1. 2018 - மே 22 கடல் நகரமான தூத்துக்குடியின் மாவட்ட நீதிமன்றத்தின் வடக்கு பக்கம் உள்ள தெற்கு காவல்நிலையத்திற்குள் நகரின் பல பகுதிகளிலிருந்தும் பிடித்து வரப்பட்ட அப்பாவிகள் செல்லும் போது இரண்டு பக்கமும் நின்று கொண்டிருந்த போலீசார் கொடூரமாக தாக்கியதினால் எழுந்த மரண ஓலத்தை கேட்ட வழக்கறிஞர்கள், உடனடியாக மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்டனர். மாஜிஸ்திரேட்டும் சாதாரண உடையில் புகார் கொடுக்க வேண்டும் என கூறி பொது இடமான தெற்கு காவல்நிலையம் செல்கிறார். காவல் நிலைய முன்புறம் பல தடுப்பு அரண்கள் நிறுவப்பட்டு அந்த பகுதி இராணுவ முகாம் போல இருந்தது. மாஜிஸ்திரேட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
***************
2. இதன் பிறகு பல பொய் வழக்குகளில் இணைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களின் உடல் முழுவதும் காவல்நிலைய சித்ரவதைக்கான தடயங்கள் இருந்தன. இன்னும் ஏராளமான மனித உரிமை மீறல்கள் தூத்துக்குடி நகரம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன.
***************
3.தலைமை நீதித்துறை நடுவரின் உத்தரவுப்படி புதுக்கோட்டை காவல்நிலையத்திற்குள் சட்டப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை சோதனையிட மாஜிஸ்திரேட் வருகிறார் என தெரியவந்ததும், துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்திற்கு கண்டு செல்லப்பட்டனர். அங்கும் மாஜிஸ்திரேட் சென்றார். ஆனால் சித்ரவதைக்குள்ளானவர்களை மருத்துவமனைக்கோ, நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்ல வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் மாஜிஸ்திரேட்டுக்கு வாகனம் வழங்கப்படவில்லை. இதனை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தார்.
***************
4.22.05.2018 மற்றும் அதன் பிறகான துப்பாக்கி சூட்டின் தொடர்ச்சியாக பலர் ஜாமீனில் வந்துவிடக்கூடாது என்பதற்காக 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் இணைக்கப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். போலீசாரின் தேடுதல் வேட்டை காரணமாக பலர் தலைமறைவாகினர். 65 பேர்களுக்கு தூத்துக்குடி செசன்ஸ் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யவும், போலீசார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீடு 27.06. 2018 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல் பல்வேறு வழக்குகளில் இணைக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டம் (ம) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
***************
5.தூத்துக்குடி நகரின் ஒரு பகுதியில் முதலிலும், அதன் பிறகு இதர பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி நகரம் தனித்தீவானது.
***************
6. பெரிய சிகப்பு வகைப்பாட்டு வேதியியல் தொழிற்சாலையான ஸ்டெர்லைட்டின் இரண்டாவது யூனிட்டும் செயல்பட இருப்பது தெரியவந்தவுடன், நீர், நிலம், காற்றினை மாசுபடுத்தியும் குறிப்பாக பசுமை வளையத்தை பராமரிக்காமலும், மன்னார் வளைகுடா உயிர்கோளப்பகுதியில் அமைந்தும், காப்பர் சிலாக்குகளை பல இடங்களில் கொட்டியது உள்ளிட்டு, பல விதிமீறல்களில் ஈடுபட்டு வந்த ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடிட வேண்டி 12.02.2018 அன்று பொதுமக்களால் தூத்துக்குடி ராஜாஜி பார்க் முன்பாக தொடங்கப்பட்ட அறவழிப்போராட்டம் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்ததினால், 100-வது நாளில் அமைதியாக, சாதி, மத வேறுபாடின்றி, குடும்பம் குடும்பமாக, ஆயுதங்களின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். ஆனால் பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறிஏவப்பட்ட வன்முறையில் 13பேர் இறந்தனர். துப்பாக்கி சூடு உள்ளிட்ட சட்ட மீறல்கள், காவல் சித்ரவதை அடையாளங்களுடன் இன்றும் பலர் உள்ளனர்.
***************
7.துப்பாக்கி சூட்டுக்கு காரணமான போலீசார், தாசில்தார்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ- க்கு 29.05.2018 அன்று சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுணன் புகார் மனு அனுப்பி வைத்தார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்பது உள்ளிட்ட பல பொதுநல கோரிக்கைகள் கொண்ட மனுக்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மதுரை உயர்நீதிமன்றம் 02.08.2018 அன்று குற்ற எண்: 191/ 2018 -க்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக கருதிட வேண்டுமென உத்தரவிட்டது. தொடர்ந்து 14.08.2018 அன்று துப்பாக்கி சூடு தொடர்புடைய வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டதுடன், துப்பாக்கி சூடு தொடர்பாக வரப்பெற்ற புகார் மனுக்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டுமென்றும் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரச உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. அந்த மேல்முறையீடு 18.02.2019 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. துப்பாக்கி சூடு தொடர்பாக கே.எஸ்.அர்ச்சுணன் மட்டுமே புகார் கொடுத்திருந்த நிலையில் 28.11.2018 அன்று கே.எஸ்.அர்ச்சுணனின் புகாரானது முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் என்று சிபிஐ மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
***************
8.துப்பாக்கி சூட்டிற்கு பின்பு பதிவு செய்யப்பட்ட 100-க்கும்மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் எந்த எந்த இடத்தில் எந்த எந்த காவல்துறையினர் இருந்தனர் என்பதுவும், தாசில்தார்கள் இருந்தனர் என்பதுவும் சொல்லப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் அவர்கள் 15.02.2019 அன்று சென்னையில் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்த வன்முறைகளை வெளிச்சமிட்டு காட்டினார்.
***************
9.இதற்கு பிறகு ஸ்டெர்லைட்டை மூடியது தொடர்பான வழக்குகளில் தமிழக அரசானது உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்து 28.05.2018 அன்று மூடப்பட்டதற்கான காரணங்களை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்ததினால் தமிழக அரசின் உத்தரவு சரிதான் என்று 18.08.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பிறகு ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் ஸ்டெர்லைட்டை தற்காலிகமாக திறந்திட கோரிய மனுக்கள் 3 முறை தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில் ஆக்சிஜன் பிளாண்ட்டை திறப்பதற்கு அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரு பக்கம் வழக்குகள் நடத்திக் கொண்டே, மறுபக்கம் அனைத்து கட்சிக் கூட்டத்தை தமிழக அரசே தேர்தலுக்கு பிறகு கூட்டியது. தேசிய முக்கியத்துவம் கருதி கொரோனா நோய் தாக்குதலிலிருந்து மக்களை காப்பாற்றிட ஆக்சிஜன் பிளாண்ட்டை மட்டும், ஆக்சிஜன் பிளாண்ட் தனியாக செயல்படக்கூடியது என்பதில் 4 மாதங்களுக்கு மட்டும் செயல்பட அனுமதித்து 27-04-2021 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
***************
10.ஸ்டெர்லைட்டால் சுற்றுச்சூழல் பாழ்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு பலதரப்பட்ட அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாழ்படுத்தப்பட்டால் பாழ்படுத்தப்பட்டது தான். வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை அழித்திட அனுமதிக்கக்கூடாது என்று தான் பலர் உயர்நீத்துள்ளனர். பலர் காவல் சித்ரவதைகள் அனுபவித்துள்ளனர். பொய் வழக்குகளை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அப்பாவிகள் மீதான பொய் வழக்குகள் கட்டாயம் வாபஸ் பெறப்பட வேண்டும். அதே சமயம் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான காவல்துறையினர், தாசில்தார்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவது தான் சுற்றுச்சூழல் நீதி கேட்டு உயிரை இழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குமான உண்மையான நீதியாகும்.
***************
11.ஸ்டெர்லைட்டின் முதலாவது யூனிட்டில் ஒரு நாளுக்கு 900 டன் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டாவது யூனிட்டில் ஒரு நாளைக்கு 1200 டன் காப்பர் உற்பத்தியில் ஈடுபட 15.11.2006 அன்று அனுமதி பெற்றுள்ளது. ஸ்டெர்லைட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் படி 2018 ம் வருடத்தில் அதன் முதலாவது யூனிட்டில் நேரடியாக வேலையில் ஈடுபடுகின்றவர்கள் 2,254 பேர்கள். அதன் 2வது யூனிட்டிற்கான 10.01.2015ஆம் தேதியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் ஆலை செயல்பட துவங்கும் போது 650 தொழில்நுட்ப பணியாளர்களும், தொழிற்நுட்பம் சாராத 800 பணியாளர்களும் வேலை செய்ய இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டினால் பல ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுவதாக கூறப்பட்டு வந்தாலும், அவர்கள் சட்டப்படியான உரிமைகள் பெறாத தற்காலிக தொழிலாளர்கள் என்பது தான் உண்மை.
***************
12.1.08.1994 அன்று ஸ்டெர்லைட் தடையில்லா சான்றிதழ் பெற்றதிலிருந்து பார்க்கையில் மத்தியிலும், மாநிலத்திலும் பல கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சர்வதேச சமூகத்தினால் ஸ்டெர்லைட் தொடர்புடைய தமிழக அரசின் நடவடிக்கைகள் உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன. இன்று வரை உச்சநீதிமன்றமும் ஸ்டெர்லைட் தமிழகத்திற்கு தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கவில்லை. நான்கு மாதத்திற்கு ஆக்சிஜன் பிளாண்ட் செயல்படுவது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் தான் அனுமதி வழங்கியுள்ளது.
***************
13. எனவே ஸ்டெர்லைட் தாக்கல் செய்துள்ள வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் இப்போது தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தி வரும் அனுபவம் மிக்க அதே மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு தமிழக அரசு முறையாக நடத்திட வேண்டும். துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள்மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி சுற்றுச்சூழலைபாதுகாக்கும் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கும், பல வகைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்குமான நீதி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
தொகுப்பாளர் : இ.சுப்பு முத்துராமலிங்கம்,வழக்கறிஞர், தூத்துக்குடி