வில்தலை திமிங்கலங்கள்(bow head whales) 200 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவை. இந்த நீண்ட வாழ்நாளிற்கு காரணத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த திமிங்கலங்கள் சேதமடைந்த டிஎன்ஏக்களை சீரமைக்கும் திறமை கொண்டவை என்று ஒரு ஆய்வில் கூறியுள்ளார்கள். இவ்வாறு சீர் செய்யாவிட்டால் புற்று நோய் உண்டாக்கும் மரபணு கோளாறுகள் ஏற்படும். மற்ற விலங்குகள் புற்று நோயை தடுக்கும் பல்வேறு உத்திகளை கொண்டிருப்பதை ஏற்கனவே அறிவியலாளர்கள் கண்டுள்ளார்கள்.
ஆனால் திமிங்கலங்கள் புற்று நோய் தடுப்பில் புதிய உத்தியில் அணுகின்றனவாம். 18 மீட்டர் நீளம் வளரக்கூடிய இவை 80000 கிலோகிராமுக்கு மேல் எடை கொண்டவை. எனவே ஏராளமான செல் பிரிதல்கள் நடைபெறும். அவற்றில் அபாயகரமான மரபணு பிறழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும் உடல் கொண்ட விலங்குகள் எவ்வாறோ புற்று நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக உள்ளன என்கிறார் யூட்டா உடல்நலப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த செல் உயிரியிலாளர் லிசா அபக்கிளன். இதற்கு பீட்டோ புதிர் என்கிறார்கள் மனிதனளவுக்கு வாழும் யானைகள் புற்றுநோயால் அரிதாகவே இறக்கின்றன.
அவை புற்றுநோய் கட்டிகளை தடுக்கும் கூடுதல் ஜீன்களை பெற்றிருக்கின்றன என்று அவரது குழுவினர் கண்டனர். இந்த ஜீனும் மற்றொரு ஜீனும் டிஎன்ஏ சேதத்தை சரி செய்ய உதவலாம். இன்னொரு வழி முதலில் சேதத்தை ஏற்றுக்கொள்வது; பின் அதை சரி செய்வது. இந்த இரண்டாவது வழியை வில்தலை திமிங்கலங்கள் கையாளுகின்றன.இதை நிரூபிக்க நியூயார்க்கிலுள்ள ராச்செஸ்ட்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வெரா கார்பனோவா குழுவினர் வில்தலை திமிங்கலம், மனிதர்கள் மற்றும் மாடு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட செல்களில் சோதனைகளை நடத்தினர். டிஎன்ஏவில் ஏற்படும் இரட்டைப் படி சேதத்தை வில்தலை திமிங்கலங்களின் செல்கள் திறனுடனும் மிகத் துல்லியமாகவும் சரி செய்தன.
இந்தச் சேதம் மரபணு பிறழ்வுகளுக்கு இட்டு சென்று புற்று நோயை உண்டாக்கும். திமிங்கலங்கள் சரி செய்த டிஎன்ஏக்கள் புதிய செல்களை போலவே இருந்தன. மற்ற விலங்குகளின் செல்கள் குழப்பமான முறையில் மோசமாக இணைக்கப்பட்ட ஜீன்ஸ் பேன்ட்டைப் போல சரி செய்தன. இந்த உத்திகள் புற்று நோய்க்காளாகும் மனிதர்களுக்கும் பொருத்தும் வாய்ப்பு உள்ளது. அது வெகு தொலைவில் இருந்தாலும் புற்று நோய் குறைந்த விகிதத்திலேயே தாக்கும் விலங்குகளை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை இது சுட்டிக்காட்டுகிறது. இந்த முடிவுகள் கூன்முதுகு திமிங்கலக்களுக்கும் டால்பின்களுக்கும் பொருந்துகிறதா அல்லது அவை வேறு வகை பாதுகாப்பு உத்திகள் கொண்டுள்ளனவா என்று சோதிக்க இருப்பதாக அபெக்ளென் கூறுகிறார்.