அடுக்கடுக்காய் எழுந்த பிரச்சனைகளும் தீர்வுகளும்! - பி.சம்பத்
1977-80 ஜனதா ஆட்சி யில், ஜனசங்க உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பொறுப்பை துறக்க மறுத்து சர்ச்சைகள் எழுந்தன. இரட்டை உறுப்பினர் நிலை அனுமதிக்க முடியாது என்ற கோரிக்கையை சரண்சிங் தலைமையிலான பகுதி யினர் வலியுறுத்தினர். இதற்கு சிபிஐ(எம்) வெளியிலி ருந்து ஆதரவு அளித்தது. இரட்டை உறுப்பினர் பிரச்னைக்கு முடிவு ஏற்படாமல் ஜனதா உடைந்தது. சரண்சிங் தலைமையிலான பிரிவினருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால் சரண்சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றதால் நாடாளு மன்றம் கலைக்கப்பட்டது. 1980 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
இந்திரா படுகொலையும் அனுதாப அலையும்
காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில், 1984 அக்டோபர் 31இல் பிரதமர் இந்திராகாந்தி சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிபிஐ(எம்) இந்த படுகொலைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து, சீக்கிய தீவிரவாதிகளின் பிரிவினைவாத முழக்கங்களை நிராகரித்து தேச ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தியது. இந்திரா படுகொலை நாடெங் கும் காங்கிரசுக்கு அனுதாப அலைகளை உருவாக்கி யது. ராஜீவ்காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றபின் தேர்தலை அறிவித்தார். அனுதாப அலையில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 1984-89 வரை ராஜீவ்காந்தி ஆட்சி நடத்தினார்.
வி.பி.சிங் அரசும் மண்டல் கமிஷனும்
1989 தேர்தலில் ஜனதா தள தலைவர் வி.பி.சிங் தலைமையில் சிறுபான்மை அரசு அமைந்தது. அரசு நீடிக்க ஒருபுறம் சிபிஐ(எம்), மறுபுறம் பிஜேபி ஆதரவு தேவைப்பட்டது. சிபிஐ(எம்) ஒரு நிபந்தனை விதித்தது - பிஜேபி மத்திய அரசில் பங்கேற்கக் கூடாது, வெளியிலிருந்து ஆதரவு அளிக்கலாம். வி.பி.சிங் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் சிபாரிசை நடைமுறைப்படுத்தினார். இது ஜனநாயக, மதச் சார்பற்ற சமூக நீதி சக்திகளிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. சிபிஐ(எம்) இதை மனப்பூர்வ மாக வரவேற்றது. ரத யாத்திரையும் வி.பி.சிங் அரசு வீழ்ச்சியும் பிஜேபி இட ஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, உயர் சாதி பிரிவினரை கலவரத்திற்குத் தூண்டியது. இக்கலவரத்தில் நூற்றுக்கணக்கா னோர் உயிரிழந்தனர். இச்சூழலை பயன்படுத்த விரும்பிய பிஜேபி அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையை முன்னிறுத்தி அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடத்தியது. செல்லுமிடங்களில் எல்லாம் மதக் கலவரங்கள் வெடித்தன. லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான பீகார் அரசு அத்வானி யைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இதன் பின்னர் பிஜேபி ஆதரவை வாபஸ் பெற்றதால் வி.பி.சிங் அரசு பதவி விலக நேரிட்டது.
மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான உள் ஒதுக்கீடுகள்
இந்திய வரலாற்றில் - சமூக நீதிக்கான போராட் டத்தில் வி.பி.சிங் அரசு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீண்ட நெடுங்காலமாக வலி யுறுத்தப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு கனவு நிறைவேற்றப்பட்டது. பிற்கா லத்தில் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் மிக பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடாக தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த உள் ஒதுக்கீட்டை யும் சிபிஐ(எம்) வரவேற்றது.
நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு
1991 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாயிற்று, ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நரசிம்மராவ் தலைமையில் சிறு பான்மை அரசு அமைந்தது. இது 5 ஆண்டு காலம் நீடித்தது ஒரு வியப்பான நிகழ்வு. பிஜேபி இந்த அரசை கவிழ்க்க வெறி கொண்டு செயல்பட்டது. இதனை தடுக்க விரும்பிய சிபிஐ(எம்) பிஜேபி-யின் நிலைபாட்டிற்கு எதிர்நிலை எடுத்தது. பிஜேபி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது சிபிஐ(எம்) உறுப்பினர்கள் மக்களவையில் இருக்க மாட்டார்கள். இதனால் காங்கிரஸ் அரசு தப்பித்தது.
தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு
இக்காலம் சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களுக்கு சவால் நிறைந்த காலமாக இருந்தது. நிதியமைச்சர் மன்மோகன் சிங்கால் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயக் கொள்கைக்கு எதிராக இடதுசாரி இயக்கங்களின் முயற்சியால் பெரும் வேலை நிறுத்தங்கள் நடந்தன. மத்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துக் கொண்டே பிஜேபி-யின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சிகளையும் தடுத்து நிறுத்தியது.
ஐக்கிய முன்னணி அரசு
1996 தேர்தலில் முதல் பெரும் கட்சி என்ற முறை யில் பிஜேபி ஆட்சியமைக்க முயன்றது, ஆனால் 13 நாட்களிலேயே பதவி விலகியது. பின்னர் மதச்சார் பற்ற ஜனநாயக கட்சிகள் ஐக்கிய முன்னணி அமைத்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தன. ஜோதிபாசு பிரதமர் வேட்பாளராக முன்மொழியப் பட்டபோது, பெரும்பான்மையான முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் பிரதமர் செயல்படுவது சாத்தியமில்லை என்ற காரணத்தால் சிபிஐ(எம்) மறுத்தது. இது பல்வேறு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியது. பின்னர் தேவகவுடா, அதன்பின் ஐ.கே.குஜரால் குறுகிய காலம் பிரதமராக இருந்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு
1998ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் வெளிப்பட்டன. அஇஅதிமுக ஆதரவை வாபஸ் பெற்ற பின் திமுக கூட்டணியில் இணைந்தது. நம்பிக்கை வாக்கெடுப் பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு தோற் றது. 13 மாத காலத்திலேயே அரசு கவிழ்ந்தது.
குஜராத் கலவரமும் இந்துத்துவா வளர்ச்சியும்
1999 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையில் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. இந்திய விடு தலைக்கு பிறகு வகுப்புவாத பாஜக தலைமையி லான கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றிய முதல் நிகழ்வு இது. இக்காலத்தில் குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, சிறுபான்மை மக்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப் பட்டன. நாடு முழுவதும் இந்துத்துவா - ஆர்எஸ்எஸ் கும்பல் தங்கள் கருத்தோட்டத்தை பலப்படுத்த பிரச்சாரம் செய்தது. இதே காலத்தில், நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப் பட்டன. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களும் பறிபோயின.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு
2004 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கணிசமான இடங் களை வென்றது, ஆனால் பெரும்பான்மை கிடைக்க வில்லை. சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிக ளுக்கு வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாதபடி 60 இடங்கள் கிடைத்தன. சிபிஐ(எம்) மட்டுமே 43 இடங்களை கைப்பற்றியது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே அரசாட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவானது. மதச்சார்பின்மையை பாது காக்கவும், உழைக்கும் மக்களின் நலனை மேம்படுத்த வும் இந்த வாய்ப்பை பயன்படுத்த சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி இயக்கங்கள் பொருத்தமான வியூகம் வகுத்தன.