மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் 114க்கு அனுமதி வழங்கப் பட்டது. இதில் கடந்த 13.1.2021 முதல் இன்றுவரை 86 மையங்கள் நெல் கொள்முதல் செய்து வருகின்றன. மீத மையங்கள் இன்னும் செயல்படவில்லை. இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கூடுதல் மையங்கள் துவங்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.அதே நேரத்தில் விவசாயிகளுக்கு உதவவேண்டிய நெல் கொள்முதல் மையங்கள் ஆளுங்கட்சிக்காரர்களின் கொள்ளைக் கூடாரமாக மாறியிருப்பதும் இதைக் கண்டுகொள்ளாமல் அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதும் மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.
கொள்முதல்
இந்த ஆண்டு சன்னரக நெல் ஒரு கிலோவுக்கு ரூ.18.80ம், ஊக்கத் தொகையாக ஒரு கிலோவுக்கு 70 பைசாவும் அரசு அறிவித்துள்ளது. இந்த விலைப் பிரகாரம் மையங்களில் 40 கிலோ மூடைகளாக எடை வைக்கப்படுகிறது. இந்த பணிகளை செய்யும் சுமைப்பணியாளர்களுக்கு நெல்லைமிஷின் மூலம் தூற்றி, சாக்கில் பிடிக்க 40 கிலோ மூடை ஒன்றுக்கு ரூ.1.27 பைசாவும்,எடை வைத்து மூடையை மூட்டி ஏற்றுவதற்கு மூடை ஒன்றுக்கு 2 ரூபாயும் அரசு தரு
கிறது. ஆனால் இதை மறைத்து சுமைப்பணியாளர்களுக்கு ஊதியம் தர வேண்டும். அதற்கான செலவினங்கள் என்று சொல்லிநெல் கொள்முதல் மையங்களில் 40 கிலோமூடை ஒன்றுக்கு ரூ.50 விவசாயிகளிடம் பெறப்படுகிறது. இதோடு ஒரு ஏக்கர் நெல்லுக்கு ஒரு வாளி நெல்லும் அள்ளிக்கொள்கிறார்கள். இதுபோக கொள்முதல்நிலைய காவலருக்கும் சுமைப்பணியாருக்கும் மாமூல் என நெல் குவியலுக்கு தலா ரூ.100, ரூ.500 ஒவ்வொரு விவசாயியும் கொடுக்க வேண்டும். இதன்காரணமாக விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.2 வரை குறைகிறது.
சுமைப்பணியாளர்கள் எங்களுக்கு 40 கிலோ மூடைக்கு ரூ.20 தான் கூலியாகக்கொடுக்கிறார்கள். மீதம் ரூ.30 ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களும், அதிகாரிகளும் எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதில் அதிகாரிகள், ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் வரை ரூ.20, நெல்கொள்முதல் மைய ஆளுங்கட்சி பொறுப்பாளருக்கு ரூ.10 என பங்கிடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
கொள்முதலுக்கான ஆவணங்கள்
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம். நெல் கொள்முதலுக்கு நிலத்திற்கான கணினி சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் கோரப்படுகின்றன. இதோடு விவசாயிகளின் நெல்லில் ஈரப்பதம் சரிபார்த்து அனுமதிக்கப்பட்ட ஈரப்பதம் இருந்தாலும் கூடுதலாக இருப்பதாகச் சொல்லி காக்க வைக்கப்படுகிறது. இதோடுவிவசாயிகள் மையங்களில் கொட்டி வைக்கும் நெல்லுக்கு முறையான வரிசைப் படியான டோக்கன்கள் தருவதில்லை. இதனால் விவசாயிகள் இரவு பகலாக பல நாட்கள் நெல்கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லைமட்டும் ஈரப்பதம் பார்க்காமல் தூற்றாமல்உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தரம் குறைவான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகளிடம் சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் கேட்பதால் இந்தஆவணங்களை உரிய நேரத்தில் பெற இயலாத சிறு, குறு விவசாயிகள், குத்தகை விவசாயிகள், நெல்லை வாடகை வண்டிகளில் வாடகை கொடுத்து ஏற்றி வர இயலாத, முன்கூட்டியே மூடை ஒன்றுக்கு ரூ.50 கொடுக்க இயலாத விவசாயிகள், வெளிச்சந்தையில் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலை இன்றும் தொடர்கிறது. எனவே, சிறு, குறு குத்தகைதார விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய பொருத்தமான வழிமுறைகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் உருவாக்க வேண்டும்.
பணப்பட்டுவாடா
நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு 2021 ஜனவரி இறுதி வரைதான் பில் பிரகாரம் வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குப்பிறகு இன்றைய தேதி வரை நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை. இதன்காரணமாக கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள், இன்னும் தமது நெல்லுக்கு பணம் கிடைக்கவில்லையே, வாங்கிய கடனை அடைப்பது எப்படி? குடும்பத்தேவையை பூர்த்தி செய்வது எப்படி என்று வழி தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். எனவே தான் ஒரு விவசாயி என்று கூறிவரும் தமிழக முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசும், மதுரை மாவட்டநிர்வாகமும், நெல் கொள்முதல் மையங்களில் நெல்லை கொடுத்து விட்டு தனதுநெல்லுக்கு எப்போது பணம் கிடைக்கும்என்று ஏங்கிக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பில் பிரகாரம் பணத்தை பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுரையாளர் : எஸ்.பி.இளங்கோவன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்டத் தலைவர்