சென்னை பத்மசேஷாத்திரி பள்ளி... பாலபவனா, ‘பாலியல் தொல்லை பவனா என்று மக்கள் கேள்விஎழுப்பும் அளவிற்கு விஷயங்கள் விபரீதமாகிக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் அவமானப்படுவதுடன் அச்சப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 59வயது நிரம்பிய ராஜகோபால் ரங்காச்சாரி எனும் ஆசிரியரின் பாலியல் வன்முறை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், அவரின் வாக்குமுலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பலஆண்டுகள் நடப்பதாகவும்,இன்னும்பலர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், பலஆசிரியர்களுக்கு தெரியும் என்பதுபோல் அவரின் வாக்குமுலம் உள்ளது.இவரைப்பற்றி பலமுறை புகார்வந்தும் நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நிர்வாகத்தின் குடுமி இவர்கையில் மாட்டி உள்ளதா? எப்படி பிரச்சனைக்குரிய இந்த ஆசிரியர் இத்தனை ஆண்டுகள் பள்ளியில் பணிபுரிய முடிந்தது.? இதற்கு நிர்வாகம் குற்றவாளி இல்லாமல்வேறு யார் குற்றவாளியாக இருக்கமுடியும்? துண்டைக்கட்டிக்கொண்டு வெற்றுடலுடன் எப்படி மாணவிகளிடம் பாடம் எடுக்க இந்த நிர்வாகம் அனுமதித்தது? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
நாங்கள் வைத்ததுதான் சட்டம்! எங்களை யாரும் கேட்கமுடியாது!. கல்விக்கு நாங்கள் வைத்ததுதான் விலை! யாரும் தலையிடமுடியாது! தமிழ்மொழியை கற்றுத்தர முடியாது... என்று அரசியல் பின்புல ஆணவத்துடன் செயல்படும் பள்ளிதான் பத்மசேஷாத்திரி. இந்த பள்ளியில் சேருவதற்கு ஒரு குழந்தைக்கு அட்மிஷனுக்குச் செய்ய சென்றால் தமிழில் பேசினால் விண்ணப்பம் வழங்குவதில்லை. அப்படியே வழங்கினால் ‘உயர்’ வகுப்பினருக்கே முன்னுரிமை. தாய்,தந்தை இருவரும் பணியாற்றிட வேண்டும்.சம்பளம் குறைந்த பட்சம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இருக்க வேண்டும்.கார் வைத்து இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கார்பதிவு எண் குறிப்பிட வேண்டும். ஆங்கிலம், இந்தியில் மட்டுமே பள்ளி வளாகத்தில் உரையாட வேண்டும். குழந்தை தமிழ் அல்லாத பிற மொழிகளில் பேச தாய், தந்தைஇருவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். குடிசைப் பகுதிகளில் குடியிருக்கக் கூடாது. அப்படி வசிப்பவர்களுக்கு அட்மிஷன் தரப்படுவதில்லை. கட்டாய நன் கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை.
பொதுச் சொத்தை அபகரித்து...
பள்ளியின் வரலாறு அரசையும் மக்களையும் மோசடிசெய்த வரலாறாக உள்ளது. தனியார்மயத்தைப் பற்றி அதிகமாக பேசக்கூடியவர்கள் பொதுச் சொத்தை கபளீகரம் செய்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒய்.ஜி.பி. குடும்பத்தாரும் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டுவந்த ‘நுங்கம்பாக்கம் பெண்கள் மனமகிழ் மன்றம்’ என்ற அமைப்பின் சார்பில் 1958-ஆம் ஆண்டு ஒரு பள்ளி தொடங்கப்பட்டது.13 மாணவர்களுடன் தொடங்கப் பட்ட இந்த பள்ளியை பெரிய அளவில் மாற்றுவதற்கு அந்த மனமகிழ் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர். இந்த மன்றத்தில் ராஜலட்சுமி பார்த்தசாரதி என்பவரும் ஒருவராக இருந்தார். இந்தப் பள்ளியில் ஆசிரியராகவும் இவர் செயல்பட்டார்.
பள்ளியின் இடநெருக்கடி காரணமாக பள்ளியை விரிவுபடுத்துவதற்காக இந்த அமைப்பின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அப்போது கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்திய முதல்வர் காமராஜர் அவர்கள் 1962 ஆம் ஆண்டு பால பவன் செகண்டரி பள்ளிக்கு இடம் ஒதுக்கிஅதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வி கற்க வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்தோடு காமராஜர் இந்த இடத்தை வழங்கி இருக்கிறார். பொதுப்பள்ளியாக இருந்த இந்த பள்ளியை அபகரிப்பதற்காக ஒரு அறக்கட்டளையை துவக்கி அந்த அறக்கட்டளையின் கீழ் பள்ளி நிர்வாகத்தை கொண்டு வந்து படிப்படியாக அந்த அறக்கட்டளையில் ராஜலட்சுமி பார்த்தசாரதியின் குடும்ப உறுப்பினர்களை சேர்த்துஅறக்கட்டளையையும் பள்ளி நிர்வாகத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.இந்த அறக்கட்டளை தொடர்பாக பல வழக்குகள் நீதி
மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த அறக்கட்டளையின் சார்பில் கே.கே. நகரில் 5வது செக்டாரில் இலவசமாக இடத்தைப் பெற்று பத்ம சேஷாத்ரி பள்ளி என்று அவர்களின்குடும்பப் பெயரோடு துவக்கி விட்டார்கள். அரசு இடத்தில்அரசு உதவியுடன் பொதுப்பள்ளியாக துவக்கப்பட்டது, இவர்களால் அபகரிக்கப்பட்டு தனியார் பள்ளியாக மாற்றப்பட்டுவிட்டது.தற்போது மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இபள்ளியாக மாற்றிவிட்டார்கள். இதன் கிளைபள்ளிகள் உட்படசுமார் 12 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். ஏழை மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடத்தை ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றிவிட் டார்கள்.
தொடர் மரணங்கள்
25 வருடங்களுக்கு முன்பாக பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு சென்ற பொழுது பள்ளி வகுப்பறையிலேயே ஒரு குழந்தை இருப்பதை கவனிக்காமல் பூட்டிவிட்டார்கள். வெகுநேரமாகியும் குழந்தை வரவில்லை என்பதால் பெற்றோர்கள் பதற்றத்துடன் பள்ளி காவலாளிகளை சென்றுகேட்டபோது அங்கு இல்லை என்றும் அனைவரும் சென்று விட்டார்கள் என்றும் உறுதிபட தெரிவித்து அனுப்பி விட்டார்கள். பள்ளி நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்ட போதும் இதேபதிலை சொல்லி இருக்கிறார்கள். எந்த காலத்திலும் வளாகத்துக்குள் நிர்வாகிகளை சந்திப்பதற்கு அனுமதிப்பதில்லை. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு வகுப்பறையை திறந்த பொழுது அந்த குழந்தை இறந்து கிடந்த அதிர்ச்சியால் பெற்றோர்கள் கதறினார்கள். மக்கள் உறைந்து போனார்கள். பத்திரிகையில் செய்தி வந்தது. அன்றைய ஆட்சியாளர்களைப் பிடித்து சரிக் கட்டி விட்டார்கள்.2012 ஆம் ஆண்டு நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயதுசிறுவன் சினிமா தயாரிப்பாளர் ஆர்.என்.ஆர்.மனோகரன் என்பவரின் மகன் பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் நீச்சல் குளத்தில் இறந்துவிட்டான். நீச்சலுக்கு தேவையான போதுமான உபகரணங்களை வாங்கி வைக்காமலும் நீச்சல் குளத்தை நிர்வகிப்பவர்கள் கவனக்குறைவாலும் இறக்கும்நிலை ஏற்பட்டது. குறைந்த அளவிலான மாணவர்கள் குளிக்கக்கூடிய நீச்சல்குளத்தில் அதிகமான மாணவர்கள் குளிப்பது, இதற்காக பள்ளிக்கு வந்தவுடன் குளிக்கவைப்பது, அனைத்து மாணவர்களும் நீச்சல் கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வாங்குகிற ஒரு நிலைமையும் இருந்தது. பணம்வாங்கிய அளவிற்கு உபகரணங்களை வாங்குவது இல்லை. வழக்கம்போல் வழக்கு, கைதுகள், விடுவித்தல் என்று முடித்துவிட்டார்கள். இதே காலத்தில் தாம்பரத்தில் ஒருசிறுமி பள்ளி வாகனத்தின் ஓட்டையில் விழுந்து இறந்து விட்டார். அரசு அதற்கு எடுத்த நடவடிக்கையில் ஒரு துரும்பளவு நடவடிக்கைகூட இந்த பள்ளி நிர்வாகத்தின்மீது எடுக்கவில்லை.இதற்காக அன்றைய தினம் இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவல்துறை பள்ளியின் அடாவடித்தனத்திற்கு துணை நின்று மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது.
‘சட்டங்கள் செல்லாது’
அரசு கொண்டுவந்த, ஏழை மாணவர்களுக்கு 25%இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தனர். இதன் விவரங்களை அறிந்து கொள்வதற்காக கே.கே. நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாகத்தை சந்திப்பதற்காக சென்றபொழுது, பள்ளி வளாகத்துக்குள் யாரையும் அனுமதிக்கமாட்டோம் என்று மறுத்து விட்டார்கள். அதன் பிறகு பள்ளி நிர்வாக தலைமை நாங்கள் 25 சதவீதத்தை அமல்படுத்த மாட்டோம், எங்கு வேண்டுமானாலும் நீங்கள் போய்க் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கசொன்னதாக காவலாளியும் மற்றவர்களும் வந்து தெரிவித்தார்கள்.இரும்புத்திரை அமைத்து ஒரு பள்ளியை நடத்துவது அங்கு நடக்கும் தவறுகளை மறைப்பதற்கும் காரணமாக அமைகிறது. தற்போது மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மிக கொடூரமான முறையில் நடந்துள்ளது. முன்னாள் மாணவிகள் மூலம் இது வெளிப்பட்டு இருக்கிறது. சமூகத்தில் பலதரப்பினரும் பத்ம சேஷாத்திரி பள்ளியில்படுமோசமான நடவடிக்கைகளை முகநூலில் வெளிப்படுத்தி வருகிறார்கள். கே.கே.நகர் மட்டுமல்ல, நுங்கம்பாக்கம் பள்ளி உட்பட விசாரணை நடத்த வேண்டும் என்றுசின்னத்திரை கலைஞர் குட்டி பத்மினி வலியுறுத்தி இருக்கிறார். மறுபுறம் சுப்ரமணிசாமியன் சுவாமி வகையறாக்கள் வழக்கம்போல் அநீதிகளை பாதுகாக்கும் பணியில் இறங்கிவிட்டார்கள். மாநில அரசு விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடத் தொடங்கிவிட்டனர்.
சம்பவங்கள் தனித்தனியாக நடைபெறுவதால் குடும்பப்பெயரும் குழந்தையின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் பல சம்பவங்கள் வெளிவருவதில்லை. இந்த சமூக உளவியலை அறிந்து வைத்துள்ள நிர்வாகம் தவறுகளை தொடர்ந்து மறைப்பதற்கு சாதகமாக்கிக் கொள்கிறது. பள்ளிக்கூடம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதற்கான எந்தச் சூழலிலும் இல்லாத பொழுது, பொதுமக்கள்பார்வைக்கு அந்நியப்பட்ட, நுழையமுடியாத இடமாக மாற்றப்பட்டு விட்டதால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.கல்வித்தரம் என்ற வார்த்தைகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் பணம், பாலியல் வன்முறை, உயிர்ப்பலி, மனஉளைச்சல் போன்றவற்றை சமூகம் கண்டிக்க வேண்டும். பணக்கொள்ளைக்கும், படுமோசமான செயல்களுக்கும் களம் அமைத்து செயல்படுகிற இதுபோன்ற தனியார் பள்ளிகளை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
கட்டுரையாளர் : ஏ. பாக்கியம், சிபிஐ(எம்) தென் சென்னை மாவட்டச் செயலாளர்