articles

img

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் - அ. குமரேசன்

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் 

திருவனந்தபுரத்தில் 1988 டிசம்பரில் கூடிய கட்சியின் 13ஆவது அகில இந்திய மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக, சீனா, சோவியத் யூனியன் உட்பட சுமார் இருபத்து நான்கு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்த சகோதரப் பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.  3 மாதங்களுக்குப் பிறகு சி. பி. ஐ. கட்சியின் 14ஆவது மாநாடு கூடியபோது அதிலும் பல வெளிநாடுகளிலிருந்து சகோதரப் பிரதிநிதிகள் வந்து கலந்துகொண்டனர். அதாவது, நமது வெளிநாட்டுத் தோழர்கள் இந்தியா வின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையுமே சகோ தரக்கட்சிகளாக சமமாக அங்கீகரித்திருந்தனர்.  அதற்காக இந்த சகோதரக் கட்சிகள் தொடர்பான மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகு முறையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிட்ட தாக அர்த்தமல்ல. 1964இல் கட்சி அமைக்கப் பட்டதிலிருந்தே சகோதரக் கட்சிகளுடன் கட்சி மட்டத்திலான உறவுகளை வைத்துக் கொள்ளவே மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் விரும்பி வந்துள்ளது. ஏழாவது மாநாடு முடிந்த சில நாட்களில் சகோதரக் கட்சிகளுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அப்படிப்பட்ட உறவுகள் தேவை எனக் கோரியிருந்தது.   அந்தக் கோரிக்கையை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. அந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்றுக் கொண்டது என்றாலும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1967இல் அவர்கள் உறவை முறித்துக் கொண்டனர். அதன் பின்பு 1983இல் தான் சீனக்கட்சி மீண்டும் கட்சி மட்டத்திலான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து மூன்று உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிக்குழுவையும் சீனாவுக்கு வரும்படி அழைத்தது. அதற்குப் பிறகுதான் சோவியத்  கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. இவ்வாறு உலக கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் இருபெரும் கட்சிகளும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்பான தமது அணுகுமுறை யை மாற்றிக் கொண்டதைத் தொடர்ந்து அதற்கு முன்பிருந்தே உறவுகொண்டிருந்த கட்சி களைத் தவிர இதர சகோதரக் கட்சிகள் அனைத்தும் மீண்டும் கட்சி மட்டத்திலான உறவு களை ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்தன. இவ்வாறாகத்தான் அந்த சகோதரக் கட்சிகளின் பிரதிநிதிகள் மார்க்சிஸ்ட் கட்சியின் 13ஆவது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டனர்.  சோவியத் நெருக்கடியின் அறிகுறிகள்  13ஆவது மாநாடு கூடிய காலகட்டத்தில் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு நெருக்கடியை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. அக்டோபர் (நவம்பர்) புரட்சியின் 70ஆவது ஆண்டு விழாவையொட்டி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கோர்பச்சேவ் நிகழ்த்திய உரையில், சோவியத் யூனியனும் கட்சியும் தமது ஏகாதிபத்திய எதிர்ப்பு குணாம்சத்தைக் கைவிடப்போகின்றன என்ற அறிகுறிகள் இருந்தன. அந்த முயற்சியைக் கூர்மையாக விமர்சிக்கும் தீர்மானம் ஒன்றை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு நிறைவேற்றியது.  அதே காலகட்டத்தில் சோவியத் கட்சியின் தலைமை ஏற்கெனவே சில சீர்திருத்தங்களை உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புகளில் செய்ய ஆரம்பித்திருந்தது. (இந்த சீர்திருத்தங்கள் பெரெஸ்த்ரோய்க்கா என்றும் கிளாஸ்நாஸ்த் என்றும் அறியப்பட்டன).

இந்த சீர்திருத்தங்கள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு நிறைவேற்றிய தீர்மானம் இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தது.  முதல் அம்சம், சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டுகிற நடைமுறையில் சில தவறுகள் நடந்தன என்பது உண்மை. அந்தத் தவறுகளை சரிப்படுத்தவும் சோசலிசத்தைத் தவறுகளற்றதாக உருவாக்கவும் பொருளாதார - அரசியல் சீர்திருத்தங்கள் அவசியமே. அத்தகைய சீர்திருத்தங்களுக்கான முயற்சி களில் சோவியத் கட்சியின் தலைமையை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.  இரண்டாவது அம்சம், அந்த சீர்திருத்தங்கள் குறித்து விரிவாகப் பரிசீலிக்கத் தேவையான விவரங்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடைக்கவில்லை. அத்தகைய விவரங்கள் கிடைக்கும் வரையில் பெரெஸ்த்ரோய்க்கா மற்றும் கிளாஸ்நாஸ்த் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் விவரங்கள் குறித்து சாதகமாகவோ எதிராகவோ கருத்துக் கூற கட்சி விரும்பவில்லை. தகவல்களைச் சேகரிக்கவும் அவற்றை ஆழமாக ஆராயவும் கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டபிறகுதான் அவற்றைப் பற்றி ஏதேனும் சொல்ல முடியும்.  பதின்மூன்றாவது அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினருக்கு இந்த நிலைபாடு குறித்து முழுத்திருப்தி ஏற்படவில்லை. பெரெஸ்த்ரோய்க்காவும் கிளாஸ்நாஸ்த்தும் தவறான பாதைகளில் தான் செல்கின்றன என்று கட்சி தயக்கமின்றிக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.  மத்தியக் குழு அந்த கருத்துடன் உடன்பட வில்லை. பெரெஸ்த்ரோய்க்காவும் கிளாஸ்நாஸ்த்தும் தவறான வழிகளில் தான் செல்கின்றன என்றால் சோவியத் யூனியனி லேயே அதை எதிர்க்கிற மக்கள் இருப்பார்கள். அது போன்ற எதிர்ப்புகள் எவ்வாறு வருகின்றன. அந்த எதிர்ப்பாளர்களுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையேயான மோதல்கள் எவ்வாறு முற்று கின்றன என்பதைக் கவனித்து, அதன் பிறகு சரி யான முடிவுகளுக்கு வருகிற பணியை புதிய மத்தியக் குழுவிடம் விடலாம் என்று மாநாட்டில் (அதுவரையிலிருந்த) மத்தியக் குழு ஆலோசனை கூறியது. அதனைக் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏகமனதாக அங்கீகரித்தது.  மூன்று ஆண்டுகளில் முக்கியச் சம்பவங்கள்  கடந்த மூன்று ஆண்டுகளில் பல முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சீனாவில் நடந்த எதிர்ப்புரட்சி முயற்சிகள், அதை முறியடிப்பதில் சீனத் தலைமை மேற்கொண்ட வலுவான நடவடிக்கைகள்; கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் புயல் போலத் தாக்கிய எதிர்ப்புரட்சி; சோவியத் யூனியனிலேயே சோசலிசத்தை சீரமைப்பது என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் படிப்படியாக சோசலிசத்துக்கு எதிராகத் திரும்பியது: முதலில் கிழக்கு ஐரோப்பாவிலும் பின்னர் சோவியத் யூனியனிலும் வெற்றிகரமாக நடந்தேறிய எதிர்ப்புரட்சிகள்; சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் என்ன நடந்தாலும் தங்களது சோசலிசப் பாதையை எந்த வகையிலும் கைவிடப் போவதில்லை என சீனா, வியட்நாம். கொரியா, கியூபா ஆகிய நாடுகளின் கட்சிகள் எடுத்த உறுதியான நிலை; சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு எதிராக உள்நாட்டு சக்திகள் தலையுயர்த்தியது; இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சியிலும் மூன்றாவது உலகத்தைச் சேர்ந்த இதர முதலாளித்துவ நாடுகளிலும் கோர்பச்சேவிசத்துக்கு எதிரான ஒரு அலை ஆரம்பமானது இவையெல்லாம் அத்தகைய முக்கிய நிகழ்ச்சிப் போக்குகள் தாம்.  இந்தச் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் குறித்து நமது கட்சியின் அரசியல் தலைமைக்குழு வும், மத்தியக் குழுவும் உரிய நேரத்தில் கருத்துக்  கூறி வந்துள்ளன. சோசலிசத்தை சீரமைப்பது  என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை களான பெரெஸ்த்ரோய்க்காவும், கிளாஸ்நாஸ்த்தும் சோசலிசத்துக்கு எதிரான இயக்கமாக மாறிய ஒவ்வொரு கட்டத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி தனது கருத்துக்களை எவ்விதத் தயக்கமுமின்றி வெளிப்படுத்தி வந்துள்ளது. 14ஆவது மாநாட்டு விவாதத்திற்காக மத்தியக் குழு தயாரித்துள்ள ஆவணம், இந்த நடைமுறை கள் எல்லாவற்றினுடைய பலனாக உருவானதுதான்.  ஆகஸ்ட் 19 முயற்சி  இந்தியாவின் மார்க்சிஸ்ட் கட்சியைப் போலவே, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பிரிவினர் சோசலிசத்தைச் சீரமைக்கவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முபற்சிகளையும் நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளனர். துவக்கத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த ஒரு பிரிவினர், பின்னர் அவற்றின் பாதகமான எதிர்மறை அம்சங்களைக் காண ஆரம்பித்தனர். அவர்களில் சிலர்தான்  1991 ஆகஸ்ட் 19 -இல்  கோர்பச்சேவை அகற்றவும் சோவியத் யூனியனில் ஒரு அரசு  மாற்றத்தைக் கொண்டுவரவும் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையில் முன் முயற்சி எடுத்தவர்கள். அந்த முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - முதலில் அரசியல் தலைமைக் குழுவும் பின்னர் மத்தியக் குழுவுமாக - தனது ஆதரவை அறிவித்தது.  அந்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது உள்ளிட்ட எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கு கோர்பச்சேவ் தானே தலைமை தாங்கினார். ஆட்சி மாற்ற முயற்சியை ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் கூட பின்பு கோர்பச்சேவின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.  இரண்டு முகாம்கள்  இத்துடன் உலக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கி யுள்ளது. ஒரு பக்கத்தில்-சோசலிசத்துக்குள் ஊடுருவிய தவறுகள் களையப்பட்டு சோசலிசம் சீரமைக்கப்பட வேண்டும் என்று மெய்யாகவே விரும்புகிறவர்கள்; இன்னொரு பக்கத்தில்-சோசலிசத்தை உலக ஏகாதிபத்தியத்தின் காலடியில் சமர்ப்பிக்க முயல்கிறவர்கள். இவ்வாறு இரண்டு முகாம்கள் உலக அளவில் உருவாகியுள்ளன. இரண்டாவது முகாமுக்கு உலக ஏகாதிபத்தியம் முழு ஆதரவு அளித்தது.  இந்த இரண்டு முகாம்களுக்கு இடையேயான போராட்டத்துக்கு நடுவேதான் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 14ஆவது மாநாடு (சென்னையில் 1992 ஜனவரியில்) கூடுகிறது. ஆகவே, மாநாட்டின் மிக முக்கியமான விவாதப் பொருளாக சமீபத்திய சர்வதேச நிகழ்ச்சிப் போக்குகள் இருக்கும். ஆனால் சர்வதேச நிகழ்ச்சிப் போக்குகளுக்கும் தேசிய நிகழ்ச்சிப் போக்குகளுக்கும் இடையே பிரிக்கமுடியாத உறவு உள்ளது. உலக கம்யூனிச இயக்கம், முன்பு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒரு மாமலை போல் நின்றது. இன்று அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்கிற நிலையில், இப்போது உலக ஏகாதிபத்தியத்தின் தலைவனாக இருக்கும் அமெரிக்கா, மூன்றாம் உலக நாடுகள் மீது எப்படிப்பட்ட அக்கிரமமான தாக்குதலையும் தொடுக்கலாம் என்கிற அராஜகத்தோடு நடந்து கொள்கிறது. இந்த அராஜகத்திற்கு எதிராக இந்திய அரசியல் தலைமை -இ.காங்கிரஸ் தலைமை உட்பட-திரும்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்கிற ஒரு நிலைமை இப்போது உருவாகி வருகிறது. இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக விரிவான, நாடு தழுவிய, ஆற்றல் மிகு இயக்கம் ஒன்றினைக் கட்ட வேண்டிய பொறுப்பு இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற்பட்டுள்ளது.  இந்திய மக்களின் முயற்சிக்கு உதவிடும் தொலைநோக்கு  ஆனால் இந்தப் பணியை நிறைவேற்றிட, பொதுவாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும்  குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியும் தமது சுயேச்சை யான செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உதவியது எது  என்றால், தேசிய முதலாளிகளின் தலைமை யிலான இந்திய தேசிய இயக்கத்திற்கும் அதில் பங்கேற்ற தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள உறவுதான். உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் ஒத்துழைப்போடு இந்திய மக்கள் நாட்டின் சுதந்திரத்தையும் சுயாதிபத்தியத்தையும் பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தேசியவாதத்துக்கும் சர்வதேசியவாதத்துக்கும் இடையேயான பிரிக்க முடியாத உறவு பற்றிய மார்க்சிய லெனினிய தொலைநோக்குப் பார்வை பேருதவியாக இருக்கும். இந்தத் தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுகிற அதே நேரத்தில், ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கிற எல்லா வர்க்கங்களுடனும் ஒத்துழைக்கவும் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கடமைப்பட்டுள்ளார்கள்.