அமித் ஷாவின் சொற்கள் விஷம் தோய்க்கப்பட்டவை. அவரது எள்ளல் நையாண்டி தொனி எவரையும் கோபமடையச் செய்யும். அவர் இப்படி பேசிய பின் பாஜகவினரின் சிரிப்பொலி வெந்த புண்ணில் கொள்ளியால் சுடுவது போல் இருந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தன் 75-ஆவது ஆண்டு இது. அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்று உறுதி ஏற்க இந்த ஆண்டினைக் கொண்டாடுவது இந்தியக் குடிமக்களின் கடமை. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்த ஆர்எஸ்எஸ், மதவெறிக் கொள்கையின் பிரதிநிதி களின் அரசால் அது கொண்டாடப்படுவது வரலாற்று முரண். இருப்பினும் ஜனநாயகத்தின் ஒரு அம்சமாக இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் வரை அதானி விவகாரம், மணிப்பூர் பிரச்சனை, மசூதிகளில் கோவில் தொல்லி யல் ஆய்வு ஆகியவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி கள் வலியுறுத்தின. இதனால் ஏற்பட்ட அமளியால் அவை நடவடிக்கைகள் முடங்கின. ஆனால் அர சமைப்புச் சட்டம் பற்றிய விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் வழிவிட்டன. இது ஜனநாயகத்தின் மெச்சத் தகுந்த அம்சம்.
விஷம் தோய்ந்த சொற்கள்; மேல் சாதி மனோபாவம்
விவாதத்திற்கு பதிலுரை என்ற பெயரில் மக்களவை யில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மாநிலங்கள வையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி னார். இவர்கள் அரசமைப்புச் சட்டத்தை மேன்மைப் படுத்தவில்லை. மாறாக இரு அவைகளையும் பாஜக வின் அரசியல் பொதுக்கூட்ட மேடைகளாக்கிவிட்டனர். அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கருக்கு எதிர்க்கட்சிகள் புகழாரம் சூட்டியதை ஆளும் பாஜக வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “அம்பேத்கர் ... அம்பேத்கர் ... அம்பேத்கர்... என்று சொல்வது இப்போது ஃபேஷனாகிவிட்டது. அவர்கள் கடவுளின் பெயரை பலமுறை உச்சரித் திருந்தால் அவர்களுக்கு ஏழு ஜென்மத்திற்கும் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” அமித் ஷாவின் இந்த சொற்கள் விஷம் தோய்க்கப் பட்டவை. அவரது எள்ளல் நையாண்டி தொனி எவரையும் கோபமடையச் செய்யும். அவர் இப்படி பேசிய பின் பாஜகவினரின் சிரிப்பொலி வெந்த புண்ணில் கொள்ளியால் சுடுவது போல் இருந்தது. “இந்து ராஜ்யம் உருவானால் அது சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும். இந்து ராஜ்யத்தை எந்த விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும்” என்ற கருத்தினை முன்வைத்தவர் அம்பேத்கர். இதனால் அவர் வாழ்ந்த போது அவரை வெறுத்து ஒதுக்கியது ஆர் எஸ் எஸ் . அந்த மேல்சாதி மனோபாவம் இன்றும் நீடிப்பதன் வெளிப்பாடுதான் மாநிலங்களவையில் அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு.
அரசியல் நிர்ணய சபையில் பட்டியலிடப்பட்ட 306ஏ
அம்பேத்கர் பற்றி பேச காங்கிரசுக்கு தகுதி இல்லை என்பதாக அவர் உரையை தொடர்ந்தார். அதிலும் சொத்தையான வாதங்களை வரலாற்றிலிருந்து துண்டித் தெடுக்கப்பட்ட திரிபு வாதங்களை முன் வைத்தார். 370-ஆவது பிரிவில் அம்பேத்கருக்கு உடன்பாடு இல்லை என்று ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் அபத்த மான வாதத்தை அவரும் முன் வைத்தார். உண்மையில் இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தப் பிரிவு 306ஏ எனப் பட்டியலிடப்பட்டிருந்தது. இது ஏன் 370 என மாறியது? இதற்கு 1947 இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள விடாமல் இன்றைய இளைய தலைமுறையை தடுக்கிறவர்கள் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள். இஸ்லாமியர்கள் அடர்த்தியாக வாழ்ந்த ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்தவர் மகாராஜா ஹரி சிங். அவர் இந்தியாவிலும் சேராத, பாகிஸ்தானி லும் சேராத சுதந்திர காஷ்மீர் கோரினார். பிரிவினை பதற்றத்தைப் பயன்படுத்திக்கொண்டு காஷ்மீர் மீது பாகிஸ்தான் படை எடுக்கத் துணிந்தது. இதனைத் தடுக்க ஹரி சிங் இந்திய அரசு மூலம் ராணுவ உதவிக்கு வருகிறார். இதற்கான நிபந்தனையாகத் தான் 370-ஆவது பிரிவு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் அம்பேத்கர் அல்ல.
படேல் மேற்பார்வையில் உருவான பிரிவு 370
ஜம்மு-காஷ்மீர் விஷயத்தில் அம்பேத்கர் மாறு பட்ட கருத்து கொண்டிருந்தார். அண்டை நாட்டுடன் தீராத பகையும் ஓயாத சண்டையும் இருக்கக் கூடாது என்பது அவரது கருத்தின் அடிநாதமாக இருந்தது. அந்தக் கருத்து அவரின் தனிப்பட்ட உரிமை சார்ந்தது. அது அவரது பணியில் குறுக்கிடவில்லை. அதுதான் ஜனநாயகம். என். கோபாலசாமி ஐயங்கார் தமிழ்நாட்டின் தஞ்சா வூர் மாவட்டக்காரர். ஐசிஎஸ் பயின்று அரசுப் பணி களில் இருந்தவர். மகாராஜா ஹரி சிங்கிடம் திவானா கவும் இருந்துள்ளார். 1947-இல் பண்டித நேரு தலைமை யில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரவையில் துறை பொறுப்பு இல்லாத அமைச்ச ராக கோபாலசாமி ஐயங்கார் நியமிக்கப்பட்டார். ஜம்மு - காஷ்மீரோடு நெருக்கமான தொடர்பு கொண்ட இவ ரது தலைமையிலான குழுதான் 370-ஆவது பிரிவை வடிவமைத்தது. இதற்கு ஷேக் அப்துல்லா உள்ளிட்ட நான்கு காஷ்மீர் தலைவர்கள் உதவி செய்தனர். இதனை சர்தார் வல்லபாய் படேலும் மேற்பார்வையிட் டார். இந்த வரலாற்று உண்மைகளை வசதியாக மறைத்துவிட்டு அரையும்குறையுமாகத் திரித்துப் பேசு வதுதான் ஆர்எஸ்எஸ் பாணி. அதனால் வளர்க்கப் பட்ட அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு வேறு எப்படி இருக்கும்?
370க்கு - அம்பேத்கர் எதிர்ப்பு என்பது ஆர்கனைசர் ஏட்டின் கட்டுக்கதை
370-ஆவது பிரிவை அம்பேத்கர் எதிர்த்தார். இது குறித்து ஷேக் அப்துல்லாவுக்குக் கடிதம் எழுதினார் என்று ஒரு தவறான மேற்கோள் உலவுகிறது. இந்த மேற்கோளை முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் தனது நூலில் பதிவு செய்திருக் கிறார். இன்னும் வேதனையான விஷயம் ஒன்று உண்டு. 2019 ஆம் ஆண்டு 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட போது பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் ஒன்றிய சட்டஅமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் இதே மேற்கோளை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். உண்மையில் இப்படியான ஒரு மேற்கோள் அம்பேத்கர் நூல் எதிலும் இல்லை. ஆர்எஸ்எஸ் ஊதுகுழலான ஆர்கனைசர் இதழில் 2004-ஆம் ஆண்டு புனைந்து எழுதியவர் பால்ராஜ் மதோக் என்பவர். இது பின்னர் உண்மை சரிபார்ப்பு மூலம் கண்டறியப்பட்டது.
மோடி அரசின் குறுக்கு வழி செயல்பாடு
370-ஆவது பிரிவை ரத்து செய்வதற்கு மோடி அரசு குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்தது. அவற்றை அறிந்தால், அரசியல் சட்டத்தை இவர்கள் எந்த அளவு மதிக்கிறார்கள் என்பது அம்பலமாகும். 370-ஆவது பிரிவை நாடாளுமன்றமோ, குடியரசுத் தலைவரோ நேரடியாக ரத்து செய்ய முடியாது. இதற்கு ஜம்மு-காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் தர வேண்டும். 1956-இல் இந்த சபை கலைக்கப்பட்டாலும் மீண்டும் உருவாக்கப்பட்டுதான் முடிவெடுக்கவேண்டும். அந்த அளவு அதற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தந்திரமாகக் கடப்பதற்காக குடியரசுத் தலைவருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் 372-ஆவது பிரிவை மோடி அரசு பயன்படுத்தியது. அவரது நிர்வாக உத்தரவு மூலம் 367-ஆவது பிரிவில் திருத்தம் செய்தது. அரசியல் நிர்ணய சபை என்பதை சட்டமன்றம் என்று மாற்றியது. பின்னர் சட்டமன்றத்தை கலைத்தது. ஆளுநர் அதிகாரம் என்பதற்குள் கொண்டு வந்தது. அதையடுத்து ஆளுநர் பரிந்துரை என்ற பெயரில் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அரசியல் சட்டத் திருத்தம் என்பது ஒரு சடங்காகத்தான் நடைபெற்றது. இதுதான் இவர்கள் அரசியல் சட்டத்தை மதிக்கின்ற, பாதுகாக்கின்ற லட்சணம்! நேர்வழி, ஜனநாயகம் என்பதெல்லாம் ஆர்எஸ்எஸ் - அதன் வழிவந்த பாஜக அகராதிகளில் இல்லாத வார்த்தைகள்; செல்லாத வார்த்தைகள்.
பாஜக தான் பதில் சொல்ல வேண்டும்
முதலாவது மத்திய அமைச்சரவையிலிருந்து அம்பேத்கர் விலகியது ஏன் என்பது அமித் ஷாவின் அடுத்த கேள்வி. இதற்குக் காங்கிரசை விடவும் சரியாக ஆர்எஸ்எஸ்-சும், பழைய இந்து மகா சபாவும், 21-ஆம் நூற்றாண்டிலும் மதவெறியை உயர்த்திப் பிடிக்கும் பாஜகவும்தான் பதில் சொல்ல முடியும். ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் இந்து சட்ட தொகுப்பு மசோதாவைக் கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்படாமல் போய்விட்டது. அத னால் மனம் நொந்து அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதற்கு மசோதாவை நிறை வேற்றத் தவறிய காங்கிரசும் பிரதமர் நேருவும்தான் பொறுப்பு என்பது அமித் ஷாவின் குற்றச்சாட்டு.
அம்பேத்கரின் மசோதாவை ஆதரித்தார் நேரு
உண்மையில் 1947-ஆம் ஆண்டிலேயே இந்து சட்டத் தொகுப்பை அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் முன்வைத்தார். ஆனால் அது தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு முடிவு வராமலேயே 1949 - இல் அரசமைப்புச் சட்ட வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் அம்பேத்கர் தனது லட்சியத் திட்டத்தை சட்டமாக்க 1951-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்தார். பலதார மணங்களுக்குத் தடை; பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமை; கைம்பெண் மறு மணத்தை சட்டப்பூர்வமாக்குதல்; அகமண முறையை முடிவுக்குக் கொண்டு வருதல், பெண்களுக்கு சொத்தில் உரிமை என்பதெல்லாம் இந்த சட்டத் தொகுப் பில் இருந்தன. இதனை நேரு வரவேற்றார்; ஆதரித்தார். ஆனால் காங்கிரசுக்குள்ளேயே பழமைவாத கருத்துக் கொண்டிருந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் உயர் பொறுப்பில், குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்தும் விதிவிலக்கல்ல.
அம்பேத்கர் உருவபொம்மையை எரித்தவர்கள் ஆர்எஸ்எஸ் பரிவாரம்
இந்த நிலையில் வெளியே நடந்தது என்ன? மோடி, அமித் ஷாவின் தாய் அமைப்புகளான ஆர்எஸ்எஸ்- சும் இந்து மகா சபாவும் கடுமையாக எதிர்த்தன. இவர்கள் சித்தாந்தத் தலைவராகப் போற்றும் ஷியாமா பிரசாத் முகர்ஜியும் எதிர்த்தார். அகில பாரதிய ராம்ராஜ்ய பரீசத் என்ற பழமைவாத அமைப்பின் நிறு வனர் கர்பத்ரி மகராஜ் தலைமையில் ஆர்எஸ்எஸ் மற்றும் மதவெறி அமைப்பினர் நாடாளுமன்றத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர். அம்பேத்கரின் உருவ பொம்மையை எரித்தனர். அம்பேத்கருக்கு அன்று இவ்வளவு புற அழுத்தம் கொடுத்தவர்களின் வாரிசுகள் தான் இன்று அம்பேத்கரை நேசிப்பவர்கள் போல் நடிக்கிறார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இவர்களைப் பற்றி இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும்; உண்மையை உணரவேண்டும்.