articles

தமிழ்நாடு அரசின் வழக்கும் வரலாறு படைத்துள்ள தீர்ப்பும்!

தமிழ்நாடு அரசின் வழக்கும் வரலாறு படைத்துள்ள தீர்ப்பும்!

உச்ச நீதிமன்றம் உண்மையிலேயே வரலாறு படைத்திடும் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்தீர்ப்பு, கூட்டாட்சிக் கோட்பாட்டையும், மாநில சட்டமன்றத்தின் விருப்பத்தையும் தடுத்திடும் விதத்தில் ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கைகளை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை என்று அறிவித்திருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வாயம் அளித்துள்ள 414 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பானது, மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்து, அதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் கீழான தமது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும்; இதற்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் தீர்மானகரமாக கூறியிருக்கிறது.

பொம்மை வழக்கின் தீர்ப்பைப் போன்றது

இந்தத் தீர்ப்பு, 1994ஆம் ஆண்டு எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வழங்கப்பட்ட முத்திரை பதித்த தீர்ப்பின் வகையைச் சேர்ந்தது. அந்த வழக்கில், மாநில அரசுகளை பதவி நீக்கம் செய்ய அரசமைப்புச்சட்டம் 356ஆவது பிரிவை, ஒன்றிய அரசாங்கம் தன்னிச்சையாகப் பயன்படுத்துவதை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வாயம் தடுத்து நிறுத்தியது. இதில் ஆளுநர்களின் அறிக்கையும் இந்த மோசமான பிரிவை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாக்குப்போக்காக மாறியது. அந்தத் தீர்ப்பு வந்த பிறகுதான், மாநில அரசுகளை பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர்  ஆட்சியை அமல்படுத்திட அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்துவது ஒன்றிய அரசுக்குக் கடினமாகிவிட்டது.

தமிழ்நாடு அரசின் வழக்கு

தற்போதைய வழக்கில், மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்குக் காலவரையின்றி ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்திய ஆளுநரின் செயலுக்கு எதிராகவும், அரசமைப்புச்சட்டத்தின் 200ஆவது பிரிவின்கீழ் செயல்பட மறுத்ததற்கு எதிராகவும் தமிழ்நாடு மாநில அரசு ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது. இந்தப் பிரிவின்படி, ஆளுநருக்கு மூன்று வழிகள்தான் உள்ளன. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளித்திட வேண்டும்; அல்லது கேள்விகள் மற்றும் கருத்துகளுடன் சட்டமுன்வடிவை மாநில சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பிட வேண்டும்; அல்லது சட்டமுன்வடிவு அரசமைப்புச்சட்டத்தின் கொள்கைகளை மீறுவதாக ஆளுநர் கருதினால் அதனை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

இடித்துரைத்த நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பத்து சட்டமுன்வடிவுகளுக்கும் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், இவை அனைத்தும் மாநில சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழி கிடையாது. அவர், அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, இந்தச் சட்டமுன்வடிவுகள்  அனைத்தையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கை “சரியானது அல்ல” என்றும் அவரது நடவடிக்கை சட்டத்தின்படி தவறானது என்றும் நீதிமன்றம் இடித்துரைத்துள்ளது. இந்தப் பத்து சட்டமுன்வடிவுகளும் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும் என்று நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது. அரசமைப்புச்சட்டத்தின் 200ஆவது பிரிவின்கீழ் ஆளுநர் முடிவு எடுப்பதற்கான காலக்கெடுவையும் நீதிமன்றம் நிர்ணயித்தது. ஒரு சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க அல்லது அதை மாநில சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்ப ஆளுநர் மூன்று மாத கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் நிர்ணயித்தது. மாநில சட்டமன்றம் சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்பினால், அதற்கு ஒரு மாத காலத்திற்குள், ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் மூலம், ஆளுநர் செயல்பட எடுக்கும் நேரம் குறித்து நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

குடியரசுத் தலைவருக்கும் வழிகாட்டுதல்

குடியரசுத் தலைவரைப் பற்றிய குறிப்புகளைப் பொறுத்தவரை, நீதிமன்றம் ஒரு துணிச்சலான மற்றும் சரியான உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது. ஒன்றிய அரசானது, தனக்குப் பிடிக்காத கொள்கை முடிவுகளை மாநில அரசாங்கங்கள் எடுத்தால் அதனைத் தடுத்து நிறுத்தும் ஒரு வழியாக, மாநிலங்கள் நிறைவேற்றிய சட்டமுன்வடிவுகளை ஆளுநர்கள் குடியரசுத் தலைவரிடம் அனுப்ப, அவற்றைக் குடியரசுத் தலைவர் எந்த முடிவும் எடுக்காது கிடப்பில் போட்டு வைக்கும் வேலையைச் செய்து வந்தது. இவ்வாறு குடியரசுத் தலைவர் கிடப்பில் போட்டு வைப்பதற்கான காலக்கெடுவையும்கூட மூன்று மாதங்கள் மட்டுமே என்று இப்போது உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசாங்கங்கள் நிறைவேற்றியுள்ள சட்டமுன்வடிவுகள் அரசமைப்புச்சட்டத்திற்கு முரணானது என்று குடியரசுத் தலைவர் கருதினால் அவர் அவற்றை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி ஆலோசனையைப் பெற்றிட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. நீதித்துறை அளித்திடும் ஆலோசனையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் முடிவெடுத்திட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் வெற்றி மேலும் இந்தத் தீர்ப்பானது ஆளுநருக்கு அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள பங்களிப்பினைத் தெள்ளத்தெளிவாக்கி இருக்கிறது. ஆளுநர் என்பவர் மாநிலத்தில் அரசமைப்புச்சட்டத் தலைவர் மட்டுமே. சட்டங்களை இயற்றிடும் மாநில சட்டமன்றத்தின் விருப்பத்திற்கு எதிராக அவர் செயல்பட முடியாது. ஒன்றிய அரசின் உத்தரவுக்கிணங்க ஆளுநர் செயல்பட முடியாது. அதேபோன்றே ஒன்றிய அரசின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற அரசமைப்புச்சட்ட வழிமுறைகளை ஆளுநர் பயன்படுத்தவும் முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்காமல் அல்லது ஏற்றுக்கொள்வதைத் தடுத்து வரும் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

கேரளாவின் வழக்கு

கேரள முன்னாள் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் எடுத்த இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கேரள அரசு ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி தமிழக மனு மீதான தீர்ப்பு வெளியான உடனேயே, கேரள அரசின் வழக்கறிஞர், கேரளத்தின் மனுவை அதே அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோரினார். இருப்பினும், இதை தலைமை நீதிபதி ஏற்கவில்லை. விசாரணைக்கான தேதி மே 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள ஆளுநரின் இதேபோன்ற நடவடிக்கைகள் தொடர்பான கேரள மனுவை அதே அமர்வு விசாரித்திருந்தால் சரியாக இருந்திருக்கும். ஒன்றிய அரசு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை கவனத்தில் கொண்டு, ஆளுநர்கள் அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமாக செயல்பட அறிவுறுத்துவதைத் தவிர்த்திட வேண்டும். சமீபத்தில் நியமிக்கப்பட்ட கேரள ஆளுநர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை “நீதித்துறையின் அத்துமீறல்” என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை அரசமைப்புச்சட்ட அமர்வாயம் விசாரிக்க வேண்டும்  என்ற குரல்களும் ஒலித்து வருகின்றன. தீர்ப்பைத் தவிர்ப்பதற்கான இத்தகைய அனைத்து முயற்சிகளையும் எதிர்த்திட வேண்டும். முத்திரை பதித்துள்ள இந்தத் தீர்ப்பு மாநில அரசுகளின் அதிகாரங்களை நசுக்கும் ஒன்றிய அரசு, அனைத்தையும் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு செல்லும் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல் கல் ஆகும். அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள கூட்டாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாத்திட அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். (ஏப்ரல் 16, 2025) (தமிழில்: ச.வீரமணி)