articles

img

அகில இந்திய மாநாடு 1

கலை இலக்கிய எழுச்சியின் முன்னோடி

கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய மக்கள் நாடகக் கழகத்தின் கதை

“இந்தியாவின் மண்ணிலிருந்து எழுந்த கலைக்குரல் அது. மக்களின் துடிப்பிலிருந்து பிறந்த இசையின் எதிரொலி!” என்று பெருமையுடன் நினைவு கூர்கிறார் பி.சி. ஜோஷி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர். 1936ஆம் ஆண்டில் லக்னோ நகரில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் துவங்கியது. அதன் கருவறையில் வளரத் தொடங்கியது புதிய இடதுசாரி கலாச்சார பாரம்பரியம். 1940களில் பிறந்தது இந்திய மக்கள் நாடகக் கழகம் - இப்டா (IPTA). “கலாச்சாரத் திறமை கொண்ட நமது இடதுசாரி அறிவுஜீவிகள் நம்முடைய பரந்த, பண்டைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் நாட்டுப்புறப் பாரம்பரியத்தைக் கற்று, நிகழ்ச்சிகள் நடத்தி அவற்றை பிரபலப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை நாங்கள் திட்டமிட்டே தேர்ந்தெடுத்தோம்,” என்று அடித்தளத்தை விவரிக்கிறார் ஜோஷி. அவர் தொடர்கிறார்: “இதற்கு மக்களிடையேயிருந்து செய்ய வேண்டிய களப்பணி ஏராளமாகத் தேவைப்பட்டது. வசதியான மாளிகைகளென்ற தந்தக் கோபுரத்திலிருந்து கீழிறங்கி வயல்களிலும், ஆலைகளிலும், நெற்றி வேர்வை சிந்தி பாடுபடக்கூடிய உழைப்பாளிகளிடம் சென்று, அவர்களுடைய கடினமான வாழ்வில் பங்கேற்று அவர்களுடைய சிரமங்களையும் விருப்பங்களையும் அறிந்து, வாழ்வதற்காகப் போராடுவதையே வழியாகக் கொண்ட அவர்களின் பாரம்பரியத்தைக் கண்டறிந்து, தங்களுடைய நவீனக் கல்வி மற்றும் புதிய திறமைகளைக் கொண்டு பாடல்களையும், நடனங்களையும் புதுப்பிக்க வேண்டியிருந்தது.” வங்கப் பஞ்ச நிதி பம்பாயில் முதலில் உருவான இப்டா குழு பிரபல நடிகர்களான பிரித்வி ராஜ்கபூர், எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ் போன்றோரின் ஆதரவைப் பெற்றிருந்தது. 1944ஆம் ஆண்டில் ஓர் இதயம் உருக்கும் நிகழ்வு நடந்தது. “வங்கப்பஞ்சத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு கலைக்குழு கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு வந்தது,” என்று நினைவுகூர்கிறார் ஜோஷி. “பிரபல கலைஞர் பிமல்ராயின் தலைமையில் வந்த இந்தக் குழுவில் நல்ல குரல்வளம் கொண்ட அவரது சகோதரி ரேபா, அவரது உறவினர் பிரிதி, இளம் மாணவி உஷா ஆகியோர் இருந்தனர்.” “உஷா, பஞ்சத்தில் அடிபட்ட நிராதரவான பெண்ணாக சிறப்பாக நடித்தார். நாடகம் முடிந்ததும் வங்கப்பஞ்ச நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. பம்பாய் இப்டா குழு இந்த வங்காளக்குழுவின் புரவலராக இருந்தது.” ராஜ்கபூர் குடும்பம் மாபெரும் கலை நிகழ்ச்சியை 

எழுத்தாளர்கள் முல்க்ராஜ் ஆனந்த், பிரேம்சந்த், திரைக்கலைஞர் பால்ராஜ் சகானி

நடத்தி பெரும் தொகை வசூலிக்கப்பட்ட அந்த தருணத்தை ஜோஷி இவ்வாறு விவரிக்கிறார்: “பார்வையாளர்களில் டாடா மற்றும் வாடியா தொழில் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஒவ்வொரு மக்கள் பகுதி மற்றும் பிராந்திய குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் இருந்தனர். சோகமான காட்சிகளில் இவர்கள் கண்ணீர் வடித்தனர். அடிக்கடி கரவொலி எழுப்பினர். பின்னர் வங்கப் பஞ்ச நிவாரண நிதியாக ஒரு பெரும் தொகை வசூலிக்கப்பட்டது.” “தினமும் கையில் ஒரு துணிப்பையை ஏந்தி பயபக்தியுடன் பிரபல நடிகர் பிரித்வி ராஜ்கபூர் வசூல் குழுவிற்குத் தலைமை தாங்கி வசூலித்தார். ராஜ்கபூர், சசி கபூர் மற்றும் அவருடைய இளம் மனைவி உள்ளிட்ட பிரித்வி ராஜ்கபூரின் முழுக் குடும்பத்தினரும், இதரர்களும் இந்த வசூலில் அவருக்கு உதவினர்...”

பின்னர், கல்கத்தா இப்டா குழுவினர் உதவியுடன் பம்பாயில் இப்டாவின் அமைப்பை மேலும் பலப்படுத்தினர். வங்கக்குழுவின் தலைவர் பிமல் ராய் தலைவராகவும், பார்வதி கிருஷ்ணன் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டனர். நாட்டிய நிகழ்ச்சிகள் திறமையான கலைஞர்கள் குழுவில் இணைந்த விதத்தை ஜோஷி வர்ணிக்கிறார்: “உதயசங்கர் மையத்திலிருந்த திறமையான நடனக்காரரான சாந்தி பரதன் இங்கே நடன இயக்குநராகவும், அந்நிகழ்ச்சிகளை தயாரிப்பவராகவும் விளங்கினார். திறமைமிக்க இசைவாணரான அபனிதாஸ் குப்தா இசை அமைப்பாளராக விளங்கினார்.

இளம் பெண்களைப் பொறுத்தவரை சாந்தி பரதனின் இயக்கத்தில் தீனாகாந்தி அந்தக்குழுவின் பிரதான நடனக்கலைஞராக விளங்கினார்.” இப்டா குழுவினர் தயாரித்த முதல் நிகழ்ச்சி “இந்தியாவின் ஆன்மா” என்ற நாட்டிய நிகழ்ச்சியாகும். இது கல்கத்தாவில் ஒரு மாத காலம் நடைபெற்றது. பின்னர் 1946-47இல் “அழியாவரம் பெற்றவர்கள்” என்ற நாட்டிய நாடகத்தை நடத்தினர், இதில் இந்திய வரலாற்று வளர்ச்சியின் தேசியப் பாரம்பரியத்தின் சிறந்த அம்சங்கள் நடனம் மூலமாகவும் பாடல் மூலமாகவும் விளக்கிக் காட்டப்பட்டன. பால்ராஜ் சஹானி தம்பதியர் இந்த காலகட்டத்தில் இங்கிலாந்திலிருந்து பால்ராஜ் சஹானியும் அவரது துணைவியார் தமயந்தியும் பம்பாய்க்கு வந்தனர்.

இருவரும் இப்டாவுடன் இணைந்து புதிய உயரங்களுக்கு கலை இயக்கத்தை கொண்டு சென்றனர். 1946-47ஆம் ஆண்டுகளில் நாட்டில் வகுப்புவாதக் கலவரங்கள் மூண்டபோது, பால்ராஜ் சஹானியும் இதர இப்டா தோழர்களும் மதவெறிக்கு எதிராக அனைத்து மொழிகளிலும் புதிய பாடல்களும், ஓரங்க நாடகங்களும் தயாரித்தனர். கட்சித் தலைமை நிலையத்தில் இருந்த ஒரே ஒரு வாகனத்தைக் கொண்டு அவர்கள் பம்பாயின் பல பகுதிகளுக்குச் சென்று மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கப் பிரச்சாரம் செய்தனர். அந்தக் கடினமான காலத்தை ஜோஷி இவ்வாறு நினைவுகூர்கிறார்: “பால்ராஜூம் இப்டாவிலிருந்து இதரர்களும் மேன்மேலும் ஊக்கத்துடன் செயல்பட்டார்கள். அவர்கள் நிலைமைக்கேற்றார் போல் ஏராளமான பாடல்களைத் தயாரித்தனர். பால்ராஜ் அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை அவரது மோட்டார் சைக்கிளில் சுற்றிவந்தார். ஸ்தல தோழர்களும் அவர்களோடு சேர்ந்து இப்டா குழுவினரும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தினர். பாடல்கள் பாடினர். நாடகங்களில் நடித்தனர்...” வெகுவிரைவில் இப்டா பல மாநிலங்களில் உருவானது. கம்யூனிஸ்ட் கலை இலக்கியம் என்ற புதிய பாரம்பரியத்திற்கு அது வித்திட்டது. பால்ராஜ் சஹானியும் அவர் துணைவியார் தமயந்தி சஹானியும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மார்க்சிய லட்சியத்திற்காகப் பாடுபட்டனர் - மக்கள் கலை, கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்த லட்சிய தம்பதியராக! நாட்டுப்புறப் பாடல்கள்... ஒன்றுபட்ட இந்தியாவின் ஆத்மாவாக இப்டா விளங்கியது என்பதை ஜோஷி பெருமையுடன் நினைவுகூர்கிறார்: “அன்று இப்டாவை உண்மையில் பிரபலமாக்கி பின்னர் புகழ்மிக்கதாக்கியது எதுவென்றால், இந்தியாவின் அனைத்து மொழிகளிலிருந்த தேசபக்தப் பாடல்களின் சேர்ந்திசையும், அவற்றோடு சேர்ந்து ஒரு சமூக உள்ளடக்கம் மற்றும் இதயத்தைத் தொடும் இசையைக் கொண்டிருந்த நாட்டுப்புறப் பாடல்கள்தாம்!” “வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டிருந்த இளம் சிறுவர்களும், சிறுமிகளும் ஒன்றாகச் சேர்ந்து பாடி, நடனமாடி ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வளமையான நாட்டுப்புறப் பாரம்பரியத்தை பிரபலப்படுத்தியதுதான். இந்நிகழ்ச்சி இயல்பாகவே மக்களின் மரியாதையைப் பெற்று அவர்களுடைய தேசபக்த ரத்தத்தை கொதித்தெழச் செய்தது...”