articles

img

உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசின் வேண்டுகோளை ஏற்றது கேள்விகளை எழுப்புகிறது!

உச்ச நீதிமன்ற கொலிஜியம் முதலில் நீதிபதி அதுல் ஸ்ரீதரன் அவர்களை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திலிருந்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு செய்திருந்தது. அதன் பிறகு ஒன்றிய அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்துள்ளது. இது நீதித்துறையின் சுயேச்சை தன்மையும் நிர்வாக தலையீடு குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அரிதினும் அரிதாக ஒன்றிய அரசு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகச் சொன்னதும் அதே சமயம் அதை ஏற்றுக் கொண்டதற்கான எந்த விளக்கத்தையும் சொல்லாமல் இருப்பதும் ஒரே சமயத்தில் ஒரு பகுதி வெளிப்படையாகவும் ஒரு பகுதி ரகசியமாகவும் இருப்பது பல்வேறு பதிலற்ற கேள்விகளை எழுப்பி உள்ளது
அரசியல் ரீதியாக மிகவும் உணர்ச்சிகரமான வழக்குகளில் நீதிபதி அதுல் ஸ்ரீதரன் அவர்கள் உறுதியான அதேசமயம் தெளிவான நிலை எடுத்ததன் காரணமாக அவர் பெருமைக்குரியவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்ட பலரின் தடுப்பு காவல்களை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். அந்த வழக்குகள் நிர்வாகத்தின் முடிவுகளாக இருந்தனவே தவிர அதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் அவற்றைத் துணிச்சலாக ரத்து செய்தார். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது ராணுவ பெண் அதிகாரி  ஒருவருக்கு எதிராக  இழிவுபடுத்தும் வகையில் ஒரு அமைச்சர் பேசியபோது அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனத்  தானாக முன்வந்து தீர்ப்பளித்தார். அதோடு மட்டுமின்றி அந்தப் பிரச்சனையில் அந்த மாநில அரசு கையாண்ட விதத்தையும் அதிலிருந்து குறைபாடுகளையும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.
இந்த இடம் மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தபடி அவர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டிருந்தால் பதவி மூப்பின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருந்திருப்பார். அத்தோடு கூடவே அடுத்து அந்த மாநிலத்தின் தலைமை நீதிபதியாக மாறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். இப்போது அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதன் மூலம் அவர்  பணி மூப்பு அடிப்படையில் ஏழாவது நீதிபதியாக இருப்பார். அதன் மூலம் நீதிமன்றத்தின் நிர்வாக முடிவுகளில் அவருக்கு  முக்கியத்துவம் குறைவாகவே இருக்கும்.
 அரசாங்கத்தின் வேண்டுகோளை வெளிப்படையாகச் சொன்ன உச்சநீதிமன்ற கொலீஜியம் அதை ஏன் ஏற்றுக் கொண்டோம் என்பதற்கு  எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அரசின் அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததா அல்லது நடைமுறையில் அரசாங்கத்தோடு ஒரு நல்லிணக்கத்திற்காக இதை விட்டுக் கொடுத்ததா?
நீதிபதி முரளீதர் அவர்களை நடத்திய முறையோடு இது ஒத்துப் போகிறது. 2020 ஆம் ஆண்டு டெல்லி வன்முறைக்குக் காரணமாக அமைந்த பேச்சுக்களை பேசிய அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற கொலிஜியம் கொடுத்த பரிந்துரையை அரசு அப்படியே நிறைவேற்றியது. 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற கொலிஜியம் அவரை ஒடிசா உயர்நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாறுதல் செய்ய பரிந்துரைத்திருந்தது. ஒன்றிய அரசாங்கம் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்ட நிலையில் ஒன்றிய அரசாங்கத்தை எவ்வித கேள்விக்கும் உட்படுத்தாமல் உச்ச நீதிமன்ற கொலிஜியம் அந்த பரிந்துரையை 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் கைவிட்டு  விட்டது 
ஒன்றிய அரசு நீதிபதி அதுல் ஸ்ரீதரன் அவர்களை அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றச் சொன்னதை வெளிப்படையாக கொலீஜியம் அறிவித்துவிட்டது.ஆனால் அதை உச்ச நீதிமன்றம் ஏன் ஏற்றுக் கொண்டது? நியாயமான காரணத்தினாலா அல்லது அழுத்தத்தினாலா என்பது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. இது நீதிபதிகள் குறித்த முடிவுகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக நீதிபதிகள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைக் கையாண்டவர்கள் என்கிறபோது நீதித்துறை சுயேச்சையாகவும் நம்பகத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நன்றி: இதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (The New Indian Express தலையங்கத்தின் மொழியாக்கம்)