இயக்கத்தை வளர்த்தவர்; இதயங்களை வென்றவர் தோழர் ஐ.மா.பா! - சி.ராமகிருஷ்ணன்
ஐமாபா என அனைவராலும் அன்பு டனும், தோழமையுடனும் அழைக்கப் பட்ட தோழர் ஐ.மாயாண்டி பாரதி அவர்க ளின் வாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சிறுவயதிலேயே தனது அண்ணன் கருப்பையா என்ற மண்டையன் அவர்களால் தேச விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈர்க்கப் பட்டவர் ஐமாபா. அவரது வீட்டிற்கு பின்புறம் இருந்த லஜபதிராய் நூலகம் காங்கிரஸ் அலுவல கமாக இருந்தது. அங்கு சென்ற ஐமாபாவுக்கு மதுரையின் அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர் களான சிதம்பர பாரதி, அவரது மனைவி பத்மா சணி அம்மாள் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இவரின் விடாப்பிடியான விடுதலை உணர்ச்சி காங்கிரஸ் இயக்கத்தின் மீதும் மகாத்மா காந்தி மீதும் அளப்பரிய மரி யாதையை ஏற்படுத்தியது. 1932ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி துவக் கிய அரிசன சேவா இயக்கத்தில் ஐமாபாவும் இதர காங்கிரஸ்காரர்களுடன் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கள்ளுக் கடை மறியல் போராட்டத்திலும் பங்கேற்று காவல் துறையின் தடியடிக்கு ஆளானார். தேசிய இயக்கத்தில் ஈடுபட்டதால் ஐமாபாவின் படிப்பு பாதித் தது. இரண்டு முறை எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியுற்றதால் அத்துடன் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தொடர்ச்சியான புத்தக வாசிப்பு, தலைவர்கள் பேசும் கூட்டங்களில் கலந்து கொண்டு அவர்க ளது உரைகளை உன்னிப்பாக கவனித்ததன் மூலம் ஐமாபாவும் சிறந்த பேச்சாளராக மாறி னார். சிதம்பர பாரதி போன்ற தலைவர்களால் மாயாண்டி என்ற பெயருடன் பாரதி என்று சேர்த்து அழைக்கப்பட்டு அதுவே அவரது பெயராக நிலைத்தது.
1938-இல் ராஜபாளையத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண அரசியல் மாநாட்டில் “திருப்பூர் தியாகிக்கு குமரனுக்கு” நினைவுச் சின்னம் எழுப்புக என துண்டுப் பிரசுரம் வெளியிட்டார். இம் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்களான ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமிரெட்டியர், என்.ஜி.ரங்கா, காங்கிரஸ் சோசலிஸ்டுகளும் கம்யூனிஸ்ட் தலை வர்களுமான ஏ.கே. கோபாலன், பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். இதன் பிறகு சென்னையில் ‘லோக சக்தி’ ஏட்டில் பணி யாற்றினார். இதில் ஆவேசமிக்க பல கட்டுரை களை எழுதினார். தேசிய இயக்கத்தோடு கட்ட பொம்மனை இணைத்து முதன் முதலில் ஐமாபா தான் எழுதினார். லோக சக்தியில் ஐமாபா எழுதிய “போருக்குப் புறப்படு” என்ற கட்டுரைக்காக ஆங்கி லேய அரசாங்கம் 2000 ரூபாய் அபராதம் விதித்தது.
மார்க்சியப் பாதையில் பயணம்
1940ஆம் வருடம் சாத்தூருக்கு அருகில் உள்ள கன்னிசேரி என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ஐமாபா, “பாட்டாளத்தில் சேராதே! பணம் காசு கொடுக்காதே” பிரிட்டிஷ் ஆட்சிக்கு வரி கொடுக்காதே என்று ஆவேசமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார். வேலூர் சிறை வாழ்க்கை ஐமாபாவின் வாழ்வில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அங்கு தான் தோழர் வி.பி.சிந்தன் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. என்.ஜி. ரங்கா, முத்துராம லிங்கத் தேவர், வி.பி.சிந்தன், பி.சீனிவாசராவ், கே.ஆர்.ஜமதக்னி போன்ற தலைவர்களுடன் ஐமாபாவும் சிறைவைக்கப்பட்டார். வி.பி.சி எடுத்த தொடர் வகுப்புகள் மூலம் ஐமாபா புதிய துணை யைப் பெற்றார். ஏழுமாத சிறைக்குப்பின்பு 1942 மார்ச் மாதம் ஐமாபா விடுதலை பெற்று வரும்போது கம்யூனிஸ்டாக வெளிவந்தார். 1944ஆம் ஆண்டு விடுதலையான பின்னர் ஐமாபா கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நகரச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு கட்சி தடைசெய்யப்பட்டபோது ஐமாபா கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். விடுதலையானவுடன் கட்சியின் முடிவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் தலை மறைவாக செயல்பட்டார். 1950 மே மாதம் 24ஆம் தேதி ரயில் கவிழ்ப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக ஐமாபா கைது செய்யப்பட்டு கடும் சித்ரவதைக்கு உள்ளானார். இவ்வழக்கில் ஐமாபாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 1953ஆம் ஆண்டில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.
எழுத்தின் ஆற்றல்
1954ஆம் ஆண்டு தோழர் பொன்னம்மாவு டன் திருமணம் நடைபெற்றது. 1955முதல் 1964 வரை ஜனசக்தியில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். 1964-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது ஐமாபா அதில் இணைந்து கொண்டார். அதே ஆண்டு டிசம்பர் 29 நள்ளிர வில் கைது செய்யப்பட்டு 14 மாத காலம் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1969-இல் மதுரை தீக்கதிரில் உதவி ஆசிரிய ராகச் சேர்ந்து 22ஆண்டுகள் சிறப்பாகப் பணி யாற்றினார். ஜனரஞ்சகமான ஏராளமான கட்டு ரைகளை எழுதினார். 1938ஆம் ஆண்டில் தொடங்கி அடுத்த 50ஆண்டு காலத்தில் ஐமாபா எழுதியவை கள் மிகப்பெரும் சாதனையாக திகழ்கின்றன. மதுரை சிறையில் இருந்தபோது, தூக்கு மேடை தியாகி பாலுவை தூக்கிலிடுவதற்கான தயாரிப்புகள் செய்யப்பட்டு வந்தன. தோழர் பாலுவை சந்தித்த தோழர்கள் கூறிய விபரங்கள், பாலுவின் துணிச்சல் ஆகியவற்றை குறித்து வைத்திருந்த ஐமாபா, பாலு தூக்கிலிடப்பட்ட பின்பு அவரைப் பற்றி உருக்கமாக கட்டுரை ஒன்றை எழுதினார். “படுகளத்தில் பாரத தேவி”, “தூக்கு மேடை தியாகி பாலு”, “மாரி மணவாளன்”, “தில்லை வனம்”, “பொதும்பு பொன்னையா”, “இரணியன் சிவராமன்” போன்ற வாழ்க்கை வரலாறுகளும் “அரசு என்றால் என்ன?” “தமிழுக்கு மார்க்சிய வாதிகள் செய்த தொண்டு” போன்ற ஆய்வுக் கட்டுரைகளும் மிகச்சிறந்தவை. படிப்போரை உணர்ச்சிக்குள்ளாக்கி எழுச்சிக் கொள்ளச் செய்யும் ஆற்றல் இவருக்கு இருந்தது. நான்கு விதமான எழுத்தாற்றல் - உணர்ச்சிப்பூர்வமான, தத்ரூபமான, நகைச்சுவை ததும்பும், ஆய்வுப் பூர்வமான எழுத்து - மிக்கவர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சோவியத் நாட்டில் பத்திரிகையாளர் குழுவின் அழைப்பின் பேரில் சென்ற தூதுக்குழுவிலும் ஐமாபா பங்கேற்றார்.
இதயங்களில் நிலைத்தவர்
98 ஆண்டுகள் நிறை வாழ்க்கை வாழ்ந்த ஐமாபா 2015 பிப்ரவரி 24ஆம் தேதி காலமானார். அவரது உடல் மதுரை மகபூப் பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழு அலுவலகத்தில் மதுரை மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரமாயிரமாய் மக்களும், தோழர்களும், அனைத்துக் கட்சித்தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இரங்கல் கூட்டம் நடைபெற்று இறுதியில் மதுரை தத்தனேரி இடுகாட்டில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு விடுதலைக்காகவும், மார்க்சிய லட்சி யத்திற்காகவும் ஐமாபா 13 ஆண்டுகாலம் சிறை வாசம், ஓராண்டு காலம் தலைமறைவு, விவரிக்க முடியாத சித்ரவதைகள், துன்பங்களை எதிர் கொண்டார். தேசியமும், சர்வ தேசியமும் அவரது இரண்டு கண்கள். ஐமாபா தனது வாழ்க்கையில் 15ஆண்டுகள் தேச விடுதலைக்காகவும், 74 ஆண்டுகள் மார்க்சியத் தத்துவத்திற்காக அர்ப்பணித்தார். ஆணவம், அகந்தை, இறுமாப்பு, ஏகடியம் என எதையும் அறியாதவராக விளங்கிய ஐமாபா எளிமை, உதவும் மனப்பான்மை, அனைவரிட மும் அன்பு, பரிவு ஆகியவற்றைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். சோசலிசம் மற்றும் மார்க்சியத் தத்துவத்தின் வெற்றியில் அசையாத நம்பிக்கை கொண்டவர். சோர்வு, விரக்தி போன்ற வற்றை வெறுத்தவர். வாழ்க தோழர் ஐமாபா அவர்கள் புகழ்!