articles

img

பாஜக ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்!

பாஜக ஆட்சியின் முடிவில்தான்,  இந்தியாவில் கூட்டாட்சி மலரும்!

சிபிஎம் அகில இந்திய மாநாட்டுக் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

“பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் அனை வரும் இணைந்து போராடுவோம்”, என்றும்; “பாஜக ஆட்சியின் முடிவில் தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்” எனவும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் வியாழனன்று (ஏப்.3) ராஜா முத்தையா மன்றத்தில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் அவர் பேசியது வருமாறு: மதுரையை, ‘தூங்கா நகரம்’ என்று சொல்லு வோம். ஆனால், இன்று அந்தத் தூங்கா நகரம், சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணகர்த்தா வாக இருக்கும், பிரகாஷ் காரத், பெ. சண்முகம் ஆகி யோருக்கும், இந்த கருத்தரங்கிற்குத் தலைமை ஏற்றுள்ள பாலகிருஷ்ணனுக்கும், நம்முடைய நாடாளு மன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கும் என்னுடைய பாராட்டுகளையும்  வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கும் சிவப்பு; எனக்கு மகிழ்ச்சி!

எங்கும் சிவப்பு நிறைந்திருப்பதைப் பார்த்து, முதல் ஆளாக மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் என்றால், திமுக கொடியில் பாதி சிவப்பு! கொடியில் மட்டுமல்ல; எங்களுக்குள் பாதி நீங்கள்! திராவிட இயக்கத்துக்கும் - பொதுவுடைமை இயக்கத்துக்கும் இருப்பது, கருத்தி யல் நட்பு! இதன் அடையாளமாகத்தான் இந்த மாநாட்டு க்கு நான் வந்திருக்கிறேன்!

உங்களுள் பாதி;  என் பெயர் ஸ்டாலின்!

திராவிட இயக்கத்துக்கும் - பொதுவுடைமை இயக் கத்துக்குமான உறவு என்பது, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை, தந்தை பெரியார் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டதில் இருந்தே தொடங்கு கிறது. தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவே அடையாளப் படுத்திக் கொண்டவர் தலைவர் கலைஞர்! உலக மாமேதை காரல் மார்க்ஸ் உருவச் சிலை சென்னை யில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து விட்டு, உங்களுள் பாதியாக இந்த மாநாட்டுக்கு வந்தி ருக்கும் என் பெயர், ஸ்டாலின்! இந்தக் கொள்கை உற வோடு ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சமு தாயத்தை அமைக்க வேண்டும் என்ற இலட்சியத்துக் காகத்தான் நாம் தேர்தல் கூட்டணி அமைக்கிறோம்.

யாரை எதிர்ப்பது என்பதில் தீர்க்கமான முடிவு!

மாற்றத்தை நோக்கிய நம்முடைய பாதையும் பயணமும் மிக நீண்டது. உடனே நிகழ, மாற்றம் என்பது ‘Magic’ அல்ல; அது ஒரு ‘Process’! இந்தப் பயணத்தில், 2019-ஆம் ஆண்டு முதல் நாம் இணை பிரியாமல் இருக்கிறோம். ஏன் என்றால், நம்முடைய இலக்கு என்ன - நாம் யாரை எதிர்க்க வேண்டும் - எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு இயங்கிக்கொண்டு இருக்கிறோம்.

சீத்தாராம் யெச்சூரி  மறைவு பேரிழப்பு

 தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என்று நப்பாசையோடு சில வெளிநபர்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது! இங்கு இருக்கும் யாரும், அதற்கு இடம் தரவும் மாட்டோம்! இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைதானத்துக்கு - மழையின் காரணமாக இந்த அரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - தோழர் சீத்தாராம் யெச்சூரியின் பெயரைச் சூட்டி யிருப்பதைப் பார்த்தபோது, என் நெஞ்சம் கனத்தது. 

இந்தியாவின்  தலைசிறந்த போராளி

இந்தியாவின் தலைசிறந்த போராளிகளில் ஒருவர் நாமெல்லாம் பெருமதிப்பு வைத்திருந்த தோழர் யெச்சூரி அவர்கள்! அவரின் இழப்பு, நமக்கு மட்டு மல்ல; இந்தியாவுக்கே மிகப்பெரிய இழப்பு! தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள், பொதுவுடைமை கொள்கைகளுக்காகப் போராடியவர்! எதேச்சதி காரத்தைக் கடுமையாக எதிர்த்தவர்! சமத்துவச் சிந்தனையோடு சமூகநீதிச் சிந்தனையை இணைத்த வர்! மதவாதக் கருத்துகளையும் மூடநம்பிக்கைக ளையும் கடுமையாக எதிர்த்தவர்! அவர் மறைந்தாலும், அவரது சிந்தனைகள் என்றைக்கும் நம்மை வழி நடத்தும் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த மாநாட்டு எழுச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். “கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை” என்று இன்றைக்கு நாட்டுக்குத் தேவையான நாடு முழுவதும் பேசப்பட வேண்டிய கருத்தை இந்தக் கருத்தரங்குக்குத் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

கூட்டாட்சி என்றாலே ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி

கூட்டாட்சி என்ற சொல்லே இன்றைக்கு ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு ‘அலர்ஜி’ ஆகிவிட்டது. மாநில உரி மைகளுக்காகப் பேசுவது அவர்களுக்குப் பிடிக்க வில்லை. ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் எதேச் சதிகாரத் தன்மையால் அதிகமாக பாதிப்படைகின்ற வர்களில் முதன்மையாக இருப்பது, நானும் நம்முடைய ‘சகாவு’ பினராயி விஜயனும்தான்! அதனால், இந்தக் கருத்தரங்கில் நாங்கள் பேசுவதை நீங்கள் வாக்குமூலமாகவே எடுத்துக்கொள்ளலாம்! அதைத்தான் முன்பே பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து நானும் பேச வந்திருக்கிறேன். ‘பிரதர்’ என்றார், உண்மைதான். எனக்கு அவர் மூத்த சகோதரர்

ஒன்றிய அரசு என்றால்  பாஜக ஆத்திரமடைவது ஏன்?

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியே, “பல்வேறு மாநிலங்களால் ஆன ஒன்றியம்தான் இந்தியா” என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. அத னால்தான், ‘ஒன்றிய அரசு’ என்று சொல்கிறேன். சட்டத்தில் இல்லாததை நான் சொல்லவில்லை. ஆனால், அதையே அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் விரும்பவில்லை என்பதன் வெளிப் பாடுதான் அவர்களின் கோபம்!

முன்னோடியான  அண்ணா தீர்மானம்

 திமுகவை பொறுத்தவரைக்கும், ‘மாநில சுயாட்சி’ என்பது எங்களுடைய உயிர்க் கொள்கை! பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் வலியுறுத்திய கொள்கை அது! பேரறிஞர் அண்ணாவின் உயில் என்று சொல்லப்படுகின்ற இறுதி கடிதத்திலேயே, கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார். 1970-இல்,  ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் முப்பெரும் விழாவில் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக உருவாக்கிக் கொடுத்தார்.  அதுமட்டுமல்ல, ‘தமிழ்ச் சமுதாயத்தைக் காக்க, இந்தியாவிலுள்ள தேசிய இனங்களைக் காக்க, இந்தியாவிலுள்ள மாநிலங்களின் உரிமைகளைக் காக்க, இந்தியாவிலே இருக்கும் மாநிலங்கள் சுயமரியா தையோடு வாழ அந்தத் தீர்மானம் ஒரு முன்னோடி. அது மட்டுமல்ல, உறவுக்குக் கை கொடுப்போம், உரி மைக்குக் குரல் கொடுப்போம்’ என்று 1974-இல் சட்ட மன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மாநில சுயாட்சிக்காக இந்திய அளவில் கூட் டாட்சிக்காக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், இதற்கு எதிரான பாசிச அரசாக, ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது.

மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் ஆட்சி

‘மாநில அரசுகள் தில்லிக்கு காவடி தூக்கும் நிலை மையை மாற்றி, அதிகாரப் பகிர்வுக்கு வழிகாட்டுவது தான் தன்னுடைய அணுகுமுறையாக இருக்கும்’ என்று  சொல்லி பிரதமரான நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி தான், மாநிலங்களை அழிக்கும் ஆட்சியாக, மாநில மொழிகளைச் சிதைக்கும் ஆட்சியாக, பல்வேறு தேசிய இன மக்களை ஒழிக்கும் ஆட்சியாகப் பல்வேறு  பண்பாடுகள் கொண்ட மக்களின் நம்பிக்கைகளைச் சிதைக்கும் ஆட்சியாக இருக்கிறது.

பல பரிமாணங்களில்  வரும் பாசிசம்

அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு களை டம்மியாக மாற்றி, ஒற்றையாட்சித் தன்மை கொண்ட பாசிச ஆட்சியை இன்றைய பாஜக ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறது! ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே உணவு - ஒரே தேர்தல் -  ஒரே தேர்வு - ஒரே பண்பாடு என்ற ஒற்றைத் தன்மை,  ஒரு கட்சியின் ஆட்சியாக முதலில் அமைந்து, ஒரே ஒரு தனிமனிதரின் கையில் அதிகாரத்தை குவிக்கத் தான் அது பயன்படும். பிறகு, அந்த தனிமனிதர் வைத்ததுதான் சட்டம்! அவர் சொல்வதுதான் வேதம்! அவரால் அங்கீக ரிக்கப்பட்ட சிலருக்கு மட்டும்தான் அதிகாரம்! அவரால் ஆசீர்வதிக்கப்பட்டர்களுத்தான் நிதி மூலதனம் என்று  ஆகிவிடும்! பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசி சத்தை நாம் வீழ்த்தியாக வேண்டும்! பாஜகவின் பாசிச கோர முகத்தைத் தொடர் பரப்புரையின் மூல மாகத்தான் வீழ்த்த முடியும். எல்லாவற்றிற்கும் மேல் மக்கள் நலன்தான் முக்கியம் என்ற புள்ளியில் நாம் ஒன்றாக இருக்க வேண்டும்.

சிபிஎம்-முடன் இணைந்து  போராட தயாராக

இருக்கிறோம்! ஏன் என்றால், ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும் தான், இந்தியாவில் கூட்டாட்சி காப்பாற்றப்படும்! பிரகாஷ் காரத் போன்றவர்கள் அதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்; தொடர்ந்து பாடுபடவேண்டும். உங்களோடு சேர்ந்து, நாங்களும் பாடுபடக் காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம். ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக ளுக்குமான உறவுகளை வலிமைப்படுத்த, சர்க்காரியா கமிஷனும், பூஞ்சி கமிஷனும் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று, 2012-இல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி அவர்கள் கேட்டார்.

சட்டமன்ற தீர்மானங்களை  மதிக்காத ஒன்றிய அரசு

நான் இந்த மேடையில் நின்று பிரதமர் மோடி யிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆகியிருக்கும் நீங்கள், அதை  நடைமுறைப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? சொல்ல வேண்டும். இன்னும் 2 நாட்களில் தமிழ்நாட்டி ற்கு வரப் போகிறீர்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு, அவர் வருகிற நேரத்தில் அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். பல்வேறு சட்டங்களின் மூலமாக மாநில உரிமை களைப் பறிக்கிறீர்கள். ஜிஎஸ்டி மூலமாக மாநில நிதி  உரிமையை எடுத்துக் கொண்டீர்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு அனுமதி தருவது இல்லை.

வஞ்சிக்கப்படும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள்

ஒன்றிய அரசு சார்பில் சிறப்புத் திட்டம் கொடுப்ப தில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், ஆளுநர்க ளை பாஜக மாநிலத் தலைவர்களாக மாற்றி, முழு  நேர அரசியல்வாதியாக செயல்பட வைத்து, மாநிலங்க ளின் வளர்ச்சியைத் தடுக்கிறீர்கள். பாஜகவுக்கு எதி ரான மாநில அரசுகளை மிரட்டுகிறீர்கள். ஆட்சிகள் கவிழ்க்கப்படுகின்றன; கட்சிகள் உடைக்கப்படு கின்றன; கட்சிகள் மாற கட்டாயப்படுத்தப்படு கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால்,  மாநிலங்களே இருக்கக் கூடாது என்று நினைக்கி றீர்கள்.

அரசமைப்பு சட்டத்தின்  மீதான தாக்குதல்  

அதே மாதிரிதான், வக்பு திருத்தச் சட்டம். தமிழ்நாடு சட்டமன்றத்தில், நேற்று அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் எங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தோம். ஆனால், எதையும் கேட்காமல், இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த சட்ட மசோதாவை நள்ளிரவு 2 மணிக்கு நிறை வேற்றியிருக்கிறார்கள். நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இது. இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து விட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன்.

தொகுதி மறுவரையறை பற்றி வாய் திறக்காத மோடி அரசு

அரசமைப்புச் சட்டத்தின் அங்கமான கூட்டாட்சித் தத்துவத்தைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் சிதைக்க நினைக்கிறது பாஜக அரசு. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இதைக் கடுமையாக எதிர்க்கிறோம். இதற்கு எதிராக, ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்கி, நான்கு முதல்வர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரதான கட்சி களின் பிரதிநிதிகள் சந்தித்து, ஆலோசனை நடத்தி னோம். ஏற்கெனவே உள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆனால், இன்று வரை அதற்குப் பிரதமர் மோடி அவர்கள் பதில் சொல்லவில்லை. இப்படி அரசியல் சட்ட உரிமைகளை பறிக்கும் ஆட்சியை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது. இதுதான் பாசிசம்.

ஜனநாயக சக்திகளை  திரட்டிப் போராடுவோம்!

மாநில சுயாட்சி - கூட்டாட்சி - சமூகநீதி - மதநல்லி ணக்கம் ஆகியவற்றுக்கு எதிரான - சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்! அதை உருவாக்க, இந்தியா முழு வதும் இருக்கும் ஜனநாயகச் சக்திகளைத் திரட்டு வோம். இதற்காகத்தான் திமுக குரல் கொடுக்கிறது. பொதுவுடமைத் தோழர்களும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். இணைந்து போராடுவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.