உலகின் முதல் பெரும் பணக்காரர் ஜெஃப் பேசோஸ். இவரின் நிறுவனம் அமேசான். ஆன்-லைன் வர்த்தக நிறுவனம். கொரோனா கொள்ளைநோய் காரணமாக உலகம் முழுவதும் முழு அடைப்பு காலத்தில் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சேர்த்ததில் மிக முக்கிய பங்காற்றிய நிறுவனம்.
கொரோனா முழு அடைப்பும் அமேசானின் லாப மழையும்
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்த ஒரே ஆயுதம் முழு முடக்கம்தான். முழு அடைப்புக் காலத்தில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆனால் அமேசான் நிறுவனம் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்தது.அமெரிக்காவில் பெரிய பெரிய பாக்ஸ் ஸ்டோர்ஸ் என்றழைக்கப்படும் வால்மார்ட், டார்கெட் போன்ற கடைகள் மூடப்பட்டிருந்ததால், அல்லது மக்கள் சென்று வாங்க அச்சப்பட்டதால் அவர்கள் ஆன்-லைன் வியாபாரமாக அமேசான் மூலமே ஆர்டர் செய்தனர். அமெரிக்காவில் காய்கறி வரை அமேசான் சப்ளை செய்கிறது. ஆர்டர் செய்தால் சில மணி நேரங்களில் பொருட்கள் பல நகரங்களில் வீடு வந்து சேர்ந்துவிடும் அமெரிக்காவில்.
கொரோனா தொற்றிவிடும் என உலகமே அச்சப்பட்டுக்கொண்டிருந்த போது, அமேசான் நிறுவன ஊழியர்கள், விடுப்பு எடுக்காமல் கொரோனா தொற்றுக்கு அச்சப்படாமல் பொருட்களை வாங்கி அவற்றை பேக் செய்து, அவற்றை தூர தூரங்களுக்கு எடுத்து சென்று வீட்டு வாசலில் ஒப்படைத்தனர். இந்த இடைப்பட்ட பயணத்தில் எத்தனை அமேசான் ஊழியர்கள் இதில் பங்கெடுத்திருப்பார்கள் என சற்று யோசித்துப் பாருங்கள்! அமெரிக்காவில் மட்டும் அமேசான் நிறுவனத்தில் மொத்தம் 13 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் தனியார் வேலை கொடுக்கும் நிறுவனங்களில் வால்மார்ட் நிறுவனத்திற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் உள்ளது அமேசான்.
இதன் விளைவு பெருந்தொற்று ஏற்பட்ட போது முதல் காலாண்டு முடிவு வருவதற்கு முன் ஜெஃப் பேசோஸ் தனது முதலீட்டாளர்களிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சில செலவுகள் உள்ளதால் முதல் காலாண்டு முடிவுகள் மோசமாக வர வாய்ப்புள்ளது என்றார். ஆனால் நடந்ததோ நேரெதிர். இந்த பெருந்தொற்று காலத்தில் ஜெஃப் பேசோஸ் சொத்து மதிப்பு மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்தது. (ஒரு பில்லியன் என்பது 1000 கோடி. அதன் இந்திய மதிப்பு சுமார் 4,74,500 கோடி ரூபாய் (நான்கு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய்).அவரின் ஒரு மணி நேர வருவாய் 54 கோடி ரூபாய். ஒரு நாள் வருமானம் 1,300 கோடி ரூபாய். ஒரு நாளைக்கு 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாளும் ஆக 365 நாளும் பணம் கொட்டிக் கொண்டே இருந்துள்ளது.
அமெரிக்காவில் அமேசானில் பணி நிலைமை
ஆன் லைனில் ஆர்டர் வந்தவுடன், தங்களது கிட்டங்கிகளில் சப்ளையர்களிடமிருந்து இருப்பு வைத்திருக்கும் பொருட்களை அதற்கு ஏற்ற பெட்டியில் அடைத்து, அதன் மீது விலாசம், ஆர்டர் விவரங்கள் ஆகியவற்றை ஒட்டி, அனைத்தும் சங்கிலித் தொடர் போல கன்வேயர் பெல்ட்களால் இணைக்கப்பட்டு அதிவேகமாக இயங்கும். ஆகவே வேலை பார்ப்பவர்களும் அதற்கு ஈடு கொடுத்து எந்த தவறும் இன்றி வேலை செய்ய வேண்டும். தவறுதலாக வேலை செய்தால் அதற்கு தண்டனை உண்டு. தொடர்ந்து தவறுதலாக வேலை செய்தால் பணி இழக்க நேரிடும். ஆகவே இயந்திர கன்வேயர் பெல்ட் வேகத்திற்கு ஈடு கொடுத்து தவறில்லாமல் வேலை செய்ய வேண்டும்.
ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலை. வேலையின் இடையில் இரண்டு 15 நிமிடம் கழிவறைக்கு செல்ல இடைவெளி எடுத்துக் கொள்ளலாம். மீதி ஒன்பதரை மணிநேரம் கன்வேயர் பெல்ட் உங்களை ஓடவிட்டுக் கொண்டே இருக்கும். பணி நேரத்தில் ஒருவர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருந்தால் நேரிடையாக பணி நீக்கம்தான். இவ்வுளவு லாபம் கொட்டிய ஆண்டிலும், கொரோனா தொற்று இருந்த காலத்திலும் அமேசான் தனது ஊழியர்களுக்கு அந்தந்த மாநிலத்தின் குறைந்தபட்ச ஊதியத்தையே வழங்கி வருகிறது.இந்த தகவல்கள் அமேசான் தொழிற்சங்க அமைப்பாளர்கள் சார்பாக அங்கு வேலை பார்க்கும் ஜெனிபர் பேட்ஸ் அமெரிக்க செனட் சபையில் சாட்சியமளித்தது போது கூறியவை.
அலபாமாவில் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி
இந்த நிலையில் அமேசானின் அலபாமா மாநிலத்தின் பெஸ்ஸிமோர் நகரத்தில் உள்ள கிட்டங்கியில் சுமார் 6000 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பணி நிலைமைகள் மேம்படவும், ஊதியம் உயரவும், தங்கள் வாழ்நிலை உயரவும் தொழிற்சங்கம் அமைக்க முயன்றனர். அந்த மாநிலத்தில் இம்மாதிரியான சில்லரை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் வேலை பார்ப்பவர்களுக்கான சங்கமாக ஆர்.டபிள்யு.டி.எஸ்.யு(RWDSU-Retail, Wholesale and Department Store Union )என்ற சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் இணைந்து கொள்வது என சங்கம் அமைக்க துணிந்தவர்கள் முடிவு எடுத்தனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை தொழிற்சங்கம் அமைப்பது அவ்வுளவு எளிதானதல்ல. அங்குள்ள சட்டங்கள் தொழிற்சங்கங்கள் அமைப்பதை மிகக் கடினமாக்கி நிர்வாகங்களுக்கு சாதகமாக மாற்றியுள்ளன (தற்போது மோடி அரசாங்கம் இந்தியாவில் செய்ய நினைப்பது போல்).குறிப்பாக டொனால்ட் டிரம்ப் ஆட்சி காலத்தில் தேசிய தொழிலுறவு வாரியத்தில்(என்.எல்.ஆர்.பி) முழுக்க முழுக்க நிர்வாகத்தின் ஆட்களால் நிரப்பப்பட்டதால் அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், இது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று ஆர்.டபிள்யு.டி.எஸ்.யு தலைவர் ஸ்டீபன் ஆப்பிள்பாம் தெரிவிக்கிறார். அங்கு தொழிற்சங்கம் அமைக்க பெரும்பான்மை தொழிலாளர்கள் விரும்புகிறார்களா என்பதை கண்டறியதேர்தல் நடத்தப்படும். அந்த தேர்தலில் பெரும்பான்மையினர் வாக்களித்தால் மட்டுமே தொழிற்சங்கம் அமைக்க முடியும். அந்த வகையில் இந்த பெஸ்ஸிமோர் கிட்டங்கி தொழிற்சங்கத்திற்கும் அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. மார்ச் 30 வரை தங்கள் வாக்குகளை தபால் மூலம் பதிவதற்கு கால அவகாசம் இருந்தது.
தேசிய பிரச்சனையான அமேசான் தேர்தல்
நமது நாட்டில் தொழிற்சங்கம் என்றாலே படித்த வர்க்கத்தினர், நடுத்தர வருமானம் உள்ளவர்கள் முகம் சுளிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் இந்த தேர்தல் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. அமெரிக்காவின் 77 சதவீதம் பேர் இந்த சங்கம் அமைப்பதை ஆதரிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ‘சோசலிச செனட்டர்’ பெர்னி சான்டர்ஸ் 3 முறை நேரடியாக அலபாமா சென்று தொழிலாளர்களை வாழ்த்தி அவர்களை உற்சாகப்படுத்தி தொழிற்சங்கம் அமைக்க ஆதரவு கொடுக்குமாறு தொழிலாளர்களை கேட்டுக் கொண்டார். ஏராளமான தொலைக்காட்சி ஊடகங்களிலும் அவர் இந்த தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவாக பேசிவந்தார். அவரைத் தவிர அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் களான கெர்ரி புஷ், ஜமால் பௌமேன், டெர்ரி ஸ்வெல் போன்றவர்களும் அலபாமா சென்று தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதியின் ஆதரவு
அமேசான் தொழிற்சங்கம் அமைக்க, புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் உறுதியான முறையில் குரல் கொடுத்துள்ளார். அவர் தொழிற்சங்கம் அமைக்க ஆதரவு தெரிவித்ததோடு நில்லாமல், நிர்வாகத்தின் மிரட்டல் குறித்து இவ்வாறு பேசியுள்ளார்: “மிரட்டல்கள் இருக்கக் கூடாது, வற்புறுத்தல் இருக்கக் கூடாது, அச்சுறுத்தல் இருக்கக் கூடாது, குறிப்பாக தொழிற்சங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது” என்று முடித்துள்ளார். அவரின் இந்த உரையை கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க ஊடகங்களும் ஒளிபரப்பின. ஆனாலும், ஜனாதிபதியால் அறிக்கைதான் விட முடிந்தது. ஏனெனில் லேபர் போர்டில் தற்போது டிரம்ப் நியமன அதிகாரிகள் நிரம்பியுள்ளதால் அங்கு அவரால் தற்போது எதுவும் செய்ய முடியாத நிலை.
தொழிற்சங்கத்திற்கு எதிராக...
அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு பொதுமக்களும் ஜனநாயகஉள்ளம் கொண்டவர்களும் ஆதரிக்க, பழமைவாதிகளும், பங்குச் சந்தையும், இதர தொழிற் நிறுவனங்களும் களத்தில் இறங்கின. அமேசானில் தொழிற்சங்கம் அமைத்தால் வருங்காலத்தில் தொழில் அழியும் என்ற புளித்துப் போன வசனங்களை தூசித் தட்டி கொண்டு வந்தனர். அமெரிக்காவின் பணக்கார குடும்பமான கோக் குடும்பம் தங்கள் நிறுவனத்திலிருந்து தொழிற்சங்கத்திற்கு எதிராக சாம பேத தான தண்டத்தை பயன்படுத்தத் தெரிந்த அதிகாரிகளை அனுப்பியது. ஒரு நாளைக்கு இரண்டு 15 நிமிடம் மட்டுமே இடைவெளிகொடுத்த நிர்வாகம் தற்போது தொழிலாளர் கூட்டங்களை பல முறை நடத்தி தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் சேர்வதற்கு எதிராக மிரட்டியது.
பணி நிலைமைகளால் சோர்வுற்றிருப்பவர்கள் என்பவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தொழிற்சாலையை விட்டு ராஜினாமா செய்யலாம் எனவும், இரண்டு பீக் சீசனில் வேலை பார்த்தவர்கள் ராஜினாமா செய்தால் அவர்களுக்கு இரண்டாயிரம் அமெரிக்கடாலர்கள் (ரூ.1,46,000) தரப்படும் எனவும், 3 பீக் சீசனில்வேலை பார்த்தவருக்கு மூவாயிரம் டாலர்கள் (ரூ.2,19,000)வழங்கப்படும் எனவும், அவர்கள் வேலையை விட்டு சென்ற பின், தேர்தல் முடிந்த பின் மீண்டும் வேலையில் சேரலாம் என்றும் நிர்வாகத் தரப்பில் ஆசை காட்டப்பட்டது. இப்படி பணத்தைக் கொடுத்து தொழிற்சங்கத்தை முறியடிப்பது என்பது அமெரிக்க சட்டப்படி குற்றம்.
மேலும், வாக்களிப்பது அஞ்சல் மூலம்தான் என்பதால், அஞ்சல் பெட்டியை தங்கள் அலுவலகத்தில் ஒரு பெட்டியைவைக்க வைத்து, அங்குதான் வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தியது. இதன் மூலம் யார் யார் வாக்களிக்க செல்கிறார்களோ அவர்களை கண்காணித்து ‘கவனித்து’ அனுப்ப வழிசெய்தது. கடைசியாக தொழிற்சங்கம் அமைக்கப்பட்டால் அந்த கிட்டங்கியையே மூடப்போவதாகவும் வேலையின்றி தெருவில் நிற்க வேண்டும் எனவும் மிரட்டியது அமேசான் நிர்வாகம்.
தேர்தல் முடிவுகள்
இவ்வுளவு பரபரப்பான தேர்தல் மார்ச் 30 முடிவுற்றாலும், அனைத்து வாக்குகளையும் எண்ண 7 நாட்கள் ஆனது. ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. தொழிற்சங்கத்திற்கு ஆதரவான வாக்களித்திருந்தால், அதனை செல்லாத வாக்காக மாற்ற அல்லது அந்த வாக்கைகணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அமேசான்அதிகாரிகள் நிர்ப்பந்தம் கொடுத்தனர். இந்த வகையில் சுமார் 500 வாக்குகளை செல்லாத வாக்குகளாக மாற்றியது நிர்வாகம்.மொத்தமுள்ள சுமார் 6000 வாக்குகளில் 3000 வாக்குகளே பதிவாகின. அதாவது 50 சதவீதம்தான் வாக்குகள் பதிவானது. அந்தளவுக்கு அமேசான் நிர்வாகம் தனது மிரட்டல்களில் வெற்றியடைந்துள்ளது. அதில் தொழிற்சங்கம் வேண்டும் என 738 வாக்குகளும், வேண்டாம் என 1798 வாக்குகளும் பதிவானது. 505 வாக்குகள் சேலஞ்ச் ஆகியுள்ளது.
இந்த முடிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆர்.டபிள்யு.டி.எஸ்.யு. அமைப்பு, நிர்வாகம் அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் பயன்படுத்தி சட்டவிரோதமான மிரட்டல்களில் ஈடுபட்டு தொழிற்சங்க முயற்சிகளை முறியடித்துள்ளதாக தெரிவித்து, இது நியாயமற்ற, தொழிலாளர் விரோதச் செயல் என்பதால் என்எல்ஆர்.பி. யில் வழக்கு தொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்திற்கும் ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கும் அமெரிக்காவில் அதன் குடிமக்களுக்கு அடிப்படை சங்கம் அமைக்கும் உரிமைகூட இல்லை. இதுதான் ஏகாதிபத்திய ஜனநாயகம்.
கட்டுரையாளர் : க.ஆனந்தன்