articles

img

முடங்கிப்போன முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வு....

கொரோனா முதல் அலையின் போது பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், முறைசாரா உடலுழைப்பு தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக நிதி உதவியோ, உணவுக்கிடங்குகளில் தேங்கிக்கிடக்கும் உணவு தானியங்களை இலவசமாக கொடுக்கவோ மனமில்லாத ஒன்றிய அரசு, மக்களுக்கு எதிரான தாக்குதல்களை மட்டும் விடாப்பிடியாகச் செய்து வருகிறது. 

உலகின் பட்டினி கொடுமையிலிருந்து மீண்டு வரும் 107 நாடுகளில் தரவரிசை பட்டியலில் 94வது இடத்தையே இந்தியா பெற்றுள்ளது. 27 கோடிமக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். சத்துணவுக் குறைவு, போதிய உணவு கிடைக்காமை, குழந்தைகள் இறப்பு மற்றும் மக்கள்தொகையில் 14 சதவீதம் உள்ள நாடும் இந்தியா தான். 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 42 சதவீதத்தினர் சராசரியை விட எடை குறைவாக உள்ளனர். 54 சதவீதம் பேர் ரத்தசோகையுடன் காணப்படுகின்றனர். வறுமையின் கொடுமைகள் பெரும்பான்மையாக முறைசாரா உடல் உழைப்பு தொழிலாளர்கள் குடும்பங்களிலேயே காணப்படுகிறது. ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள், இந்தியாவில் 2020 நவம்பர் வரை 9 கோடியே 27 லட்சத்து 606 (6 வயது வரையிலானகுழந்தைகள்) இந்தக் கொடுமையின் தரவரிசையில் இடம் பெற்றுள்ள மாநிலங்கள் 1.மகாராஷ்டிரம் 2.குஜராத் 3.சத்தீஸ்கர் 4.தமிழகம் என உள்ளது. 

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் உள்ள குழந்தைகளை 9 மடங்கு அதிகமாக பாதிக்கும். உயிரிழப்பும் அதிகரிக்கும். குறிப்பாக கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த குழந்தைகளை ஊட்டச்சத்து இல்லாமையால் பெரிதும் பாதிக்கும். பெருந்தொற்றும், ஊரடங்கும் அடுத்த தலைமுறையின் வாழ்வையே கேள்விக்குறியாக்கும் அபாயம் உள்ளது. பள்ளிகள் திறக்காமை,ஊட்டச்சத்தின்மை, சத்துணவுக் கூடங்கள் மூடல் ஆகியவை  பாதிப்புகளை மேலும் அதிகரிக்கும். 

உழைப்புச் சந்தையில் 90 சதவீதமாக உள்ள முறைசாரா உடலுழைப்புத் தொழிலாளர்களும், கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களும் தான் இந்த பேராபத்தை சந்திக்க உள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலையிழந்தும், வருமானமின்றியும், பசியோடும் பட்டினியோடும், கடன் வாங்கக் கூட வழியின்றி வாழும் அவலநிலை தான் முறைசாரா உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கை. வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை, பசியின் கொடுமையிலிருந்து குழந்தைகளை காப்பாற்றி வளர்க்க முடியவில்லை. குழந்தைகளின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வறிய நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இரண்டாம் அலைத் தொற்றின் கொடூரம் மேலும் அதிகமானது. இந்த ஊரடங்கு மேலும் இவர்களை பாதித்து வருகிறது. எந்தவிதமான சட்ட, சமூகப் பாதுகாப்பும் இல்லாத முறைசாரா உடலுழைப்புத் தொழிலாளர்கள் தான் பெரிதும் பட்டினிக் கொடுமைக்குள்ளாகிறார்கள். மிகக்குறைந்த கூலி, நிரந்தரமற்ற வேலை, சுகாதாரமற்ற வாழ்விடச் சூழ்நிலை, பாதுகாப்பற்ற வேலைச் சூழல், இப்படி வாழும் முறைசாரா தொழிலாளர்களை கொரோனா பெருந்தொற்றும், ஊரடங்கும் வாழ்வையே முடக்கிப் போட்டுள்ளது. 

தமிழகத்தில் நலவாரியங்கள்
தமிழகத்தில் சுமார் 2 கோடி தொழிலாளர்கள் அணிதிரட்டப்படாத, முறைசாரா உடலுழைப்பு தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்காக கேரளாவைப் போல நல வாரியங்கள், தொழிற்சங்கங்களின் பெருமுயற்சியால் 1994இல் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியமும், 1999இல் முறைசாரா உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியமும் உருவாக்கப்பட்டது. தமிழக அரசு அதை முறையாக செயல்படுத்த மறுக்கின்றது. அல்லது அலட்சியப்படுத்துகிறது. தற்போது 2020 மே வரை 73 லட்சம் தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர். இதில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் மட்டும் 31 லட்சத்து 17 ஆயிரம் பேர், ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் 1 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ நல வாரியம் மற்றும்விசைத்தறி, கைத்தறி, தையல் தொழிலாளர், முடி திருத்துவோர், அமைப்புசாராத் தொழிலாளர், பனைமரத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர், உடலுழைப்புத் தொழிலாளர், பொற்கொல்லர், சாலையோர வணிகர்கள், சமையல் கலைஞர்கள், ஓவியர்கள் என 17 நல வாரியங்கள் உள்ளன. ஆட்டோ, கட்டுமான நல வாரியங்களை தவிர்த்து 15 நலவாரியங்களில் 60 வகையான தொழிலாளர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில், கொத்தனார், தச்சர், பெயிண்டர், கம்பி வளைப்பவர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், வெல்டர் என 53 வகையான தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். 22 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நலவாரியத்தில் 2 கோடி முறைசாரா உடலுழைப்புத் தொழிலாளர்களில் 73 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்யப் பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட  தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை,  திருமண உதவித்தொகை, 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம்  ரூ.1000 என குறைந்தபட்சம் பெற்று வருகின்றனர். இவைகளும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாங்க முடியாமல், பல்வேறு நிபந்தனைகளும், கோரிக்கைகளை பரிசீலிப்பதில் முறைகேடுகளும் உள்ளன. பதிவு செய்வதற்கும் புதுப்பிப்பதற்கும் முறையான ஏற்பாடுகள் இல்லை. 

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர் நல அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு உள்ளது. இந்த ஜனநாயகப் பூர்வ அமைப்பும் முறையாகச்செயல்படுவதில்லை. நலவாரியச் செயல்பாட்டிற்கு கட்டுமான நல வாரியத்திற்கு கட்டுமானப்பணிகளுக்கான நல வரி 1 சதவீதம் வசூலிக்கப்பட்டு வாரியத்தில் ரூபாய் 30,000 கோடி வரை நலநிதி உள்ளது. ஆட்டோ நலவாரியத்தில் போக்குவரத்து ஆய்வின்போது நலநிதி வசூலிக்கப்பட்டு, வாரியத்தில் உள்ளது. மற்ற நலவாரியங்களுக்கு நல நிதி ஏற்பாடு இல்லை. இவ்வாரியங் களுக்கு நல நிதியாக ஜிஎஸ்டி வரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு நல வாரியத்திற்கு கொடுக்கலாம். 

முதல் அலையின் போது... 
கடந்த அதிமுக அரசு  நலவாரியச் செயல்பாடுகளை முடக்கியது. முறையாகச் செயல்படுத்தவில்லை. கொரோனா தொற்றின்போது  நல உதவி என்ற பெயரில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ 1,000 வீதம் இரண்டு முறையும், 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் கொடுத்தது. இதைப்போல ஆட்டோ நலவாரிய தொழிலாளர்களுக்கும்  கொடுத்தது. மற்ற 15 முறைசாரா உடல் உழைப்புத்தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000 வீதம், இரண்டுமுறை மட்டுமே கொடுத்தது. இதில் பயனடைந்தவர்கள் 25 லட்சம் பேர் மட்டுமே. 46 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடையவில்லை. 19 லட்சம் பேர் புதுப்பிக்கவில்லை என்றும், மற்றவர்கள் வங்கிக் கணக்கு தரவில்லை  என்றும் நிராகரிக்கப்பட்டனர். புதுப்பித்தலையும், வங்கிக் கணக்குவிபரம் சேகரிப்பதிலும் தொழிலாளர் நலத்துறை அக்கறையற்றுச் செயல்பட்டது.

புதிய அரசிடம் கோருவது
வாழ்வின் விளிம்பு நிலையில் கொரோனா பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் முறைசாரா மற்றும் உடல்  உழைப்புத் தொழிலாளர்கள்  நலன் காக்க, கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வகையான நல வாரியங்களையும் முறையாகச் செயல்படுத்த வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட அனைத்து வகையான உடல் உழைப்பு மற்றும் முறைசாரா தொழிலாளர்களை முழுவதுமாக நலவாரியங்களில் பதிவு செய்திட தொழிற்சங்கங்களை பயன்படுத்தி துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரியச் செயல்பாட்டை மேம்படுத்த மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்களை நியமித்து முறையாக செயல்படுத்த வேண்டும். நலவாரியங்களுக்கு நலநிதி உருவாக்கவும், நலவாரிய உதவி நிதிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட வேண்டும். நலவாரிய உறுப்பினர்கள் குழந்தைகளின் கல்வியை உத்தரவாதப்படுத்த சிறப்புத் திட்டம் உருவாக்க வேண்டும். 

உடனடியாக கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதியாக அதிமுகஅரசு வழங்கியது போல் அல்லாமல், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர் அனைவருக்கும் மாதம் ரூபாய் 7,500 வீதம் வழங்கிட வேண்டும். கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள, தொழிலாளர்களைப் பாதுகாக்க அனைவருக்கும் தடுப்பு ஊசி, வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதம் நபருக்கு இலவசமாக 10 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சிஐடியுவின் 13 அம்சக் கோரிக்கைகளை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். மாநில அரசு இதற்காக ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும்.

கட்டுரையாளர் : தஞ்சை ஆர். மனோகரன் , சிபிஎம், தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்.