articles

img

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடும் விசாரணை ஆணையமும்....

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் ஒரு நபர் ஆணைய இடைக்கால அறிக்கையின் பேரில் பொது மக்கள் சிலர், தலைவர்கள் மீதான வழக்குகள் மட்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.இது தொடர்பான சிலகருத்துக்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.விசாரணை ஆணையச் சட்டம் 1952 –ன் கீழ் “தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையின் “காரணமாகத்தான்”துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டு; அதாவது சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான் துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என முந்தைய அரசே முடிவு செய்து அது குறித்து விசாரணை செய்ய 23-05-2018 அன்று  ஓய்வு பெற்றசென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசனின் தலைமையில் அரசாணை எண்.368 -ன் படி ஒரு நபர் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது.

வரம்பை மாற்றிய வழக்கு
இந்த விசாரணை கமிசனின்  அதிகார வரம்பை ரத்துசெய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் 20.06.2018 அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனு 13313-2018 தாக்கல் செய்தார். இந்த மனு தாக்கல் செய்த பின்னர் தான் அரசானது ஒரு நபர் விசாரணை கமிஷனின் அதிகார வரம்பை மாற்றி அமைத்தது. அதாவது 22-05-2018 அன்றும் அதன் பின்பும் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு நிகழ்வுகளை விசாரிக்க வேண்டும் என்று திருத்தப்பட்ட அரசாணை பிறப்பித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஒரு வேளை இந்த வழக்கு தாக்கல்செய்யப்படாமல் போயிருந்தால் தற்போது வழங்கப்பட்டுள்ளது போன்ற இடைக்கால அறிக்கை வழங்கப்பட முடியுமா என்பது சந்தேகமே.
ஓய்வு பெற்ற நீதிபதிகளையோ அல்லது தான் விரும்பும்அதிகாரிகளையோ ஒரு நபர் கமிசனாக சம்பந்தப்பட்ட அரசாங்கம் அமைத்துக் கொள்வது அவர்களின் நிர்வாக உரிமை. மேலும் அந்த ஒரு நபர் ஆணையத்தின் அதிகாரவரம்பு இந்த மாதிரி தான் வரையறை செய்யப்பட வேண்டும்என்று கேள்வி கேட்க முடியாது; இந்த ஒரு நபர் ஆணையம் அளித்திடும் அறிக்கை கருத்துரு என்ற முறையில் ஒரு அறிக்கை அவ்வளவே. இதில் தலையீடு செய்வதற்கு என்னஇருக்கிறது என்கிற கேள்விகளை எல்லாம் மதுரை உயர்நீதிமன்றத்தில் சி.பி.எம். தூத்துக்குடி  மாவட்ட செயலாளர்  கே.எஸ். அர்ச்சுனண் தாக்கல் செய்த ரிட் மனு உடைத்தெறிந்தது.

ஒரு நபர் ஆணைய விதிகள் -1972 விதி (5) (2)-க்குமுரணாக துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பற்றி நேரில் தெரிந்தவர்கள் மட்டுமே சாட்சியமளிக்க முடியும் என்று நீதியரசர்அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையம் வரையறைசெய்துள்ளது என்பது உள்ளிட்டு, இடதுசாரி வழக்கறிஞர்களால் எடுத்து வைக்கப்பட்ட வாதம், அரசு நிர்வாகத்தை உலுக்கியது. அதே போல் சட்டம் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாகத்தான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்று முன் கூட்டியே எடுத்து விட்ட முடிவின் படி ஆணையம் செயல்பட இருப்பது சுட்டிக் காண்பிக்கப்பட்டவுடன் பொதுவாக ‘கமிஷன்’ அமைக்கப்படுவது அந்த விஷயத்தை கிடப்பில்போடுவதற்கே என்ற பொதுப்புத்தி நடப்பில் இருக்கின்றபோது, குற்றச் செய்கைகளில் ஈடுபட்ட காவல்துறையினரை துறைவாரி நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தோடு தான் அரசு இந்த ஆணையத்தை அமைத்துள்ளது என்பதுவும் அம்பலமானது. 

முதல் கோணல்
துப்பாக்கி சூட்டில் இறந்து போன கிளாஸ்டன் த.பெ.கோயில்பிச்சை என்பவருக்கே விசாரணை ஆணையம்29-08-2018 அன்று நடைபெற இருக்கிற விசாரணையில் ஆஜராகிடுமாறு 13-08-2018-ம் தேதியிட்டு அழைப்பாணை அனுப்பியது. இது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதல் கோணல் முற்றும் கோணல்என்கிற சொலவடைக்கு ஏற்ப இந்த நிகழ்வு அமைந்து விட்டது. 22.06.2018 அன்று சென்னையில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  அதற்கு முன்னதாகவே நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் நியமனம் செய்யப்பட்ட உடனே தூத்துக்குடிக்கு வந்து அதிகாரிகள் போலீஸ் பட்டாளம் சூழ பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை  பெற்று வந்தவர்களையும் பார்த்து “ஸ்தல ஆய்வு” போல் விசாரணை நடவடிக்கைகளை துவக்கினர் என்பதையும் மறக்க முடியாது. மேலும் இது போன்ற விசாரணை ஆணையத்தில் பங்கேற்கும் சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்திஉண்மையை வெளிக் கொண்டு வரலாமே என்கிற பொதுக் கருத்து உள்ளது. இது சரியானதல்ல. ஒரு நபர் ஆணைய சட்டம் பிரிவு 8-பி, 8-சி –ன் படி ஆணையத்தின் முன் அனுமதியுடன் விசாரணையின் முடிவு சம்பந்தப்பட்ட நபர்-சாட்சியின் மதிப்பை பாதிக்கும் என்கிற சூழ்நிலையில் மட்டுமே ஆணையத்தின் அனுமதியுடன் சாட்சியை குறுக்கு விசாரணை செய்திட முடியும். நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையமானது இது நாள் வரை காவல்துறை அதிகாரிகளின் விசாரணையை மேற்கொள்ளவில்லை என்று தெரிய வருகின்ற நிலையில் இந்த விசாரணை ஆணைய தொடர் நடவடிக்கைகளில் இதற்கு முன் பங்குபெற்றுள்ள பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை குறுக்கு விசாரணை செய்திட நடவடிக்கைஎடுக்க இருக்கின்றார்களா என்பது தெரியவில்லை. 

ஒரு நபர் கமிசன் அறிக்கை பயன்படுமா?
ஒரு நபர் விசாரணை கமிசன் அறிக்கையை எந்த ஒருநீதிமன்றத்திலும் சாட்சிய ஆதாரமாக பயன்படுத்திட முடியாதென சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு 09-05-1996அன்று தூத்துக்குடியில் நடந்த கலவர வழக்கிலேயே தீர்ப்பு அளித்துள்ளது.உச்ச நீதிமன்றம் சாம் கண்ட என்ற வழக்கில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசால் நியமனம் செய்யப்பட்டிருந்த ஒருநபர் கமிசனின் அறிக்கை தனக்கு சாதகமாக இருப்பதாகவும் ஆனால் அந்த அறிக்கைக்கு நேர் எதிராக நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது என்றும் காவல் அதிகாரி ஒருவர் மனு தாக்கல் செய்த போது விசாரணை கமிசனின் அறிக்கை முடிவு நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளது.02-08-2018 அன்று தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட நிகழ்வு தொடர்பாக நியமனம் செய்யப்பட்ட நீதியரசர் ரகுபதி விசாரணை ஆணையம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் மேற்படி ரகுபதி ஆணையத்திற்கு 4.11 கோடி ரூபாய்செலவாகியுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதே போல் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு ரூ. 27.75 இலட்சமும், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான நீதியரசர் ராஜேஷ்வரன் ஆணையத்திற்கு ரூ. 1.47 கோடியும், தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பானநீதியரசர் சிங்காரவேலு ஆணையத்திற்கு ரூ.2.06 கோடியும்,தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மரணம் குறித்த நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 3 இலட்சம் ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளதையும் அறிக்கையாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.மேலும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் - தாமிரபரணி படுகொலை தொடர்பாக நீதியரசர் மோகன் ஆணையம், கொடியன்குளம் கலவரம் தொடர்பான நீதிபதி கோமதிநாயகம் ஆணையம், பரமக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக நீதியரசர். சம்பத் ஆணையம், 1998 -ம் வருடம்நடந்த கோவை குண்டு வெடிப்பு காரணங்களை அறிந்துகொள்ள அமைக்கப்பட்ட நீதியரசர் பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் ஆணையம் உள்ளிட்ட பல ஆணையங்களை தமிழகமக்கள் பார்த்து விட்டார்கள்.

ஸ்டெர்லைட் வழக்கில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால வரம்பு தமிழக அரசால் பல முறைநீட்டிக்கப்பட்டது. இதில் சாட்சியம் அளித்து பலரும் தன்னைமுன்னிலைப்படுத்த விளம்பரம் செய்தனர். இந்த ஆணையத்தின் இறுதி அறிக்கை எப்போது வெளியிடப்பட்டு அனைவருக்கும் தெரிய வரும் என்பதனை காலம்தான் பதில்சொல்லும். எனவே நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆஜராகாமல் இருந்ததிற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றது.

ஸ்டெர்லைட் மூடக் காரணம்...
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்கு பிந்தைய காலங்களில் தனிச்சட்டம் இயற்றிடவேண்டும், சட்ட சபையில் தீர்மானம் இயற்றிட வேண்டும் என்பது  உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்துள்ள போதிலும் கூட சட்ட விதிமுறைகளின் படி நீதிமன்றங்களில் ஸ்டெர்லைட்டிற்கு எதிரான வழக்கை தமிழகஅரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் முறையாக நடத்திவந்தது தான் ஸ்டெர்லைட்டை தொடர்ந்து மூடிட காரணமாக  அமைந்துள்ளது. கடந்த 20-12-2018 அன்று சி.பி.எம்.மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அப்போதைய மாநில சட்ட அமைச்சரை சந்தித்து வழக்கைநடத்துவது குறித்து முறையிடப்பட்டது. தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தில்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வில் ஸ்டெர்லைட்டால் நேரடியாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு செல்லாது என்று உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர்களால் எடுத்து வைக்கப்பட்ட முதல் நிலை ஆட்சேபணையை 18-02-2019 அன்று உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்துள்ளது. நீதிமன்றங்களில் ஸ்டெர்லைட்டின் வழக்குகளை சட்டப்படி எதிர் கொண்டதினால் தான் 18-08-2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தினாலும் அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தினாலும் ஸ்டெர்லைட்டின் அபவாதங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏதாவது ஒரு வகையில் இடைக்கால உத்தரவுகளை பெற்று, தொடர்ச்சியாக விதிமுறைகளை பின்பற்றி இயங்குவதாக சொல்லி உற்பத்தியில் ஈடுபடுவதுதான் கடந்த காலங்களில் ஸ்டெர்லைட் மேற்கொண்ட தந்திரமாகும்.

ஆனால் துப்பாக்கிச் சூட்டு நிகழ்விற்கு பிந்தைய நீதிமன்றநடவடிக்கைகளில் இந்த தந்திரம் தடுத்து நிறுத்தப்பட்டது. 23-04-2021 அன்று நடைபெற்ற கருத்துக் கேட்புகூட்டத்தில் தூத்துக்குடி மக்கள் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி முந்தைய அரசு சட்டமன்ற தேர்தல் முடிவடைந்திருந்த நிலையில் 26-04-2021 அன்று அனைத்துக் கட்சி தலைவர்களை வரவழைத்து  கொரோனா பெருந்தொற்றை காரணமாக வைத்து ஸ்டெர்லைட்டின் ஆக்சிஜன் பிளாண்டை மட்டும் திறக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது. எனவே 27-04-2021 அன்று ஸ்டெர்லைட்டின் ஆக்சிஜன் பிளாண்ட்மட்டும்  நான்கு மாதங்கள் செயல்படலாம் என உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்கியது. இதன் பிறகு துப்பாக்கிச்சூடு நிகழ்வின் மூன்றாவது ஆண்டில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அரசிடம் 14-05-2021 அன்று நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது. இதன் பேரில் சி.பி.ஐ தொடர்புடைய, பொதுச் சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகளை தவிர ஒரு சில வழக்குகளை வாபஸ் பெறுவது, துப்பாக்கிச் சூட்டில்பாதிக்கப்பட்டோர்களின் குடும்பத்தினருக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்குவது, 94 பேர்களுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட முடிவுகளை 22-05-2021 அன்று அரசு அறிவித்ததோடு அமலாக்கவும் செய்துள்ளது. 

இந்த பின்னணியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உள்ளபடியே தமிழகம் முழுவதும், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூகசெயல்பாட்டாளர்களால் பொது மக்களின் கோரிக்கைகளுக்காக, சமூக நீதிக்காக நடத்தப்பட்ட இயக்கங்களின் போதுகடந்த காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் குறிப்பாக எட்டு வழிச்சாலை போராட்டம் தொடர்புடைய வழக்குகளும் வாபஸ் பெறப்பட வேண்டும். அதே சமயம் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை முறையாக நடத்திடாமல் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டு திசை திருப்பும்வேளைகளில் ஈடுபட்டு சுற்றுச் சூழல் நீதிக்காக தூத்துக்குடியில் உயிர் இழந்தவர்கள் மற்றும் காவல் சித்ரவதைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் தியாகம் குறைத்து மதிப்பிடப்பட்டு விடக்கூடாது என்பதே சமூக செயல்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாகும். 

கட்டுரையாளர் : இ.சுப்பு முத்துராமலிங்கம், வழக்கறிஞர். தூத்துக்குடி