மக்களின் முதல்வர் இ.கே.நாயனார்
மக்களின் முதல்வர் என போற்றப்பட்ட தோழர் இ.கே. நாயனார் அவர்கள் 1919 டிசம்பர் 9இல் பிறந்தார். வசதி படைத்த குடும்பத்தில் பிறந்திருந்தா லும் சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். அவ ருடைய உறவினரும் கேரளாவின் புரட்சி இயக்கத்தின் ஊழியருமான கே.பி.ஆர். கோபாலன் நட்பின் மூலம் 1939ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 1940ஆம் ஆண்டு சிறையில் தள்ளப்பட்டார்.
11 ஆண்டு தலைமறைவு
கையூர் போராட்டங்கள் உட்பட பல போராட்டங்களின் பொழுது காவல்துறை தோழர் நாயனாரை சிறைபிடிக்க தீவீரமாக இருந்ததால் தலைமறைவானார். அவர் வாழ்நாளில் 11 ஆண்டுகள் தலை மறைவு வாழ்வும் 4 ஆண்டுகள் சிறை வாழ்விலும் துன்பங்களை எதிர் கொண்டார்.
ஒன்றுபட்ட கட்சியில் மாவட்டச் செயலாளர்
ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியின் கோழிக்கோடு மாவட்டக் குழுச் செயலாளராக 1956 முதல் 1964 வரையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பின்னர் 1964 முதல் 1967 வரையிலும் நாய னார் திறம்பட பணியாற்றினார். கட்சி யின் அரசியல் சித்தாந்த நிலைபாடு களில் உறுதியாக நிலை எடுத்த அவர் ஒன்றுபட்ட கட்சியின் திருத்தல் வாத நடவடிக்கைகளை எதிர்த்து வெளிநடப்பு செய்த 32 பேரில் ஒருவர். 1964இல் நடந்த 7ஆவது மாநாட்டில் மத்தியக் குழுவுக்கும் 1992ஆம் ஆண்டு நடந்த 14ஆவது மாநாட்டில் அரசியல் தலைமை குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். 1972 முதல் 1980 வரையிலும் பின்னர் 1992 முதல் 1996 வரை யிலும் கட்சியின் கேரள மாநிலக் குழுச் செயலாளராக செயல்பட்டார். கேரளாவில் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்க தோழர் நாயனாரின் பங்கு மிகவும் முக்கியமானது.
மூன்றுமுறை முதல்வர்
தோழர் நாயனார் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். மூன்று முறை முதல்வராக செயல்பட்டுள்ளார். அவர் முதல்வராக இருந்த பொழுது பல முற்போக்கான திட்டங்களை அமலாக்குவதில் வழி காட்டியுள்ளார். “முதல்வருடன் பேசுங்கள்” எனும் அவரது நேரடி தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவை.
சிறந்த பேச்சாளர்
அவர் சிறந்த மேடை பேச்சாளர். நகைச்சுவை ததும்பும் அவரது பேச்சுக்கள் மக்களை மிகவும் கவர்ந்தவை. கட்சியின் நிலைபாடு களை மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்துச் சொல்லும் திறமை பெற்றவர். அனைவரிடமும் எளிமையாகப் பழகக் கூடியவர். அவர் சிறந்த பத்திரிகையாளராகவும் விளங்கினார். தேசபிமானியின் ஆசிரியராகவும் பணியாற்றிய அவர் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் அனைத்துப் பகுதி மக்களால் குறிப்பாக உழைப்பாளி மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தலைவர்.
2004ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் நீத்தார். அவரது உடல் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்ட பொழுது லட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவாக மருத்துவக் கல்லூரி/ பாலிடெக்னிக் கல்லூரி என பல கல்வி நிலையங்கள் உள்ளன. அவருக்காக சமீபத்தில் அருங்காட்சியகமும் உருவாக்கப் பட்டுள்ளது.