articles

img

இடிப்பு அச்சுறுத்தலில் தில்லி ‘மதராசி முகாம்’ 60 ஆண்டு தமிழ் அடையாளம் அழியும் அபாயம் - எஸ்.பி.ராஜேந்திரன்

இடிப்பு அச்சுறுத்தலில் தில்லி ‘மதராசி முகாம்’  60 ஆண்டு தமிழ் அடையாளம் அழியும் அபாயம்

“எங்களுக்கு இடிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டால், அவர்கள் என் வீட்டை இடித்தால், நான் அந்த இடிபாடுகள் மீதே கூடாரம் அமைப்பேன். எனக்கு ஓர் இடம் தரும் வரை நான் அசையமாட்டேன்.” - நாகம்மா, மதராசி முகாம் குடியிருப்பாளர்

அச்சுறுத்தலில் வாழும் குடும்பங்கள்

தில்லியின் ஜங்புரா பகுதியில் உள்ள மதராசி முகாமில் சுமார் 2,000 தமிழர்கள் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்று அவர்களது வாழ்க்கை நிச்சயமற்ற நிலையில் உள்ளது.  செப்டம்பர் 5, 2024 அன்று, தில்லி அரசின் பொதுப் பணித் துறை (PWD) மதராசி முகாம் குடியிருப்பாளர் களுக்கு வெளியேற்ற அறிவிப்பு வழங்கியது, ஐந்து நாட் களுக்குள் வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.  தில்லியின் 400 ஆண்டுகள் பழமையான முகலாய காலத்து பரபுல்லா பாலத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த சிறு குடியிருப்பு, முற்றிலும் இடிக்கப்படலாம் என்ற ஆபத்து சூழ்ந்துள்ளது. அதற்கான வேதனை அனைத்து குடியிருப்பாளர்களின் முகங்களிலும் தெரிகிறது.

கனவுகளுடன் வந்த தமிழர்கள்

“நாங்கள் இந்த இடத்தை எங்கள் சொந்தக் கைகளால் கட்டினோம். நாங்கள் வந்தபோது, புல்வேய்ந்த  குடிசைகளில் 100-150 பேர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அப் போது அரை பக்கா வீடுகளோ, மின்சாரமோ இருக்க வில்லை. பல வருடங்ககளாக, இதை வீடாக மாற்ற கடினமாக உழைத்தோம்,” என 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் இங்கு வந்த பத்மா நினைவுகூர்கிறார். பத்மாவின் குடும்பம் சென்னையைச் சேர்ந்தது. சிறிய நிலங்கள் போதுமான வருவாயை அளிக்காததால் அவர்கள் தில்லிக்கு இடம்பெயர்ந்தனர். முகாமில் உள்ள பெரும்பாலான குடும்பங்களின் கதையும் இது தான். இன்று, பெண்கள் பெரும்பாலும் அருகிலுள்ள ‘உயர்தர’ வர்க்கத்தினரின் குடியிருப்புகளில் வீட்டு வேலை செய்கின்றனர், ஆண்கள் தினக்கூலி தொழிலாளர்களாக வும், உள்ளூர் கடைகளில் உதவியாளர்களாகவும் பணிபுரிகின்றனர். இந்திரா காந்தி காலத்தில், அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்தது என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த வேம்பி கூறுகிறார். “அவரால்தான் எங்களில் சிலரது கணவர்களுக்கு அரசு வேலைகள் கிடைத்தன” அவர் சுற்றியுள்ள பெண்களைச் சுட்டிக்காட்டி, “இவர்கள் அனைவரது கணவர்களும் இரயில்வேயில் பணிபுரிந்தனர், அவர்கள் மறைந்த பிறகு, மனைவி களுக்கு அவர்களின் வேலைகள் வழங்கப்பட்டன” என்கிறார்.

தமிழ் கலாச்சாரம் - தில்லியின் மையத்தில்

சொந்த மண்ணில் இருந்து 2,000 கிலோமீட்டர் தூரத்தில் வாழ்ந்தாலும், மதராசி முகாம் குடியிருப்பா ளர்கள் தமிழ்நாட்டின் ஒரு சிறு துண்டை தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். மதராசி குடியிருப்பு, ஒரு ‘மினி தமிழ்நாடு’ தான். மொழி முதல் பழக்கவழக்கங்கள் மற்றும் திருவிழாக்கள் வரை, அவர்கள் அனைத்தையும் கொண்டாடுகின்றனர். “நாங்கள் எங்கள் அனைத்து விழாக்களையும் கொண்டாடுகிறோம்; பொங்கல் அல்லது தைப்பூசம், எல்லாவற்றையும் கொண்டாடுகிறோம். சென்னையில் கொண்டாடப்படும் அனைத்தும், நாங்கள் இங்கே கொண்டாடுகிறோம்” என 1970-களின் ஆரம்பத்தில் தில்லிக்குக் குடிபெயர்ந்த நாகம்மா பெருமிதமாகக் கூறுகிறார். முருகன் கோவில், குடியிருப்புக்கு அருகே கட்டப்பட்டுள்ளது. சிறப்பு நிகழ்வுகளில் நாதஸ்வரம் மற்றும் பம்பை மேளங்களின் இசை காற்றை நிரப்பு கின்றன. “நாங்கள் இனி எங்கள் கிராமங்களுக்குத் திரும்பி விழாக்களைக் கொண்டாட இயலாது. திருமணங்கள், இறுதிச் சடங்குகள் அல்லது புதுமனை புகுவிழா போன்ற அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நான் செல்கிறேன்,” என்கிறார் சுமதி என்கிற விழுப்புரத்தைச் சார்ந்த பெண். “நாங்கள் எங்கள் கிராமங்களில் செய்தது போலவே இங்கே  வழிபடுகிறோம். இந்த இடம் இப்போது எங்கள் கோவில்.” மொழி இந்த சமூகத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. வீட்டிலும், தெருக்களிலும் உரையாடல்கள் எப்போதும் தமிழில்தான். “நாங்கள் எங்கள் மொழியைப் பாதுகாத்துள்ளோம்,” என பத்மா பெருமையாகக் கூறுகிறார். “நான் என் அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ் கற்றுக்கொடுத்துள்ளேன். என் மகன் கூட தமிழ் பேசுவதால்தான் வேலை கிடைத்தது. நொய்டாவில் உள்ள  ஒரு கால் சென்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் இருமொழி பணி அவருக்கு உள்ளது.

கல்வி - அசைக்க முடியாத கனவு

குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது இங்குள்ள அனைவருக்கும் முக்கிய முன்னுரிமை. “என் பேரக்குழந்தைகள் அருகிலுள்ள தமிழ் பள்ளிக்குச் செல்கின்றனர். எங்கள் குழந்தைகளுக்கு முறையான கல்வியை எங்களால் அளிக்க முடியவில்லை, ஆனால் எங்கள் பேரக்குழந்தைகள் முழுமையாகக் கல்வி பெறுவதை உறுதி செய்து வருகிறோம்” என நாகம்மா கூறுகிறார். தில்லி தமிழ் கல்வி சங்கத்தின் (DTEA) பள்ளி லோதி எஸ்டேட்டில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8.10 மணிக்கு, இரண்டு பேருந்துகள் மற்றும் மூன்று வேன்கள் நிரம்பி, மதராசி முகாமில் இருந்து குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றன. சில மாணவர்கள் ஐந்து நிமிட பயணம் முழுவதும் நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. “தில்லி தமிழ் கல்விச் சங்கம் மட்டுமே எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் - எங்கள் மொழி, எங்கள் அடையா ளம் - கற்றுக்கொடுக்கும் இடம்” என சிவா கூறுகிறார். “எங்கள் குழந்தைகள் எங்களைப் போல் அதே கஷ்டங் களை சந்திக்க வேண்டாம் என்று நாங்கள் விரும்பு கிறோம்.” ஆனால் வெளியேற்ற அச்சுறுத்தல் குழந்தை களின் கல்வியைப் பாதிக்கும் என்று அவர்கள் கவலைப்படு கின்றனர். “எங்கள் குழந்தைகள் பாதி ஆண்டில் இருக்கிறார்கள். இந்த வெளியேற்றம் அவர்களை எவ்வாறு பாதிக்கும் என்று [அதிகாரிகளுக்கு] கவலையில்லையா?” என 30 வயதான இரண்டாம் தலைமுறை குடியிருப்பாளர் ஆனா கேட்கிறார்.

சட்ட நிலவரம்

2024 செப்டம்பர் 8 அன்று, அப்போதைய தில்லி முதல்வரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான அதிஷி, தலையிட்டு அதிகாரிகளை எச்சரித்தார். மதராசி முகாமில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையும் சட்டவிரோத மானது; ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். “இது DUSIB (தில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம்) - அறிவித்த ஜேஜே குடியிருப்பு; எனவே, குடியிருப்பாளர்களுக்கு எந்தவொரு இடிப்புக்கும் முன் மறுவாழ்வு உரிமை உள்ளது. DUSIB அறிவித்த குடியிருப்புகளின் பட்டியல் தெளிவாகக் காட்டுவது போல், ஜே ஜே குடியிருப்பு உள்ள நிலம் தில்லி பொதுப் பணித் துறைக்குச் சொந்தமானது அல்ல, இரயில்வேக்கு சொந்தமானது,” என்று அதிஷியின் குறிப்பு கூறுகிறது. செப்டம்பர் 8 அன்று, தில்லி உயர் நீதிமன்றம் தற்காலிகமாக எந்த நடவடிக்கையும் எடுக்க தடை விதித்தது. தில்லி வளர்ச்சி ஆணையத்தை (DDA) பிரதிநிதித்துவப்படுத்திய பிரப்சஹாய் கௌர், மதராசி குடியிருப்பு பரபுல்லா கால்வாயில் நீர் ஓட்டத்தை தடுப்பதாக நீதிமன்றத்தில் வாதிட்டார். மேற்படி தில்லி வளர்ச்சி ஆணையம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற  விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் வருகிறது, அதன் தலைவர் தில்லி  துணைநிலை ஆளுநர் ஆவார். நீதிமன்றம், மதராசி குடியிருப்பு உண்மையில் நீர் ஓட்டத்தை தடுத்தால், அது அகற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது; ஆனால் தில்லி வளர்ச்சி ஆணையமும், பொதுப் பணித்துறையும் அத்தகைய தடுப்பு குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வரை வெளியேற்றத்தை நிறுத்தியது. அக்டோபர் 8, 2024 வரை, பிரப்சஹாய் கௌரின் அலுவலகம் அத்தகைய ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்க இயலவில்லை.

அரசியல் மோதல்

இந்த விவகாரம் விரைவில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்களுக்கு இடையே ஒரு மோதலாக மாறியது. பாஜக தில்லி தலைவர் வீரேந்திர சச்தேவா, தில்லி அரசு (ஆம் ஆத்மி அரசு) குடிசைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். பதி லளித்த மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா, அவர்கள் மதராசி முகாமை இடிக்க துணைநிலை ஆளுநர் அலுவலகத்தைப் பயன்படுத்தி இடிப்பு அறிவிப்புகளை வழங்கியதாக பாஜகவைக் குற்றம்சாட்டினார்.

பாஜகவின் வாக்குறுதிகள்

ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்தின் வீடியோவைக் காட்டினார். இந்த வீடியோவில், பிரதமர் இவ்வாறு கூறியிருந்தார்: “ஜஹான் ஜுக்கி, வஹான் மகான்... குடிசை உள்ள இடத்தில் வீடு இருக்க வேண்டும், ஏழை களுக்கும் கண்ணியமாக வாழ உரிமை இருக்கவேண்டும்” ஆனால் தேர்தலுக்குப் பின், வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டுகிறது. “தேர்தல் முடிந்தவுடன், பாஜகவின் நோக்கமும் முடிந்தது. பாஜக ஏழைகளின் வீடுகளைப் பறித்து, அந்த நிலத்தை தனது முதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைக்கிறது” என பிரியங்கா கக்கர் குற்றம்சாட்டினார்.

நரேலா - தீர்வா? துயரமா?

இத்தகைய பின்னணியில், ஏப்ரல் 2025இல், 370 குடியிருப்பாளர்களில் 189 பேருக்கு நரேலாவில் புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக மதராசி குடியிருப்பில் இருந்து வெளியேறுமாறும் அறிவிப்பு தரப்பட்டது. இந்த நரேலா என்னுமிடம் - மதராசி முகாமில்  இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதை எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் இடிப்புகளுக்கான ஒரு தீர்வாக தில்லி வளர்ச்சி ஆணையம் முன்வைத்துள்ளது. ஆனால் இந்த தீர்வு உண்மையில் பல புதிய பிரச்சனைகளை உருவாக்குகிறது. 17 வயது மாணவர் கவியரசன் கூறுகிறார்: “வெளியேற்ற நோட்டீஸ் கிடைத்த பிறகு, எங்கள் பெற்றோர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்து வதை நிறுத்திவிட்டனர்.” “தேர்தலின் போது, நாங்கள் நிம்மதியாக இருந் தோம். அரசியல்வாதிகள் அடிக்கடி வந்து, நாங்கள் வெளி யேற்றப்பட மாட்டோம் என்று உறுதியளித்தனர். ஆனால் இப்போது, எந்த நேரத்திலும் எங்கள் வீடுகள் பறிக்கப்பட லாம் என்று தோன்றுகிறது... பாதுகாப்பு படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளன... நரேலா மிகவும் தூரத்தில் உள்ளது.” “வீடுகள் ஒதுக்கப்பட்ட பிறகு நாங்கள் முதலில் சரி பார்த்தது, பள்ளிக்கு எப்படிச் செல்வது என்பதைத் தான். நரேலாவில் இருந்து லோதி எஸ்டேட்டை அடைய குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும்” என்று குறிப்பிடுகிறார் கவியரசன். “நரேலாவிற்கு அருகில் ஒரு சிறிய பள்ளி உள்ளது, ஆனால் அது நெருக்கமாக இல்லை, மேலும் அந்தப் பகுதி பாதுகாப்பானது அல்ல. எங்கள் குழந்தைகள் அங்கு தனியாகப் பயணிக்க அனுமதிக்க முடியாது” என சிவா கவலையுடன் கூறுகிறார்.

தில்லி தமிழ்ச் சங்க பள்ளியின் முக்கியத்துவம்

மதராசி முகாமில் இருந்து தில்லி தமிழ் கல்வி சங்கத்தின் (DTEA) பள்ளிக்கு தினமும் செல்லும் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கல்வி எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. “நாங்கள் நரேலாவுக்கு செல்ல வேண்டுமானால், எப்படி என் மகன் பள்ளிக்குச் செல்வான்? நரேலாவில் இருந்து லோதி எஸ்டேட்டை அடைய ஒரு பக்கம் இரண்டு மணி நேரம் ஆகும். நாங்கள் இருக்கும் பள்ளியில் தமிழ் கற்பிக்கப்படுகிறது - எங்கள் குழந்தைகளின் அடையாளம் அது,” என கவலைப்படுகிறார் அலமேலு, மூன்று குழந்தைகளின் தாய். DTEA பள்ளி வெறும் கல்வி அளிக்கும் இடம் மட்டுமல்ல,  தில்லியில் வளரும் தமிழ் குழந்தைகளுக்கு அவர்களின் கலாச்சார அடையாளத்தை கற்றுக்கொடுக்கும் இடமும் ஆகும். 1924-இல் மந்திர் மார்க்கில் சிறிய தன்னார்வ பங்க ளிப்புகள் மூலம் நிறுவப்பட்ட முதல் DTEA பள்ளி, தலை நகர் தில்லியில் வளர்ந்து வரும் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. அதிகரித்த தேவையைப் பூர்த்தி செய்ய, லோதி எஸ்டேட் மற்றும் கரோல் பாக்கில் 1951 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1956 ஆம் ஆண்டில், லோதி எஸ்டேட் கிளை உயர் இரண்டாம் நிலைக் கல்வியை வழங்கத் தொடங்கியது. இன்று தில்லி  முழுவதும் இத்தகைய ஏழு பள்ளிகள் உள்ளன - ஆனால் நரேலாவில் இருந்து 35 கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு பள்ளி கூட இல்லை. “எங்களுக்கு தமிழ் கற்பது மிகவும் முக்கியம். பல தசாப்தங்களாக, எங்கள் பள்ளி தில்லியில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் குழந்தைகளின் கனவுகளுக்கான நங்கூரமாக நின்றுள்ளது” என்று ஒரு ஆசிரியர் கூறுகிறார்.

வேலைவாய்ப்பு பிரச்சனைகள்

மதராசி முகாம் குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் அருகிலுள்ள பகுதிகளில் வேலை செய்கின்றனர். பெண்கள் பெரும்பாலும் அண்டை குடியிருப்புகளில் வீட்டு வேலை செய்கின்றனர். ஆண்கள் தினக்கூலித் தொழி லாளர்களாகவும், உள்ளூர் கடைகளில் உதவியாளர் களாகவும் பணியாற்றுகின்றனர். சுமதி கூறுகிறார், “நான் என் இரண்டு குழந்தைகளை யும் பெரும் கஷ்டத்துடன் தனியாக வளர்த்தேன். இப்போது என் மகன் உச்ச நீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்கிறார், நம் குடி யிருப்பில் இருந்து 20-30 ஆண்கள் அங்கே பணிபுரி கின்றனர். என் குழந்தைகள் திருமணம் செய்து கொண்டதால், இப்போது இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் எனக்காக மட்டும் வேலை செய்யலாம் என நினைத்தேன். ஆனால் என் வீடு இடிக்கப்பட்டால், நான் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். என் குழந்தைகள் என்னைக் கவனித்துக் கொள்ள முடியுமா என்று தெரிய வில்லை.” மதராசி முகாமில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நரேலாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டால், இந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும்.  

சமூகத் தாக்கங்கள் மற்றும்  சாதிப் பிரச்சனைகள்

பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு, தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்புவது சாத்தியமானதோ விரும்பத்தக்கதோ அல்ல. தில்லி பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்களுக்கு சமூக-பொருளாதார மற்றும் சாதி அடிப்படையிலான பாகு பாடுகளை சமப்படுத்தும் காரணியாக செயல்பட்டுள்ளது. “எங்கள் சொந்த கிராமங்களில், சாதிப் பிரிவுகள் சமூகங்களைப் பிரித்து, வெவ்வேறு சாதியினர் ஒருவருக் கொருவர் தூரமாக வாழக் கட்டாயப்படுத்துவதன் மூலம் பராமரிக்கப்படுகின்றன, ஆனால் இங்கே நாங்கள் அனைவரும் அமைதியாக ஒன்றாக வாழ்கிறோம்,” என வேம்பி கூறுகிறார். பத்மா இதை ஆமோதிக்கிறார். “கிராமத்தின் கணக்கு வேறு விதமாக இருக்கிறது. இங்கே அப்படி எதுவும் இல்லை. நாங்கள் அனைவரும் அமைதியாக ஒன்றாக வாழ்கிறோம். நாங்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்று ஒன்றாக வழிபடுகிறோம். இங்கே அனைவரும் சமம்.” இளைய தலைமுறையினரில் சிலர் சென்னைக்குச் சென்றுள்ளனர், ஆனால் பெரும்பாலானோர் தில்லியை விட்டுச் செல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு, மதராசி முகாமே வீடு.  

களத்தில் இறங்கியது சிபிஐ(எம்)

தமிழ் மக்களின் வெளியேற்றத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கம் முதலே குரல் கொடுத்து வருகிறது. ஏப்ரல் 16 அன்று பெரும் போராட்டத்திற்கு திட்டமிட்டது. தில்லி காவல்துறை தடைவிதித்தது. இந்நிலையில் தடையை மீறி, 2025 ஏப்ரல் 22, அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தில்லி தலைமைச் செயலகம் முன்பு மதராசி குடியிருப்பாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.  தில்லி காவல்துறை நான்கு வாகனங்களில் சுமார் 140 குடியிருப்பாளர்கள் மற்றும் தலைவர்களை கைது செய்து நரேலா மற்றும் நரேலா தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், தில்லி மாநிலச் செயலாளர் அனுராக் சக்சேனா, செயற்குழு உறுப்பினர் சுபீர் பானர்ஜி, ரிக்தா,  அமன் சைனி மற்றும் ஹரி லால் உள்ளிட்ட தலைவர் களும் கைது செய்யப்பட்டனர். “பாஜகவின் ஏழை-எதிர்ப்பு கொள்கைகளுக்கு எதிராக எங்கள் போராட்டம் தடையின்றி தொடரும்” என்று மார்க்சிஸ்ட் கட்சி உறுதியளித்துள்ளது.  இந்நிலையில் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, மதராசி முகாம் வாழ் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் மற்றும் ஏ.ஏ.ரஹீம் ஆகியோர் தில்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழக தலைவர்கள்  தலையிட வேண்டும்

தமிழ்நாட்டில் இருந்து 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தில்லியில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தமிழக அரசியல் தலைவர்கள் கவனிக்க வேண்டியது அவசியம். தில்லியில் தமிழர்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று போராடும் மதராசி குடியிருப்பு மக்கள் கருதுகின்றனர்.  

தில்லியிலிருந்து இப்போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்  ஆர்.கருமலையான் அளித்த விபரங்கள் மற்றும் ப்ரண்ட்லைன், நியூஸ் க்ளிக் உள்ளிட்ட ஊடகங்களின் விபரங்களிலிருந்து...