articles

img

தொழிலாளர் வேலை நேரம் உங்களுக்கு நகைச்சுவையா? - அ. குமரேசன்

தேசத்தின் முன்னேற்றம் என்றால் வானுயர் கட்டடங்களும் நவீன வாகனங்களும் அகன்ற சாலைகளுமா? அந்தக் கட்டடங்களில் வசிப்ப வர்கள் யார், வாகனங்கள் யாருக்குச் சொந்தம், சாலைகள் மக்களை எங்கே சேர்க்கின்றன –இவை தான் முன்னேற்றத்தின் அறிகுறிகள். ஆனால், கார்ப்பரேட் கனவான்களுக்கோ தொழிலாளர்கள் வரம்பில்லாத நேரம் உழைத்துத் தங்களின் லாபம்  குவிவதுதான் தேசத்தின் முன்னேற்றமாகத்தெரிகிறது. எல்.அண்.டி. குழுமத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிர மணியன் அண்மையில் ஊழியர்களிடையே பேசுகை யில், வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேலை வாங்க முடியாதது குறித்துக் கவலைப்படுவதாகக் கூறிய அவர், “வீட்டில் உங்கள் மனைவியின் முகத்தையே எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள், பெண்கள் எவ்வளவு நேரம் கணவனின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்,” என்றும் கேட்டார். இப்படி உழைத்தால்தான் முன்னேறிய நாடுகளோடு நாமும் போட்டிபோட முடியும் என்று தேசப்பற்றோடு முடிச்சுப் போட்டார்.

நகைச்சுவையாம்

கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இப்போது அந்நிறுவனத்தின் மனித வளத்துறைத் தலைவர், குழுமத் தலைவரின் பேச்சு பொருத்தமற்ற முறையில் விமர்சிக்கப்படுவதாகவும், 90  மணி நேர உழைப்பைக் கட்டாயமாக்க வேண்டுமென்ற பொருளில் அவர் பேசவில்லை என்றும், நகைச்சுவையாகவே அப்படிக் கூறியதாகவும் விளக்கமளித்திருக்கிறார். 90 மணி நேரம், அதாவது ஞாயிற்றுக் கிழமையும் சேர்த்து  ஒரு நாளுக்குக் கிட்டத்தட்ட 13 மணி நேரம்,  ஞாயிற்றுக் கிழமையைச் சேர்க்காவிட்டால் 15 மணி நேரம்.

நாராயணமூர்த்தியும் அதானியும்

இதற்கு முன்பும் இப்படியான நகைச்சுவைத் துணுக்குகள் வந்திருக்கின்றன. இன்ஃபோசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, கொஞ்சம் இளகிய மனதுடன், இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்தால்தான், முன்னேறிய நாடுகளுக்கு இணையான உற்பத்தித்திறனைப் பெற முடியும் என்றார். இதுதொடர்பாக அலசிய அமெரிக்காவின் தொழில்–வணிக ஏடாகிய ‘ஃபோர்ப்ஸ்’ தனது ஆண்ட றிக்கையில் (2023) உலகின் மிகப் பெரிய 15 நிறு வனங்களில் எதிலுமே இத்தகைய நீண்ட நேர உழைப்பு கட்டாயமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டியது. இந்தப் புத்தாண்டு நாளில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, “வீட்டில்  எட்டு மணி நேரம் இருந்தால் மனைவி ஓடிப்போய் விடுவாள்,” என்று “நகைச்சுவையாக” ஒரு பேட்டியில் கூறினார். அப்புறம், “வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே சமநிலைப்படுத்துவது ஒவ்வொருவரின் சொந்த முடிவாக இருக்க வேண்டும், என் கருத்தை உங்கள் மீது திணிக்கக்கூடாது, உங்கள் கருத்தை என் மீது திணிக்கக்கூடாது,” என்று கூறி சமநிலைப்படுத்திக் கொண்டார். இப்படித்தான் சும்மா சிரிப்பதற்காகச் சொன்னோம் என்று ஆள் மாற்றி ஆள் சொல்லிச் சொல்லி, அதிக நேர உழைப்புக்கு மனநிலையைத் தயார்ப்படுத்தும் கைங்கரியத்தைச் செய்துவருகிறார்கள். நகைச்சுவை தானே என்று சிரித்துவிட்டால் இதுவே பொதுக்கருத்து என்று பட்டையைக் கட்டி சட்டத் திருத்தங்களுக்கு அடிவாரம் போட்டுவிடுவார்கள்.

சட்டமும் நடப்பும்

தொழிலாளர் சட்டங்களில் வாரமொரு நாள் விடுமுறையோடு 48 மணி நேர (ஒரு நாளில் 8 மணி  நேரம்) வேலை என்ற வரம்பு இருக்கிறது. தேவைப் பட்டால் 9 மணி நேரம் வேலை வாங்கலாம், ஆனால் அது வாரம் 48 மணி நேரத்தைத் தாண்டக்கூடாது.  நடை முறையிலோ பல வளாகங்களில் ஒரு நாளில் 12 மணி நேர வேலை இயல்பாக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் காலாவதியான விதிமுறைகளும், சட்டங்களின் வலுவற்ற செயலாக்கமும், கார்ப்பரேட்டு களின் அதிகரித்து வரும் செல்வாக்கும் இருக்கின்றன என்று இந்தியாவின் ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ நாளேடு (ஜனவரி 13) கூறுகிறது. ‘குளோபல் ஜாப் பிளாட்பார்ம்’ என்ற வேலை வாய்ப்பு நிறுவனத்தின் ஆய்வறிக்கை, இந்தியத் தொழிலாளர்களில் 88 சதவீதம் பேர்களை வேலை நேரம் அல்லாத பொழுதுகளிலும் நிர்வாகங்கள் தொடர்பு கொள்கின்றன என்று தெரிவிக்கிறது. 85 சதவீதம் பேர் உடல் நலக்குறைவால் விடுப்பில் இருக்கிற நாட்களிலும் கூட நிர்வாகங்கள் தொடர்பு  கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். நிர்வாகங் களின் அந்த அழைப்புகளுக்குப் பதிலளிக்காமல் விட்டு விட்டால் வேலைக்குப் பாதிப்பு ஏற்படும், பதவி  உயர்வுகள் மறுக்கப்படும், தங்களது தகுதிகள் குறைத்து மதிப்பிட்டுப் பதிவு செய்யப்படும் என்ற  அச்சத்தை 79 சதவீதத்தினர் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.

கூடுதல் வேலையால்  உயிரிழப்பு அதிகமாகும் இந்தியா

ஒரு நாளில் 24 மணி நேரமும் அழைக்கப்படு வதற்கும் உழைப்பைத் தருவதற்கும் தயாராக  இருந்தாக வேண்டும். பெரும்பாலும் அதனை ஈடுகட்டு வதற்கான கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதில்லை அல்லது சொற்பமான தொகையே வழங்கப்படும். ஐ.டி.  நிறுவனங்களின் ஊழியர்களுக்கோ கூடுதல் நேர ஊதியம் அறவே கிடையாது. நியமன ஒப்பந்தத்தி லேயே, கூடுதல் வருவாயை எதிர்பார்க்காமல் கூடு தல் வேலையை மட்டும் எதிர்பார்க்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிடுகின்றன. வெளியி லிருந்து பார்ப்பவர்களுக்கு இந்தக் கண்ணாடிச் சிறை  தெரியாது. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் கூட்டாக மேற்கொண்ட ஆய்வின்படி, கூடுதல் நேர வேலையால் உயிரிழப்பவர்கள் மிக அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்ந்திருக்கிறது. முறைசாராத் துறைகளில் பணிபுரிவோருக்கு இந்தச் சட்டங்கள் துணையாக வருவதில்லை. வேதனையான வேடிக்கை என்னவெனில் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களும் இப்படிப்பட்ட சூழலில்தான் இருக்கிறார்கள். சாம்சங் தொழிலாளர்கள் தங்களுக்காகப் போராடக்கூடிய சங்கத்தை அமைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்ட இன்னமும் போராட வேண்டியிருக்கிறதே!

போர்வையை விலக்கினால்...

இப்படிப்பட்ட நிலைமைகளில்தான், 2020இல் தொழிலாளர் சட்டங்களை முறைப்படுத்துவது என்ற போர்வையில் புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டன.  போர்வையை விலக்கினால், 12 மணி நேரம் வேலை வாங்க அனுமதிப்பது உள்ளிட்ட சலுகைகள் நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது தெரியவரும். தொழிற்சங்கங்களின் உறுதியான எதிர்ப்பால் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், தொழிலாளர்கள் எதிர்கால வேலை நேரம் தொடர்பான விடை தெரியாத வினாக்களுடனேயே உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். வேலை நேரத்தை அதிகரிக்க அனுமதிக்கும் விதி தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ எச்சரிக்கிறது.. சட்டங்களும் விதிகளும் செயல்படுத்தப்படும் விதமும், கண்காணிக்க வேண்டிய அதிகார அமைப்பு களின் கண்டுகொள்ளாமையும் சேர்ந்து, ஆகப் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களிலும், பாரம் பரியமான ஆலைகளிலும் தொழிலாளர்கள் வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான சமநிலை மோசமாக உள்ள சூழலில்தான் உழல்கிறார்கள்.

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்ட...

இந்தச் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகிறது ‘ஃபிரண்ட் லைன்’ 40ஆம் ஆண்டு சிறப்பிதழில் (ஜனவரி) தொழிற்சங்கத் தலைவரும் சமூகச் செயல் பாட்டாளருமான சுதா பரத்வாஜ் எழுதியுள்ள “தொடர்ச்சியான தொழிலாளர் துயரம்” என்ற கட்டுரை.  “இந்தியாவில் இன்று பெரிய நிறுவனங்களிலேயே நிரந்தரத் தொழிலாளர்கள் 10 சதவீதம் பேர்தான் இருக்கிறார்கள். 1990ஆம் ஆண்டுகளில் அதுவரை யில் இருந்து வந்த முதலீட்டுக்கும் உழைப்புக்குமான கொஞ்சநஞ்ச இணக்கத்திலும் துருவேறத் தொடங்கியது. இன்று உழைப்பாளி வர்க்கத்தில் 83  சதவீதத்தினர் அமைப்பு சார்ந்த நிறுவனத் தொழி லாளர்களாக இல்லை, 93 சதவீதத்தினர் முறையான ஒப்பந்தம் இல்லாத முறைசாராத்துறையினர்தான். சங்கமாகத் திரட்டுவது கடும் சவாலாக்கப்பட்டி ருக்கிறது. “காலவரம்புக்குட்பட்ட ஒப்பந்தம்” போன்ற ஏற்பாடுகள் நிரந்தரத் தொழிலாளர் முறை ஒழித்துக் கட்டப்படுவதை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன” என்கிறார் அவர் (பீமா கோரேகான் வழக்கில்  சிறை யில் அடைக்கப்பட்டு நீதிமன்றத்தின் பிணை அனுமதியால் வெளியே நடமாடுகிறவர் இந்த சுதா பரத்வாஜ்). எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர ஓய்வு–இவற்றோடு எட்டு மணி நேர வாழ்வு என்பதே உலகத் தொழிலாளர் இயக்கம் போராட்டங்களாலும் தியாகங் களாலும் வென்றெடுத்த உரிமை. எட்டு மணி நேர வாழ்வு என்றால் மனைவி முகத்தைக் கணவன் பார்ப்பதற்கும், கணவன் முகத்தை மனைவி பார்ப்ப தற்கும், பிள்ளைகளின் முகங்களை இருவருமே பார்ப்பதற்கும், எல்லோருமாக  சினிமா, கடற்கரை, கடையரங்குகள், உறவினர் இல்ல நிகழ்வுகள், அரசியல் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் என்று போய்வருவதற்குமானது. நகைச்சுவைக் கார்ப்பரேட் கனவான்களுக்கு இது அழுத்தந்திருத்தமாக உணர்த்தப்பட்டாக வேண்டும்.