நம்மில் 8 பேரில் ஒருவர் ஏதாவது ஒரு வகை மன நலக் கோளாறுடன் வாழ்ந்து வருகிறோம் என்றால் நம்பவா முடிகிறது? 2019இல் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த சற்று அதிர்ச்சியான உண்மைதான் இது. உலகில் 97 கோடி மக்கள் மனநல பாதிப்புகளுடன் வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. உடல் நலனில் மன நலமும் மிகவும் முக்கியமானது. வேலையின்மை, வறுமை, குடும்ப வன்முறை, போதைப்பொருள் உப யோகம், கல்வி நிலையங்கள், பணித்தளங் களில் கொடுக்கப்படும் அளவுக்கு மீறிய அழுத்தங்கள், இயற்கைச் சீற்றங்கள், போர், கலவரங்கள் உள்ளிட்ட ஏராளமான காரணிகள் மன நலம் பாதிக்கப்படுவதில் தொடர்புடையதாக உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதீத கோபம், தூக்கமின்மை, தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வது, ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்வது, அளவுக்கு அதிகமாக உணவு உண்ணுதல், மனச் சோர்வு, உடலுறவில் பிரச்சனைகள், தற்கொலை எண்ணம் உள்ளிட்ட மன நல பாதிப்பு குறித்து ஏராளமான அறிகுறிகளை வயதுக்கேற்ற வகையில் வல்லுநர்கள் வரையறுக்கின்றனர். தனி மனிதர் ஒருவரின் மன நலம் பாதிப்படை வது என்பது அது அந்த நபரை மட்டுமல்ல, அவரது குடும்பம் உறவினர் என நீண்டு சமூகத்திற்கும்கூட தீங்காய் அமைந்துவிடு கிறது. ஒருவரின் மன நல பாதிப்பு தீவிரத் தன்மை அதிகரிக்கும் சூழலில் சொந்த குடும்பங்களால்கூட பாதுகாக்க முடியாமல் தவிப்பதையும் பார்த்து கையறு நிலையில்தான் கடந்து வருகிறோம்.
75 முதல் 95 சதவீதம் பேர்...
எனவே, மக்களின் உடல் நலப் பாதுகாப்பின் ஒரு அங்கமான மன நலப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசுகளின் தார்மீக கடமை என நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மன நலம் பாதிப்புக்குள்ளானவர்களில் 75 முதல் 95சதவீதம் பேர், அவர்களுக்குத் தேவை யான மன நல மருத்துவ சேவைகளை பெற முடிவதில்லை என உலக மன நல கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பணக்கார நாடுகளில் உள்ள மன நோயர்களும்கூட உரிய மருத்துவ சேவைகள் பெறுவதில் சிரமப்படுகின்றனர் என அக்கூட்டமைப்பு தெரிவிக்கிறது. தனியார்மயம், தாராளமயம் அடங்கிய உலகமயமாக்கல் கொள்கைகளில் மருத்துவமும்கூட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபம் கொழிக்கும் தொழிலாக முதலாளித்துவ உலகால் மாற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில், இந்தியா உள்ளிட்டு உலகின் பல நாடுகளின் அரசுகள் பொது மருத்துவ சேவைகளையே கைகழுவி வருகின்றன. மனநலப் பாதிப்பு களால் மனித சமூகத்தில் அதிகரித்து வரும் ஆபத்துகளை பெரும்பாலான நாடுகள் கண்டு கொள்ளாத சூழலில்தான் ஐ.நா. சபை இந்நாளை அறிவித்து செயல்படுத்துகிறது. 1992இல் மனநலத்திற்கான உலக கூட்டமைப்பு சார்பில் ஒரு வார அனுசரிப்பாக தொடங்கப்பட்டு, 1994 ஆம் ஆண்டு முதல் உல கம் முழுவதும் இந்நாள் கடைப்பிடிக்கப்படு கிறது. மனநலப் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மனநலக் கல்வி மற்றும் மனநலம் பேணுவதற்கான ஆத ரவுகளை திரட்டுவதே இந்நாளின் நோக்கம் என ஐ.நா.-வும், உலக சுகாதார நிறுவனமும் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் இந்நோக்கங்களை நிறை வேற்ற மன நலத்தையும் உள்ளடக்கிய பொது மருத்துவத்தை மேம்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாறாக 2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் சுகாதார துறைக்கு ஆண்டுக்கு ஆண்டு நிதி குறைக்கப்பட்டு சுகாதாரத் துறையையே பெரிய அளவில் சீரழித்த பெருமை மோடி தலைமையிலான பாஜக அரசையே சேரும். 2013-14இல் இந்தியாவின் சுகாதாரச் செலவுக்கான நிதி ஒதுக்கீடு ஜிடிபி-யில் 4.02 சதவீதமாக இருந்தது. ஆனால், 2023-24 சுகாதாரச் செலவுக்கு ஜிடிபி-யில் வெறும் 1.9 சதவீதம் மட்டுமே ஆகும்.
பொருளாதார ஆய்வறிக்கையும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடும்
சுமார் இரண்டு ஆண்டுகள் முடக்கிப்போட்ட கொடிய கொரோனா தொற்று நோய் காரணமாக பெண்கள், குழந்தைகளிடையே கூடுதலாக அதிகரித்து வரும் மனநலப் பிரச்சனைகள் குறித்து முன்னிலைப்படுத்தி, கவனத்தை ஈர்க்க 2024 பொருளாதார ஆய்வு அறிக்கை வரவேற்கத்தக்க வகையில் முற்பட்டது. குறிப்பாக, கொரோனா நோய்க்கு பிந்தைய மோசமடைந்த காலத்தில் பள்ளி மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஓர் ஆய்வு நடத்தியது. அதில், இளம் பருவத்தினரிடையே மோசமான மன ஆரோக்கியம் அதிகரித்து வருவதையும், 11 சதவீத மாணவர்கள் கவலையுடன் இருப்ப தாகவும், 14 சதவீதம் பேர் தீவிர மன உளைச்ச லுடன் இருப்பதாகவும், 43 சதவீதம் பேர் மனநிலை மாற்றங்களை அனுபவிக்கின்றனர் என்றும் என்சிஇஆர்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை 2024 பொருளாதார ஆய்வறிக்கை மேற்கோள் காட்டியது. ஆனால், கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில், மனநலத்திற்கான நிதி ஒதுக்கீடு களில் இதன் பிரதிபலிப்பைக் காண முடிய வில்லை. இதிலிருந்தே மோடி அரசு மக்களின் உடல் நலத்தை எந்த அளவிற்கு அலட்சியப் படுத்தி உள்ளது என்பதை அறிய முடியும். மோடி அரசின் இந்த அலட்சியத்தால் இந்தியாவில் பெங்களூரில் மட்டுமே உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவன (NIMHANS)த்துக்கான நிதி ஒதுக்கீடும்கூட குறைக்கப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
லட்சத்துக்கு ஒரு மருத்துவரும் இல்லை
ஒரு லட்சம் பேருக்கு குறைந்தது மூன்று மனநல மருத்துவர்களாவது இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் நிலையில், இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு மன நல மருத்துவர் என்பதுகூட இல்லா மல் வெறும் 0.75 சதவீதம் என்ற விகிதத்தில் தான் உள்ளனர். தமிழகத்தில் சில மாவட்டங் களில் ஒரு மனநல மருத்துவர்கூட இல்லாத நிலைமை உள்ளதையும்கூட கவனிக்க முடியும். மன நல மருத்துவத்துறைக்கு தேவைப்படும் முறையாக பயிற்சி பெற்ற தகுதியான மன நல ஆலோசகர்கள், உளவியலாளர்களை உரு வாக்குவதிலும்கூட உலக அளவில் இந்தியா மிக மிக பின்தங்கியே உள்ளது. கல்வி நிலை யங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங் களில் தேவைப்படும் தகுதியான ஆலோசகர்கள் இல்லாமலேயே இயங்குகின்றன. மனநலம் பாதித்தவர்களுக்கு பூரண சிகிச்சை கிடைக்க நீண்ட காலம் பிடிப்பதாக உள்ளது. இந்நிலையில், மனநல சிகிச்சை மருந்துகளின் விலைகளும் இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. மனநல சிகிச்சைக்கான வெளிநோயாளி ஒருவரின் ஆண்டு சராசரி செலவு ரூ.72,845 என கணக்கிடப்படுகிறது. மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெறும் செலவு ரூ.15,400 முதல் ரூ.4,31,500 வரை ஆகிறது என கணக்கிடப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினரின் குடும்பத்தின் மாதச் செலவில் கிட்டத்தட்ட 20 சதவீதம் சுகாதாரப் பராமரிப்புக்காகச் செல்கிறது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இப்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 21சதவீத குடும் பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள வர்கள் என்றும்.. இதில் நேரடி மற்றும் மறைமுக செலவுகள் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. 2015-16 ஆம் ஆண்டின் தேசிய மனநல ஆய்வு(NMHS)படி, இந்தியாவில் 10.6 சதவீத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மனநல கோளாறுகள் இருந்தன, அதே நேரத்தில் மனநல கோளாறுகளுக்கான சிகிச்சை இடை வெளி 70 சதவீதம் வரை இருந்தது என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. வெவ்வேறு கோளாறு களுக்கு சிகிச்சை இடைவெளி 92 சதவீதம் ஆகும். இதனால் 2018 இன்படி, இந்தியாவில் எந்தவொரு மனநலக் கோளாறுக்கும் சிகிச்சை இடைவெளி 83 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
சட்டமியற்றி ஏழாண்டாகியும்...
2016 ஆம் ஆண்டின் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படி மன நல பாதிப்பும் ஒரு வகை ஊனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் மன நல பாதிப்பு-ஊனம் குறித்து பகுப்பாய்வு செய்து சான்று வழங்க உரிய மருத்துவ ஏற்பாடு இல்லாமல்தான் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில்கூட நிலைமை உள்ளது. 2017இல் மனநலப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும், இச்சட்ட சரத்துகளை செயல்படுத்த உரிய திட்ட மும் நிதியும் ஒதுக்காமல் கிடப்பில் போடப் பட்டுள்ளன. இதன் விளைவு.. தீவிர பாதிப்புக்குள்ளான மன நோயர்களை குடும்பங்களில் பாது காக்க முடியாமல் மனதைக் கல்லாக்கி புண்ணி யத்தளங்களிலும், தெருக்களிலும் விட்டுவிடும் நிலைமை அதிகரித்து வருகிறது. மறுபுறம், உரிய தகுதியும் தரமும் அற்ற தனியார் மையங்கள், நிறுவனங்கள் ஆங்காங்கே உருவாகி நாங்கள் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் செலவழிக்க வாய்ப்புள்ள குடும்பங் களில் பாதித்தவர்களை வைத்து பணம் கறக்கும் துறையாகவும் மாறி வருவதையும் காண முடிகிறது.
மனநலக் கோளாறுகள் உற்பத்தித்திறன் இழப்புகளுடன் தொடர்புடையவை என்பதும்.. அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள் இல்லாமையுடன் மன நலக் கோளாறுகளால் இருக்கும் வேலைகளை இழக்கும் சூழல் போன்றவை வறுமையை அதிகரிக்கும் என்ற ஆய்வு ஏற்கனவே உள்ளது. இந்நிலையில் ‘பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது’ என்பது 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக, ஐ.நா. அறிவித்துள்ளது பொருத்தமானது. தனிநபர் மற்றும் தேசிய வளர்ச்சியில் மன நலம் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கணக்கில் கொண்டு.. மன நலப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை கள் அங்கன்வாடி மையங்களில் துவங்கி அனைத்து இடங்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. மனித சமூகத்தின் ஒட்டுமொத்த எதிர்காலமும் ஒவ்வொரு தனி மனிதரின் ஆரோக்கியமான மன நலம் சார்ந்தது என்பதையும் ஒவ்வொருவரின் மன நலப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கங்களின் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டுவோம். அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை பட்ஜெட் ஒதுக்கீடுகளில் அதிகரிக்க அரசுகளை வலியுறுத்துவோம். மன நலம் காக்க.. வலுவாக குரல் கொடுப்போம்!