டிசம்பர் 25 (இன்று) வெண்மணியில் சங்கமிக்கவுள்ளோம். வீரத்தின் விளை நிலமாய்த் திகழும் வெண்மணி இன்றும் பொருளியல், சாதி, பாலின ஒடுக்கு முறைக்கு எதிரான சிறந்த முன்னுதாரணமாய்த் திகழ்கிறது. அங்கு பற்றியெறிந்த தீ, 44 உயிர்களைக் காவு கொண்ட நெருப்பு, ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் என்றென்றும் கலங்கரை விளக்கமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
நெருக்கடியின் பிடியில் கிராமங்கள்...
இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கைகளும், நிதி யமைச்சரின் அறிவிப்புகளும் இந்த நெருக்கடி யின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. பொருளாதார வளர்ச்சி குறைந்து, பணவீக்கம் உயர்ந்து, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி, வங்கித்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிக்கலடைந்துள்ளது.
பொருளியல் நெருக்கடியின் கோரக் கரங்கள் கிராமப்புறங்களை, சாமானிய மக்களைக் கடுமையாகத் தாக்குகிற காலம் இது. கிராமப்புறங்களில் வாழ்வாதாரமாய் விளங்குகிற, வேலை வாய்ப்புகளைத் தருகிற விவசாயம், அரசின் கொள்கைகளால் கடுமையான நெருக்கடியில் உள்ளது.
கிராமப்புறங்களில் தற்கொலைகள் மிகுந்திருப்பதற்கும், விவசாயம் தொடர்பான குறியீடுகளுக்குமான நெருக்கத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. தீர்வுகள் காண வேண்டியுள்ளது. குறு, சிறு விவசாயிகளே அறுதிப் பெரும்பான்மையாக வுள்ள சூழலில் கட்டுப்படியான விலை கிடைக்காததும், அரசு கொள்முதலுக்கான ஏற்பாடுகள் பலவீனமாக இருப்பதும் விவசாயி களின் வாழ்நிலையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
தொழிலாளி - விவசாயி ஒற்றுமையின் தேவை
\மோடி ஆட்சிக் காலத்தில் கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்தின் அமலாக்கமும் நீர்த்துப் போயிருக்கிறது. அரசின் நவீன தாராள மயப் பாதை அமைப்புசாரா நகர்ப்புற உழைப்பாளிகள், அமைப்புசார் நடுத்தர அரங்க ஊழியர்கள், வியாபாரிகள், சிறு தொழிலதிபர்கள் என அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இதுவே, தொழிலாளி - விவசாயி ஒற்றுமையாக களத்தில் ஒர் இணைப்பை உருவாக்கியிருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் சமீபத்திய ஒன்றுபட்ட இயக்கங்கள். இது நம்பிக்கையை தந்துள்ளது.
சாதிய ஒடுக்குமுறைகள்
சாதிய வன்மம், பாரபட்சங்கள் இன்றும் உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்வை துயரமயமாய் வைத்திருக்கின்றன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் பாஜக பிரமுகர் ஒருவர் பட்டியல் சாதி குடும்பத்தினரை பூட்ஸ், செருப்பால் அடிக்கிற காட்சி நவம்பர் 25, 2024 அன்று இரவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. தலித் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு வெளியே ஒரு பாத்ரூம் கட்டியதில் எழுந்த பிரச்சனையே காரணம்.
பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய அந்த காணொலி காட்சி, இன்றும் கூட, நகரங்களி லும் சாதிய வேறுபாடுகள் எவ்வளவு புரை யோடிக் கிடக்கின்றன என்பதற்கு சாட்சி.
உழைப்பாளி மக்களின் வாழ்நிலைக்காக, வாழ்வுரிமைக்காக நடத்த வேண்டிய போராட்டங்களில் கைகோர்க்க வேண்டி யவர்களுக்கு இடையில் சாதி எனும் நந்தி விஸ்வரூபமெடுத்து தடையாக உள்ளது.
அன்றாட நிகழ்வான பாலியல் வன்முறை
பாலின வன்முறை நாடெங்கிலும் அன்றாட நிகழ்ச்சிகளாக மாறிவிட்டன. என்சிஆர்பி தரவுகளின்படி 2014 முதல் பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7 குற்றங்கள் நடந்தேறியுள்ளன. ஆனால் அதுவே 2021ஆம் ஆண்டில் 49 ஆக உயர்ந்து, 2024இல் 70 ஆக அதிகரித்துள்ளது. இது, சமூகத்தில் ஊறிப் போயிருக்கிற பாலின பேதங்கள், பெண்ணடிமைத்தனம், நிலப்பிரபுத்துவ சிந்தனைகளின் வன்முறைகளாகும்.
வெளிச்சம் தரும் வெண்மணி
இச்சூழலில் வெண்மணி, இம்மூன்று வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான வெளிச்சம் ஆகும். சாதிய வேறுபாடுகள் கடந்து, கிராமப்புற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் களம் கண்ட வரலாறு அது. பிறப்பு தங்கள் மீது சுமத்திய அடையாளங்களை புறந்தள்ளுகிறோம் என்பதற்கு உயிர்த்தியாகம்தான் நிரூபணம் எனில், அதையும் செய்து காட்டிய மண்ணாக கீழத் தஞ்சை தியாகம் விளங்கியது. தஞ்சை தியாகிகள் என். வெங்கடாசலம், இரணியன், களப்பால் குப்பு, சிவராமன் ஆகியோரின் குருதியில் சாதியைத் தேட இயலுமா? சாதி கடந்து நின்றார்கள்.
பாலின ஒடுக்குமுறையும், நிலப்பிரபுத்துவத்தின் ஒடுக்குமுறைகளில் ஓர் கொடிய வடிவமாக இருந்தது. கிராமப்புற உழைப்பாளி பெண்களின் உரிமை, உள்ளம், உடை என எல்லா சுதந்திரங்களுமே பறிக்கப் பட்டிருந்தது. கருக்கப்பட்ட 44 உயிர்களில், 20 பெண் உயிர்களும் அடக்கம்.
வரலாறு நாம் அடைய விரும்புகிற பொருளியல் விடுதலைக்கான பயணத்தில் சாதிய ஒழிப்பு, பாலின சமத்துவத்திற்கான பயணமும் இணைந்ததே என்ற வழியை வெண்மணி காட்டியுள்ளது.
வெண்மணியில் சங்கமிக்கவுள்ள நாம், வரலாற்று அடையாளங்களை, விழுமியங் களை, ஆளுமைகளைக் கொண்டாடுவது காலத்தின் தேவை.
வெண்மணியில் சங்கமிப்போம்!...
கட்டுரையாளர் : துணைத் தலைவர் - தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு