articles

img

ஏழைகளின் கண்ணியம் பறிக்கப்படக் கூடாது - சு.கோவிந்தராஜன்

ஏழைகளின் கண்ணியம் பறிக்கப்படக் கூடாது -சு.கோவிந்தராஜன்

தொழிலாளி வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் பணிகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும்,  குறிப்பாக ஏழைப் பெண்களிடையே பணிபுரியும் நான், இந்த திறந்த மடலை உங்களுக்கு எழுதுகின்றேன். இது வீடற்றவர்களின் உரிமைகள் தொடர்பான மனுவின் விசாரணையின்போது “இலவசங்கள்” குறித்து நீங்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பா னது. பத்திரிகைகளில் பரவலாக வெளியிடப்பட்ட இக் கருத்துக்கள், “இலவசங்கள்” பெறுபவர்கள் மீதான சமூகக் கருத்தை பாதகமாகப் பாதிக்கும் என்பதால் இந்தக் கடிதம் அவசியமாகிறது. இதே தலைப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று நிலுவையில் உள்ளதையும் அறிவேன், அதன் தீர்ப்புக்காக காத்திருப்பேன். ஆனால் சில கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இந்த கடிதத்தின் வேண்டுகோள்.

நீதிபதி அவர்களே!  

“துரதிர்ஷ்டவசமாக, தேர்தல் காலங்களில் அறி விக்கப்படும் இலவசங்களால்... லட்கி பஹின் (பெண் சகோதரி) திட்டம் போன்ற பல்வேறு திட்டங்க ளால்... மக்கள் வேலை செய்ய விரும்புவதில்லை. அவர்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது, எந்த வேலையும் இல்லாமல் பணம் கிடைக்கிறது, பின் ஏன் வேலை செய்ய வேண்டும்?... ஆனால் இவர்க ளை சமுதாயத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைத்து, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அனு மதிப்பது நல்லதல்லவா?... நான் நடைமுறை அனு பவங்களைக் கூறுகிறேன்... இந்த இலவசங்களால், சில மாநிலங்கள் இலவச ரேஷன் வழங்குவதால்... மக்கள் வேலை செய்ய விரும்புவதில்லை. நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். மகாராஷ்டிரா வில் தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இலவ சங்களால், விவசாயிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. அனைவருக்கும் வீட்டிலேயே இல வசமாகக் கிடைக்கும்போது, ஏன் வேலை செய்ய விரும்புவார்கள்?”  - என்று நீங்கள் கூறியதாக வெளியாகியுள்ளது

ஊதியமின்றி வேலை... ‘

லட்கி-பஹின் திட்டம்’ என்பது ஒன்பது மாநில அரசுகள் (தேர்தல் வாக்குறுதிகளின்படி மேலும் சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தக்கூடும்) ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை பெண்களுக்கு நேரடி நிதி உதவி வழங்கும் திட்டமாகக் கருதப்படுகிறது. இத்தகைய திட்டங்களால் மக்கள் - குறிப்பாக பெண்கள் - வேலை செய்ய விரும்புவதில்லை என்று நீங்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மைக்குப் புறம்பா னது, ஏனெனில் பெரும்பாலான பெண்கள் ஏற்கனவே - ஊதியமின்றி - வீட்டு வேலைகளிலும், குடும்ப தொழில்களிலும், விவசாய நடவடிக்கைகளிலும் ஈடு பட்டுள்ளனர். எனவே, பிரச்சனை பெண்கள் வேலை செய்யவில்லை என்பதல்ல, மாறாக அவர்கள் ஊதியமின்றி வேலை செய்கிறார்கள் என்பதே.

தினம் 7.2மணி நேர வேலை... ஜிடிபியில் 7 சதவீத மதிப்பு

சராசரியாக, இந்தியப் பெண்கள் தினமும் 7.2 மணிநேரம் ஊதியமற்ற வீட்டு வேலைகளில் செல விடுகின்றனர். இது வாரத்திற்கு சுமார் 50 மணி நேரம் ஆகும். வெளியே ஊதியத்துடன் கூடிய வேலை செய்யும் பெண்களுக்கு, வீட்டு வேலைகளின் சுமை அவர்கள் தினமும் வேலை செய்யும் மணிநேரத்தை அதிகரிக்கிறது. 2023-24 எஸ்பிஐ ஆய்வின்படி, பெண்களின் ஊதிய மற்ற வேலையை பணமதிப்பாக கணக்கிட்டால், அது ஆண்டுக்கு சுமார் ரூ.22 லட்சம் கோடி, அந்த ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7 சதவீதம் ஆகும். குடும்ப வாழ்க்கையின் முக்கிய அம்ச மான இந்த ஊதியமற்ற பணி, உலகிலேயே மிக அதிகம். பெண்களின் இந்த பங்களிப்பு சமூக அங்கீகா ரம் பெறாமல், “பெண்கள் வேலை செய்வதில்லை” என இழிவுபடுத்தப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, உங்க ளின் அறிக்கையிடப்பட்ட கருத்துக்கள் இந்த எண் ணத்தையே வலுப்படுத்துகின்றன.  

உரிமை, இலவசமல்ல...

இத்திட்டங்கள் மூலம் பெண்களுக்கு வழங்கப் படும் சிறிய தொகை, ஒரு உரிமையாகவே கருதப்பட வேண்டுமே தவிர, தாராள மனப்பான்மையுடன் வழங்கப்படும் “இலவசமாக” அல்ல. அரசியல் கட்சி கள் குறுகிய தேர்தல் நோக்கங்களுக்காக ஒரு உரி மையை வாக்கு வங்கியாக பயன்படுத்துவது வேறு  விஷயம். தேர்தலுக்கு முன் பெண் வாக்காளர்களைக் கவர இத்தகைய திட்டங்களை அறிவிக்கும் கட்சிகளின் நடைமுறையை விமர்சிப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால் இத்திட்டங்களால் பெண்கள் “வேலை செய்ய விரும்புவதில்லை” என்று குற்றம் சாட்டுவது உண்மைக்குப் புறம்பானதுடன், பெண்க ளுக்கு அநீதியும் ஆகும்.

இலவச ரேசனால் மட்டும்  உயிர் வாழ முடியாது...

“இலவச ரேஷன்” குறித்து நீங்கள் குறிப்பிட்டுள் ளது தொடர்பாக, மாண்புமிகு நீதிபதி உண்மைகளை அறியாதிருக்கலாம். குறிப்பிடப்படும் இலவச ரேஷன் என்பது ஒரு நபருக்கு மாதம் முழுவதற்கும் வெறும் 5 கிலோ தானியங்கள் மட்டுமே. இது இந்தியாவில் ஒரு நபரின் சராசரி மாத தானிய நுகர்வான 9 கிலோவை விட குறைவானது. உண்மையில், உணவு பணவீக்கம் வரலாறு காணாத அளவில் உயர்ந்து, குடும்ப பட்ஜெட் டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் தொகையை இந்தியா கொண்டுள்ளது. இந்த கார ணங்களால்தான், அக்கறையுள்ள குடிமக்களும் அமைப்புகளும் ரேஷன் அமைப்பில் புரதச்சத்து மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருட் களை குறைந்த விலையில் கிடைக்க வலியுறுத்தி வரு கின்றனர். எந்த சூழ்நிலையிலும், இலவச ரேஷன் மட்டும் வைத்து எவரும் உயிர்வாழ முடியாது. அளவு சார்ந்த கடின வேலை விவசாயியாக உங்கள் தனிப்பட்ட அனுபவத் தில், “விவசாயிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்ப தில்லை, ஏனெனில் அவர்கள் இலவசமாகப் பெறுகி றார்கள், பின் ஏன் வேலை செய்வார்கள்?” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது 100 நாள் வேலை உறுதி சட்டத்தை எதிர்ப்பவர்களால், குறிப்பாக மகாராஷ்டிரா வில் கூறப்படும் காரணங்களில் ஒன்றாகும். இத்திட்டம் விவசாயிகளுக்குத் தேவையான தொழிலாளர்களை கவர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. உண்மையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்ட (MNREGA) தளங்களில் செய்யப்படும் வேலை, பெரும்பாலும் மண் தொடர்பான வேலைகள், விவசாய வேலைகளை விட கடினமானவை. இது அளவு சார்ந்த வேலையாக இருப்பதால், சில நேரங்களில் உற்பத்தி அளவு மிக அதிகமாக இருக்கும். ஒரு தனிநபர் ஒரு நாளைக்கு 2000 கிலோ அளவுக்கு மண்ணை தோண்ட  வேண்டியிருக்கும். இருப்பினும், இச்சட்டம் ஆண்களு க்கும் பெண்களுக்கும் சம ஊதியத்தை உறுதி செய்கிறது. விவசாயத்தில் இது நிலவுவதில்லை.

 குறைவான  விவசாய வேலை ஊதியம்...

தொழிலாளர்கள் இலவச ரேஷன் அல்லது பிற இல வசங்கள் பெறுவதால் வேலைக்குச் செல்லவில்லை  என்பதல்ல, மாறாக விவசாய வேலைக்கான ஊதியம் நிலையாக இருப்பதால், அல்லது குறைவாக இருப்ப தால், சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையே கிராமப்புற ஊதியங்கள் நிலையாக இருப்பதையோ அல்லது குறைந்திருப்பதையோ சுட்டிக்காட்டுகிறது. எனவே, தொழிலாளர்கள் இலவசங்கள் பெறுவதால் வேலை செய்வதில்லை என்பது மீண்டும் உண்மை க்குப் புறம்பானது. மாறாக, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பிற தொழிலாளர் உரிமைகளின் அமலாக்கம் இல்லாததற்கு இலவசங்கள் என்று அழைக்கப்படு பவை ஒரு ஏழைச் சலுகையே.

ஏழைகளின் கண்ணியம் பறிக்கப்படக் கூடாது

இந்திய அரசின் நலத்திட்டங்கள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்கான அரசியலமைப்பு தேவையா கும், குறிப்பாக உலகின் மிகவும் சமமற்ற சமூகங்க ளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்ட நமது நாட்டில், உங்கள் கருத்துக்கள் இந்தியாவின் கடின உழைப்பாளி பெண்களுக்கு நீதி வழங்கவில்லை. பரவலான வேலையின்மை, கிடைக்கும் வேலை களின் நிலையற்ற தன்மை மற்றும் குறைந்த ஊதியம் காரணமாக இந்தியாவின் உழைக்கும் மக்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கடினமான போராட் டத்தையும் அவை அங்கீகரிக்கவில்லை. நாட்டின் உயர் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டதாகக் கூறப் படும் கருத்துக்களால் ஏழைகளின் கண்ணியம் பறிக்கப்படக்கூடாது. தமிழாக்கம்: சு.கோவிந்தராஜன், புதுச்சேரி.