உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பும்; நீதித்துறையின் சுதந்திரமும் - ச.சிவக்குமார்
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த பல வருடங்களாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை ஆளுநர்களைக் கொண்டு செயல்பட விடாமல் ஜனநாயக விரோதமாகவும், எதேச்சதிகாரமாகவும் நடந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், தெலுங் கானா, பஞ்சாப் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போட்டு வருகிறது. இதன் மூலம் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி முறையின் மீது நேரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
தமிழக அரசின் மனு மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பு
தமிழ்நாடு அரசு கடந்த 4 வருடங்களுக்கு மேலாக நிறைவேற்றி அனுப்பிய 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்தார். ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை கடந்த ஏப்ரல் 8, 2025 அன்று உச்சநீதிமன்றம் அளித்தது. இந்த உத்தரவின் மூலம் மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை ஆளு நரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுப்பதற்கு காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது சட்டவிரோதம் என்று அறி வித்து, அந்த 10 மசோதாக்களையும் சட்டமாக்கி அமலுக்கு வந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது. இது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடக்காத வரலாற்று நிகழ்வாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் அதிகாரம்
அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 200இன் படி ஆளுநர் மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம், நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு மசோதா விற்கு ஒப்புதல் அளிக்காமல் எவ்வளவு காலம் கிடப்பில் போட முடியும் என்பதற்கு வரையறை இல்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ பதில் அளிக்க வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது. மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவை காலவரம்பின்றி நிறுத்தி வைப்பதற்கு ஆளு நருக்கு சிறப்பு அதிகாரம் (veto power) இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் மாநில அமைச்சரவையின் வழிகாட்டுதலின்படி மட்டுமே செயல்பட வேண்டும். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை மாநில அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி மீண்டும் அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசு தலை வருக்கு அனுப்பக் கூடாது என்றும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142இன் முக்கியத்துவம்
அரசியலமைப்பு சட்டம் சரத்து 142இன் சிறப்பு அதிகாரத்தின்படி, உச்சநீதிமன்றம் மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாவிற்கு ஆளுநர் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், குடியரசு தலைவருக்கு அனுப்பப் படும் மசோதாவிற்கு மூன்று மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் காலக் கெடு நிர்ணயித்துள்ளது. இது பாஜக ஆட்சி யாளர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை
இதன் பின்னர், ஏப்ரல் முதல் வாரத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வ நாதன் அடங்கிய அமர்வு, ஏப்ரல் 16-17 ஆகிய நாட்களில் நடத்திய விசாரணையில், வக்பு திருத்தச் சட்டத்தின் பல பிரிவுகளுக்கு இடைக் காலத் தடை விதித்தது. இத்தீர்ப்பை ஜனநாயக சக்திகள் வரவேற்றுள்ளன.
உச்சநீதிமன்றத்தை மிரட்டும் பாஜக அரசின் முயற்சிகள்
இந்த இரண்டு தீர்ப்புகளுக்கும் எதிராக, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே ஆகியோர் உச்சநீதிமன்றத்தை மிரட்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஜக்தீப் தன்கர், “குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை, சரத்து 142 அணு ஆயுத ஏவுகணை போன்றது” என்றும், “குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நீதிபதிகள் எப்படி குடியரசுத் தலை வருக்கே உத்தரவிடலாம்” என்றும் கூறியுள்ளார். நிஷிகாந்த் துபே, “நாட்டில் நடக்கும் மத ரீதியான மோதல்களுக்கு உச்சநீதிமன்றமே பொறுப்பு” என்றும், “உச்சநீதிமன்றங்கள் சட்ட மியற்றத் துவங்கினால் நாடாளுமன்றத்தையும், சட்டமன்றங்களையும் மூடலாம்” என்றும் கூறியுள்ளார். இந்த கருத்துக்களுக்கு நாடு முழு வதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் துபேயின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கோரியுள்ளது.
அரசியலமைப்பின் பாதுகாவலன் உச்சநீதிமன்றமே!
அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்ப தாக உறுதியளித்து பதவியேற்ற ஆளுநரும், குடியரசுத் தலைவரும் அதன்படி செயல் படாததால்தான் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியதாயிற்று. இவர்களின் செயல்கள் அரசியலமைப்புக்கு எதிராக இருந்தால் உச்ச நீதிமன்றம் தலையிட முழு உரிமை உண்டு. நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருந்தால் அவற்றை ரத்து செய்யும் அதிகாரம் சரத்து 13இன்படி உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரமும் அரசியலமைப்பால் தனித்தனியாக வரையறுக்கப்பட்டுள்ளது, ஒன்று மற்றொன்றின் எல்லையை மீறக்கூடாது. ஒன்றிய மோடி அரசு அரசியலமைப்பு நிறு வனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து ஜன நாயக விரோத ஆட்சி நடத்தும் நிலையில், ஜன நாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற உச்சநீதிமன்றத்தையே மக்கள் நம்பியுள்ளனர். சுதந்திரமான நீதித்துறையை பாதுகாப்பது அனைத்து ஜனநாயக அமைப்புகளின் கடமையாகும்.