articles

img

ஸாரி; மை லார்ட்ஸ்! - சா.பீட்டர் அல்போன்ஸ்

அடுத்த சில தினங்களில் நாட்டின் 51ஆவது தலைமை நீதிபதியாக நீதிநாயகம் சஞ்சீவ் கன்னா பதவியேற்க இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிநாயகம் தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் வரும் நவம்பர் 11 அன்று ஓய்வு பெறுகிறார். இந்திய அரசியல் சாசனச் சட்டம் தன்னை பாதுகாத்துக்கொள்ள தானே உரு வாக்கி வைத்திருக்கும் ஜனநாயக நிறுவனங்களுள் உச்ச நீதி மன்றமே முதன்மை யானதும் முக்கியமானதும் ஆகும். இந்திய அரசியல் அமைப்பில் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தையும், அந்த சட்டங்களை நிறைவேற்றும் அரசு நிர்வாக இயந்திரத்தையும் கண்காணித்து, அவைகளின் செயல்பாடுகளை அரசியல் சட்ட வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்து, நெறிப்படுத்தி, இந்திய நாட் டின் குடிமக்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் “மகத்தான அதிகாரம்” நமது உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. ஒரு புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்கும்போதும்,இருந்தவர் பணி ஓய்வு பெறும்போதும், உச்சநீதி மன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும், அங்கே பணியாற் றும் நீதிபதிகளின் நடைமுறைகள் குறித்தும், ஒட்டுமொத்த நீதித்துறையின் எதிர் காலம் குறித்தும் நம்மால் சிந்திக்காமலும், பேசாமலும் இருக்கமுடியவில்லை.

நாம் பாக்கியவான்கள்?

இந்நாட்களில் வாழும் இந்தியர்கள் உண்மையிலேயே மிகவும் பாக்கியம் செய்தவர்கள்! நமது பிரதமரும், நமது தலைமை நீதிபதியும் தெய்வத்தோடு நேரில் பேசி, தெய்வத்தின் அருள் கடாட்சம் பெற்றபின்னரே தங்களது கடமை களின் நிமித்தம் செய்ய வேண்டிய பணிகளை செய்கிறார்கள். “நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை. இறைவனின் திட்டத்தை நிறைவேற்றவே இறைவனால் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்”என்று நம் பிரதமர் சொன்னபோது நாமெல்லோரும் மெய்சிலிர்த்துப்போனோமே! அதைப்போல நமது தலைமை நீதிபதியும் மிக முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளிக்கும் போதெல்லாம் ஸ்ரீராமனின் திருவுருவத்தின் முன் அமர்ந்து, தியானித்து அந்த வழக்கு சம்பந்தமாக தனக்கு என்ன அருளப்பட்டதோ அதையே தீர்ப்பாக எழுதுகின்ற தெய்வீக வல்லமை பெற்றவர்.  நாடே எதிர்பார்த்து காத்திருந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளிக்கும் முன் பகவான் ராமரிடம் “இந்த வழக்கிற்கு தீர்வு ஒன்று சொல்லுங்கள் தெய்வமே!” என்று அவர் மன்றாடினதாகவும் அவ்வாறு பெறப்பட்டதுதான் அந்த தீர்ப்பு என்றும் நமது தலைமை நீதிபதி சொன்னபின்னர்தான் நமக்கு பல விஷ யங்கள் புரிந்தது. வழக்கமாக உச்ச நீதிமன்றம் பெரும் அமர்வாக அமர்ந்து தீர்ப்ப ளிக்கும்போது  பகரப்பட்ட பெரும்பான்மை தீர்ப்பை எந்த நீதிபதி எழுதினார் என்ப தும் அதில் உடன்பட்டவர்கள் யார் என்பதும், குறிப்பிடப்பட்டு, உடன்படாதவர்கள் தனியாக தங்களது தீர்ப்பினையும் வழங்குவதுதான் உச்ச நீதிமன்றத்தின் நடை முறை. ஆனால் பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை யார் எழுதினார் என்று தெரிவிக்கப்படவே இல்லை. இறைவன் தந்த தீர்ப்பு என்று எழுத முடியாதல்லவா?  ஆனால் தில்லி உயர்நீதிமன்றத்தின் மிகச்சிறந்த நீதிபதி என அறியப்பட்ட நீதி அரசியார்  சார்மா அவர்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டப்படியும், நியாயத்தின்படியும் தவறான தீர்ப்பின் பொறுப்பினை ஸ்ரீராமரின் மீது போட்டுவிட முயற்சிக்கும் அவர் அரசியல் சட்டத்தின் மீது தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை மீறியதோடு மட்டுமல்லாமல் இந்திய நாட்டு மக்களுக்கு எதிராகவும் பெரும் துரோகத்தை இழைத்துள்ளார் என்று சந்திரசூட்டை பகிரங்கமாக கண்டித்தார்.

விடைபெறுகின்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடந்த சில நாட்களாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தனது பணி காலத்தின் போது தலைமை நீதிபதியாக மற்றும் நீதிபதியாக தனது செயல்பாடுகளைப்பற்றி யும், உச்ச நீதிமன்றத்திற்கு தனது பங்களிப்பு பற்றியும் மிகவும் பெருமிதப்பட்டு தனக்குத்தானே சிலாகித்துக்கொள்கிறார். அந்த உரிமை அவருக்கு உண்டு.  அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளை அன்றாடம் உன்னிப்பாக கவனித்துவருகின்ற சட்ட விற்பன்னர்கள், மேனாள் உச்ச நீதி மன்ற -உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் சட்ட நிபுணர்கள், அனுபவம் நிறைந்த ஊடகவியலாளர்கள், பொது நல வழக்குகள் மூலம் நாட்டு மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள், ஆளும் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகாரத் துரைத் தனத்தால் பாதிக்கப்பட்ட எதிர்க் கட்சியினர், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுயநலச் சுரண்டலால் வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் இந்த தலைமை நீதிபதியின் பணிக் காலத்தில் அவரது செயல்பாடுகள் குறித்தும், ஒட்டு மொத்த நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் என்ன மதிப்பீடுகள் வைத்துள்ளனர் என்பதையும் நாம் பதிவு செய்யவேண்டும் அல்லவா? சென்ற மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, தனது  இல்லத்தில் நடந்த விநாயகர் ஆரத்திக்கு தலைமை நீதிபதி பிரதமரை அழைத்தார். நீதிபதியும் அவரது மனைவியும் பிரதமரின் இருபுறமும் நின்று கொண்டு, விநாய கருக்கு பிரதமர் தீப ஆராதனை செய்வதும், நீதிபதியின் மனைவியார் சுலோ கங்கள் சொல்வதும், தலைமை நீதிபதி அந்த பூஜைக்கு மணியடிப்பதுமான காட்சி கள் தேசிய ஊடகங்கள் அனைத்திலும் ஒளிபரப்பப்பட்டு, சமூக ஊடகங்களிலும் பெரும் வைரலாகி கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர். தலைமைநீதிபதியின் வீட்டில் நடந்த அந்த நிகழ்வு குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்தன. உச்ச நீதி மன்றத்தின் வழக்கறிஞர் சங்கம் உட்பட பல மேனாள் நீதி அரசர்களும், பத்திரிகையாளர்களும் அது நல்ல மரபல்ல என்று சுட்டிக்காட்டினார்கள்.

ஒளிபரப்ப அவசியம் என்ன?

நரேந்திர மோடிக்கும், சந்திர சூட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தெய்வ நம்பிக்கையும், வழிபாடு செய்யும் உரிமைகளும் இருக்கக் கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. ஆனால் பிரதமரும், தலைமை நீதிபதியும் தெய்வ வழிபாடு செய்யும்போது நான்கு கேமிராக்கள் சுற்றிநின்று  படம் எடுத்து ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் கேட்கும்போது  அதில் உள்ள  நியாயத்தை நம்மால் மறுக்க முடியவில்லை. அதிலும் அதற்கு அடுத்த வாரம் மகா ராஷ்டிராவில் பாஜகவையும், அவர்களது அரசையும் பாதிக்கக்கூடிய  சிவசேனா கட்சி வழக்குகள் உட்பட ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட பல முக்கியமான வழக்குக ளில் தலைமை நீதிபதி தீர்ப்புச் சொல்ல இருந்தபோது, இப்படி பிரதமருடன் ஒரு தனிப் பட்ட சந்திப்பு சரியானதல்ல என்று சிலர் கூறுவதையும் மறுப்பதற்கில்லை.  சில நாட்களுக்கு பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமர் தனது இல்லத்திற்கு வந்தபோது இந்த வழக்குகள் சம்பந்தமாக தாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்று பரிதாபமாக ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தபோது, தலைமை நீதிபதி  தனது பதவியின் மாட்சிமை மிக்க கம்பீ ரத்தை சற்று இழந்து விட்டதாகவே நான் பார்க்கிறேன். 

யாரிடமும் கலந்தாலோசிக்காமல்...

உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து அந்த வளாகத்தில் நீதி தேவதையின் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. கிரேக்க, எகிப்திய கலாச்சாரங்க ளில் நீதியின் தெய்வமாக வணங்கப்பட்ட நீதி தேவதையின் சிலை. உலகம் முழுவதும் நீதி வழுவாத நெறிமுறையின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பல நாடுகளின் நீதிமன்றங்களில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வேறு பாடுகளையெல்லாம் பார்க்காமல், நீதி பரிபாலனம் செய்வது மட்டுமே நீதிமன்றங் களின் கடமை என்பதை உணர்த்துகின்ற வகையில் அதன் கண்கள் கருப்புத் துணியால் கட்டப்பட்டிருக்கும். ஒருபால் கோடாத நீதியின் தராசை ஒரு கையிலும், நீதியின் மாண்பையும், மாட்சிமை மிக்க அதன் அதிகாரத்தையும் விளக்குகின்ற வகையில் மற்றொரு கையில் ஓங்கிய வாளுடன் நிற்கும்.  அந்த சிலையை ஒரே நாளில் சம்பந்தப்பட்ட யாரிடமும் கலந்து ஆலோசிக் காமல் எடுத்துவிட்டு, தனது விருப்பப்படி மற்றொரு சிலையை  தலைமை நீதிபதி சந்திர சூட் அங்கே வைத்துவிட்டார். திறந்த கண்களுடன், நெற்றியில் திலகத்து டன், வாள் அகற்றப்பட்ட கையில் சட்டப் புத்தகத்துடனும், பட்டுச் சேலை கட்டிய ஒரு பெண் சிலை தற்போது அங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் தத்துவப் பின்னணியும், வரலாற்றுப் பின்புலமும் என்ன என்று யாருக்கும் புரியவில்லை.  நமது இதிகாசங்களிலும், கலாச்சாரத்திலும் இந்த தோற்றத்தில் ஒரு நீதி தேவதை இருந்ததாக எந்த இடங்களிலும் இல்லை. எந்த அடிப்படையில் இந்த சிலை உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை. “காலனி ஆதிக்கத்தின் எச்சமாக பழைய சிலை இருந்தது. அதனால் அதை எடுத்துவிட்டு பாரத கலாச்சாரம் கொண்ட ஒரு பெண்ணின் சிலை வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஆசிய நாகரிக பண்பாட்டுக் கூறு...

பழைய சிலை ஆங்கிலேய கலாச்சாரம் சார்ந்ததன்று. அது ஆசிய நாகரிக பண்பாட்டுக்கூற்றை உள்வாங்கியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரபட்சமற்ற நீதிபரிபாலனத்தின் அடையாளமாக உலகெங்கிலும் கொண்டா டப்படுவது. அதனை எடுத்துவிட்டு தனது  சொந்த கற்பனையை இந்திய திரு நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அடையாளமாக அவர் நிறுவியதை “உள் நோக்க முடையது” என்றும் நாட்டின் உச்ச கட்ட நீதிபரிபாலன நிறுவனத்திற்கு ஒரு பண் பாட்டுச் சாயம் பூச அவர் முற்படுகிறார் என்றும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறி ஞர்கள் சங்கம் உட்பட பலர் சொல்வதை உதாசீனப்படுத்த முடியவில்லை.

என்ன பதில் சொல்வீர்கள்?

இந்திய நாட்டின் அரசியல் வானில் வகுப்புவாத மதவெறி எனும் இருள் சூழ்ந்து, அரசியல் சாசனச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் நெருக்கடிக் குள்ளாக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சியும், மக்களாட்சி தத்துவமும் அழிவின் ஆரம்பப் பாதையில் நிற்கும்போது, அதனை தடுத்து நிறுத்தி, இந்தியா என்று நாம் கொண்டாடும் தத்துவத்தை பாதுகாத்துத் தர பணிக்கப்பட்டிருக்கும் உச்சநீதி மன்றத்தை, நீதிநாயகம் சந்திர சூட் எப்படி வழி நடத்தினார் என்ற கேள்வியை வரும் தலைமுறைகள் கேட்குமல்லவா? அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? தேர்தல் பத்திரங்கள் வழக்கை உடனடியாக விசாரித்து முடிக்காமல், பல்லாயி ரக்கணக்கான கோடிகளை ஆளும் கட்சி வசூல் செய்து முடித்த பின்னர், அது சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்த உங்கள் அமர்வு, பத்திரம் மூலம் பெறப்பட்ட பணத்தை திரும்ப வசூலிப்பதற்கோ அல்லது தவறாக, நன்கொடை என்ற பெயரில் வசூல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை செய்வதற்கோ நடவ டிக்கை மேற்கொள்ளப்படாதது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில்? சண்டிகர் நகர மேயர் தேர்தலை முறைகேடாக நடத்திய அயோக்கியத்தன மான அதிகாரியை குற்றவாளி என்று அறிவித்துவிட்டு, அவர் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லையே என்று விஷயம் தெரிந்தவர்கள் யாரும் கேட்கமாட்டார்களா? 

வரலாற்றுப் பிழை...

மகாராஷ்டிராவில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, ஷிண்டே,-பட்னா விஸ், -அஜித் பவார் பாவக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்திய ஆளுநரின் செயல்கள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்துவிட்டு, நடவ டிக்கை எடுக்கும் பொறுப்பை சபாநாயகரிடம் தூக்கிக்கொடுத்துவிட்டு, முறையாக நடவடிக்கை எடுக்காத சபாநாயகர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முறையற்ற அரசை பதவிக் காலம் முழுவதும் ஆட்சியில் இருக்க அனுமதித்தது மாபெரும் வரலாற்றுப் பிழை என்று நாளைய சரித்திரம் சொல்லாதா?  மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய 84 வயது ஸ்டேன்ஸ் பாதிரியாரை  நக்சலைட் தீவிரவாதி என்று பொய்வழக்கில் கைது செய்து விசாரணையே இல்லாமல் சிறையிலடைத்து, சிறையில் உயி ருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், “என் மக்கள் மத்தியில்  நான் சாக விரும்புகிறேன். அதற்காக என்னை ஜாமீனில் விடுங்கள்” என்று அவர் மன்றா டியபோது உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்காமல் அவர் சிறையிலேயே இறந்து போனாரே, அந்த வழக்கு என்ன ஆனது என்று எந்த நீதிநாயகமும் இதுவரை கேட்கவில்லையே? அது நியாயம்தானா என்று அவரது ஆன்மா கேட்காதா? இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான அதானியும், அவரது நிறுவனங்க ளும் பங்குச் சந்தையிலும், கம்பெனி சட்ட வாரியத்திலும் மிகப்பெரிய முறைகேடு களில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை அளித்தபோது, அந்த அறிக்கை தவறாக இருந்தால் அமெரிக்காவில் நீதி மன்றங்களில் ஹிண்டன்பர்க் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அதானியிடம் சொல்லாமல், ஒரு நிபுணர் குழுவை நியமித்து, அந்த குழுவும் எங்களால் முழுமை யாக விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்ன பின் னரும், அந்த அறிக்கையையே சாதகமாக்கிக்கொண்டு அதானி நிறுவனத்தி ற்கு நன்னடத்தை சான்று வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்பு முறையானதுதானா?

செவிகளை எட்டியதா?

காஷ்மீர் மாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாக மாற்ற சம்பந்தப் பட்ட மாநிலத்தின் சட்டமன்றத்தின் அனுமதி வேண்டும் என்ற அரசியல் சட்டத்தின் 371 ஆவது பிரிவின் முக்கிய உள்ளடக்கத்தை புறந்தள்ளி, சட்டமன்றம் கலைக் கப்பட்டிருந்த வேளையில், குடியரசு தலைவரே, குடியரசு தலைவரை கலந்து அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் என்ற தங்களது தீர்ப்பு மிகவும் விநோதமானது, மற்றும் வேடிக்கையானது என்று அரசியல் சாசன விற்பன்னர்கள் சொல்கிறார்களே, அது உங்கள் செவிகளை எட்டியதா? எந்த விசாரணையும் இல்லாமல், தீர்ப்பும் சொல்லப்படாமல் நான்கு ஆண்டு களாக உமர் காலித் எனும் ஏழை இஸ்லாமிய இளைஞர் சிறையிலடைக் கப்பட்டுள்ளாரே, அவருக்கு இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் உரிமைகள் ஏதாவது உண்டா? என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேட்கும் கேள்விகளின் சப்தம் எங்கள் காதுகளை செவிடாக்குகின்றனவே! உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு அது எட்ட இன்னும் எத்தனை நாட்கள் ஆகும்? சாரி !மை லார்ட்... உச்ச நீதி மன்றத்திலும், பல உயர் நீதி மன்றங்களிலும் சில நீதி அரசர்கள் நடந்துகொள்வதும், அவர்கள் பேசுவதும் நீதிபரிபாலனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன. நாங்கள் எல்லோரையும் குறைசொல்லவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரது செய்கை நீதி பரிபாலனத்தினையே களங்கப்படுத்துவதை தாங்கள் அறிவில்லையா? அப்படிப்பட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உச்ச நீதி மன்றம் தயங்குவது ஏன்? சில நீதிபதிகளின் செயல்பாடுகள்... சமீபத்தில் தனக்கு முன் வாதாடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் வழக்கறி ஞரைப் பார்த்து ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கேட்ட கேள்வி எவ்வளவு ஆபாச மானது! அதற்கு ஒரு கண்டனம் மட்டுமே போதுமானதா?அந்த நீதிபதி வருத்தம்  தெரிவித்தால் சரியாகிவிடுமா? அவரை நீக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதை அறிவோம். அந்த நீதிபதி ஆறு மாதங்களுக்கு எந்த வழக்கையும் விசாரிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளும் ஒரு அமர்வில் அமர்ந்து ஒரு உத்தரவு போடமுடியாதா? தங்களது பள்ளிவாசல்களுக்குள் இஸ்லாமியர்கள் தொழுகை செய்து கொண்டிருக்கும்போது, பாசிச வெறிகொண்ட வன்முறையாளர் கூட்டம் உள்ளே புகுந்து “ஜெய்ஸ்ரீராம்” என்று கோஷம் போடும் போது, சமூக அமைதி யைக் கெடுத்தார்கள் என்று அவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தால், “ஜெய்ஸ்ரீராம்” என்று முழங்குவது சமூக அமைதியைக் கெடுக்காது என்று கூறி, அவர்கள் மீது போட்ட வழக்கை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ரத்து செய்தா ரே அப்படிப்பட்ட தீர்ப்புகளெல்லாம் இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு சட்டத்தின் ஆட்சி மீதும், நீதி மன்றங்களின் மீதும் இருக்கின்ற நம்பிக்கையை குலைத்து விடாதா? இப்படி தீர்ப்பு எழுதுகின்றவர்களையும் நாங்கள் “நீதி நாயகம்” என்று எத்தனை நாட்கள் அழைக்க வேண்டும்.? இவைகளெல்லாம் ஓய்வு பெறப்போகும் உங்களுக்கான கேள்விகள் மட்டு மல்ல! உங்களை தொடர்ந்து உங்களது ஆசனத்தில் அமர இருக்கின்றவருக் கும், உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதி அரசர்களுக்கும் வைக்கப்படும் கேள்வி கள் மட்டுமல்ல. கோரிக்கைகளும் கூட!

ஆர்எஸ்எஸ் வழக்கறிஞர் பிரிவு நிகழ்வுகளில்...

சமீப காலமாக, பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்த பின்னர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரதீய அதிவக்த பரிஷத் (Akhil Bharatiya Adhivakta Parishad - ABAP)அமைப்பின் ஆளுகையும் செல்வாக் கும் நீதித்துறையில் மிக அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். தில்லி யிலும், மாநில தலைநகர்களிலும் அடிக்கடி கூட்டப்படும் இந்த அமைப்பின் கூட்டங்களில் இந்நாள் மற்றும் மேனாள் உச்சநீதி மன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டு, இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு பாடம் எடுப்பதும், விவாதம் நடத்துவதும் வாடிக்கையாக நடக்கின்றன. 1992 ஆம் ஆண்டு டத்தோபந்த் தெங்காடி எனும் ஆர்எஸ்எஸ் தலைவரால் ஐந்து உறுப்பி னர்களைக் கொண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று பதினைந்தாயிரம் உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் தொடுக்கின்ற வழக்குகளையும், அவர்கள் மீது தொடுக்கப்படுகின்ற வழக்குகளையும் இந்த அமைப்பை சார்ந்த வழக்கறிஞர் கள்தாம் நடத்துகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களிலும், ஒன்றிய அரசு நிர்வா கத்திலும் இந்த அமைப்பினர்தாம் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக பெரும்பா லும் நியமனம் செய்யப்படுகின்றனர். இன்று உச்சநீதிமன்றத்தில் இருக்கும் 33 நீதிபதிகளில் ஒன்பது பேர் இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தி னராக கலந்துகொள்கிறார்கள். (பி. ஆர். கவாய், சூரிய காந்த், ஜே.கே.மகேஷ் வரி, பி.வி.நாகரத்னா, பங்கஜ் மித்தல், ராஜேஷ் பிண்டல், கே.வி. விஸ்வநாதன், உஜல் புயான், பி.பி. வராலே). மாநிலங்களில் இந்த அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பல உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடிக்கடி கலந்துகொள்கின்றனர். சமீபத்தில் திண்டுக்கல்லில் இந்த அமைப்பினர் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் நமது உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரும் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். 

பார்கவுன்சிலின் தலைவரும்

இந்த அமைப்பை, தெங்காடியோடு சேர்ந்து உருவாக்கியவர்களின் பெயர்க ளைக்கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஈ.எஸ்.வெங்கட ராமையா (இவரது மகள் நாகரத்னா தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி), மேனாள் உச்சநீதி மன்ற நீதிபதி பிஸி கன்னா (வரப்போகும் தலைமை நீதிபதியின் தந்தையின் சகோதரர்), மேனாள் உச்ச நீதிமன்ற தலை மை நீதிபதி உதய் லலித்தின் தந்தை உமேஷ் தலித், பஞ்சாப் ஹரியானா மாநிலத் தின் தலைமை நீதிபதியாக இருந்த ரமாஜாய்ஸ் என்று பல மேனாள் நீதி அர சர்கள் இதன் காப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இன்று இந்த அமைப் பை சார்ந்த பல வழக்கறிஞர்கள் பல உயர்நீதி மன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மானன் மிஷ்ராவும் இந்த அமைப்பை சார்ந்தவரே. அரசியல் சட்டத்தை மாற்றாமல், தங்களுக்கு அனுசரணையாக செயல் படும் நீதித்துறையின் மூலமே தங்களது அடிப்படைக் கொள்கைகளை நிறை வேற்றிக்கொள்ள முடியும் என்று ஆர்எஸ்எஸ் உறுதியாக இருப்பதாக அவர்க ளோடு தொடர்பில் இருக்கின்றவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஒன்றிய சட்ட அமைச்சரை பார்ப்பதற்காக ஒரு மாநில சட்ட அமைச்சர் சென்றி ருந்தபோது அந்த அலுவலகத்தில் அவர் கண்ட காட்சியில் அவர் அதிர்ந்து போனாராம்! அமைச்சரின் பார்வையாளர் அறை முழுவதும் இருக்க இடமில்லா மல் உட்கார்ந்திருந்த அநேகர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாம்! தங்களது பதவி மாறுதல்களுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் சட்ட அமைச்சரை சந்திக்க வந்திருப்பதாக அங்கிருந்த ஒருவர் சொன்னதாக சொன்னார். சுதந்திரம் பெற்று, ஜனநாயகம் கிடைத்து, நம்மை நாமே சட்டத்தின் ஆட்சி மூலம் ஆளும் அதிகாரம் பெற்று இன்னும் நூறு ஆண்டுகளைக்கூட நிறைவு செய்யவில்லை. அவைகளை தொலைத்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது! சாரி! மை லார்ட்ஸ்!

கட்டுரையாளர் : மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்.