articles

நாடாளுமன்ற-சட்டமன்றத் தொகுதி மறுவரையறை நேர்மையான முறையில் செய்திட வேண்டும் - ச.வீரமணி

நாடாளுமன்ற-சட்டமன்றத் தொகுதி மறுவரையறை நேர்மையான முறையில் செய்திட வேண்டும்

2026 நெருங்கிக்கொண்டிருப்பதால், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட இருக்கும் பிரச்சனையும் பொது மக்களின் கவனத்தையும், பல்வேறு சர்ச்சை களையும் ஈர்த்து வருகிறது. 2026க்குப் பிறகு நடத்தப் படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து தொகுதிகளின் மறுவரையறை மேற்கொள் றப்பட வேண்டும். 1976ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில்  இயற்றப்பட்ட 42ஆவது அரச மைப்புச்சட்டத் திருத்தத்தின்படி, தொகுதி மறுவரை யறை முடக்கப்பட்டது. பின்னர் வாஜ்பாய் அரசாங்கத் தின்கீழ் அது 2026வரை நீட்டிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டம் கூறும்  இரு அம்சங்கள்

அரசமைப்புச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை இரு அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. (1) ஒவ்வொரு பத்தாண்டுக்குப் பிறகும் மேற்கொள்ளப் படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு தேசிய மொத்த மக்கள் தொகை விகிதத்தின் அடிப்ப டையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நாடாளு மன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரை யறை செய்வது மற்றும் அதற்கேற்ப மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை யையும் மறுவரையறை செய்வது என்பதாகும். (2) மக்கள் தொகை அடிப்படையில் அவை ஒப்பீட்ட ளவில் சமமாகவும் ஒப்பிடத்தக்கதாகவும் இருப் பதை உறுதி செய்ய நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத் தொகுதிகளின் பிராந்திய எல்லைகளையும் மறுவரையறை செய்தல் வேண்டும்.

மறுவரையறையின் அவசியமும் முதன்மை ஆட்சேபணையும்

1976ஆம் ஆண்டு செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் காரணமாகவும், பின்னர் அதைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத் தின்போது செய்யப்பட்ட திருத்தத்தின் காரணமாகவும், 1981, 1991 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் பத்தாண்டு க்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்புகளுக்குப் பிறகு தொகுதி மறுவரையறை ஆணையங்கள் நியமனம் செய்யப்பட வில்லை. இப்போது 2026ஆம் ஆண்டில் இந்த முடக்கம் முடிவடையும் என்பதால் அரசமைப்புச்சட்ட விதிகளின்படி தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய பிரச்சனை முன்னுக்கு வந்துள்ளது. சமீபத்திய மக்கள் தொகை புள்ளிவிவரங்களின் அடிப்ப டையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதற்கு முதன்மையான ஆட்சேபணை என்னவென்றால் அது நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைத்திடும் என்பதாகும்.

கட்டுப்படுத்தியதற்கு தண்டனையா?

மாநிலங்களுக்கு இடையே மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களில் ஏற்படும் வேறுபாடுகளால் இந்த வேறுபாடு ஏற்படுகிறது. சில மாநிலங்கள், பய னுள்ள மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கை கள் மூலம், வளர்ச்சியில் கூர்மையான சரிவைக் கண்டுள்ளன. மற்றவை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு களை சந்தித்துள்ளன. இதன் விளைவாக, மக்கள் தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப் படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படும் அதே சமயத்தில் அவ்வாறு செய்யாத மாநிலங்களுக்கு கூடுதல் இடங்கள் வழங்கப்படும். பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம், இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தர கண்ட் கூட சில இடங்களை இழக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால்தான் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னணியில் உள்ள தென் மாநிலங் கள், மக்கள்தொகை புள்ளிவிவரங்களை தொகுதி மறுவரையறை செய்வதற்கு அடிப்படையாகப் பயன் படுத்துவதை கடுமையாக எதிர்க்கின்றன.

உ.பி., பீகாருக்கு போனஸா?

ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, மொத்த இடங்களின் எண்ணிக்கை தற்போதைய 543 இலிருந்து 848 ஆக உயர்த்தப்பட்டாலும், மக்கள்தொகை அடிப்ப டையிலான எல்லை நிர்ணயம் ஐந்து தென் மாநிலங்க ளுக்கும் சேர்த்து சுமார் 40 இடங்களைக் கொடுக்கும், அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம் மட்டும் 63 இடங்க ளையும், பீகார் 39 இடங்களையும் பெறும். இந்த விகிதாச்சாரமற்ற பங்கீட்டையே தென் மாநிலங்கள் எதிர்க்கின்றன.

அமித் ஷாவின் விளக்கம் தெளிவற்றது

சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தொகுதி மறுவரை யறை செயல்முறைக்கு எழுந்த ஆட்சேபணைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எந்த தென் மாநிலமும் இடங்களை இழக்காது, ஆனால் விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் இடங்களைப் பெறும் என்று கூறியுள்ளார்.

இடங்கள் அடிப்படையிலா?  மக்கள் தொகை அடிப்படையிலா?

எனினும், விகிதாச்சாரக் கணக்கீடு தற்போதைய இடங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டதா அல்லது சமீபத்திய மக்கள்தொகை புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டதா என்பதை தெளிவுபடுத்தாததால், இந்த அறிக்கை தெளி வற்றதாகவே உள்ளது. இது பிந்தையதாக இருந்தால், வட இந்திய மாநிலங்கள் அதிகரித்த இடங்களின் எண்ணிக்கையில் இன்னும் விகிதாச்சாரமற்ற பங்கைப்  பெறுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் சிறந்த முறை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விகிதாச்சார இட அதிகரிப்பை மேற்கொள்வதாகும். மக்களுக்கு சிறந்த  பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே  வேளையில், இந்த அணுகுமுறை மாநிலங்களுக்கி டையேயான இடங்களின் தற்போதைய விகிதம் பராம ரிக்கப்படுவதையும் உறுதி செய்யும். இந்த முறையின் கீழ், ஒவ்வொரு மாநிலமும் மக்கள்தொகை வளர்ச்சி யை விட அதன் தற்போதைய ஒதுக்கீட்டின் அடிப்ப டையில் கூடுதல் இடங்களைப் பெறும்.

தற்போதைய இடங்களின் விகிதப்படி செய்தாலே சரி - ச.வீரமணி

உதாரணமாக, மொத்த இடங்களின் எண்ணிக்கை யை 800 ஆக அதிகரித்தால், தற்போது மொத்த 543 நாடாளுமன்ற இடங்களில் 39 இடங்களைக் கொண்ட  தமிழ்நாடு, கூடுதலாக 18 இடங்களைப் பெறும், அதாவது மொத்தம் 57 இடங்களைப் பெறும், இது அது பெற்றுள்ள மொத்த இடங்களின் விகிதத்திற்கு சமமாகும். இந்த சூத்திரத்தின்படி, கேரளா அதன் தற்போதைய ஒதுக்கீட்டான 20 இடங்களிலிருந்து கூடு தலாக 9 இடங்களைப் பெறும், இது 29 இடங்களாக மாறும். தற்போது 80 இடங்களைக் கொண்ட உத்த ரப்பிரதேசம், கூடுதலாக 38 இடங்களைப் பெறும், மொத்தம் 118 இடங்களையும், பீகார் 25 இடங்களைச் சேர்த்து மொத்தம் 79 இடங்களையும் பெறும்.

ஒருமித்த கருத்து அல்லது நிறுத்திவைப்பு

இவை அனைத்தும் தற்போது அவர்களிடம் உள்ள இடங்களின் விகிதாச்சாரத்தில் உள்ளன. எனவே சிறந்த பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே வேளையில், எந்த மாநிலமும் அது வைத்தி ருக்கும் இடங்களின் விகிதத்தில் குறைப்பை சந்திக்காது. இருப்பினும், இந்த அணுகுமுறையில் ஒரு மித்த கருத்துக்கு வர முடியாவிட்டால், தொகுதி மறு வரையறை செயல்முறையை இன்னும் 25 ஆண்டுக ளுக்கு நிறுத்தி வைப்பதே ஒரே மாற்று வழி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மார்ச் 22 அன்று தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் முக்கிய அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதித்து ஒரு பொதுவான நிலைப்பாட்டிற்கு வருகிறார். இந்தக் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு, எல்லை நிர்ணயப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வேகத்தை நிர்ணயிக்க வேண்டும்.