புதிய ரேஷன் கடை திறப்பு
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த சக்கராப்பள்ளி மில்லத் நகரில், பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். அதன் பின்னர், கார்டுதாரர்களுக்கு சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இதில் டி.எஸ்.ஓ சுமதி, அய்யம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் சங்கர், பேரூர் செயலர்கள், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் பக்கீர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலர் தஞ்சை பாதுஷா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
நீர்மோர் பந்தல் திறப்பு
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளரும், எம்.பியுமான கல்யாண சுந்தரம் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், சர்பத், இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, வெள்ளரி, பலாச்சுளை வழங்கினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் அய்யா ராசு, ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் வடக்கு நாசர், தெற்கு தாமரைச் செல்வன், பாபநாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி உட்பட பலர் பங்கேற்றனர்.
மூதாட்டிக்கு எம்எல்ஏ உதவி
அய்யம்பேட்டை அருகே, மதகடி பஜார், திரௌபதி அம்மன் கோயில் அருகில் வசிக்கும் மூதாட்டி புஷ்பம், தனது கணவர் மற்றும் மகன் இறந்து விட்ட நிலையில், முதியோர் உதவித் தொகைக்காக பாபநாசம் வட்டாட்சியரிடம் கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், உதவித் தொகை கிடைக்காமல், அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், அதுகுறித்த தகவல் அறிந்த பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, மூதாட்டி புஷ்பம் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரிடம் வருத்தம் தெரிவித்து, உடனடியாக உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அய்யம் பேட்டை திமுக பேரூர் செயலர் துளசி அய்யா உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.