இந்திய விடுதலைப் போராட்ட வர லாற்றின் இறுதிநாட்கள் மிகவும் பர பரப்பான நாட்களாக இருந்தன. அக்காலத் திய போராட்டங்களும் நிகழ்வுகளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நிம்மதியை குலைத்தன. ஆம், பேரலையாய் எழுந்த உழைக்கும் மக்களின் வர்க்கப்போராட்டங் களும் அவற்றின் வடிவங்களும் பிரிட்டனை நிலைகுலைய வைத்தது. இப்போராட்டங் களுக்கு தலைமையேற்றவர்களாக கம்யூனிஸ்ட்டுகள் இருந்தார்கள் என்பது பெருமைக்குரிய அம்சமாகும்.
தெலுங்கானா போராட்டம்
1946இல் துவங்கிய தெலுங்கானா போராட்டம் ஹைதராபாத் நிஜாமுக்கும், ஜமீன்தாரர்களுக்கும் மட்டுமல்ல; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. அப்போதைய இந்திய ராணுவத் தின் தளபதி ஜே.எம். சௌத்ரி பின்வருமாறு குறிப்பிட்டான்: “இன்னும் இரண்டே வாரத்தில் ஹைதரா பாத் மாநிலத்தில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளை நான் அழித்துவிடுவேன்”. அந்த அளவுக்கு அன்றைய இந்திய ஆளும் வர்க்கத்திற்கும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது ஆத்திரம் இருந்தது. இந்த மிரட்டல் குறித்து பின்னர் தெலுங் கானா போராட்ட தளபதியும், சிபிஐ(எம்) முதல் பொதுச் செயலாளருமான தோழர் பி. சுந்தரய்யா தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிரு ப்பதாவது. “சௌத்ரியின் மிரட்டலை அமல்படுத்த இந்திய ராணுவம் படாதபாடு பட்டது. அரசு வெளியிட்ட சில தகவல்களின் அடிப்படை யிலேயே இப்போராட்டத்தை ஒடுக்க அரசு நிர்வாகம் தனது நிதியாதாரங்களில் கணிச மான தொகையை செலவழித்தது. இதற்கான செலவை எதனோடு ஒப்பிடலாம் என்றால் 1947-48இல் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்திய அரசு எவ்வளவு பணத்தை செலவிட்டதோ அவ்வளவு பணம் அக்காலத்தில் கம்யூனிஸ் ட்டுகளை ஒடுக்க செலவிடப்பட்டது. ஆனா லும், தெலுங்கானா போராட்டத்தையோ, கம்யூனிஸ்ட்டுகளையோ அரசு நிர்வாகத்தால் ஒடுக்கவோ, ஒழிக்கவோ முடியவில்லை.” இந்திய விடுதலைக்கு முன்பு துவங்கிய தெலுங்கானா போராட்டம் விடுதலைக்குப் பின்னரும் தொடர்ந்தது. இப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் செய்த தியாகமும், எதிர்கொண்ட அடக்குமுறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தியாவின் வேறு எந்த அரசியல் இயக்கமும் இத்தகைய அடக்குமுறையை எதிர்கொள்வது குறித்து கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கொண்ட அடக்கு முறைகள், சித்ரவதைகள் சொல்லிமாளாது. “4000 கம்யூனிஸ்ட்டுகள் / விவசாயிகள் இப்போராட்டத்தில் கொல்லப்பட்டனர். 10000க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்டுகளும், மக்கள் போராளிகளும் 3-4 ஆண்டுகள் சிறைச்சாலைகளில், சித்ரவதைக் கூடங்களில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் எதிர்கொண்ட சித்ரவதைகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இதற்கு மேல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவ்வப்போது காவல்துறை மற்றும் ராணுவ கூடங்களுக்கு விசார ணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு வாரங்கள் - மாதங்கள் கணக்கில் கொடூர மான முறையில் தாக்கப்பட்டனர். லட்சோப லட்சம் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் ராணுவம் / காவல்துறை / ரெய்டுகள் நடந்து கடுமையான தடியடித் தாக்குதலுக்கு மக்கள் ஆளானார்கள். ஆயிரக்கணக்கான கிராமங்களில் போராடிய மக்களின் சொத்துக்கள், உடமைகள் சூறையாடப்பட்டன. ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். போராட்டம் நடந்த முழு பகுதியையும் போலீஸ் சாம்ராஜ்யமாக, ராணுவ சாம்ராஜ்யமாக மாற்றி தாக்குதல் தொடுத்தார்கள்.
இத்தகைய தாக்குதல்களை மட்டுமல்ல, மக்கள் அடைந்த பயன்கள் மற்றும் உரிமை கள் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இப்போராட்டக் காலத்தில் 10 லட்சம் மக்கள் வாழ்ந்த, 16 ஆயிரம் சதுர மைல் பரப்பளவு உள்ள, 3000 கிராமங்களில் உண்மையான மக்கள் சாம்ராஜ்யம் / கிராம சாம்ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசின் ஏவல் ஆளாக இருந்த ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவனது தூண்களாகச் செயல்பட்ட நிலப் பிரபுக்கள் அவர்களுடைய நிலங்களி லிருந்தும் குடியிருந்த கோட்டைகள் போல அமைந்திருந்த வீடுகளிலிருந்தும் விரட்டி யடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய நிலங்கள் பல்லாயிரக்கணக்கான நிலமற்ற விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டன. ஏறத்தாழ 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் இவ்வாறு வழங்கப்பட்டன. ஆங்காங்கு பொருத்தமான மக்கள் பங்கேற் கும் நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மக்கள் போராட்டக்குழுவின் வழிகாட்டுதலில் இவையனைத்தும் நடந்தன.
விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டது. மலைப்பகுதிகளில் ஆதிக்கம் செய்த சுரண்டும் வர்க்கங்களும், அதிகார வர்க்கமும் விரட்டியடிக்கப்பட்டனர். மலைவாழ் ஆதிவாசி மக்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஏறத்தாழ 1 1/2 ஆண்டு காலம் மேற்குறிப்பிட்ட நிலப்பகுதி முழுவதும் லட்சோபலட்ச கிராமப்புற விவசாயிகளும் இதர பகுதி மக்களும் மக்கள் போராட்டக்குழு நிர்வாகத்தின் கீழ் இருந்தனர். பிற்காலத்தில் மத்திய காங்கிரஸ் அரசு தனது முழு ராணுவ பலம் கொண்டும் இதர அடக்குமுறை எந்திரங்களைக் கொண்டும் அதிகார வர்க்கத்தின் துணையோடு நிலப்பிர புக்களின் மேலாதிக்கத்தை திரும்பவும் கொண்டு வர மிருக வெறியோடு செயல்பட்டது கொடூரமான நிகழ்வுகளாகும். அப்போதும் மிகுந்த அச்சத்தோடும், நடுக்கத்தோடும் மக்கள் எழுச்சி குறித்த பயத்தால் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை இப்பகுதியில் நீண்ட காலம் நிலைகொண்டு இருக்க மத்திய காங்கிரஸ் அரசு ஏற்பாடு செய்தது. இந்திய விடு தலைக்குப் பிறகு உருவான முதல் காங்கிரஸ் அரசின் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆதரவுக் கொள்கையை இச்செயல் தோலு ரித்துக் காட்டியது.
முடிந்துபோன கதையல்ல
ஆயினும், தெலுங்கானா போராட்டம் முடிந்து போன கதையல்ல. அதன் தாக்கம் பிற்கால இந்திய அரசியலில் ஏன் இந்திய வரைபடத்தில் வலுவாக பிரதிபலித்தது. பல மாநில முதலாளித்துவ அரசுகள் அரை குறை மனதோடு என்றாலும் கூட (மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா தவிர) நிலச்சீர் திருத்தச் சட்டங்கள் கொண்டு வர வைத்ததில் தெலுங்கானா போராட்டத்தின் பங்கு மகத்தானது என்பதில் மறுப்பு இருக்க முடியாது. அதுபோல, மொழிவாரி மாநி லங்கள் உருவானது சாதாரண நிகழ்வல்ல - அதற்கான போராட்டங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தன என்பதும், இதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு வலுவானது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தின் பின்புலமாக தெலுங்கானா போராட்டம் உத்வேகம் அளித்தது என்பதும் வரலாற்று உண்மை.
தேபாகா போராட்டம்
தெலுங்கானா போராட்டம் துவங்கிய அதே காலத்தில், ஆம், 1946இல் வங்க மாநிலத்தில் துவங்கிய போராட்டம் தான் தேபாகா போராட்டம். இப்போராட்டமும் நிலவுடமையாளருக்கு எதிரான போராட்டமாக மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாகவும் அமைந்தது. தேபாகா போராட்டத்தின் அடிப்படை முழக்கம் 2/3 பங்கு சாகுபடியாளர்களுக்கு வழங்கு என்பது தான். அக்காலத்தில் வங்காள மாநிலத்தில் இருந்த நடைமுறைகள் 50 சதம்: 50 சதம் ஆகும். விவசாயச் செலவுகள் (விதைப்பு, உழவு, உரம், நடுதல் உட்பட) அனைத்தையும் செலவிடும் விவ சாயிகளுக்கு இந்த நடைமுறை நியாயம் வழங்குவதாக இல்லை. எனவே தான், 1/3 உடமையாளர்களுக்கும், 2/3 சாகுபடி யாளர்களுக்கும் என்ற தேபாகா போராட்ட முழக்கம் வங்காளம் முழுவதும் பிரதி பலித்தது. வங்கத்தில் அக்காலத்தில் இருந்த 28 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் இப்போராட்டங்கள் நடந்தன. பல பத்து லட்சக்கணக்கான விவசாயிகள் இப்போராட்ட த்தில் பங்கேற்றனர். இப்போராட்டம் கம்யூ னிஸ்ட்டுகள், அவர்கள் தலைமை தாங்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏ.ஐ.கே.எஸ்.) ஆகியவை முன்னின்று நடத்திய போராட்டங்களாகும்.
இப்போராட்டம் கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டது. நிலவுடமையாளர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் - இந்திய அரசும் களத்தில் இறங்கின. குறிப்பாக, வங்கத்தின் வட மாவட்டங்களில் இப்போராட்டம் மிகத் தீவிரமாக நடந்தது. தினாக்பூர், ரங்பூர், ஜல்பைகுரி, 24 பர்கானா, குல்னா, அசாமின் எல்லையோரப் பகுதிகள், கிழக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆகிய பகுதிகள் முக்கிய போராட்டத் தளங்களாக இருந்தன. காவல்துறை மட்டுமல்ல, சமூக விரோதி களும் போராடும் விவசாயிகளைத் தாக்கி னர். பல இடங்களில் காவல்துறையின் துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. இந்துக்கள், இஸ்லாமியர்கள், ஆதிவாசிகள், பெண்கள் என 70 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கா னோர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலும் பலர் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ் அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்ட முஸ்லீம் லீக் தலைமையிலான மாநில அரசும் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் ஒரு அம்சத்தை முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இக்காலம் தேசத்தின் எதிர்காலம் (தேசப்பிரிவினையா?), அரசியல் சாசனம், இடைக்கால அரசு குறித்து பரஸ்பரம் எதிரும்,
புதிருமாக மக்களை மதவாத சக்திகள் மோத வைத்த காலம். இச்சூழலில் இப்போராட்டத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டு நின்று வர்க்க எதிரிகளையும், அவர்களுக்கு ஆதரவான பிரிட்டிஷ் அரசையும், மாநில அரசையும் எதிர்த்துப் போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு முக்கிய அம்சம் தேபாகா போராட்டம் வலுவாக நடந்த பகுதிகளில் இந்து - முஸ்லிம் கலவரம் நடைபெறவில்லை என்பதாகும். தேபாகா போராட்டம் கடும் அடக்குமுறை களை எதிர்கொண்ட போதிலும் பிற்காலத்தில் விவசாயிகளின் வாழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த குறிப்பிடத்தக்க பங்காற்றியது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை பொறுத்தவரை தேச விடுதலை மட்டுமல்ல, தேச ஒற்றுமையை நிலைநாட்டவும், சுரண்டலுக்கு முடிவு கட்டவும் முக்கியத்துவம் அளித்தது. சுரண்டப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர பகுதி மக்களின் மகத்தான ஒற்றுமையை நிலைநாட்டி வர்க்கப்போராட்டங்களை வலுவாக முன்னெடுப்பதே சரியான பாதை என்ற உறுதிப்பாட்டோடு செயல்பட்டது.
புன்னப்புரா வயலாறு
இக்காலத்தில் கம்யூனிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்பட்ட இன்னொரு போராட்டம் தான் புன்னப்புரா வயலாறு. இப்போராட்டத்தின் அடிப்படையும் விவ சாயிகள் மற்றும் இதர பகுதி உழைப்பாளி மக்களை திரட்டி நடத்தும் வர்க்கப்போராட்டமே. நிலப்பிரபுக்களுக்கு எதிராக மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இப்போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுத்தது. ஆலப்புழை மாவட்டத்தில் புன்னப்புரா, வயலாறு ஆகிய இருகிராமங்களில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கயிறு தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமையில் அணி திரண்டா ர்கள். பொதுவான ஒரு போராட்டக்குழு மட்டு மல்ல, வார்டு வாரியான போராட்டக்குழுக் களும் அமைக்கப்பட்டன. இந்த இரு கிராமங்களும் திருவாங்கூர் சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்தன. அப்போதைய திருவாங்கூர் திவான் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தின் எடுபிடியாக இருந்தான். இதோடு இந்தியா விடுதலையடைந்தால் திருவாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க முடியாது என்றும், தான் திருவாங்கூர் சமஸ்தானத்தை சுதந்திர சமஸ்தானமாக நிர்வகிக்கப் போவதாகவும் அறிவித்தான். இதை கம்யூனிஸ்ட் இயக்கம் ஏற்க மறுத்தது. எனவே, புன்னப்புரா - வயலாறு போராட்டம் நிலப்பிரபுக்கள், திருவாங்கூர் திவானுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல; இந்திய விடுதலை மற்றும் இந்திய ஒற்றுமைக்கான போராட்டமாக இருக்கும் என கம்யூனிஸ்ட் இயக்கம் பிரகடனம் செய்தது.
1946 அக்டோபர் 22 மிக முக்கியமான போராட்ட நாளாகும். திருவாங்கூர் தொழிற் சங்க காங்கிரஸ் அன்றைய தினம் பொது வேலை நிறுத்தம் நடத்துமாறு அறைகூவல் விடுத்தது. இந்த பொதுவேலைநிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. அன்றைய தினம் இந்தியாவுக்கு விடுதலை கோரி ஏராளமான மக்கள் திருவாங்கூர் காவல்துறை முகாம் முன்பு கூடினார்கள். அங்கே இந்திய விடுதலைக்காக முழக்கமிட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையின் தலைமை அதிகாரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் பலர் மரணமடைந்தனர். இதுமட்டுமல்ல; ராணுவ முகாமில் உள்ள ஒரு அதிகாரியும் ஐந்து காவலர்களும் அப்போது மக்களுடன் நடைபெற்ற மோதலில் மரணமடைந்தனர். உடனடியாக இப்பகுதி முழுவதும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பிறகு ஒவ்வொரு நாளும் ராணுவத்தின் தாக்குதல் அக்கிராமங்களின் குடியிருப்புப் பகுதிகளில் சகிக்க முடியாததாக இருந்தது. ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சூடு, மரணம் என தாக்குதல்கள் நடந்து கொண்டே இருந்தது. ராணுவத் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்க போராட்டக்குழு சார்பாக தனியான ஒரு முகாம் ஏற்படுத்தப்பட்டது.
1946 அக்டோபர் 27இல் முகாமில் உள்ளவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென முகாமிற்குள் நுழைந்த ராணுவம் அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எத்தனை பேர் மரணமடைந்தார்கள் என்ற செய்தி இதுவரை வெளியிடப்படவில்லை. இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள பொருத்தமான எதிர்உத்திகளை வகுக்க வேண்டிய நிர்ப்பந்தம் கம்யூனிஸ்ட் இயக்கத் திற்கு ஏற்பட்டது. அவ்வாறே வகுக்கவும் செய்தது. போராடும் மக்களை பாதுகாப்ப தற்கான இந்த நடைமுறை உத்தி போராட்டக் களத்தில் நின்றவர்களுக்கு நம்பிக்கை யளித்தது. திருவாங்கூர் திவானுக்கு எதிராக எழுச்சி மிக்க மக்கள் போராட்டங்கள் பேரலை யாய் எழுந்தன.
இப்போராட்டத்தின் எழுச்சி, மக்களின் உணர்வுகளை கவனித்த திருவாங்கூர் திவான் அந்த சமஸ்தானத்தை விட்டே வெளியேறினான். திருவாங்கூர் திவானுக்கு எதிரான எழுச்சியில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் என அனைத்துப்பிரிவினரும் ஒருங்கிணைந்தது போராட்டத்தை உத்வேகத்துடன் கொண்டு செல்ல உதவியது. தேச விடுதலைக்குப் பிறகு சுதந்திர திருவாங்கூர் என பறைசாற்றிய - கம்யூனிஸ்ட்டுகளை ஒழிப்பதே எனது பிரதானப் பணி என கொக்கரித்த திவான் அம்மண்ணை விட்டே வெளியேறும் சூழல் உருவானது கம்யூனிஸ்ட்டுகள் வகுத்த போராட்ட உத்திக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும். பிற்காலத்தில் திருவாங்கூர் மக்களுக்கு வாக்குரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளும் கிடைக்க கம்யூனிஸ்ட் இயக்கம் உரிய பங்களிப்பைச் செய்தது.