உலகமய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, தொழில்மயமாக்குதல் என்ற பெயரில் நிலத்தின் மீது விவசாயமற்ற இதர துறைகளின் தேவை அதிகரித்திருக்கிறது. ஒன்றிய அரசானது கனிம விற்பனை, ஹைட்ரோ கார்பன் எடுத்தல், தொழில் வளாகங்கள் அமைத்தல், சாகர்மாலா, நான்குவழி, எட்டு வழி, பன்னிரண்டு வழி சாலைகளை நிறுவுதல்,உயர் மின் கோபுரங்கள் அமைத்தல் ஆகிய தேவைகளுக்காக விவசாய நிலங்களை வன்முறையாக எடுக்கின்றது. விவசாயத்தை நாசமாக்கும் பணிகளை மிக வேகமாகச் செய்து வருகிறது.
இந்நிலையில்தான் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்திய விவசாயிகள் ஒன்றிய மோடி அரசின் விவசாய விரோத நாசகரக் கொள்கைகளான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி, 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை உயிர் பலி கொடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை தலைநகர் தில்லியில் நடத்தி வருகிறார்கள். இந்தியாவின் முதுகெலும்பான இந்திய விவசாயிகள் 200 நாட்களுக்கு மேல் தில்லி வீதிகளிலே போராடி வருவது பிரதமர் கண்ணுக்குத் தெரியவில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கிடையிலும் பல மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யும் அவர் லட்சக்கணக்கான விவசாயிகள் குடும்பத்தோடு தெருவில் நிற்கும்போது சந்தித்துப் பேசக்கூட தயாராக இல்லை. அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்திய விவசாயத்தை பலியிடும் அரசியலே ஓங்கி நிற்கிறது.
காவிரி டெல்டா
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி தமிழ்நாட்டுக்குள் உட்புகுந்து ஆசியாவின் மிகப் பெரிய சமவெளிப்பகுதிகளில் ஒன்றான காவிரி வடிநிலப் பகுதியை வளமாக்குகிறது. இப்பகுதியிலுள்ள ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமான இன்றைய தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை பண்டைய சோழ நாட்டின் முக்கிய ஆளுகைப் பகுதியாக இருந்துள்ளது. இந்தப்பகுதி தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும் தொன்றுதொட்டு அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் வளமான வண்டல் மண்ணின் காரணமாக இந்தப் பகுதி நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, உளுந்து, பயறு எண்ணெய் வித்துக்கள்உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் உற்பத்தி மண்டலமாகத் திகழ்கிறது. மேலும் பல்லுயிர் பெருக்கம் நிரைந்த மண்டலமாகவும் விளங்குகிறது. காவிரி கிளைகளாகப் பிரிந்து கடலில் கலக்கும் அதன் கழிமுகங்களிலிருந்து காவிரியும் கொள்ளிடமும் பிரியும் முக்கொம்பு மற்றும்கல்லணை வரை காவிரி டெல்டா பகுதி என்று அழைக்கப்படுகிறது.
காவிரி டெல்டாவின் பெரும்பாலான பகுதிகளில் காவிரி ஆற்றையே நம்பி விவசாயம் செய்து வந்த சூழல் பன்னெடுங்காலமாக நிலவியது. ஆனால் இயற்கை மாற்றம் மற்றும் அரசியல் சூழல் காரணமாக காவிரியை நம்ப முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட காவிரிச் சமவெளி விவசாயிகள் தற்போது ஆழ்துளைக் கிணறுகள் மூலம் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். டெல்டாவின் விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களும் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் கடலும் கடல் சார்ந்த தொழில் வளமும், உயிரினங்களும் அதையே நம்பி வாழும்மீனவ விவசாயிகளும் பல லட்சக்கணக்கில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் தற்போது காவிரி டெல்டா தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்கிற வரலாற்றை இழக்க நேரிடும் அபாயகரமான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெற்களஞ்சியம் கனிம களஞ்சியமாக மாற்றப்பட்டு வருகிறது. காவிரிப் படுகையான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளம் செறிந்தநிலப்பரப்பு ஒன்றிய அரசால் 1956 ஆம் ஆண்டுகளில் புதை எரிபொருட்களுக்கான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. முதல் ஆழ்துணை கிணறு 1964ல் நிலத்தடி எரிபொருள் ஆய்வுக்காக தோண்டப்பட்டது. மேலும் மேலும் பல்வேறு ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் நடைபெற்றன. இப்பகுதியின் பல்வேறு பகுதிகள் சிறிதும் பெரிதுமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை எடுப்பதற்கான துரப்பனப் பணிகள் 1984ம் ஆண்டு தொடங்கி தற்போதுவரை தொடர்ந்து நடந்து வருகிறது.
காவிரிப் படுகை மாவட்டங்களில் தீவிரப்படுத்தப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் எரிவாயு கிணறுகளால் மக்கள் மிகப் பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.2010 அக்டோபர் 29ல் குஜராத்தை மையமாகக் கொண்ட கிரேட் ஈச்டெர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் என்ற தனியார் நிறுவனத்திற்கு காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பதற்கு அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியது.அப்போது மீத்தேன் எடுக்கப்படுவதால் ஏற்பட இருக்கும் ஆபத்துகளை பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், மற்ற பிற அமைப்புகளும் தொடர்ந்து விவசாயிகளை சந்தித்து மேற்கொண்ட பிரச்சாரத்தால் ஆபத்தை உணர்ந்து காவிரிப்படுகை மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரும் எதிர்ப்பை வெளிப்
படுத்தத் தொடங்கினர். சட்ட மன்றத்தில் இடதுசாரிகள் தொடர் எதிர்ப்புக் குரலை எழுப்பினர். கடுமையான எதிர்ப்பைக் கண்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். அதன் தொடர்ச்சியாக எக்காரணம் கொண்டும் மீத்தேன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்தார்.
காவிரி படுகையை பாலைவனமாக்கும் விதமாக மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த ஒன்றிய மோடி அரசு இடைவிடாத பெரும் தொடர் முயற்சிகளைச் செய்து வருகிறது.இதுபோன்ற விவசாயத்தின் மீது நடைபெற்றுவரும் தொடர் தாக்குதலிலிருந்து காவிரிப் படுகையைப் பாதுகாப்போம் என்ற குரலோடு பலகட்ட எழுச்சிகரப் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு சட்ட வரைவு உருவாக்கப்பட்டது.
இந்திய அரசின் ஹெல்ப் எனும் ஒற்றை உரிமத் திட்டம்
மீத்தேன், ஷேல் கேஸ், டைட் கேஸ் போன்ற பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கு தனித்தனியாக அனுமதி பெறுவது 2017 வரை இருந்தது. இதை மாற்றி ஹெல்ப் (Hydrocarbon Exploration Licensing Policy) என்ற திட்டத்தை உருவாக்கி தனித் தனியாக உரிமம் பெறுவதற்கு பதிலாக ஒற்றை உரிமம் பெற்றாலே போதும் என்றாக்கினார்கள். அதன்படி ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமத்தைப் பெற்றாலே பூமிக்கு அடியில் உள்ள எந்த இயற்கை வளங்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளதடையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பன்னாட்டு முதலாளிகளுக்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த நெல்ப் (New Exploration Licensing Policy) முறையை மாற்றி ஹெல்ப் முறையை கொண்டு வந்து மோடி அரசு பன்னாட்டு முதலாளிகள் இந்திய இயற்கை எரிவாயு வளங்களை கொள்ளையடிப்பதற்காக மேலும் தளர்த்தப்பட்ட திறந்தவெளி அனுமதி திட்டத்தை உருவாக்கியது.
இதனால் இந்தப் பகுதியின் விவசாயம் அழியும். காவிரிப் படுகையில் உள்ள பல லட்ச ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும். கடல்வளம் பாதிப்புக்குள்ளாகும். கடல்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீன் வளமும், மீனவர் வாழ்வும் கேள்விக்குரியாவதோடு மீனவ கிராமங்களே காலியாகும் நிலை உருவாகும். சுற்றுச்சூழல் மாசடைந்து மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாறும் என்று நிபுணர்களும், விவசாய இயக்கத்தினரும் பலமுறை எச்சரித்தும் அரசு அதை செவிமடுப்பதாக இல்லை.
பெட்ரோலியத் துறை அமைச்சகம் காவிரிப் படுகையைதற்போதைய ஏல அறிவிப்பிலிருந்து நீக்கவும், மேற்கொண்டு எந்த அறிவிப்பிலும் காவிரிப் படுகையை சேர்க்கக் கூடாது என்றும் தமிழக அரசு தற்போது எடுத்திருக்கும் நிலையை மேலும் வலுவாக ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுத்து தெரிவிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி படுகையில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஹைட்ரோ கார்பன் இயக்குனரகம், ஜுன் 10ஆம் தேதிசர்வதேச ஏலத்துக்கான அழைப்பாணையை வெளியிட்டுள்ளது. எதிர்பாராத இந்தத் தாக்குதல் விவசாயிகளை மீண்டும் கிளர்ந்தெழச் செய்துள்ளது. தாக்குதலை சந்திக்க விவசாயத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை நோக்கி விவசாயிகள் நகர்த்தப்படுகிறார்கள்.
இந்திய அரசின் நிறுவனங்களான ஓஎன்ஜிசி, ஐ.ஒ.எல்போன்றவற்றால் ஏற்கனவே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதாக அறியப்பட்டுள்ள வயல்களில்ஹைட்ரோகார்பன் எடுக்க முடியாத நிலை இருந்தது. இதனால் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டுவருவாய் பங்கீடு ஒப்பந்தம் மூலம் வருவாய் ஈட்டுவதற்காக2015ஆம் ஆண்டு எண்ணெய், எரிவாயு, ஹைட்ரோகார்பன் எடுக்க கண்டுபிடிக்கப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள் (Discovered Small Field Policy) எனப்படும் ஏலத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் கீழ் 2017ஆம் ஆண்டு முதலாவது ஏலமும், 2018ஆம் ஆண்டு இரண்டாவது ஏலமும் விடப்பட்டது.
தற்போது மூன்றாம் கட்ட ஏல அறிவிக்கை கடந்த ஜூன் 10ஆம் தேதி வெளியானது 32 ஒப்பந்தப் பகுதிகள் மூலம் 75 எண்ணெய் வயல்களை பெட்ரோலிய எரிவாயுத் துறை ஏலம் விடுகிறது. இதில் காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி வட்டம், கருக்காக்குறிச்சி - வடதெரு கிராமத்தில் 463.2 ச.கி.மீ பகுதியை ஏலம் விட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் எதிர்க்கிறோம்?எதனால் தடுக்கிறோம்?
மீத்தேன் வாயுவை அதனைச் சுற்றியுள்ள நீர்தான் அதன் இடத்தில் இருத்தி வைத்துள்ளது. மீத்தேன் வாயுவை எடுப்பதற்கு ஆழ்துளை கிணற்றின் மூலம் அதனைச் சுற்றியிருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும். இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடியில் உள்ள அதிகஅளவிலான நீர் வெளியேற்றப்படுவதோடு அந்த நீர் மிகமிக உப்புத் தன்மை வாய்ந்ததாகவும் வெளியேறுகிறது. அது கடல் நீரைப் போல பல மடங்கு உப்புத் தன்மை வாய்ந்ததாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்த கழிவு நீரிலுள்ள உப்புக்களும், இதர தனிமங்களும் அந்தப் பகுதியின் மண் வளத்தை அழிக்கக் கூடியது. இவை நிலத்தில் சேர்ந்தால் பயிர்கள் தம் வளர்ச்சிக்கான தாது உப்புக்கள் அடங்கிய நீரை உறிஞ்ச வாய்ப்பில்லாமல் பாதிப்புக்குள்ளாகும். ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக அங்கிருக்கும் நீரை வெளியேற்றும்போது அதற்கு மேலே உள்ள நீராதாரங்கள் கீழ் நோக்கி இறங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. மேலும் கடல் நீரும் விவசாய நிலப் பகுதியை நோக்கி கூடுதல் தூரம் உட்புக வாய்ப்பும் உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு நீரியல் கரைசல் (Hydrolic Fracturing) என்கிற முறையில் மணலுடன் பல்வேறு விதமான வேதிப் பொருட்களைக் கலந்து, அந்தக்கரைசலை நிலக்கரி படுகையின் அருகே மிக வேகமான அழுத்தத்துடன் உள்ளே செலுத்துவார்கள். அப்படி பயன்படுத்தக் கூடிய வேதிப்பொருட்கள் அங்கிருந்து மீண்டும் வெளியேறக் கூடிய நீருடன் சேர்ந்து வெளியே வரும். இது அருகிலுள்ள நிலப்பகுதி, கால்நடைகள் மற்றும் அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த சுற்றுச் சூழலைகடுமையாக பாதிக்கும். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் கடுமையான வியாதிகளை ஏற்படுத்தும். தாவரங்கள் பட்டுப் போகும், வேளாண்மையும், வேளாண்மை சார்ந்த தொழில்களும் பெரிதும் அழிந்து போகும் என்று பல்வேறு நாடுகளின் அனுபவங்களைக் கொண்டு நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் பூமிக்கடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கிறபோது வெளியேறும் எரிவாயுவையும், அத்துடன் சிலிக்கன் மணலையும் மூலப் பொருட்களாகக் கொண்டு சோடியம் சிலிக்கேட் என்னும் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் தனியாரால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகளில் தொடங்கப்பட்டு வருகிறது. சோப்புத் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து பரவும் துகள்கள் அருகிலுள்ள வயல்களில் படர்ந்து நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை வளரவிடாமல் தடுத்து விவசாயத்தையும், நிலத்தையும் பாதிப்படையச் செய்வது தற்போது தெரிய வந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இதுபோன்ற பற்பல விவசாயம் சாராத தொழில்களை தனியார் மூலம் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரிய வருகிறது. இதன் மூலம் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரங்களும், சுற்றுச் சூழலும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எது செய்தாலும், என்ன நடந்தாலும் காவிரி டெல்டாவின்மீதான அவர்கள் குறி அகலவில்லை. எண்ணெய் கொள்ளைக்காகவும், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும் இயற்கையையும், விவசாயத்தையும் அழிப்பதற்கு ஒன்றிய அரசு துளிகூட தயக்கவில்லை. ஆனால், நமக்கோ இது நமது வாழ்க்கை, வாழ்வாதாரம். பெட்ரோலியம், எரிவாயு இந்த பரந்த பூமியில் எங்கு வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் உணவு உற்பத்தியின் கேந்திரத்தை இழக்க முடியாது. விவசாயத்தை அழிக்கத் துடிக்கும் மோடிஅரசின், பன்னாட்டு பெரு முதலாளிகளின் முயற்சிகளை முறியடித்தே ஆக வேண்டும். இப்போது நாம் இதை செய்யாமல் விட்டால், இங்கு நாம் எப்போதுமே வாழமுடியாது என்ற நிலை உருவாகும்.
கட்டுரையாளர் :என்.வி.கண்ணன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்