articles

img

பட்டினி: முடிந்து போன விஷயமல்ல, நம் காலத்தின் கதை....

1998ஆம் ஆண்டு மே மாதம்உலக சுகாதார நிறுவனத்தின் பொது சபையில் கியூப புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ பேசுகையில், “வறுமையும், பட்டினியும் தான் உலகின் மிகப் பெரும் துன்பமாக நீடித்துக்கொண்டிருக்கிறது. போரினாலோ, இனப் படுகொலையினாலோ அல்ல, பட்டினியாலும், வறுமையாலும் தான் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நாளும் இந்த பூமியில் பலர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.அதற்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு உலக சுகாதார நிறுவனம் பட்டினிச் சாவுகள்குறித்து தரவுகளை திரட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி ஆண்டுக்கு 90 லட்சம் பேர் பட்டினியால் இந்த புவியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள், அதில் 60 லட்சம் பேர் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். அதாவது வறுமை, பட்டினி காரணமாக ஒவ்வொரு நாளும் 25 ஆயிரம் பேர் இந்த நாகரிக உலகில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பின்னணியில் உலகில் 2030ஆம் ஆண்டுவாக்கில் பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவது, உணவுப்பாதுகாப்பு, ஊட்டச்சத்து வழங்குவதை மேம்படுத்துவது, நீடித்த வேளாண்மை வளர்ச்சியைமுன்னேற்றுவது என்று 2015ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் சபை இலக்கு நிர்ணயித்தது.

அந்த அறிக்கை வெளி வந்து ஆறாண்டுகளுக்குப் பிறகு கொரோனா பெருந்தொற்று காலத்தில், முதலாளித்துவ அமைப்பு முறையின் பாரபட்சமும், புறக்கணிப்பும் மேலும்ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஒருபக்கம் உலகின் பெருங்கோடீஸ்வரர்களின் (பில்லியனர்கள்) சொத்து பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. அதேசமயம் உலகில் மிகப் பெரும்பான்மை மக்கள் ஒவ்வொரு நாளும், அடுத்த வேளை உணவை எதிர்பார்த்துப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

பட்டினி வைரஸ்
2020 ஜூலை மாதம் ஆக்ஸ்பாம் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது பட்டினி வைரஸ் என்று குறிப்பிட்டு, பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டில் நாளொன்றுக்கு12ஆயிரம் பேர் பட்டினியுடன் தொடர்புடைய சமூக, பொருளாதார பாதிப்புகளால் செத்துக்கொண்டிருந்தனர். ஆனால் பெருந்தொற்றுக்காலத்தில் அதைவிட மிக அதிகமானோர் ஒவ்வொரு நாளும் சாகக்கூடும் என்று கூறியது. 2021 ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை, 2030ஆம் ஆண்டு எட்டுவதாக நிர்ண
யிக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்கில் இருந்து, இந்த உலகம் வெகு தூரம் தடம்புரண்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளது. 

230 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், அதாவதுஉலக மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் ஆண்டு முழுவதும் போதுமான உணவுகிடைக்காமல் பற்றாக்குறையில் சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இது மிக மோசமானஉணவு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது 2020ஆம் ஆண்டில் உலகில் மூன்று பேரில் ஒருவர் போதுமான உணவு பெறவில்லை. போதுமான உணவு கிடைக்காதவர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில்32 கோடி பேராக அதிகரித்துள்ளது. பட்டினி பொறுக்க முடியாததாக மாறிவிட்டது. தென்னாப்பிரிக்காவில் தற்போது உணவுக் கலவரம் நடக்கத் தொடங்கிவிட்டது. “அவர்கள் பசியால் எங்களைக் கொலைசெய்கிறார்கள்” என்று டர்பன் நகரவாசிஒருவர் கூறியிருக்கிறார். இந்த போராட்டமும்,
ஐஎம்எப், ஐநா வெளியிட்டுள்ள அறிக்கைகளும் உலகின் முக்கிய அஜெண்டாவாக பட்டினிமுன்னுக்கு வந்திருப்பதை காட்டுகின்றன.

எண்ணற்ற சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளும் இதே போன்ற நிலையைத்தான் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக கொரோனா  பெருந்தொற்றின் விளைவாகஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் பட்டினியையும், உணவு பாதுகாப்பின்மையையும் அதிகரித்திருக்கின்றது. ஆனால் பலர் இந்தபட்டினி தவிர்க்க முடியாதது, சர்வதேச நிறுவனங்கள் கடன், உதவித் திட்டங்கள் மூலம்மனித இனத்தின் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

முதலாளித்துவ முறையின் இயல்பு
மிகப் பெரும்பான்மையான மக்கள் உடைமை ஏதுமில்லாதவர்களாக இருப்பதால்தான் பட்டினி பூமியில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. கிராமத்திலோ, நகரத்திலோ உங்களுக்கு நிலம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லாவிட்டால் உங்களுக்கான சொந்த உணவை நீங்கள் பெற முடியாது. உங்களிடம் நிலம் இருந்து, விதையும், உரமும் கிடைக்காவிட்டாலும், நீங்கள் விவசாயி ஆக இருக்க முடியாது. உங்களுக்கு நிலமும்இல்லாமல், உணவு வாங்க பணமும் இல்லாவிட்டால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் பிரச்சனையின் வேர். முதலாளித்துவ ஒழுங்கு முறை இதைகண்டு கொள்வதில்லை. முதலாளித்துவத்துக்கு பணமே பிரதானம். நகரம் மற்றும் கிராமப்புற நிலம் என்பதை சந்தையின் மூலமாகதீர்மானிக்க வேண்டும் என்பதே அந்த முறையின் அடிப்படை. உணவு என்பதும் முதலாளிகள் லாபம் ஈட்டக்கூடிய மற்றுமொரு விற்பனைப் பண்டம். அவ்வளவுதான்! மிகப்பெரும்பஞ்சம் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக மிதமான உணவுப் பாதுகாப்பு திட்டங்களை அவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள். முதலாளித்துவத்தின் கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் முதல் சூப்பர் மார்க்கெட்டுகள் வரை அரசின் மானியத்தைப் பெறுவதற்காக இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

கடந்த பத்தாண்டுகளுக்கு உள்ளாக உணவு உற்பத்தியை உலக விநியோகச் சங்கிலிக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எளிதாக சந்தைக்கு கொண்டு செல்ல முடியாது. ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள பதப்படுத்துதல், போக்குவரத்து, உணவு பேக்கிங் செய்து பல்வேறு சில்லரை விற்பனைக்கடைகளுக்குக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றைக் கொண்ட கார்ப்பரேட் கட்டமைப்புக்குள், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதுவும் கூட அவ்வளவு எளிதானதாக இல்லை. 

உலக நிதி மூலதனம் ஏற்கெனவே விவசாயிகளை ஊகவணிகத்துக்குள் சிக்கவைத்துவிட்டது. 2010ஆம் ஆண்டில் உணவு உரிமைகுறித்த அறிக்கையாளர் ஆலிவர் டி ஸ்கட்டர், “ஹெட்ஜ் நிதி, பென்சன் நிதி, முதலீட்டுவங்கி ஆகியவை விவசாயத்தின் மீது ஊகவணிகத்தை திணித்துவிட்டன. இந்த பெரு நிதி நிறுவனங்கள் பொதுவாக வேளாண்மைச்சந்தையின் அடிப்படையைப் பற்றி அக்கறைப்படுவதில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஒருமைப்பாடும் பங்களிப்பும்
பட்டினி என்பது நம் காலத்தின் கதையாக உள்ளது. அதேபோல் ஒருமைப்பாடும் கூடநம் காலத்தின் கதையாகத்தான் இருக்கிறது.திட்டமிட்டு  அமைப்புரீதியாக சீரழிக்கப்படுவதும், அரசு கைவிடுவதும் நடக்கும்போது ஒன்றுபடுவதுதான் பிழைத்திருப்பதற்கான ஒரு வழியாக இருக்கிறது. மக்கள்தொகையின் மிகவும் கொடுமையான பாதிப்பைச் சந்திக்கும் இந்த பிரிவு வாழ்வதற்கு உணவு விநியோகம், உணவு தானியங்கள் வழங்குவது, அடிப்படை சுகாதார உதவிகள் செய்வது, பொது சுகாதார பயிற்சி அளித்து வைரஸ் தொற்றுபரவலைத் தடுப்பது ஆகியவற்றில் மக்கள்இயக்கங்கள் ஒருமைப்பாட்டுடன் பங்களித்துள்ளன. அந்த இயக்கங்கள் தங்களிடம் இருந்த உபரியைக் கொடுக்கவில்லை. மாறாக தங்களிடம் என்ன இருந்ததோ அந்தகுறைவான அளவில் இருந்துதான் இந்த உதவியைச் செய்துள்ளன. இத்தகைய செயல்பாடுகள் தேவைப்படும் நேரத்தில் உதவிக்கரம் நீட்டும், ஏதோ சிறு மனித உதவி  மட்டுமல்ல, அவை பட்டினி பிரச்சனைக்கு அமைப்புரீதியாக தீர்வு காண விளையும் உலகளாவிய இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளன. 

உணவு வழங்க வேண்டும்
இத்தகைய இயக்கங்களின் அனுபவத்தில் இருந்து சமூக ஆய்வுக்கான டிரைகாண்டினண்டல் நிறுவனம் பத்து கோரிக்கைகளை உருவாக்கி உள்ளது. அவை பின்வருமாறு: 

அவசர கால உணவு விநியோகத்திற்கு சட்டமியற்ற வேண்டும். அரசுகள் கட்டுப்பாட்டில் உள்ள உபரி உணவுப் பொருள் இருப்புகளை பட்டினியை போக்குவதற்காக திருப்பிவிட வேண்டும். அரசுகள் தங்கள் கணிசமான வளங்களைமக்களுக்கு உணவளிக்க வழங்க வேண்டும். பெரிய வேளாண் வர்த்தகர்கள், சூப்பர் மார்க்கெட் மற்றும் ஊக வணிகக்காரர்கள் ஆகியோரிடம் இருந்து உபரி உணவை பறிமுதல் செய்து உணவு விநியோக கட்டமைப்பில் அனைவருக்கும் வழங்க வேண்டும். மக்களுக்கு உணவு வழங்க வேண்டும். அதாவது மளிகைச் சாமான்கள் வழங்குவது மட்டும் போதுமானதல்ல, அரசுகள் பொது அமைப்புகளுடன் சேர்ந்து சமுதாய சமையல்கூடங்களை உருவாக்கி மக்கள் உணவு பெறக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். 
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அறுவடை செய்வதற்கு சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ள அரசுகள் ஆதரவளிக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகள்படி அறுவடை நடைபெறுவதை அரசுகள் உத்தரவாதம் செய்ய வேண்டும். 

விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள்உள்ளிட்ட பொது முடக்கக் காலத்தில் வேலைசெய்ய முடிந்தவர்கள், முடியாதவர்கள் எனஅனைவருக்கும் வாழ்வதற்கான ஊதியத்தைவழங்க வேண்டும். பிரச்சனை தீர்ந்த பிறகும்கூட இதைத் தொடர வேண்டும். 

உலக வங்கியின் “அறிவுரை”
உணவு அல்லாத பணப்பயிர்களை பெருமளவு உற்பத்தி செய்வதற்கு மாறாக, உணவுப் பயிர்கள் வளர்ப்பதற்கு விவசாயிகளுக்கு நிதி உதவி ஆதரவளிக்க வேண்டும். ஏழை நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை விவசாயிகள் பணப்பயிர்கள் விளைவிக்கிறார்கள். அது பணக்கார நாடுகளில் அவர்களது பூகோள தட்பவெப்ப நிலையில் வளர்க்க முடியாத பயிர்களாக உள்ளன.சுவீடனில் காபி, மிளகு விளைவிப்பது மிகவும்கடினமாகும். ஏழை நாடுகள் டாலர் சம்பாதிப்பதற்காக பணப்பயிர்களில் கவனம் செலுத்துங்கள் என உலக வங்கி “அறிவுரை” கூறுகிறது. ஆனால் சிறு விவசாயிகள் தங்கள் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் அளவுக்கு போதுமான அளவுக்கு வளர்க்க முடியாது. 

மனிதகுலத்தின் பிற பகுதிகளைப் போலவே, இந்த விவசாயிகளுக்கும் உணவுப்பாதுகாப்புத் தேவை. உலகளாவிய ஒரே விநியோக முறைக்கு மாறாக, அந்தந்த மண்டலத்திற்கு ஏற்ற உணவு விநியோக சங்கிலியை மறு கட்டுமானம் செய்ய வேண்டும். உணவு விசயத்தில் டெரிவேட்டிவ், முன்பேர வர்த்தக சந்தை போன்ற சூதாட்ட ஊக வணிகத்தை தடை செய்ய வேண்டும்.சந்தையின் தர்க்க விதிகளுக்கு வெளியே,நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் நிலத்தை விநியோகம் செய்ய வேண்டும். உணவு உற்பத்தி செய்து உபரியை கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட்டுகள் கட்டுப்படுத்தாமல் அதற்கு வெளியே விநியோகம்செய்வதற்கான சந்தையை நிறுவ வேண்டும்.மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் நேரடியாக உணவு முறையை கட்டுப்படுத்த வேண்டும்.1978ஆம் ஆண்டு அல்மா அட்டா பிரகடனப்படி உலகளாவிய அனைவருக்குமான சுகாதார கட்டமைப்பை கட்ட வேண்டும். சுகாதார அபாய நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவலுவான பொது சுகாதார அமைப்பை தயார்ப்படுத்த வேண்டும். அத்தகைய கட்டமைப்பு ஊரகப் பகுதிகளிலும் அனைத்துத் தரப்பினரும் பயன் பெறக்கூடியதாக இருக்கவேண்டும்.

நம் காலத்தின் கதையாக பட்டினி இருக்குமானால், அந்த பட்டினிக் கதையை நாம்சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அர்ஜெண்டினா, பிரேசில், மொராக்கோ, இந்தியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய ஆறு நாடுகளின் பட்டினி வைரஸ் பற்றிய அளவீட்டின் மூலம் இந்த விவரம் உருவாக்கப்பட்டுள்ளது.  மக்கள்இயக்கங்கள் பட்டினி இல்லாத உலகம் என்பதற்கான புதிய பாதையை உருவாக்க இப்போதுவேலை செய்து கொண்டிருக்கின்றன. 

கட்டுரையாளர்கள் : பேரா.விஜய் பிரசாத், பிரசாந்த்,ஜோயி அலெக்ஸாண்ட்ரா

நன்றி : பீப்பிள்ஸ் டிஸ்பேட்ச் இணைய ஊடகம், ஆகஸ்ட் 12, 

தமிழாக்கம்: வே.தூயவன்