articles

img

அல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்?

 தமிழக அரசால் இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டுள்ள ரூ.4,000 நிவாரண தொகையும் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமும் தான் கிராமப்புறப் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு தற்போதுள்ள வருமான வாய்ப்புகளாகும்.வேலைவாய்ப்பு உறுதி திட்டவேலைகளை எதிர்பார்த்து இருப்பவர்களின் எண்ணிக்கை இந்த கொரோனா கால பெருந்தொற்றுக்கு பிறகு அதிகரித்துள்ளது.

இதை பிரதான வருமானங்களில் ஒன்றாக கொண்டிருந்தவர்கள் வழக்கத்தை காட்டிலும் மிக குறைவான வேலைவாய்ப்புகளையே பெறுகின்றனர். குறிப்பாக விவசாயம்,கால்நடை வளர்ப்பு,வேலைவாய்ப்பு உறுதி திட்டம்ஆகியவற்றை நம்பியே கிராமப்புறப்பெண்கள் சுய உதவிக்குழுக்களிடமிருந்து கடன்களை பெற்று தவணை முறையில் திருப்பி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஊரடங்குகாலத்தில் வழக்கமான வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் பெற்ற கடனை திருப்பி செலுத்த வழியின்றி கடும் மனஉளைச்சலுக்கு கிராமப்புற பெண்கள் ஆளாகி உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுக்களில் பின்பற்றப்படும் நுண்கடன் முறையில் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மேற்கொண்டு கடன் பெற முடியாதநிலையை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவுவங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வோம் என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அதற்கடுத்த சில நாட்களிலேயே அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்தது. ஆனால் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பெரும் அளவிலான கடன்கள் தேசியவங்கிகள் மற்றும் தனியார் கடன் நிறுவனங்களிடமிருந்தே பெறப்படுகின்றன. தற்போதைக்கு  நுண்கடன் தவணைகளை தள்ளி வைக்குமாறு வங்கிகளை கேட்டுக்கொள்வதே சரியான தீர்வாக இருக்க முடியும்.இன்னொரு புறம் மதுரை,திருச்சி,தேனி, திண்டுக்கல்,கோவை, நெல்லை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,சேலம், கடலூா், நாகை, மயிலாடுதுறை,திருவாரூா், தஞ்சை, புதுக்கோட்டை எனதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றீசல் போல் பெருகிக் கிடக்கின்றனமைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்.இவற்றில் பல முறையான அனுமதியுடன் செயல்படுபவை அல்ல. இந்த நிறுவனங்களின் நோக்கம் மகளிர் சுயஉதவிக்குழுக்களை தேடிப் பிடித்து கடன் கொடுத்து கந்துவட்டி வசூலிப்பது தான்.

கடந்த ஆட்சிக்காலத்தில் மகளிர்சுய உதவிக்குழுக்கள் முறையாக செயல்படவில்லை.அவர்களுக்கு தேவையான கடனும் சரியாக அளிக்கப்படவில்லை.அளிக்கப்பட்ட கடனும் முறையாக பயன்படுத்தப்படவில்லை.திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சீரமைக்கப்படும் என்றும் அதற்காக தனித்துறை உருவாக்கப்படும் என்றும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தார் மு.க.ஸ்டாலின்.இந்நிலையில் இந்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியத்தை கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இப்போது தீவிரப்படுத்தியுள்ளது.இந்த பின்னணியில் தமிழக அரசு மாவட்டம் தோறும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைத்து,ரிசா்வ் வங்கியின் விதிகளை மீறும் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து,கந்து வட்டி போன்ற இக்கொடுமையிலிருந்து கிராமப்புற பெண்களை பாதுகாக்க வேண்டும்.அதோடு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விரைவாகவும், எளிதாகவும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும்,சுய உதவிக்குழுக்கள் மூலம் பெற்ற கடனை பொது முடக்க காலத்தில் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். இதை அரசு உடனடியாக செய்தால்தான் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில்  தவணை கடன் வலையில் சிக்கிகொண்டு அல்லல்படும் கிராமப்புற பெண்களை பாதுகாக்க முடியும்.

ஆரூரான்