்ந்தது. ஆனால் பின்னர் மீண்டு ரூபிள் மதிப்பு பொருளாதாரத் தடைக்கு முன்பு இருந்த டாலர் சமன்பாட்டைக் கூட விஞ்சிவிட்டது.  

டாலர் சார்புக்கு சவால்

ஏகாதிபத்தியத்தின் மதிப்பீடுகள் பொய்யானது மட்டுமின்றி, எதிர் விளைவாக டாலர் அல்லாத பரி வர்த்தனை நோக்கி உலக நாடுகள் முன்னேறத் துவங்கியது முக்கியமான நிகழ்வாகும். ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு, டாலர் அல்லாத பரிவர்த்தனை நோக்கிய முனைப்பை முடுக்கி விட்டது. ஏகாதிபத்தியத்தின் தன்னிச்சை யான பொருளாதாரத் தடைகள், சிறிய நாடுகளை நோக்கி ஏவி விடப்பட்ட போது அவற்றின் தாக்கம் வெற்றிகரமாக இருந்தது. ஆனால் நிறைய நாடுகள் மீது தடைகள் விரிவானதும், அதுவும் பெரிய நாடுகள் மீது ஏவப்படத் துவங்கிய போதும் அதன் தாக்கங்கள் வலுவிழந்து போயின. வலுவான எதிர்வினைகளை சந்திக்க வேண்டியும் நேரிட்டது. அது மட்டுமல்ல, ஏகாதிபத்திய பொருளாதார மேலாதிக்க ஏற்பாட்டிற்கு எதிரான நாடுகளின் கூட்டணிகளும் (Opposition blocs) உருவாகத் துவங்கின. இந்தக் கூட்டணிக்குள் பொருளாதாரத் தடை விதிக்கப்படாத நாடுகளும் கூட ஈர்க்கப்பட்டன என்பதும்  முக்கியமானது. கம்பு சுத்தும் டிரம்ப் இத்தகைய சூழலில்தான் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கம்பும் - கேரட்டுமான அவரது இரட்டை அணுகுமுறையில் அவர் சுற்றும் கம்பு உல கறிந்தது. டாலர் பரிவர்த்தனையை உலக வர்த்த கத்தில் தவிர்க்க முனையும் நாடுகள் மீது கூடுதலான இறக்குமதி வரிகளை விதிப்பதாக காலக்கெடுக்களை நிர்ணயித்து மிரட்டி வருகிறார். இந்த அப்பட்டமான ஏகாதிபத்திய நடவடிக்கை, முதலாளித்துவ விளை யாட்டின் அனைத்து விதிகளையும் மீறியதாகும். வர்த்தகக் கூட்டாளிகள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் எந்தக் கரன்சியையும் ஒரு நாடு பயன்படுத்திக் கொள்ளலாம்; அதுபோல தனது செல்வ இருப்பை தான் விரும்பும் எந்த கரன்சியிலும் வைத்துக் கொள்ள லாம் என்பது முதலாளித்துவ “நெறி” ஆகும். ஆனால் இந்த நெறியை அப்பட்டமாக டிரம்ப் மீறுவது அராஜக மாக பிற நாடுகளின் கைகளை முறுக்குவதாகும். எந்த சர்வதேச ஒழுங்கும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியாத அடாவடியாகும். ஆனால் இவற்றை யெல்லாம் மீறுவதில் டிரம்புக்கு எந்தவித தயக்க மும் இல்லை. பொருளாதார மிரட்டல்களை அப்பட்ட மாக, அராஜகமாகத் தொடுக்கிறார்.

 கேரட் இன்னொரு கையில்...

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்திருப்பது கம்பு - கேரட் அணுகுமுறையில் இரண்டாம் வகையை சேர்ந்தது. அமெரிக்காவுக்கும் மேலை ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக ஒரு மாற்றுக் கூட்டணி உருவாவதைத் தடுக்கவும், ரஷ்யாவை அத்தகைய மாற்றுக் கூட்டணியில் இருந்து விலக்கி வைக்கவுமே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் உத்தியை அமெரிக்கா மேற்கொள்கிறது. இதற்காக ரஷ்யாவுக்கு பாதகம் இல்லாத உடன்பாட்டை உக்ரைன் பிரச்சனையில் அது உருவாக்க வேண்டி இருக்கிறது. இதன் மூலம் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை நீர்க்கச் செய்யும் முனைப்புகளை எதிர்கொள்ள முடியுமென்பது அதன் கணக்கு.  

மழையும் மேகமும் போல...

உக்ரைன் போர் முடிவுக்கு வருவதை எல்லோரும் வரவேற்க வேண்டும். ஆனால் இதை சமாதா னத்திற்கான அமெரிக்காவின் விருப்பம் என்று கருதுவ தோ, ஐரோப்பிய பாதுகாப்பு கவலைகளை அமெ ரிக்கா அலட்சியப்படுத்துகிறது என்று மதிப்பீடு செய்வ தோ முற்றிலும் தவறானது. டிரம்ப் செய்வது சமாதா னத்திற்கான முயற்சி அல்ல. அப்படி இருப்பின் காசா மீதான அவரின் குரூரம் இப்படி வெளிப்படாது. முதலாளித்து வம் இயல்பாகவே சமாதானத்திற்கு எதிரானது.  பிரான்ஸ் சோசலிஸ்ட் ஜீன் ஜாரஸ்-ன் பிரபலமான மேற்கோள் இது: “மேகம் மழையை தனக்குள்ளேயே வைத்தி ருப்பது போல, முதலாளித்துவம் போரை தனக்குள் ளேயே வைத்திருக்கிறது”.  ஆகவே டிரம்ப்பின் ஆசை சமாதானத்திற்கானது அல்ல, அது ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான சூழலை சிக்கல்களுக்கு நடுவில் தகவமைப்பதே ஆகும். “ஐரோப்பாவின் பாதுகாப்பு நலன்” என்ற விவாதமும் தவறான தடயங்களை உருவாக்கி திசை திருப்புவதே ஆகும். ஐரோப்பாவின் பாதுகாப்பு எப் போதுமே ரஷ்யாவால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக வில்லை என்பதே உண்மை. “ரஷ்ய ஏகாதிபத்தி யம்”, ஐரோப்பாவிற்கு அபாயம் என்று பேசுவ தெல்லாம் நேட்டோ விரிவாக்கத்திற்கான சாக்குப் போக்கேயாகும்.  

என்ன வேறுபாடு?

ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களுக்கும் டிரம்ப்பிற்கும் இடையில் இப் பிரச்சனையில் எழுந் துள்ள வேறுபாடுகள் என்ன?  ஏகாதிபத்தியத்தின் முன்னால் இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று, ரஷ்யாவுக்கு எதிரான - ஜோ பைடன் கடைப்பிடித்த தாக்குதல் அணுகுமுறை. அதுவே தற்போது ஒரு முட்டுச் சந்தில் திகைத்து நிற்கிறது. இரண்டாவது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான கூட்டணியில் ரஷ்யா இடம் பெறாமல் பார்த்துக் கொள்வது. ஐரோப்பிய ஆட்சியாளர்கள் முதல் தெரிவை விரும்புகிறார்கள். டிரம்ப் இரண்டாம் தெரிவை நாடுகிறார். ஜெர்மனியின் நியூ நாஜிக் கட்சி யான ஏ. எப்.டி இதே போன்ற நிலையை எடுத்து உக்ரைன் போருக்கு எதிராக பேசுவதை பார்க்கி றோம். பாலஸ்தீன பிரச்சனையில் எதிர்மாறான கடு மையான அணுகுமுறையை அமெரிக்கா மேற் கொள்வதும் நமக்கு உணர்த்துகிற உண்மை ஒன்றுதான். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் சமாதானத்திற்கான வேட்கை அல்ல, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு பற்றிய கவலையின்மையின் வெளிப்பாடும் அல்ல, மாறாக அது குறிப்பிடத்தக்க நீண்டகால இலக்குடன் கூடிய சூழ்ச்சிகர கொள்கை நிலைப்பாடு.  

கேள்விக்கு அப்பாற்பட்ட தலைமையே இலக்கு

முட்டுச்சந்தில் இருந்து ஏகாதிபத்தியத்தை விடுவிக்க முயற்சி செய்யும் டிரம்ப்பின் முயற்சிகள், ஏகாதிபத்திய முகாம் மீதான அமெரிக்காவின் தலை மையை உறுதி செய்கிற திட்டத்தின் பகுதியே ஆகும். “மீண்டும் அமெரிக்காவின் மேன்மையை நிறுவு வோம்” (Make America Great Again) என்ற டிரம்ப்பின் திட்டம் கேள்விக்கு இடமில்லாத அமெரிக்காவின் தலைமையின் கீழ் - கேள்விக்கு அப்பாற்பட்ட ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை உலகின் மீது நிறுவுவதே ஆகும். இந்த நோக்கத்தின் வெளிப்பாடே ஐரோப்பாவை எரிபொருள் தேவைக்காக தன்னைச் சார்ந்து இருக்க வைக்க அமெரிக்கா கடைப்பிடிக் கும் உத்தியாகும். ரஷ்யாவில் இருந்து ஐரோப்பா வுக்குச் சென்று கொண்டிருந்த ‘நார்டு ஸ்ட்ரீம் II’ கேஸ் பைப்லைனை திரை மறைவு நடவடிக்கை மூலம் அமெரிக்கா தகர்த்தது என்ற குற்றச்சாட்டு எழுவது இதே பின்புலத்தில்தான்.  

விலை தர வேண்டாமா?

டிரம்ப்பின் தொலை நோக்கு உத்தியில் ஒரு முரண்பாடு வெளிப்படுகிறது. அமெரிக்காவுக்கு ஏகாதிபத்திய தலைமையும் வேண்டும், அதற்கு எந்த விலையையும் அது தராது என்பதுதான். என்ன  விலை? பிற பெரிய முதலாளித்துவ நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறைகளை “தலைமை” நாடு சகித்துக் கொள்ள வேண்டும். சில காலம் முன்பு வரை அமெரிக்கா இதைச் செய்து கொண்டுதான் வந்தது. பிரிட்டன் “தலைமையாக” இருந்த காலத்தில் இந்த சகிப்புத்தன்மையை அது கடைப்பிடித்தது என்பது வரலாறு. அப்போதைய பெரிய முதலாளித்துவ நாடுக ளான ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் இருந்த வர்த்தகப் பற்றாக்குறையை பிரிட்டன் சகித்துக் கொண்டு அதனால் ஏற்படும் பாதிப்புகளை காலனி  நாடுகளிடமிருந்து தனக்கு கிட்டிய உபரி மூலம் ஈடு கட்டிக்கொண்டது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் அத்தகைய ஈடு  கட்டும் “அதிர்ஷ்டம்” அமெரிக்காவுக்கு வாய்க்க வில்லை. பிற பெரிய முதலாளித்துவ நாடுகளுடன் ஏற்படும் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்ட இயலாததால் அதன் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் தான் அமெரிக்கா இன்று தனது வர்த்தக கூட்டாளி மக்கள் மீது வரிச்சுவர்களை எழுப்புகிற “மேக் அமெரிக்கா கிரேட் எகைன்” என்ற திட்டத்தை நோக்கி நகர்ந்தது.  

எதிரும் புதிருமான  இரண்டு மூலைகளே!

முதலாளித்துவ பொருளாதார உலகில் உற்பத்திப் பொருட்களுக்கான கிராக்கி உயர்வு விரிவடைகிற வாய்ப்பு இல்லை. காரணம், சர்வதேச நிதி மூல தனம் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பை அனுமதிப்ப தில்லை; பணக்காரர்கள் மீது வரிகளைப் போட்டு  அரசு செலவினத்தை அதிகரிக்கும் வழிமுறையையும் அது அடைத்து விடுகிறது. இதனால் உலக முதலா ளித்துவ நெருக்கடி தீவிரமடைகிறது. அமெரிக்கா அல்லாத முதலாளித்துவ உலகின் மீதான பெருஞ்சுமை அதிகரிக்கிறது.  ஆகவே ஏகாதிபத்திய மீட்சிக்கான டிரம்ப்பின் திட்டம், பயன்களை முழுவதுமே அமெரிக்கா விழுங்கு வதை மையமாகக் கொண்டது ஆகும். தனது தலை மையை நிறுவுவதும், வரிச் சுவர்களை எழுப்பி தன்னைத் தவிர்த்த உலகத்தை வறண்டு போகச் செய்வதுமாகும். பிறரிடமிருந்து சந்தையைப் பறித்து தனது வளர்ச்சியை உறுதி செய்து கொள்வதாகும். உண்மையில் இது ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை மறு உறுதி செய்யும் நோக்கத்திற்கு உதவக் கூடியது அல்ல.  ஜோ பைடனின் அணுகுமுறை ஏகாதிபத்தியத்தை ஒரு மூலைக்கு தள்ளியது எனில், டிரம்பின் அணுகு முறை இன்னொரு மூலைக்கு தள்ளப் போகிறது என்பதே எதிர்காலம்.