இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு மட்டும் இல்லை, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற கனவுடன் வாழும் மக்கள் அதிகம் உள்ள நாடு. அவர்களின் கனவுகளுக்கு உருவம் கொடுக்கும் பாதையில் ஆட்சியாளர்கள் நாட்டை வழிநடத்த வில்லை எனில், அம்மக்கள் வாய்ப்புத் தேடி அண்டை நாடுகளை நோக்கிப் பயணிப்பார்கள். இந்திய மக்களின் இடம் பெயர்வு கடந்த பத்தாண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவின் அடிப்படையில் மே 2024 நிலவரப்படி உலகளவில் குடிபெயர்ந்து வாழும் மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை தோராயமாக 35.42 மில்லியன்(1மில்லியன்= 10 லட்சம்)
நாடு |
புலம்பெயர்ந்துள்ள இந்தியர்கள் |
அமெரிக்கா |
5,409,062 (5.4M) |
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் |
3,568,848 (3.6M) |
மலேசியா |
2,914,127 (2.9M) |
கனடா |
2,875,954 (2.8M) |
சவுதி அரேபியா |
2,463,509 (2.5M) |
மூலம்: வெளியுறவு அமைச்சகம், இந்திய அரசு: வெளிநாட்டு இந்தியர்களின் மக்கள் தொகை பன்மைத்துவத்தின் அடையாளமாக விளங்கும் இந்திய நாட்டில், “ஒரு மொழி, ஒரு மதம், ஒரு நாடு.” என்ற சித்தாந்தத்தை திணிக்கும் விதமாகச் சமஸ்கிருதம், வேதம், சரஸ்வதி நதி என்றெல்லாம் பிற்போக்கு கருத்துக்களைப் பேசி நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் இந்த ஆட்சியாளர்களின் ஆட்சிக் காலத்தில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறதே என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தியர்களின் குடிபெயர்வுக்கான விருப்பப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
“அமெரிக்கக் கனவு,” இந்த சொற்றொடர் 1931 ஆம் ஆண்டு பெரும் மந்தநிலை (Great Depression) கால கட்டத்தில் ஜேம்ஸ் ட்ரஸ்லோ ஆடம்ஸால் பிரபலப்படுத்தப்பட்டது. அனைவரும் வெற்றியாளராவதற்கான வாய்ப்பும் சுதந்திரமும் உள்ள தேசம், என்பதே அந்த கனவுக்கு அவர் கொடுத்த பொருள். நம் மக்கள் அதை நம்புகிறார்கள்! குறிப்பாக மாணவர்கள், எவ்வளவு பணம் செலவு செய்தேனும் அமெரிக்கா சென்று விட வேண்டும் என்று விரும்புகிறார்கள். தவறில்லை!
பிப்ரவரி 5, 2025, கை கால்களில் விலங்கிடப்பட்டு அமெரிக்க இராணுவ விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கூட, “அமெரிக்கா செல்வதற்கு முகவரிடம் 56 லட்சம் கொடுத்தோம்.” என்று கலங்குகிறார்கள். அமெரிக்கக் கனவை நம்பிதான், தங்களின் வாழ்க்கைக்கான ஆதாரங்களை விற்று போலி முகவரிடம் பணம் கொடுத்து ஏமார்ந்துள்ளனர்.
அமெரிக்கக் கனவு- அதிபர் டிரம்பின்2.0-வில் உங்களின் அமெரிக்கக் கனவுக்கு எங்கள் நாட்டின் கதவுகளைத் திறக்க மாட்டோம் என்று தன் சட்டங்களின் வழியே கூறுகிறார். எச்-1பி, எஃப்-1 கட்டுப்பாடுகள், குடியுரிமை திருத்தச்சட்டம், உள்ளிட்ட பல நிர்வாக உத்தரவுகளைக் கையெழுத்திட்டுள்ளார். “Making America Great Again.” என்ற முழக்கத்தைச் சொல்லி வெற்றி பெற்ற அதிபர் ட்ரம்ப், “அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே,” என்ற அடிப்படையில் குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்கப் போகிறேன் என்கிறார். நகைப்பாகத்தான் இருக்கிறது!
அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் எச்-1பி சட்டம். “சிறப்புத் தொழில்களுக்கு,” குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்ற திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்குகிறது. தொழில்நுட்பம், சுகாதாரம், நிதி போன்ற முக்கிய துறைகளில் அமெரிக்காவில் நிலவிய திறமைகளுக்கான இடைவெளியை இந்த சட்டத்தின் வழியேதன் நிரப்பினார்கள். தொழில் துறையில் அமெரிக்கா தற்சமயம் முன்னணியில் நிற்பதற்கு இந்த எச்-1பி திட்டம் உதவியது என்பது மறுக்க முடியாத உண்மை.
நாளடைவில் இந்த சட்டம் பெரும் முதலாளிகளின் லாப வேட்டைக்கு வளைத்துக் கொள்ளப்பட்டது என்பதும் நிதர்சனம்.
1990 சட்டப்படி ஒரு நாட்டிற்கு 7 சதவிகிதம் எச்-1பி விசா மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதிபர் டிரம்ப் இந்த சதவிகிதத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்து ஆண்டு மட்டும் இந்தியர்கள் 78 சதமான எச்-1பி விசாக்கலைப் பெற்றுள்ளார்கள். டிரம்பின் இந்த நடவடிக்கை எச்-1பி விசா பெற்று அமெரிக்கா செல்ல நினைத்த பலரது கனவுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவர் கையிலெடுத்துள்ள இன்னொரு முக்கிய அஸ்திரம் குடியுரிமை சட்டம். சட்ட விரோதமாகவோ அல்லது தற்காலிக விசாக்கலில் இருக்கும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்குக் குடியுரிமை இல்லை என்ற நிர்வாக உத்தரவைக் கையெழுத்திட்டுள்ளார்.
எச்-1பி விசாவில் உள்ள ஆணோ, பெண்ணோ தன் துணைவருக்கோ, துணைவிக்கோ எச்-4 விசா ஸ்பான்சர் செய்வார்கள். இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்து விட்டால், குழந்தையும் எச்-4 விசாவில் இருக்க நேரிடும். விசா பெற, புதுப்பிக்க ஆகும் செலவு, அதில் உள்ள நிலையற்ற தன்னை போன்ற பிரச்சனைகளைப் புலம்பெயர்ந்த பெற்றோர் மட்டுமே அனுபவித்து வந்த நிலையில், இந்த சட்டம் அமலுக்கு வந்து விட்டால், அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் அதே பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
அதிபர் டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்துப் பல வழக்குகள் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. தீர்ப்பு யாருக்குச் சாதகமாக வரும் என்பது தெரியாது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் எஃப்-1 விசாவிலும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளார். அவரின் ஒரு நிர்வாக உத்தரவு எஃப்-1 விசா விண்ணப்பதாரர்களுக்குக் கடுமையான பரிசோதனையைக் கட்டாயமாக்கியுள்ளது.
OPT(OptionalPracticalTraining) முறையில் எஃப்-1 விசாக்கலில் உள்ள சர்வதேச மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு 12 மாதங்கள் வரை தங்கள் படிப்பு தொடர்பான துறைகளில் பணியாற்ற அனுமதிக்கிறது அமெரிக்கச் சட்டம்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறை பட்டதாரிகள் இந்த காலத்தைக் கூடுதலாக 24 மாதங்கள் நீட்டிக்க முடியும். இருப்பினும், இந்தத் திட்டத்தில் மேற்பார்வை இல்லை என்றும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் வாதங்கள் மேலோங்கியுள்ளது.
இந்த அரசாங்கத்தின் கொள்கை நிபுணர்கள், சில நிறுவனங்கள் போலி பள்ளிகளை உருவாக்கி, OPT மற்றும் CPT- யை (Curricular Practical Training), பயன்படுத்தி சர்வதேச மாணவர்களை அமெரிக்காவில் சட்டவிரோதமாக வேலை செய்ய அனுமதித்துள்ளன என்கிறார்கள்.
காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்ட ஒர் அறிக்கை, மாணவர் விசாக்கல் (I-20 படிவங்கள்) வழங்கும் பள்ளிகள் மீது கடுமையான விதிகளைக் கொண்டு வர வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க Entry/Exit Overstay Report, 2023 ஆம் ஆண்டில் மட்டும், இந்தியாவைச் சேர்ந்த 7,000 மாணவர்கள் தங்கள் விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ளதாகக் கூறுகிறது.
எஃப்-1 விசா வழங்குவதில் காட்டப்படும் இத்தகைய கெடுபிடிகளால் அமெரிக்கக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பல மாணவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது.
அமெரிக்கா வர விரும்புபவர்களுக்கு அதிபர் டரம்ப்2.0-வில் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளுக்கு எள்ளளவும் குறைவில்லாத இடர்பாடுகளைக் கனவுகளைச் சுமந்து கொண்டு அமெரிக்காவிற்குள் வந்து விட்டவர்களும் அனுபவித்து வருகிறார்கள்.
2022 நிலவரப்படி 49 சதவிகிதமானவர்கள் குடியுரிமைப் பெற்றவர்கள், 24 சதவிகிதத்தினர் சட்டப்பூர்வ நிரந்தர குடியேறிகள், 4 சதவிகிதம் சட்டப்பூர்வ தற்காலிக குடியிருப்போர், 23 சதவிகிதத்தினர் அங்கீகரிக்கப்படாத சட்ட விரோத குடியேறிகள். இவர்கள் கலிபோர்னியா(28%), டெக்சாஸ்(11%), புளோரிடா(10%), நியூயார்க்(10%) ஆகிய நான்கு மாநிலங்களில்தான் பெரும்பான்மையாகப் பரவி வாழுகிறார்கள்.
வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த மாநிலமான கலிபோர்னியாவில்தான் அதிகமானோர் வசிக்கிறார்கள். உலகத் தரம் வாய்ந்த கல்வி, டாலர்களில் சம்பளம், அமெரிக்கக் குடியுரிமை, இதுதான் வந்திருப்பவர்களின் ஆசை, கனவு எல்லாமே. ஆனால் அவர்களின் கண்முன் நிற்கும் நிஜம் வேறாக உள்ளது.
கனவு கண்டது போல் வாழ்வதற்கான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்கிறார்கள் அரசியல் தலைவர்களும், வல்லுநர்களும். அமெரிக்க இடதுசாரி செனட்டரான பெர்னி சாண்டர்ஸ், “அமெரிக்க முதலாளிகள் லாப நோக்கிற்காக எச்-1பி விசாவை பயன்படுத்துகிறார்கள். குறைவான சம்பளத்திற்கு ஆட்களை அழைத்து வருகிறார்கள்.” என்று விமர்சிக்கிறார்.
எச்-1பி என்பது உயர்ந்த தொழிற்நுட்ப அறிவு மற்றும் ஆராய்ச்சி முடித்தவர்களுக்கு வழங்கப்படும் விசா. அந்த திறமையில் அமெரிக்காவில் ஆட்கள் இல்லை, அதனால் வேறு நாட்டிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வர வேண்டும் என்றுதான் நிறுவனங்கள் எச்-1பி விசாவுக்கு விண்ணப்பிப்பார்கள்.
அத்தகைய திறனோடு வேலைக்கு அமர்த்தப்படும் போது, அந்த தொழிலாளர்களுக்குச் சராசரியை விட அதிக ஊதியம் வழங்க வேண்டும். வழங்குகிறார்களா? இல்லை என்கிறது ஆய்வு.
பொருளாதாரக் கொள்கை நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டு ஆய்வில், முதல் முப்பது பெரு நிறுவனங்கள் எச்-1பி-யில் அவுட்சோர்சிங் முறையைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது. அவர்கள் எச்-1பி தொழிலாளர்களை நேரடியாக பணியில் அமர்த்தாமல், வேறொரு சிறிய நிறுவனத்தின் பெயரில் அழைத்து வந்துதங்கள் நிறுவனத்தின் அடிப்படை வேலைகளில் பயன்படுத்துகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.
தொழிலாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தப்படும் போது, அவர்களுக்கான நியாயமான ஊதியம், மருத்துவ இன்சூரன்ஸ் போன்ற எதையும் அந்த பெரு நிறுவனங்கள் வழங்குவதில்லை.
குடியேற்றச் சீர்திருத்தத்திற்கான நிர்வாக இயக்குனர் கெவின் லின், “இந்த விசா வணிக நிறுவனங்களின் லாப நலன்களுக்காக வடிவமைக்கப்பட்டது. அந்த நோக்கம்தான் செயல்பாட்டில் உள்ளது.” என்கிறார்.
NumberUSA-வின் ஆராய்ச்சி மற்றும் நிலைத்தன்மை இயக்குனர் எரிக் ருவார்க், “ஒரு முதலாளிக்கு உண்மையிலேயே ஒரு தனித்துவமான பதவிக்கு எச்-1பி பணியாளர் தேவைப்பட்டால், அந்நிறுவனம் அவருக்கு பிரீமியம் சம்பளத்தை வழங்க வேண்டும்.” என்கிறார்.
கெவின் லின் கூறியது போல பெரும் நிறுவனங்களின் லாப கனவுக்குத் துணை போகும் இந்த எச்-1பி விசாவில் வேலை செய்பவர்களின் கனவுகள் காற்றில் கரைந்து விட்டது என்பதுதான் உண்மை.
எதார்த்தத்தில் எச்-1பி தொழிலாளர்களின் நிலையை, Handcuffed situation என்றுதான் சொல்ல வேண்டும். எச்-1பி விசா, கிரீன் கார்டு, இவ்விரண்டும் நிறுவனத்தின் ஸ்பானசர்ஷிப்பின் அடிப்படையிலேயே விண்ணப்பிக்க முடியும். அந்த காலகட்டத்தில் அந்நிறுவனத்தோடு தொழிலாளிக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு அவர் பணியிலிருந்து விலக்கப்பட்டால், அவரின் விண்ணப்பம் ரத்தாகி விடும். அவர் எச்-1பியில் இருந்தால், அடுத்த 60 நாட்களுக்குள் எச்-1பி விசா ஸ்பான்சர் செய்யக் கூடிய வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து விட வேண்டும். அப்படி அவரால் வேலை வாங்க முடியாத போது, அவருடைய சட்டப்பூர்வ குடியுரிமை ரத்தாகி விடும். அந்த தொழிலாளி நாடு திரும்புவதைத்தவிர வேறு வழி இல்லை.
குறைவான சம்பளம், கடுமையான பணிச்சூழல், பாரபட்சமான பதவி உயர்வு இப்படி எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் வாய்மூடி மௌனியாக இருப்பதைத் தவிர எச்-1பி ஊழியருக்கு வேறு வழி இல்லை. சர்வதேச தொழிலாளிகளின் இந்த கைவிலங்கு நிலையைப் பெரு நிறுவனங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
வேலை, சம்பளம், செலவுகள் என்று இயந்திர தன்மையோடு ஓடிக் கொண்டிருந்த சர்வதேச குடியேறிகளின் வாழ்கையை அதிபர் டிரம்பின்2.0 பொருளாதார ரீதியிலும் நிலையற்றதாக மாற்றி விட்டது. அதிகப்படியான பணவீக்கம், பங்குச் சந்தை சரிவு, என்று இங்குள்ளவர்களின் தலைமேல் கத்தி தொங்கிக் கொண்டே இருக்கிறது.
எஃப்-1 விசாவில் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து விட்டு வேலைக்காகக் காத்திருக்கும் மாணவர்களின் கனவுகளும் பிரகாசமாக இல்லை. யூசி பெர்க்லி போன்ற சிறந்த பல்கலைக்கழகங்களில் பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்ற சில மாணவர்களுக்கே வேலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. லாட்டரி அடிப்படையில் ஏழு சதவிகித எச்-1பி முறை கட்டாயமாக்கப்பட்டதினால் சர்வதேச மாணவர்களை OPTயில் பணியமர்த்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
அதிபர் டிரம்ப் 2.0-க்கு முன்பு இந்த OPT-யில் வேலை கிடைப்பதில் இந்திய மாணவர்களுக்கு அவ்வளவு சிரமம் இருக்காது. மூன்று வருடம் OPT காலம் முடியும் தறுவாயில் நிறுவனம் அவர்களுக்கு எச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்துவிடும். ஆனால் தற்சமயம் எச்-1பி விசா கிடைப்பதில் இருக்கும் நெருக்கடி காரணமாகச் சர்வதேச மாணவர்களை பணியமர்த்தி பயிற்சிக் கொடுப்பதை வீண் என்று நிறுவனங்கள் கருதுகிறார்கள்.
அமெரிக்கக் கனவுக்காக லட்சக் கணக்கில் கல்விக் கட்டணம் செலுத்திப் படித்த திறமையான பல சர்வதேச மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை என்பதுதான வருத்தமான உண்மை.
சுகாதாரத் துறை உட்படப் பல அடிப்படைத் துறைகளையே தனியார் வசம் கொடுத்து விட்ட அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாட்டில், குடியேறிகள் மட்டுமல்ல உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஏழை எளிய அமெரிக்கர்களின் கனவுகளுக்கும் எந்த அர்த்தமுமில்லை.
மனித வளமும், இயற்கை வளமும் ஒருங்கே அமைந்திருக்கும் இந்திய நாட்டில், முன்னேற்றம் தேடி அமெரிக்கா உள்ளிட்ட பல அயல் நாடுகளுக்கு மக்கள் குடிபெயரும் அவல நிலையை மாற்றிட வேண்டும். இடதுசாரிகள் பலம் பெறுவதன வழியேதான் அந்த மாற்றம் சாத்தியப்படும்.
- பூங்குழலி தனசேகரன்