articles

img

மக்கள்தொகை வீழ்ச்சி: சவால்களும் சிக்கல்களும் - பிரிஸ்சிலா ஜெபராஜ்

இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி யில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பல்வேறு சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போதைய நிலை

சமீபத்தில் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் நிலவும் குறைந்த பிறப்பு விகிதம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக ஆந்திர முதல்வர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிக குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளார். இது மக்கள்தொகை வீழ்ச்சியின் தீவிரத்தை காட்டுகிறது.

மாநில அளவிலான பாதிப்புகள்

கடந்த பல தசாப்தங்களாக இந்தியாவில் குடும்பக்கட்டுப்பாட்டு கொள்கைகள் வெற்றிகர மாக செயல்படுத்தப்பட்டன. ஆனால் இந்த வெற்றியே இன்று சில எதிர்மறையான விளைவு களை ஏற்படுத்தியுள்ளது. 2019-21 கால கட்டத்தில் மத்திய பதிவாளர் அலுவலக புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.4 ஆக குறைந்துள்ளது. அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் 1.5 ஆக உள்ளது. மாறாக, வட இந்திய மாநிலங்களான பீகார் (3.0), உத்தரப்பிரதேசம் (2.7), மத்தியப்பிரதேசம் (2.6) ஆகியவற்றில் கருவுறுதல் விகிதம் அதிகமாக உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு வளர்ச்சி  விகிதம் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி யுள்ளது.

முதுமை மக்கள்தொகையின் தாக்கம்

‘இந்தியா ஏஜிங்’ அறிக்கையின்படி, 2021ல் நாட்டின் முதியோர் மக்கள்தொகை 10.1% ஆக இருந்தது. இது 2036ல் 15% ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே முதியோர் மக்கள்தொகை 16.5% ஆக உள்ளது. 2036ல் இது 22.8% ஆக உயரும். ஆந்திராவில் 19.9% ஆகவும், பீகாரில் வெறும் 11.9% ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார விளைவுகள் முதியோர் சார்பு விகிதம் (ஒவ்வொரு 100 பணி யாளர்களுக்கும் உள்ள முதியோர் எண்ணிக்கை) அதிகரித்து வருவது கவலைக்குரியது. பல  மாநிலங்கள் ஏற்கனவே 15% என்ற அபாயகர மான எல்லையைக் கடந்துவிட்டன. பீகாரில் 26.1%, தமிழ்நாட்டில் 20.5%, இமாச்சலில் 19.6%, ஆந்திராவில் 18.5% என மற்றவர்களைச் சார்ந்திருக்கும் முதியோர் விகிதம் உள்ளது.

சுகாதார செலவினங்கள் அதிகரிப்பு

முதுமை மக்கள்தொகை அதிகரிப்பால் சுகாதார செலவுகள் பெருமளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மாதிரி சர்வே (NSSO) தரவுகளின்படி, தென் மாநிலங்கள் ஏற்கனவே நாட்டின் மொத்த சுகாதார செலவில் 32% செலவிடுகின்றன. இது 2017-18ல் இருதய நோய்களுக்கான செலவில் மட்டும் 24% ஆக இருந்தது. அரசியல் தாக்கங்கள் 2026ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறையில் மக்கள்தொகை குறைவால் தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். ஜேம்ஸ் மற்றும் கிர்டி ஆய்வின்படி, மக்களவையில் உத்தரப்பிரதேசம் 12 இடங்களும், பீகார் 10 இடங்களும், ராஜஸ்தான் 7 இடங்களும் கூடுதலாகப் பெறும். மாறாக, தமிழ்நாடு 9 இடங் களையும், கேரளா 6 இடங்களையும், ஆந்திரா 5 இடங்களையும் இழக்க நேரிடும். முன்மொழியப்படும் தீர்வுகள் தென் மாநில முதலமைச்சர்கள் “புரோ- நேட்டலிஸ்ட்” (பிறப்பு ஊக்குவிப்பு) கொள்கை களை முன்மொழிகின்றனர். ஆனால் சர்வதேச மக்கள்தொகை ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் கோலி கூறுகையில், “இது சர்வதேச அளவில் வெற்றி பெறாத அணுகுமுறை. பெண்களை இனப்பெருக்க இயந்திரங்களாக பார்க்கும் போக்கு தவறானது” என்கிறார்.

அவர் பின்வரும் தீர்வுகளை முன்மொழிகிறார்:

z குடும்பக் கொள்கைகளில் மாற்றம் z பெண்களுக்கு ஊக்கத்தொகை z தாய்மை மற்றும் தந்தை விடுப்புகள் z குழந்தை பராமரிப்பு வசதிகள் z “தாய்மை தண்டனை”யைக் குறைக்கும் கொள்கைகள் z பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல் z பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றொரு அணுகுமுறை, பணி வாழ்க்கைக்  காலத்தை- அதாவது ஓய்வு வயதை அதிகரிப்ப தாகும். இது முதியோர் சார்பு விகிதத்தைக் குறைக்க உதவும். (ஆனால் வேறு பல பாதகமான விளைவு களை ஏற்படுத்தும்). தென் மாநிலங்கள் ஏற்கனவே பொருளாதார புலம்பெயர்வாளர் களை ஈர்க்கின்றன. இருப்பினும், இந்த புலம்பெயர் வாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களிலேயே வாக்காளர்களாக கணக்கிடப்படுவதால், இது நிதி பகிர்வு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் தென் மாநிலங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகிறது

ஒருங்கிணைந்த  அணுகுமுறை தேவை

மக்கள்தொகை வீழ்ச்சி என்பது வெறும் எண்களின் பிரச்சனை அல்ல. அது சமூக, பொரு ளாதார, அரசியல் மற்றும் கலாச்சார மாற்றங் களை உள்ளடக்கியது. இந்த சவால்களை சமா ளிக்க ஒருங்கிணைந்த, நீண்டகால அணுகுமுறை தேவை. குறிப்பாக தென் மாநிலங்களின் வளர்ச்சி யையும், ஒன்றிய-மாநில உறவுகளையும் பாதிக் காத வகையில் தீர்வுகள் காணப்பட வேண்டும். அதே நேரத்தில் பெண்களின் உரிமைகளையும், சமூக முன்னேற்றத்தையும் பாதுகாக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.  தி இந்து (ஆங்கிலம்) நவ. 10 இதழில் வெளியான கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம்